Published:Updated:

சனிப்பெயர்ச்சி பலன்கள்

16.12.2014 முதல் 17.12.2017 வரைஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

சனிப்பெயர்ச்சி பலன்கள்

16.12.2014 முதல் 17.12.2017 வரைஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

Published:Updated:
சனிப்பெயர்ச்சி பலன்கள்

நிகழும் ஜய வருடம் மார்கழி மாதம் 1-ம் தேதி செவ்வாய்க்கிழமை (16.12.2014) கிருஷ்ண பட்சத்து தட்சணாயன புண்ய காலம் ஹேமந்த ருது, ஆக்ரஹாயனம், தசமி திதி, அஸ்தம் நட்சத்திரம், சௌபாக்யம் நாமயோகம், பத்தரை நாம கரணம், நேத்தரம், ஜீவனம், சித்தயோகம் கூடிய சுபயோக, சுப தினத்தில் பஞ்ச பட்சியில் காகத்தின் வல்லமை காலத்தில் மதியம் 2 மணி 16 நிமிடத்துக்கு திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி நிகழ்கிறது. சனிபகவான் துலாம் ராசியை விட்டு விலகி விருச்சிகம் ராசிக்குள் நுழைகிறார். இங்கு 16.12.2014 முதல் 17.12.2017 வரை அமர்ந்து தன்னுடைய கதிர்வீச்சுகளை உலகெங்கும் செலுத்துவார்.

மேஷம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுவரை உங்கள் ராசிக்கு 7-ல் அமர்ந்து, கண்டகச் சனியாக உங்களை ஆட்டிப்படைத்தார் சனிபகவான். நிம்மதியற்றப் போக்கு, தோல்வி மனப்பான்மை, தடுமாற்றம், தயக்கம் என பலவிதங்களிலும் பாதிக்கப்பட்டீர்கள். ஆனால், இப்போது கண்டகச் சனி விலகி, அஷ்டமத்துச் சனி உங்களுக்குத் தொடங்குகிறது.

சனிப்பெயர்ச்சி பலன்கள்

அஷ்டமத்துச் சனி ஓரளவு நன்மையைத் தரக்கூடியதாக இருக்கும். உங்கள் ராசிக்கு பாதகாதிபதியான சனி 8-ல் மறைவதால், தடைப்பட்ட காரியங்கள் நல்லவிதத்தில் முடியும். திருமணத் தடைகள் நீங்கும். ஆனால், பொருத்தம் பார்க்கும்போது கிரகப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்வது நல்லது. சனிபகவான் 8-ல் அமர்வதால் உங்கள் ஆரோக்கியம், அழகு கூடும். 2015 செப்டம்பர் மாதத்திலிருந்து குடும்பத்தில் நல்லது நடக்கும். ஓரளவு பணவரவு உண்டு. அஷ்டமத்துச் சனி தொடங்கியிருப்பதால், மறதி காரணமாக விலை உயர்ந்த பொருட்களை இழந்துவிட வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் செப்டம்பர் 2015 முதல் உங்களுக்கு நல்லது நடக்கும். ஓரளவு பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்.

இந்த சனிமாற்றம், கடந்த இரண்டரை ஆண்டுகளாக இருந்து வந்த கண்டகச் சனியை காட்டிலும் ஓரளவு நிம்மதியையும், மகிழ்ச்சியையும், பணவரவையும் தருவதாக இருக்கும்.

சனிப்பெயர்ச்சி பலன்கள்

ரிஷபம்

இதுவரை உங்கள் ராசிக்கு 6-ல் அமர்ந்து ஓரளவு செல்வாக்கையும், பணவரவையும், அதிகாரப் பதவிகளையும் தந்த சனிபகவான், இப்போது 7-ல் அமர்ந்து கண்டகச் சனியாக வருவதால்... நீங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உறவினர்களுடன் கருத்து மோதல், மனத்தாங்கல் ஏற்படலாம். சனிபகவான் உங்களுடைய ராசிக்கு 9-ம் இடத்தையும், சுக ஸ்தானத்தையும் பார்ப்பதால், உடல் உபாதை ஏற்படும். உங்கள் ராசிக்கு பிரபல யோகாதிபதியாக சனிபகவான் அமைவதாலும், ஒருவகையில் சனிபகவான் திக்பலம் பெற்று அமர்வதாலும், ஓரளவு கெடுபலன்கள் குறைந்து நன்மையே உண்டாகும். மேலும் உங்கள் யோகாதிபதிகளின் நட்சத்திரங்களில் சனிபகவான் செல்லவிருப்பதால் வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் உங்களுக்கு அனுபவமில்லாத புதிய துறையில் ஈடுபட வேண்டாம். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.

இந்த சனிமாற்றம், உங்களுக்கு ஓய்வின்மையையும், உடல் நலக் குறைவையும் தந்தாலும், உங்களுக்கு சனி யோகாதிபதியாக இருப்பதால், உங்களுடைய வளர்ச்சி தடைப்படாமல்... உங்களைப் பாதுகாப்பதாக அமையும்.

சனிப்பெயர்ச்சி பலன்கள்

மிதுனம்

இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு நிம்மதியில்லாமல் பல வகையிலும் அலைக்கழித்தார் சனிபகவான். பிள்ளைகள் ஸ்தானமான 5-ல் அமர்ந்திருந்ததால்... பிள்ளைகளால் நிம்மதியற்றப் போக்கையும், உறவினர்களால் இழப்பையும், அவமானங்களையும் தந்த சனிபகவான், இப்போது 6-ம் வீட்டில் அமர்கிறார். உங்களின் பாக்யாதிபதியாகிய சனிபகவான் 6-ல் அமர்வதால், இனி நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். பணவரவு அதிகரிக்கும். வாடகை வீட்டிலிருந்த சிலர் சொந்த வீட்டுக்கு மாறுவீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து ஒருபடி உயரும். புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். ஏற்றுமதி - இறக்குமதி வகைகளால் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் தொல்லை தந்த அதிகாரி இடம் மாறுவார். சலுகைகளையும், பதவி உயர்வையும் பெறுவீர்கள்.

இந்த சனிமாற்றம், உங்கள் வாழ்க்கையை வசந்தமாக்குவதுடன்... பல்வேறு திருப்பங்களையும், திடீர் அதிர்ஷ்டங்களையும் தருவதாக அமையும்.

சனிப்பெயர்ச்சி பலன்கள்

கடகம்

இதுவரை உங்கள் ராசிக்கு 4-ல் அமர்ந்து அர்த்தாஷ்டம சனியாக உங்களைப் பாடாய்ப்படுத்தினார் சனிபகவான். இப்போது 5-ம் வீட்டுக்குள் சனி நுழைவதால், உங்கள் அடிமனதில் இருந்து வந்த கனமும், பயமும் நீங்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். வேலை தேடுபவர்களுக்கு  நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு உருவாகும். தம்பதியர் இடையே இருந்த ஈகோ பிரச்னைகள் குறையும். ஆனால், சனிபகவான் 7-ம் வீட்டைப் பார்ப்பதால், வாழ்க்கைத் துணைவரின் உடல் நிலை பாதிக்கப்படலாம். உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டை சனி பார்ப்பதால், உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை மாற்றிக்கொள்ள வேண்டும். 5-வது வீட்டில் சனி அமர்வதால், நெடுந்தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. நண்பர்களிடம் இடைவெளி விட்டு பழகுங்கள். வியாபாரத்தில் மந்த நிலை மாறும். வரவு உயரும். பாக்கிகளும் வசூலாகும். அக்டோபர் 2015-ல் இருந்து புது முதலீடுகளும் செய்யலாம். உத்யோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிட்டும்.

இந்த சனி மாற்றம், கடந்த இரண்டரை ஆண்டுகளாக அர்த்தாஷ்டமச் சனியால் அல்லல்பட்ட நிலை மாறி, உற்சாகத்தை தரக்கூடியதாக அமையும்.

சனிப்பெயர்ச்சி பலன்கள்

சிம்மம்

இதுவரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு பல வெற்றிகளையும், பணவரவையும், ஓரளவு வசதி, வாய்ப்புகளையும் தந்த சனிபகவான், இப்போது 4-ல் அமர்கிறார். சுக ஸ்தானமான 4-ல் சனி அமர்வதால், ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை காட்டுங்கள். உணவுக் கட்டுப்பாடு இனி உங்களுக்கு அவசியமாகிறது. குடும்பத்தில் கணவன் - மனைவிக்குள் கருத்து மோதல்கள் அதிகமாகும். வழக்கமாக நீங்கள்  உங்களுக்காக வகுத்துக்கொண்டுள்ள கட்டுப்பாட்டு கோட்டை  தாண்டாமல் செயல்படுவது நல்லது. உங்களுக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம். தூக்கம் குறையும். உங்களுடைய ராசியை சனி பார்ப்பதால்... மறைமுக எதிர்ப்புகளும், எதிர்மறை எண்ணங்களும் அதிகமாகும். வெளிவட்டாரத்தில் நிதானமாகப் பேசுவது, பழகுவது நல்லது. பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். கூட்டுத் தொழில் வேண்டாம். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

இந்த சனி மாற்றம், உங்களுக்கு அலைச்சலையும், ஆரோக்கியக் குறைவையும், வேலைச்சுமையையும் தந்தாலும்... கடின உழைப்பால் முன்னேற வைக்கும்.

சனிப்பெயர்ச்சி பலன்கள்

கன்னி

ஏறக்குறைய கடந்த எட்டரை ஆண்டுகளாக ஆட்டிப்படைத்த சனிபகவான் இப்போது 3-ம் வீட்டில் நுழைவதால், எதிலும் உங்கள் கை ஓங்கும். இழுபறியாக இருந்த வேலைகளெல்லாம் இனி நல்ல விதத்தில் முடியும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. வாழ்க்கைத் துணைவர் உங்களைப் பூரணமாக நேசிப்பார். சொந்த வீடு, புது வாகனம் வாங்குவீர்கள். மகளின் திருமணத்தை விமரிசையாக நடத்துவீர்கள். மகனுக்கும் நீங்கள் நினைத்தபடி எல்லோமே சிறப்பாக அமையும். அக்கம்பக்கத்தினருடன் இருந்த சச்சரவு நீங்கும். வியாபாரம் தழைத்தோங்கும். சிலர் புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் பல்வேறு அவமானங்களையும், இடையூறுகளையும் சந்தித்த நிலை மாறும். பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

இந்த சனி மாற்றம், உங்களுக்கு ராஜயோகத்தையும், எதிலும் வெற்றியையும், நீண்ட நாள் கனவை நனவாக்கு வதாகவும் அமையும். 

சனிப்பெயர்ச்சி பலன்கள்

துலாம்

கடந்த இரண்டரை ஆண்டுகளாக உங்களுடைய ராசிக்குள்ளேயே ஜென்மச் சனியாக அமர்ந்து உங்களைப் புலம்ப வைத்த சனிபகவான், இப்போது உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் பாதச்சனியாக அமர்கிறார். ஆரோக்கியம் பாதிக்கப்பட்ட நிலை இனி மாறும். எதிர்பார்த்த காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். எதிர்மறை எண்ணங்களும், தாழ்வுமனப்பான்மையும் நீங்கும். தன்னிச்சையாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாழ்க்கைத் துணைவர் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார். உங்கள் ரசனைக்கேற்ப வீடு அமையும். பாதச் சனி தொடங்குவதால் உத்யோகத்தின் பொருட்டு கணவரையும், பிள்ளைகளையும் பிரிய வேண்டி வரும். மற்றபடி பெரிய பாதிப்புகள் இருக்காது. வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை, நஷ்ட நிலை மாறும். சந்தை நிலவரத்தை அறிந்து, விளம்பர யுக்திகளையும் கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் பக்கபலமாக இருப்பார்கள். சக ஊழியர்களாலும் மதிக்கப்படுவீர்கள்.

இந்த சனி மாற்றம், கடந்த இரண்டரை ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த உங்களை சுறுசுறுப்பாக்கி, விடா முயற்சியால் பெரிய இலக்கை எட்டிப்பிடிக்க உதவும்.

சனிப்பெயர்ச்சி பலன்கள்

விருச்சிகம்

கடந்த இரண்டரை ஆண்டுகளாக ராசிக்கு 12-ம் வீடான விரய ஸ்தானத்தில் மறைந்திருந்த சனிபகவான், இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே நுழைகிறார். இதுவரை இருந்து வந்த அலைச்சல் குறையும். வீண் செலவுகள் கட்டுப்படும். ஜென்மச் சனி தொடங்குவதால், ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். எப்போதும் நேர்மையாகவும், உண்மையாகவும் வாழ்ந்துகொண்டிருக்கும் உங்களுக்கு, ஜென்மச் சனி தொடங்குவதால், சோதனைகள் அதிகமாகவே இருக்கும். அநாவசியமாக அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடாதீர்கள். பிறருக்கு ஆலோசனை கூறுவதை அறவே தவிர்த்துவிடுவது நல்லது. உங்கள் குடும்பத்தின் வருமானம் உயரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு சிறந்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டி வரும். அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்.

சின்னச் சின்ன சிக்கல்களுக்கெல்லாம் கோபப்படாமல், உணர்ச்சி வசப்படாமல் பொறுமையாக இருந்து விட்டுக் கொடுக்கும் அணுகுமுறையை பின்பற்றினால்... இந்த சனி மாற்றம் தொடர்ந்து வெற்றி பெற வைக்கும்.

சனிப்பெயர்ச்சி பலன்கள்

தனுசு

இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து ஓரளவுக்கு வளர்ச்சியையும், நிம்மதியையும், பணவரவையும் கொடுத்து வந்த சனிபகவான், இப்போது உங்களுடைய ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்வதுடன் ஏழரைச் சனியும் தொடங்குவதால், உங்களுடைய நட்பு வட்டம் விரிவடையும். அறிவுத் திறன் கூடும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஏழரைச் சனி தொடங்கியிருப்பதால், செலவுகள் அடுக்கடுக்காக வந்த வண்ணம் இருக்கும். பணத்தட்டுப்பாடும் அதிகரிக்கும். சிலருக்கு அண்டை மாநிலத்தில் வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டை சனி பார்ப்பதால், உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை தவிர்க்கப் பாருங்கள். ராசிக்கு 9-ம் வீட்டையும் சனி பார்ப்பதால், தங்க ஆபரணங்களை கவனமாகக் கையாளுங்கள். 6-ம் வீட்டையும் சனி பார்ப்பதால், பழைய
கடனை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் பெருமையைப் புரிந்துகொள்வார்கள். பதவி உயர்வையும் எதிர்பார்க்கலாம்.

இந்த சனி மாற்றம், உங்களுக்கு அலைக்கழிப்புகளையும், செலவினங்களையும் தந்தாலும், தொலைநோக்குச் சிந்தனையால் சாதிக்க வைப்பதாக அமையும்.   

சனிப்பெயர்ச்சி பலன்கள்

மகரம்

இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து உங்களை எந்த வேலையையும் முழுமையாக முடிக்க விடாமல், பல வகையிலும் உங்களை சோதித்த உங்கள் ராசிநாதன் சனிபகவான், இப்போது லாப வீடான 11-ம் வீட்டுக்குள் நுழைகிறார். ராசிநாதன் லாப வீட்டில் அமர்வதால், இனி தொட்டதெல்லாம் துலங்கும். எதிர்பார்த்து காத்திருந்த தொகை கைக்கு வரும். குடும்ப வருமானத்தை உயர்த்துவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். சனி 5-ம் வீட்டைப் பார்ப்பதால், பிள்ளைகள் சில சமயம் பிடிவாதமாக நடந்துகொள்வார்கள். மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். மகளின் திருமணத்தை எல்லோரும் வியக்கும்படி நடத்துவீர்கள். சனிபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால், உடல் உபாதை ஏற்படும். வியாபாரத்தில் உணவு, துணி, மூலிகை வகைகளால் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங் களைக் கற்றுக்கொள்வீர்கள்.

இந்த சனிமாற்றம், நீண்ட கால ஆசைகளை நிறைவேற்றுவதுடன், உங்களுடைய ஆளுமைத் திறனை அதிகரிக்க வைப்பதாகவும் இருக்கும்.

சனிப்பெயர்ச்சி பலன்கள்

கும்பம்

இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்து பணத்தட்டுப்பாட்டையும், கடன் பிரச்னையையும் தந்த சனிபகவான், இப்போது 10-வது வீட்டில் அமர்கிறார். அதனால் உங்களிடம் இருந்து வந்த தாழ்வுமனப்பான்மை நீங்கும். படபடப்பு விலகும். நிதானமாக நல்ல முடிவுகள் எடுப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். உறவினர்கள்  உங்களுடைய விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும், உதவும் மனப்பான்மையையும் புரிந்துகொள்வார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகன் படிப்பில் முன்னேறுவார். அவருக்கு சிறந்த வேலையும் கிடைக்கும். வியாபாரத்தில் லாபமடைவீர்கள். நல்ல பங்குதாரர்களும் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். உத்யோக ஸ்தானமான 10-ல் சனி அமர்வதால், மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். சக ஊழியர்களிடம் நிதானமாக பேசுவது, பழகுவது நல்லது. மற்றபடி உத்யோகத்தில் உங்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு எல்லாம் உண்டு.

இந்த சனி மாற்றம், சவாலான காரியத்தை கையில் எடுத்து அதில் வெற்றி பெற வைப்பதாக அமையும்.

சனிப்பெயர்ச்சி பலன்கள்

மீனம்

இதுவரை உங்களுக்கு அஷ்டமத்துச் சனியாக இருந்து உங்களை பலவிதங்களில் ஆட்டிப்படைத்த சனிபகவான், இப்போது 9-ம் வீட்டில் நுழைவதால்... சோர்வு, கவலை, கண்ணீரெல்லாம் நீங்கும். உறவினர், நண்பர்களால் உதாசீனப்படுத்தப்பட்ட நிலை மாறும். பிள்ளைகள் இனி உங்கள் வார்த்தைக்குக் கட்டுப்படுவார்கள். கடன் பிரச்னையில் மூழ்கியிருந்தவர்களுக்கு படிப்படியாக கடனை பைசல் செய்ய வழி பிறக்கும். 9-ல் சனி அமர்வதால், தந்தையாரின் உடல் நிலை பாதிக்கப்படலாம். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைகளையும், மார்க்கெட் நிலவரத்தையும் புரிந்துகொண்டு அதற்கேற்ப முதலீடு செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் அவமானங்களை சந்தித்த நிலை மாறி, மதிப்பு, மரியாதை கூடும். பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்தபடி கிடைக்கும். சிலருக்கு அதிக சம்பளத்துடன் புது வேலை கிட்டும்.

இந்த சனிமாற்றம் விரக்தியிலும், வேதனையிலும் மூழ்கிக் கிடந்த உங்களை சாதனையாளராக மாற்றும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism