Published:Updated:

என் வீட்டுத் தோட்டத்தில்..!

பொன்.விமலா, ந.ஆஷிகா,  படங்கள்: ஆ.முத்துக்குமார், பா.காளிமுத்து

என் வீட்டுத் தோட்டத்தில்..!

பொன்.விமலா, ந.ஆஷிகா,  படங்கள்: ஆ.முத்துக்குமார், பா.காளிமுத்து

Published:Updated:

ன் டி.வி-யின் ஆரம்ப காலங்களில் ‘மலரும் மொட்டும்’ என்கிற தலைப்பில் குழந்தைகள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர், இ.மாலா. பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம்மின் மனைவி. குழந்தைகள் மற்றும் மகளிருக்கான பல சமூக அக்கறையுள்ள நிகழ்வுகளில் கலந்துகொள்வதை வாடிக்கையாக்கிக் கொண்டிருக்கும் மாலாவைப் பற்றிய லேட்டஸ்ட் ஹாட் நியூஸ்... இவரது தோட்டம்!

தன் வீட்டுத் தோட்டத்தில் பூக்கும் வண்ண வண்ண மலர்களைத் தன் ஹைபோனில் படம் பிடித்து, ‘என் வீட்டுத் தோட்டத்தில்’ என்ற கான்செப்ட்டுடன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டு, லைக்ஸ்களை அள்ளிக்கொண்டிருக்கும் மாலாவை, அந்தி சாயும் ஒரு மாலை வேளையில், அந்தத் தோட்டத்துப் பூக்களின் சுகானுபவத்தை சுகித்தபடி சந்தித்தோம்.

வண்ண வண்ணமாக கண்களைக் கவரும் ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு ரகம். பூக்களைப் போலவே மென்மையான குரலில் பேசினார் மாலா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் வீட்டுத் தோட்டத்தில்..!

‘‘சாயங்காலம் செடியில் பார்க்கிற மொட்டு, காலையில் மலர்ந்து சிரிக்கிறதைப் பார்க்கவே மனசுக்கு அவ்வளவு ஆனந்தமா இருக்கும்! நான் பார்த்து சந்தோஷப்பட்டதை எல்லோரும் ரசிக்கணும் என்பதற்காகவே ‘என் வீட்டுத் தோட்டத்தில்’ கான்செப்ட்டை உருவாக்கி, தினம் ஒரு பூவை ஃபேஸ்புக்கில் போஸ்ட் பண்ணினேன். அதுக்குக் கிடைச்ச வரவேற்பைத் தொடர்ந்து, பூக்கள் மேல அதிக கவனம் எடுத்துக்க ஆரம்பிச்சேன். நூறுக்கும் அதிக வெரைட்டி செடிகளைத் தோட்டத்துல வெச்சிருக்கேன். மொட்டை மாடி மட்டுமில்லாம... வீட்டுக்குப் பின்புறம், முன்பக்கம், பால்கனி, கைப்பிடி சுவர்னு... ஒரு செடி எங்கெல்லாம் வளர சூழல் இருக்கோ, அங்கெல்லாம் தொட்டியில வெச்சிருக்கேன்.

பசுமையான தாவரங்கள் எப்பவுமே மனசை ரிலாக்ஸ்டா வெச்சிருக்கும். வீட்டுல எத்தனை வேலை இருந்தாலும் சரி, தோட்டத்தைப் பராமரிக்கிற வேலை முழுக்க முழுக்க என்னோடது. காலையில எழுந்ததும் தண்ணி விடுவேன். சில செடிகளுக்குத் தண்ணியே தேவைப்படாது. அதையும் பத்திரமா அதுக்கு தேவையான வெப்பநிலையில வெச்சு வளர்ப்பேன். மணி பிளான்ட் மட்டும் வீட்டுக்குள்ள வெச்சிருக்கேன். பால்கனியில வளரக்கூடிய தாவரங்கள் நிறைய இருக்கு. பாதிக்கும் அதிகமான செடிகளை ஊட்டியிலயும் ஏலகிரியிலயும் இருந்து வாங்கிட்டு வந்திருக்கேன்!’’ என்றவர், தன் பூஞ்செடிகள் குறித்துப் பேச ஆரம்பித்தார்.

என் வீட்டுத் தோட்டத்தில்..!

‘‘செம்பருத்தி பூச்செடியில ஹைபிரிட் வகை பல வண்ணங்களில் கிடைக்குது. காக்டஸ் வகையைச் சேர்ந்த கள்ளிச்செடிகள் பார்க்கவே அழகா இருக்கும். குண்டு கள்ளினு ஒரு கள்ளி வகையை வெச்சிருக்கேன். இது வருஷத்துக்கு ஒரு முறைதான் பூக்கும். பார்க்க நட்சத்திரம் மாதிரி அவ்வளவு அழகா இருக்கும்! பட்டன் ரோஸ், ரெட் ரோஸ்னு ரோஜா வகைகளுக்கு தனிக் கவர்ச்சிதான். ஆனா, அதைப் பராமரிக்கறது கொஞ்சம் கஷ்டம். ஊட்டி, மைசூர்னு வாங்கிட்டு வர்ற அந்தச் செடிகளை நம்ம தட்பவெப்ப நிலையில் வளர வைக்கிறது பெரும்பாடு. அதனால ரோஜா செடிகளைப் பொறுத்தவரை, நம்ம ஊரு க்ளைமேட்டுல வளர்ற செடிகளா விசாரிச்சு வாங்குறது நல்லது!’’

என் வீட்டுத் தோட்டத்தில்..!

- பூக்கள் பற்றிப் பேசும்போது தானும் மலர்கிறார் மாலா!

‘‘சுவரை ஒட்டி வளரக் கூடிய காக்டஸ் கொடி படர்ந்து கிடக்கும் பால்கனியைப் பார்க்கும்போதே கிராண்ட் லுக் கொடுக்கும். இக்ஸொரா (IXORA), சாமந்தி, கிறிஸ்துமஸ் ட்ரீ, அடேனியம் (ADENIUM), ஹைபிரிட் காகிதப்பூ, ஜாதிமல்லிகைனு ஒவ்வொரு செடியுமே ஒவ்வொரு விதத்துல அழகு. செடிகளுக்கு இயற்கை உரம் போடுறது ரொம்ப முக்கியம். செடிக்குத் தேவையான அளவு தண்ணீர் விட்டா போதும். அதிகமா விட்டா... இலைகள் பழுத்து செடி பாழாயிடும். பூச்சிகள் அண்டாத கள்ளி வகை தாவரங்களையே நான் அதிகமா வெச்சிருக்கிறதால, பெரும்பாலும் பூச்சிக்கொல்லிகளுக்கான அவசியமே எனக்கு வரல. அப்படித் தேவைப்பட்டாலும் இயற்கையான முறையில கிடைக்கிற பூச்சிவிரட்டிகளைப் பயன்படுத்திக்குவேன்!’’ என்ற மாலா,

‘‘பூக்கள், செடிகள், கொடிகள் மட்டுமல்ல... விருப்பப்பட்டவங்க காய்கறி தோட்டமும் போட்டுக்கலாம். காலையில 30 நிமிஷமும் மாலையில 30 நிமிஷமும் தோட்ட வேலைகளுக்கு ஒதுக்கினா போதும். செடிகளைப் பராமரிக்க பெருசா மெனக்கெட அவசியமே இல்ல. நம்ம கையால நட்டு, நாமளே தண்ணீர் ஊத்தி, நம்ம வீட்டுல ஒரு பூ பூக்கிறதைப் பார்க்கிறதுக்கு இணையான சந்தோஷம் கண்களுக்கும் மனசுக்கும் ஏது?!’’

- தன் தோட்டத்துப் பூ ஒன்றை மெள்ள தடவிக் கொடுக்கிறார் மாலா!

பராமரியுங்கள் இப்படி!

வீட்டுத் தோட்டம் என்பது பலரின் கனவாக இருந்தாலும்... பராமரிப்பு, இடப்பற்றாக்குறை போன்றவையே தடையாக இருக்கின்றன.

‘‘மனம் இருந்தால் போதும், அப்பார்ட்மென்டில்கூட வீட்டுத் தோட்டம் வளர்க்கலாம்!’’ என்று சொல்லும் மதுரையைச் சேர்ந்த தோட்ட வடிவமைப்பாளர் மைதிலி, அதற்கான டிப்ஸ்கள் தந்தார்.

*  குறைந்த இடமாக இருந்தாலும் அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று முதலில் ஒரு கற்பனைக் காட்சியை உருவாக்கிக்கொள்ளுங்கள். தோட்டம் அமைக்க நினைப்பவர்களுக்கு எல்லைதான் சவாலாக இருக்கும். ஒரு வரிசையாக செடிகளை வளர்க்க நினைக்க, அது மேலும் கீழும் முன்னும் பின்னுமாக இடத்தை ஆக்கிரமித்துவிடும். இதற்கு, கொடிகளை எல்லையாகப் படரவிடலாம்.

என் வீட்டுத் தோட்டத்தில்..!

*  ஒரு தொட்டி வைப்பதற்கு முன்னதாக அதன் அளவைவிட பெரிதான ஒரு பாத்திரத்தை அடியில் வைத்துவிடுங்கள். வழியும் தண்ணீர், மண் அந்த பாத்திரத்தில் சேகரமாக, அவ்வப்போது சுத்தம் செய்துவிடலாம். பயன்படாத பாத்திரங்கள், உடைந்த குடம், டப் போன்றவற்றையே தொட்டியாகப் பயன்படுத்தலாம். வீட்டுக்குள் இருக்கும் செடிகளுக்கு தண்ணீரை ஸ்பிரே செய்தாலே போதுமானது.
 
* பூக்கும் செடிகளுக்கு வெயில் அதிகம் தேவை என்பதால், அவற்றை பால்கனியில் வைக்கலாம். கொடிகளை பால்கனியைச் சுற்றிப் படரவிட்டால் பார்க்க அழகாக இருக்கும். 

*  வீட்டின் பின்புறம் துளசி, வாழை மற்றும் தேவையான காய்கறிகளைப் பயிரிடலாம். தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய், மிளகாய்ச் செடிகளுக்கு அதிக இடம் தேவைப்படாது. ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தொட்டியில் வைத்துவிடலாம்.

* வீட்டின் முன்புற பகுதியில் சிறிது இருந்தாலும்கூட சைப்ரஸ், புத்தா பேம்பூ, ஆர்னமென்டல் குரோட்டன்ஸ் போன்ற அழகுத் தாவரங்களை வளர்க்கலாம். 

 *  சுவற்றில் ஹேங்கிங் பாட்ஸ் உருவாக்கி, அஸ்பிராகஸ் மற்றும் டேபிள் ரோஸ் போன்றவற்றை வளர்க்கலாம். வீட்டுக்குள்ளேயே வளர்க்க அழகுச்செடியான சைப்ரஸ் செடி நல்ல சாய்ஸ்.
 
*  தொட்டியில் மண் நிரப்பும்போது ஆற்று மணல், செம்மண் மற்றும் தேங்காய்மட்டை ஆகிய மூன்றையும் கலவையாகக் கலந்து நிரப்பவும். வீட்டிலேயே இயற்கை உரம் தயாரித்து பயன்படுத்த தோட்டத்தில் சின்னக் குழி தோண்டியோ, ஒரு சிமென்ட் தொட்டியிலோ தேவையற்ற காய்கறி, அவற்றின் தோல் மற்றும் பழங்களின் தோல்களைப் போட்டு மூடி வைத்தால் 3 மாதங்களில் அவை மக்கி கறுப்பு நிறமாக மாறியிருக்கும்போது, உரமாகப் பயன்படுத்தலாம். பூச்சித்தாக்கு தலுக்கு வேப்ப எண்ணெயை ஸ்பிரே செய்யலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism