ரதிர் - மதி - சரஸ்வதி - த்ருதி - சம்ருதி - ஸித்தி - ஸ்ரீயஹா

- மஹாலக்ஷ்மியின் கடாக்ஷம் எவருக்குக் கிடைக்கிறதோ, அவரை அடைய, ‘நான்’, ‘நீ’ என்று ஏழுபேர் போட்டி போட்டுக்கொண்டு வருவார்கள் என்று சொன்னோம் அல்லவா? இந்த ஏழுபேரில் முதலில் பராசர பட்டர் குறிப்பிடுவது, ‘ரதி’ (ரதிர்). ரதி என்றால் பிரேமை, அன்பு என்று பொருள். எல்லோருக்கும் அன்புதான் முதலில் வேண்டும். ஒருவருக்கு முதலில் செல்வம் வந்துவிட்டால், பிறகு அவரிடம் அன்பு வராமலே போனாலும் போய்விடலாம். அன்பு வந்த பிறகு செல்வம் வந்தாலும்கூட, அன்பு நம்மை விட்டுப் போய்விடவும் கூடும். அப்படி அன்பு நம்மிடம் இருந்து நீங்காது இருக்க வேண்டுமானால், அதற்கு மஹாலக்ஷ்மியின் கடாக்ஷம் நமக்கு அவசியம் வேண்டும். எனவேதான் பராசரபட்டர் இந்த சுலோகத்தில் முதலில் ரதியாகிய அன்பைக் குறிப்பிடுகிறார்.

ஸ்ரீமஹாலக்ஷ்மி கடாக்ஷம்! - 6

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடுத்தது மதி. மதி என்றால் அறிவு, ஞானம் என்று அர்த்தம். இந்த மதிதான் நமக்கு நல்ல புத்தி சாதுர்யத்தை வழங்கக்கூடியது. நல்ல அறிவு இருந்தால்தான், நம்மால் ‘நல்லவை எவை, கெட்டவை எவை’ என்று பகுத்தறிந்து செயல்பட முடியும். பகவானுக்கு, ‘மாதவ’ என்று ஒரு திருநாமம் உண்டு. மா என்றால் மஹாலக்ஷ்மி பிராட்டி. தவ என்றால் உடையவன் என்று பொருள். அதாவது மஹாலக்ஷ்மிக்கு ஸ்வாமியாகத் திகழ்பவர் பெருமாள். அதேபோல் மா என்றால் வித்யை - பகவத் ஞானம் என்றும் ஒரு பொருள் உண்டு. பகவானை அடைவதற்குத் தேவையான அந்த பகவத் ஞானம்கூட பிராட்டியின் கடாக்ஷம் யாருக்குக் கிடைக்கிறதோ, அவரை அடைய விரும்புமாம்.

மூன்றாவதாக பராசர பட்டர் குறிப்பிடுவது, சரஸ்வதி. நல்ல அறிவு மட்டும் இருந்துவிட்டால் போதுமா? அதை நாம் வெளிப்படுத்த வேண்டுமே. சிலர் நல்ல அறிவைப் பெற்றிருப்பார்கள். ஆனால், அவர்களுக்கு அதை வெளிப்படுத்தத் தெரியாது. பேச ஆரம்பித்தால் பேச்சு வராது. அப்படி இல்லாமல் மஹாலக்ஷ்மி கடாக்ஷத்தினால் நாம் பெற்றிருக்கக் கூடிய மதி - அறிவு நமக்கும் மற்றவர்களுக்கும் பயன்படும்படியாக அமைய வேண்டுமானால், இந்த சரஸ்வதி வேண்டும். மஹாலக்ஷ்மியின் கடாக்ஷம் கிடைக்கப் பெற்றவரிடம் இந்த சரஸ்வதியும் போட்டி போட்டுக்கொண்டு வருவாளாம். ஆக, மஹாலக்ஷ்மியின் கடாக்ஷத்தினால் வாக்குவன்மை உண்டாகுமாம்.

அன்பு, அறிவு, வாக்குவன்மை மூன்றும் இருந்துவிட்டால் போதுமா? மனதில் உறுதி வேண்டும் அல்லவா? அதுதான் ‘த்ருதி’.  எந்த ஒரு செயலை எடுத்தாலும், இடையில் எத்தனை தடைகள் வந்தாலும், அதை எப்படியும் சாதித்துவிட வேண்டும் என்னும் மன உறுதி இருந்தால்தானே, தொடங்கும் செயலில் வெற்றியை அடையமுடியும்? அப்படிப்பட்ட இந்த `த்ருதி’யாகிய மன உறுதியும்கூட, மஹாலக்ஷ்மியின் அருட்பார்வை எவரிடத்தில் பதிகிறதோ அவரை அடைவதற்கு போட்டி போட்டுக்கொண்டு ஓடிவருமாம்!
அடுத்தபடியாக அவரைத் தேடி வருவது ‘சம்ருதி’. சம்ருதி என்றால் செழிப்பு என்று அர்த்தம். இங்கே செழிப்பு என்பது செல்வச் செழிப்பைக் குறிப்பிடுவதல்ல, ஒருவரின் மனச்  செழிப்பையே குறிப்பிடுகிறது.

ஒருவருக்கு செல்வச் செழிப்பு இருந்தாலும்கூட, அவருக்கு மனம் செழுமையாக இல்லாவிட்டால், அவருடைய வீடே களையிழந்து காணப்படும். வீட்டில் விளக்குகூட ஏற்றமாட்டார். நாம் போனால் வரவேற்று உபசரிக்கவும் மாட்டார். அவரிடம் செல்வம் இருக்கிறது என்றுதான் அர்த்தமே தவிர, செழுமை
இருப்பதாகச் சொல்ல முடியாது. மனம் செழுமையாக இருப்பவரிடம் செல்வத்தின் செழிப்பு இல்லை என்றாலும், வீடு தேடி வருபவர்களை அன்புடன் வரவேற்று உபசரிப்பார். அதனால், அவருடைய வீடே எப்போதும் கலகலப்பாக இருக்கும். தன்னிடம் இருப்பதைக் கொண்டு வருபவர்களுக்கு உணவு அளிப்பார். அவரிடம் நிறைய செல்வம் இல்லை என்றாலும்கூட, அவரு டைய வீடு செழிப்பாக இருக்கும். இந்தச் செழிப் பும் ஒருவரிடம் இருக்க வேண்டுமானால், அவருக்கு மஹாலக்ஷ்மியின் கடாக்ஷம் அவசியம் இருக்க வேண்டும்.

ஸ்ரீமஹாலக்ஷ்மி கடாக்ஷம்! - 6

அடுத்தபடியாக பராசரபட்டர் குறிப்பிடுவது, ‘ஸித்தி’. நாம் மன உறுதியுடன் தொடங்கும் காரியம் நல்லபடியாக நிறைவேற வேண்டும் அல்லவா? அந்தவகையில் நாம் தொடங்கும் காரியம் நிறைவேற, ஸித்தி அடைய வேண்டுமானால், அதையும் நமக்கு  அருள்புரிவது மஹாலக்ஷ்மி பிராட்டியாரின் கருணை கடாக்ஷம்தான்.

கடைசியில்தான் பராசரபட்டர், ‘ஸ்ரீய’ என்று செல்வத்தைக் குறிப்பிடுகிறார். காரணம், ஒருவரிடம் எவ்வளவுதான் செல்வம் இருந்தாலும், முதலில் சொன்ன அன்பு, ஞானம், வாக்குவன்மை, மன உறுதி, செழிப்பு, காரிய ஸித்தி இவ்வளவும் இருக்க வேண்டும்.

‘நாராயணா’ எனும் நாமம், நமக்கு எவற்றை எல்லாம் அருளும் என்று சொல்ல வரும்போது, திருமங்கையாழ்வார் சொல்கிறார்:

‘குலம் தரும் செல்வம் தந்திடும்
அடியார் படுதுயர் ஆயினவெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும்       
அருளொடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும்
பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா எனும் நாமம்’

‘நாராயணா’ என்று நாம் சொன்னால், இத்தனையும் நமக்குக் கிடைக்குமாம். அதற்குக் காரணம், அவருடைய திருமார்பில் இருந்து ‘அகலகில்லேன்’ என்று நீங்காமல் திகழும் மஹாலக்ஷ்மி பிராட்டியின் திருவருள்தான்.

இங்கே ஆழ்வார், ‘நாராயணன்’ என்னும் நாமத்தைச் சொன்னால், நமக்கு மோட்சத்தைத் தரும் என்று சொல்லாமல், செல்வத்தைத் தரும் என்று சொல்லி இருப்பது ஏன் தெரியுமோ?

ஆழ்வார் காரணம் எதுவும் இல்லாமல் அப்படி சொல்லியிருக்க மாட்டார். இங்கே ஆழ்வார் குறிப்பிடுவது வெறும் செல்வம் இல்லை. அவர் சொல்லுவது கைங்கர்ய செல்வத்தை.

ஆழ்வார் குறிப்பிடுவது நமக்கான செல்வத்தை இல்லை. மற்றவர்களுக்கு உதவி செய்வதற்குத் தேவையான செல்வத்தை. அடியார்களுக்கும், பகவானுக்கும் கைங்கர்யம் செய்வதற்குத் தேவையான செல்வத்தை. கோயிலில் திருப்பணிகள் செய்ய வேண்டும் என்றாலும், பகவானுக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு செல்வம் வேண்டும் அல்லவா? நான்கு குழந்தைகள் பசியால் துடிக்கிறார்கள் என்றால், அந்தக் குழந்தைகளின் பசியைத் தீர்க்க செல்வம் வேண்டும் அல்லவா? அந்தக் கைங்கர்ய செல்வத்தைத்தான் திருமங்கை ஆழ்வார் குறிப்பிடுகிறார்.

செல்வம் வந்துவிட்டால், அதை நல்லபடியாகப் பயன்படுத்த வேண்டும் அல்லவா? அதனால்தான் பராசரபட்டர், மஹாலக்ஷ்மியின் கடைக்கண் பார்வை ஒருவருக்குக் கிடைத்தால், முதலில் அவரை ‘ரதி’ என்கிற அன்பு வந்து சேரும் என்று சொல்லி இருக்கிறார்.
அடுத்தபடியாக, மதி...

- கடாக்ஷம் பெருகும்...

தொகுப்பு: க.புவனேஸ்வரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism