Published:Updated:

லஞ்சத்துக்கு எதிராக ஒரு சீறல்!

சண்.சரவணக்குமார், படம்: இ.பொன்குன்றம்

லஞ்சத்துக்கு எதிராக ஒரு சீறல்!

சண்.சரவணக்குமார், படம்: இ.பொன்குன்றம்

Published:Updated:

‘பாம்புப் பெண்' மணிமேகலை

து, கிராம நிர்வாக அலுவலகம். பல்வேறு கோரிக்கைகள், சான்றிதழ்கள் கேட்டு பொதுமக்கள் பலர் காத்திருக்கிறார்கள். அங்கு ஒரு பெண், தொலைந்துபோன தனது பத்தாவது மற்றும் பன்னிரண்டாவது வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் தொடர்பாக, காவல் நிலையப் புகாரை அடுத்து, கிராம நிர்வாக அலுவலரிடம் (வி.ஏ.ஓ) சான்றிதழ் வேண்டி நின்றிருக்கிறார்.

அந்தப் பெண் உள்ளே சென்றதும், 200 ரூபாய் லஞ்சம் கேட்கப்படுகிறது. இவர் பணம் இல்லை எனச் சொல்ல, இரண்டு நாட்கள் கழித்து வருமாறு திருப்பி அனுப்பப்படுகிறார். இரண்டு நாட்களில் மீண்டும் அந்தப் பெண் வர, அப்போதும் லஞ்சம் கேட்கப்படுகிறது. இவர் மறுக்க, வெகு நேரம் காக்க வைத்த பின், 'உன்னிடம் தனியா விசாரிக்கணும்’ என்று பூடகமாகப் பேசியிருக்கிறார் வி.ஏ.ஓ! அப்போது அவருக்குத் துணையாக வந்த பெண் கோபம் கொண்டவராக, 'சார் நீங்க அரசு அதிகாரி. பாவப்பட்ட ஏழை மக்கள்கிட்ட இப்படி வெளிப்படையா லஞ்சம் கேட்கிறது தவறு. உங்க உயரதிகாரிகிட்ட சொன்னா...’ என்று சொல்ல, அசிங்கமாகப் பேசி அடிக்கப் பாய்ந்திருக்கிறார் வி.ஏ.ஓ! பாவம், அவருக்குத் தெரியாது... இவருக்கு கொஞ்சம் தற்காப்புக் கலைகள் தெரியும் என்று. மார்பு வரை வந்த கையை மடக்கித் திருப்பி அவர் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டதும், பொத்தென்று கீழே விழுந்துவிட்டார் வி.ஏ.ஓ.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லஞ்சத்துக்கு எதிராக ஒரு சீறல்!

அலுவலகமே ஆடிப்போய் அமைதியாக, பொதுமக்களுக்கோ பூனைக்கு மணி கட்டிய உற்சாகம். அனைவருமாகக் கூடிச் சென்று புகார் கொடுக்க, காவல் நிலையத்தில் வி.ஏ.ஓவை எச்சரித்து அனுப்பியதோடு, அந்தப் பெண்ணின் துணிச்சலைப் பாராட்டி அனுப்பி வைத்தனர் போலீஸார். அசாத்திய துணிச்சல்காரரான அந்தப் பெண், மணிமேகலை. சம்பவ இடம், மதுரை!

''இதை சாதனையா பேசினா, ஏதோ நடக்க முடியாத ஒரு விஷயம் நடந்தது போல ஆயிடும். இது எல்லாராலயும் செய்யக்கூடிய காரியம்தான். அடுத்த முறை உங்ககிட்ட லஞ்சம் கேட்கறப்ப, தைரியமா எதிர்த்து நில்லுங்க!'' என்று இந்த விஷயத்தை கடந்து செல்லும் மணிமேகலை... வீடுகளுக்குள், குடியிருப்பு பகுதிகளுக்குள் வரும் பாம்புகளைப் பிடித்து காட்டுக்குள் விடுவது, வனவிலங்குகளை வேட்டையாடுபவர்களைப் பற்றி போலீஸில் புகார் அளிப்பது என்று கலக்கிக்கொண்டிருப்பவர் என்பது ஆச்சர்யம் கூட்டும் தகவல்.

'பாம்போட தலையைப் பிடிக்கக் கூடாது, வால் பகுதியைதான் பிடிக்கணும். பொதுவா பாம்பு பிடிக்கிறவங்க, கையில் குச்சி வெச்சிருப்பாங்க. குச்சியால பாம்பை அழுத்திப் பிடிக்கும்போது, சில சமயம் பாம்போட எலும்புகளை அது உடைச்சுடும், உடல் உறுப்புகள் சேதமாயிடும். அந்தப் பாம்புகளை காட்டுக்குள்ள விட்டாலும் சில நாட்கள்ல இறந்துடும். அல்லது காயப்பட்ட இடத்தில் எறும்புகள் கடிச்சு, பாம்பை கொன்னுடும். அதனால எவ்வளவு பெரிய விஷப்பாம்பா இருந்தாலும், கையாலதான் நான் பிடிப்பேன்'' என்று சர்வசாதாரணமாக சொல்லும் மணிமேகலை, ஊட்டியில் உள்ள வன உயிரின அறக்கட்டளை நிறுவனர் சாதிக் மற்றும் தமிழ்நாடு பசுமை இயக்க இணை செயலாளர் ஜெயச்சந்திரனிடம் பாம்புகள் பற்றியும், பாம்பு பிடிக்கவும் கற்றுக்கொண்டதுடன், 6 மாதங்கள் அங்கு தங்கி வேலை பார்த்திருக்கிறார். 'பாம்புகள் எதிரி இல்லை, அதனை நாம் தாக்காமல் இருந்தால், அவை நம்மை ஒன்றும் செய்யாது' என்று பலதரப்பு மக்களையும் சந்தித்து வலியுறுத்தியும் வருகிறார்.

பாம்பின் மேல் உள்ள பயத்தைப் போக்கும் வகையில், பாம்பு பிடிப்பது எப்படி என்று பலருக்கும் கற்றுக் கொடுக்கும் மணிமேகலை, ''கொம்பேறி மூக்கன், சாரை, பச்சை, புடையான், மண்ணுளி, தண்ணிப்பாம்பு வகைகளுக்கு எல்லாம் விஷம் இல்ல. நல்ல பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன் போன்ற விரியன் வகை பாம்புகளுக்கு அதிக விஷமுண்டு. ராஜநாகம், பவளப்பாம்புனு சொல்லப்படுற கோல்டன் ஸ்நேக் வகையறாக்களுக்கு இன்னும் விஷம் அதிகம். இப்போ ரொம்ப அழிந்து வரும் இனம், மண்ணுளி பாம்புதான். எய்ட்ஸுக்கு மருந்து, ஆண்மையை அதிகரிக்கும் மருந்துனு சொல்லி இந்தப் பாம்புகளை அழிச்சுட்டிருக்காங்க...'' என்று கவலையை வெளிப்படுத்துவதோடு,

"உண்மையில் மண்ணுளிப் பாம்புக்கு அந்த மருத்துவத் தன்மை எதுவும் இல்லை. இது, விவசாயிகளின் நண்பன். மண்புழு மாதிரியே விவசாய நிலத்தோட தன்மையை மிருதுவாக்குற தன்மை இதுக்கு உண்டு. சொல்லப்போனா... பயிர்களைத் தாக்கும் எலிகளை உணவா எடுத்துக்குற எல்லா பாம்புகளும் விவசாயிகளின் நண்பன்தான். அதனால அதுங்கள நாம அழிக்காம பாதுகாக்கணும்'' அக்கறையோடு சொல்லி விடைபெற்றார் அந்தப் பாம்புப் பெண்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism