Published:Updated:

ஒரு கம்ப்ளீட் ‘கண்’ணோட்டம்!

பவர் கிளாஸ்... ரீடிங் கிளாஸ், சன் கிளாஸ்... கான்டாக்ட் லென்ஸ்...கே.அபிநயா,   படங்கள்: ப.சரவணகுமார்

ஒரு கம்ப்ளீட் ‘கண்’ணோட்டம்!

பவர் கிளாஸ்... ரீடிங் கிளாஸ், சன் கிளாஸ்... கான்டாக்ட் லென்ஸ்...கே.அபிநயா,   படங்கள்: ப.சரவணகுமார்

Published:Updated:
ஒரு கம்ப்ளீட் ‘கண்’ணோட்டம்!

ண்ணாடி அணிவது அழகுக் குறைச்சலாகப் பார்க்கப்பட்டது ஒரு காலம். இப்போதோ, வகைவகையான ஃபிரேம்கள், வண்ணவண்ண லென்ஸ்கள் என்று ஃபேஷன் ஏரியாவில் இடம்பிடித்துவிட்டன கண்ணாடிகள். கூடவே, கண்களில் எந்தக் குறையும் இல்லாதவர்களும் கண்ணாடி (பவர்லெஸ்) போட்டுக்கொள்ளும் அளவுக்கு டிரெண்ட் எகிறிக் கிடக்கிறது!

''ஆரோக்கியம் குறித்து மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கையை, அழகு சார்ந்ததாக மாற்றும்போது ஏற்படும் குளறுபடிகளால், விளைவுகள் கண்களுக்குத்தான் என்பதை மறக்காதீர்கள்!'' என்று எச்சரிக்கிறார், சென்னையைச் சேர்ந்த, தனியார் மருத்துவமனை ஒன்றின் தலைமை கண் அறுவை சிகிச்சை மருத்துவர் பிரகாஷ். அவரிடம் பேசப் பேச... கண் பரிசோதனை, ஆப்டிக்கல்ஸ் அபாயம், கண்ணாடி பராமரிப்பு, பவர்லெஸ் கிளாஸ் ஃபேஷன் என்று... கண் ஆரோக்கியம் பற்றி தகவல்கள் வந்து கொட்டுகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்படி பரிசோதிக்கிறார்களா உங்கள் கண்களை?!

''பலரும் தங்கள் கண்ணாடியை செக்அப் செய்வதையே, கண் செக்அப் செய்துவிட்டதாக நினைக்கிறார்கள். கண்ணாடி பரிசோதனை வேறு, கண் பரிசோதனை வேறு. அப்படியே கண் பரிசோதனை செய்துகொண்டாலும், கிட்டப் பார்வை, தூரப் பார்வைக்கான பரிசோதனைகளை மட்டுமே பல மருத்துவமனைகளிலும் மேற்கொள்கிறார்கள். அவற்றுடன் சேர்த்து, எல்லா நிறங்களையும் விழித்திறன் பகுத்தறிவதை சோதிக்கும் கலர் விஷன் டெஸ்ட், சுற்றுப் பார்வையை சோதிக்கும் சைடு விஷன் டெஸ்ட் மற்றும் கண் பார்வையின் தரத்தைத் தெரிந்துகொள்வதற்கான கான்ட்ராஸ்ட் ஆஃப் சென்சிட்டிவிட்டி விஷன் டெஸ்ட் என்ற இந்த மூன்று பரிசோதனைகளும் கண்டிப்பாக செய்யப்பட வேண்டும்.

ஒரு கம்ப்ளீட் ‘கண்’ணோட்டம்!

கண் பரிசோதனையின் முக்கிய அம்சமான 'டுயோ க்ரோம் டெஸ்ட்' (duo chrome test) பெரும்பாலான மருத்துவமனைகளில் செய்யப்படுவதில்லை. சிவப்பு, பச்சை எழுத்துக்களைப் படிக்கச் செய்யும் இந்தப் பரிசோதனையில், சிவப்பு எழுத்துகள் பளிச்சென்று தெரிய வேண்டும். இது, நம்முடைய கண் எந்த பவரில் இருக்கிறது என்பதை சரியாக தெரிந்துகொள்வதற்கான டெஸ்ட்.  

60 வயதுக்கு மேல் இருப்பவர்கள், வயதின் காரணமாக கண்ணில் வரும் நோயைக் கண்டறிவதற்கான அம்ஸ்லெர் கிரிட் டெஸ்ட் (Amsler grid test) செய்துகொள்வதும், 40 வயதுக்கு மேல் இருப்பவர்கள் 'ஐ பிரஷர் டெஸ்ட்’ செய்துகொள்வதும் அவசியம். பரம்பரை, கண்களில் அடி, மைனஸ் பவர், சர்க்கரை நோய் போன்றவை ஐ பிரஷர் ஏற்படக் காரணங்கள். ஐ பிரஷர் இருக்கிறவர்களுக்கு 'க்ளோகோமா' (Glaucoma)  நோய் பாதிப்பு ஏற்படலாம். எந்த அறிகுறியும் இல்லாத இந்த நோய், பார்வையைப் பறித்துவிடும் ஆபத்தைக் கொண்டது.

கண் மருத்துவரிடம் சோதித்த பின், அவர் பரிந்துரைக்கும் கண்ணாடியை, ஆப்டிக்கல்ஸில் வாங்கும்போது, லென்ஸ் மாறிப்போகும் கேஸ்கள் நிறைய! எனவே, ஆப்டிக்கல்ஸில் கண்ணாடியை வாங்கிய பின், அதை மீண்டும் மருத்துவரிடம் காண்பித்து, சரியான லென்ஸ்தானா, அது சரியான இடத்தில்தான் பொருத்தப்பட்டிருக்கிறதா என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். தவறான லென்ஸை கவனிக்காமல் பயன்படுத்தினால், கண்ணின் ஆரோக்கியம் கடுமையாகப் பாதிக்கப்படும்.

ஒரு கம்ப்ளீட் ‘கண்’ணோட்டம்!

இந்தியாவில், கண்களுக்கான கண்ணாடிகளை விற்பனை செய்யும் ஆப்டிக்கல்ஸ் நடத்துபவர்களில் பெரும்பாலானவர்கள், போதிய பயிற்சியற்றவர்களாகவே இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் எல்லாம் கண்ணாடிகளை விற்பனை செய்யும் இடத்தில் இருப்பதால்தான் தவறுகள் நிகழ்கின்றன. மக்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ரீடிங் கிளாஸ் உண்மைகள்!

'பார்வை எல்லாம் நல்லா தெரியுது, எழுத்துதான் தெரியல’ என்று சிலர் தாங்களாகவே ஆப்டிக்கல்ஸுக்கு சென்று ரீடிங் கிளாஸ் வாங்கிக்கொள்வார்கள். பொதுவாக, 45 வயதுக்கு மேல்தான் ரீடிங் கிளாஸ் பயன்படுத்த வேண்டும். அதற்குக் கீழ் உள்ளவர்களுக்கு ரீடிங் கிளாஸ் தேவைப்பட்டால், அவர்களுக்கு தூரத்துப் பார்வை என்று அர்த்தம்.

பெரும்பாலும் இடது கண்ணுக்கும், வலது கண்ணுக்கும் வேறு வேறு பவர் இருக்கலாம். ஆனால், ரெடிமேட் ரீடிங் கிளாஸை பொறுத்தவரை, இரண்டு லென்ஸ்களிலும் ஒரே பவர்தான் இருக்கும். வேறு வேறு பவர் உள்ள கண்களுக்கு ஒரே பவர் தரும் கண்ணாடி பயன்படுத்தப்படும்போது, கண்டிப்பாக பிரச்னை வரும். எனவே, ரீடிங் கிளாஸாக இருந்தாலும் அதற்கும் டாக்டரின் பரிசோதனையும், கண்ணாடிக்கான பரிந்துரை யும் அவசியம். 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 'பைஃபோக்கல்'  (bi focal)  கிளாஸ், 'புரோக்ரஸிவ்' (progressive)  கிளாஸ் போன்றவற்றை பயன்படுத்தலாம். பெரும்பாலும் ரீடிங் கிளாஸில் 'ஆன்ட்டி கிராஷ்' வசதி இருக்காது என்பதால், கீறல் விழுவது வாடிக்கையே. இப்படி கீறல் விழுந்த கண்ணாடியை பலரும் பயன்படுத்திக்கொண்டிருப்பார்கள். இதுவும்கூட கண் பார்வையை பாதிக்கும். எனவே, தெளிவான கண்ணாடிகளையே எப்போதும் அணிய வேண்டும்.  

சன்கிளாஸ் கவனம்!

சன்கிளாஸ் வாங்கும்போது, அடர் நிறமாக இருக்க வேண்டும் என்பதை மட்டும்தான் பார்த்து வாங்குவார்கள். ஆனால், யூவி புரொடெக்‌ஷன் உள்ள கண்ணாடியாகப் பார்த்து வாங்குவதுதான் முக்கியம். அடர் நிற கண்ணாடி வழியாகப் பார்க்கும்போது, சரியாகத் தெரியாது என்பதால் உற்றுப் பார்க்க வேண்டியிருக்கும். அதனால் கண்ணில் உள்ள 'ப்யூபிள்' (pupil)' அதிகமாக விரியும். அப்போது யூவி கதிர்கள் சுலபமாகக் கண்களுக்குள் சென்றுவிடும். எனவே, சன்கிளாஸ் வாங்கும்போது சன்கிளாஸ் CR-9, பாலிகார்பனேட் சன்கிளாஸ் போன்ற யூவி புரொடெக்‌ஷன் உள்ள கிளாஸ்களாகப் பார்த்து வாங்க வேண்டும்.  

ஒரு கம்ப்ளீட் ‘கண்’ணோட்டம்!

பவர்லெஸ் கிளாஸ்... தலைவலி இலவசம்!

டிரைவிங் செய்யும்போது தூசுகளில் இருந்து கண்களைப் பாதுகாக்கவும், ஃபேஷனுக்காகவும் பவர்லெஸ் கிளாஸ் பயன்படுத்து கிறார்கள். ஆனால், இந்த பிளெய்ன் கிளாஸில் ப்ரிஸ்மாடிக் எஃபெக்ட் இருந்தால் (prismatic effect)  நிச்சயமாக தலைவலி வரும். எனவே, பிரிஸ்மாடிக் எஃபெக்ட் இல்லாததாகப் பார்த்து வாங்க வேண்டும். கண்ணாடியில் கீறல் விழாமல் பார்த்துக்கொள்வது முக்கியம். கீறல் விழுந்ததைப் பயன்படுத்தினால் கண் பார்வை பாதிப்புக்குள்ளாகும்.

கான்டாக்ட் லென்ஸ்... கவனம்!

கான்டாக்ட் லென்ஸை (contact lens), கண்டிப்பாக மருத்துவ ஆலோசனை இல்லாமல் பயன்படுத்தக்கூடாது. லென்ஸ் சரியாக பொருத்தப்பட வேண்டும் என்பது முக்கியம். கழற்றி மாட்டும்போது சரியாக சுத்தம் செய்து மாட்ட வேண்டும். அதேபோல அதிக நேரம் தொடர்ந்து அணிந்திருக்கவும் கூடாது. இதையெல்லாம் சரிவர கடைப்பிடிக்கவில்லை என்றால், கண்களில் அல்சர் வர வாய்ப்பு அதிகம். இதன் தொடர்விளைவாக, பார்வை இழப்பு வரை ஏற்படலாம். கான்டாக் லென்ஸைப் பொறுத்தவரை தொடர்ந்து மூன்று மணி நேரம் மட்டுமே அணிய வேண்டும். மூன்று மாதத்துக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை அவசியம்.

கலர் லென்ஸை தவிர்ப்பதே நல்லது. கலர் லென்ஸ்களில் உள்ள லேயர், பிக்மென்டால் ஆனது. இதற்குள் காற்று நுழைய வழி இருக்காது. இதனால் கருவிழிக்கு கிடைக்க வேண்டிய ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகும். விளைவாக, கருவிழிக்குள் ரத்தக்குழாய் வளரும். எனவே, கலர் லென்ஸ் தவிர்த்து, க்ளியர் லென்ஸ் (clear lens)  பயன்படுத்தலாம். இதில் ஆக்ஸிஜன் உட்செல்ல முடியும். இதிலும் டி.கே  90 எனும் அளவுக்கு மேல் வரும் கிளியர் லென்ஸ் பயன்படுத்துவது நல்லது. தரம் குறைவான லென்ஸ் பயன்படுத்தினால், இமையின் உட்பகுதியில் கொப்புளம் வரும்!'' என்ற டாக்டர் இறுதியாக,

''கண்களை விற்று சித்திரம் வாங்குவதா என்பது போல, கண்களை விற்று கண்ணாடியை வாங்குவதா என்று கேட்கும் நிலையில்தான் பெரும்பாலானவர்களின் கண்ணாடி மோகம் இருக்கிறது. கண்ணாடியின் கலர், லென்ஸ், ஃபிரேம் போன்றவற்றை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டியது முக்கியம். இவையே பிரச்னைகள் ஏற்பட காரணமாக மாறிவிடக் கூடாது என்பதில் கவனமாய் இருங்கள்!'' என்றார் அக்கறை பொங்க!

இனி, கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்வோம்தானே!

ஒரு கம்ப்ளீட் ‘கண்’ணோட்டம்!

எந்த வயதில் லென்ஸ்..?

எட்டாவது, பத்தாவது படிக்கும் குழந்தைகள்கூட, 'கண்ணாடி வேண்டாம், கான்டாக்ட் லென்ஸ் போட்டுக்கிறேன்!’ என்கிறார்கள். ஆனால், இப்படி லென்ஸ் பயன்படுத்துவதில் அதிக கவனம் தேவை. லென்ஸை கழற்றி மாட்டுவது, பராமரிப்பது போன்றவற்றுக்கெல்லாம் பக்குவம் தேவை. இந்த பக்குவம் உள்ள வயதில் லென்ஸ் அணிய அனுமதிக்கலாம். 18 வயதுக்குமேல் உள்ளவர்கள் லென்ஸ் அணியலாம் என்பதே டாக்டர்களின் பரிந்துரை.

கண்ணாடி பராமரிப்புக்கு!

ஒரு கம்ப்ளீட் ‘கண்’ணோட்டம்!

காற்றில் பறக்கும் கண்ணுக்கு தெரியாத, துகள்கள் மூலம்தான் பெரும்பாலும் கண்ணாடிகளில் கீறல் விழும். கண்ணாடியைத் துடைக்க 'லின்ட் 3 மைக்ரோ ஃபைபர்' (lint-3 micro fibre)  துணியைத்தான் பயன்படுத்த வேண்டும். கையாலோ, அணிந்திருக்கும் உடைகளாலோ துடைக்கக் கூடாது. கண்ணாடி வாங்கும்போதே இந்தத் துணியையும் கொடுப்பார்கள்.

ஒரு கம்ப்ளீட் ‘கண்’ணோட்டம்!

 லென்ஸை சுத்தப்படுத்த அதற்கான ஸ்பிரே மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ஒரு கம்ப்ளீட் ‘கண்’ணோட்டம்!

 கண்ணாடியில் இருக்கும் நோஸ் பேட், நாளாக ஆக கடினமாகி, மூக்கில் அழுத்தம் ஏற்படுத்தும் என்பதால், மூன்று மாத இடைவெளியில் அதை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.

ஒரு கம்ப்ளீட் ‘கண்’ணோட்டம்!
ஒரு கம்ப்ளீட் ‘கண்’ணோட்டம்!

 கண்ணாடியை பாக்கெட்டுக்குள் வைப்பது, சட்டையில் தொங்க விடுவது எல்லாம் கூடாது. அதை மேசையின் மீது வைக்கும்போது ஃபிரேம் கீழாகவும், லென்ஸ் மேலாகவும் இருக்க வேண்டும்.

ஒரு கம்ப்ளீட் ‘கண்’ணோட்டம்!

 ஒவ்வொரு லென்ஸுக்கும் ஃபிரேம் மாறும். அதை சரியாகத் தேர்வு செய்ய வேண்டியது அவசியம். ஃபிரேம் பற்றிய ஆலோசனையையும் டாக்டரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

ஒரு கம்ப்ளீட் ‘கண்’ணோட்டம்!

 கணினியில் அதிகமாக வேலை செய்பவர்கள் 'கிளார் கோட்டிங்' (glare coating)  லென்ஸ் பயன்படுத்தலாம். இண்டோர், அவுட்டோரில் வேலை செய்பவர்களும், இரவு டிரைவிங் மேற்கொள்கிறவர்களும் 'போட்டோ க்ரோமிக்'  (photo chromic)  லென்ஸ் பயன்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism