‘ரதி’யாகிற அன்பைப் பற்றி  முதலில்  சொல்லி விட்ட பராசரபட்டர் தொடர்ந்து, அறிவாகிய மதி, வாக்கு வன்மையாகிற சரஸ்வதி, மன உறுதி என்கிற த்ருதி, செழிப்பாகிற சம்ருதி, காரிய ஸித்தியைக் குறிப்பிடும் ஸித்தி என ஐந்து விஷயங்களைக் குறிப்பிட்டு, கடைசியிலும் கடைசியாகத்தான் `ஸ்ரீ’யாகிற செல்வத்தைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார்.

இந்த செல்வம் என்பது நம்முடைய லௌகீகத் தேவைகளுக்காக மட்டுமல்ல, பகவானுக்கும் பகவானின் அடியவர்களுக்கும் சேவை செய்வதற்கான கைங்கர்ய செல்வமாம்!

‘குலம் தரும், செல்வம் தந்திடும்’ என்று திருமங்கையாழ்வார் குறிப்பிடுவது இந்தக் கைங்கர்ய செல்வத்தைத்தான். இப்படியாகச் சொல்லி வரும் திருமங்கையாழ்வார், நாம் படுகின்ற துன்பங்கள் அத்தனையையும் இல்லாமல் செய்வதுடன், நமக்கு மோட்சத்தையும் கொடுக்கும் என்பதுடன், பெற்ற தாயை விடவும் அளப்பரிய நன்மைகளை நமக்குச் செய்யும் என்கிறார். இப்படி பெருமாள் அனைத்தையும் நமக்கு அருள்கிறார் என்றால், அதற்குக் காரணம் பிராட்டியாரின் கடாக்ஷ பார்வைதான். பிராட்டியாரின் கடாக்ஷம் யார் மேலெல்லாம் படுகிறதோ, அவர்களிடம் மேலே சொன்ன அந்த ஏழுபேரும், `நான் முந்தி, நீ முந்தி’ என்று ஓடிவருவார்களாம்!

ஸ்ரீமஹாலக்ஷ்மி கடாக்ஷம்! - 7

உலகத்தில் பிறக்கும் ஒருவர் மோட்சத்தை அடைவதில் விருப்பம் உள்ளவராக இருக்க வேண்டும் என்றால், அவர் பிறக்கும்போது மதுசூதனனின் பார்வை கடாக்ஷம் கிடைக்கப் பெற்றிருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான், அவருக்கு மோட்சத்தில் விருப்பம் ஏற்படுவதுடன் மோட்சமும் கிடைக்கப் பெறுவார். ஆகவே, ஒருவர் தன் பாவங்கள் நீங்கி மோட்சத்தை அடைய வேண்டுமானால், பெருமாளுடைய கடாக்ஷம் வேண்டும். இதைத்தான் ஆண்டாள் தன்னுடைய திருப்பாவை 22-வது பாடலில்,

‘அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்’
என்று பிரார்த்தனை செய்கிறாள்.

இங்கே ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். ஆண்டாள், `நீ எங்களைப் பார்த்தாயானால், எங்களுடைய சாபம் எல்லாம் நீங்கி நாங்கள் மோட்சத்தை அடைவோம்' என்றுதான் இறை வனிடம் சொல்லி இருக்கிறாளே தவிர, `நீ எங்களைப் பார்' என்று சொல்லவில்லை. இதில் இருந்து என்ன தெரிகிறது? பகவான் தன்னைப் பார்ப்பாரோ மாட்டாரோ என்ற சந்தேகம் ஆண்டாளுக்கு.

அதாவது பெருமாள் தாமாக ஒருவரை கடாக்ஷிப்பது என்பது சந்தேகம்தான். காரணம், அவர் எப்போது கோபமாக இருப்பார், எப்போது சாந்தமாக இருப்பார் என்பது யாருக்குத் தெரியும்?

ஆனால், மஹாலக்ஷ்மி தாயார் அப்படி இல்லை. அவள் எப்போதுமே கோபம் இல்லாதவளாக, நிக்கிரஹம் செய்வது என்றால் என்னவென்றே தெரியாத அனுக்கிரஹ பார்வையோடு எப்போதும் அருள் புரிபவள். பிராட்டி நம்மைப் பார்த்து கடாக்ஷிப்பது அதாவது நம்மைப் பார்ப்பது அனுக்கிரஹம் செய்வதற்கு மட்டும்தான். ஆனால், அவள் பகவானை நோக்குவதோ இரண்டு விதமாக இருக்கிறது.

ஒன்று ஆசையுடன் பார்க்கும் பார்வை என்றால், மற்றது பகவானை அங்கீகரிக்கும் பார்வை. அப்படி பிராட்டி பகவானை எப்போது அங்கீகாரம் செய்கிறாள் என்றால், அவர் ஜகத்தாகிய இந்த பிரபஞ்சத்தையும் ஜீவன்களையும் படைக்கும்போதுதான். பகவானை மஹாலக்ஷ்மி அங்கீகாரம் பண்ணுவதாவது? இது நம்மைப் போன்றவர்களுக்கு ஏற்படக்கூடிய சந்தேகம். ஆனால், உண்மை என்னவோ அதுதான்.

பகவான் ஒவ்வொன்றையும் சிருஷ் டித்து முடித்ததும் பிராட்டியாரின் திருக் கண்களைப் பார்ப்பாராம். ‘‘தேவி, நான் என்னுடைய சிருஷ்டியை நன்றாகச் செய்திருக்கிறேனா? நீ பார்த்து சரியாக இருக்கிறது என்று அங்கீகரித்தால்தான் நமக்கு திருப்தி” என்பாராம். பிராட்டியாரின் அனுக்கிரஹத்தைப் பெறவேண்டும் என்பதற்காகவே பகவான் சிருஷ்டிக்கிறார் போலும்! பகவான்தான் ஜகத்தை சிருஷ்டிக்க வேண்டும் என்று சாந்தோக்கிய உபநிஷதம் கூறுகிறது.

அப்படி பகவான் பிரபஞ்சத்தை சிருஷ் டிக்க நினைத்துவிட்டால், அதற்காக அவர் சிரமம் எதுவும் படவேண்டிய அவசியமே இல்லை. அவருடைய சங்கல்ப மாத்திரத்திலேயே அனைத்தையும் சிருஷ்டித்துவிடுவாராம். அப்படி சிருஷ் டித்து முடித்ததுமே அங்கீகாரத்துக்காக பிராட்டியாரின் முகத்தைப் பார்ப்பாராம். பிராட்டியும் தன் புருவத்தை அழகாக அசைத்து, பகவானுடைய சிருஷ்டியைப் பார்த்து அங்கீகரிப்பாளாம். ஆக, பகவானின் சிருஷ்டித் தொழிலுக்கும்கூட பிராட்டியாரின் கடாக்ஷமும் அங்கீகாரமும் தேவைப்படுகிறது பாருங்கள்.

இது எப்படி இருக்கிறது தெரியுமா? வகுப்பறையில் தன்னுடைய விடைத்தாளை ஆசிரியர் திருத்தும்போது, ‘தான் சரி யாக எழுதி இருக்கிறோமா... இல்லை, தவறாக எழுதிவிட்டோமா’ என்று தெரிந்துகொள்ள, ஆசிரியரின் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்கும் மாணவனைப் போலவும், சொல்லித் தந்த ராகத்தை பாடச்சொல்லி பாட்டு வாத்தியார் கேட்க, ‘அந்த ராகத்தைச் சரியாகப் பாடுகிறோமா?’ என்ற தயக்கத்துடன், பாட்டு வாத்தியாரின் முகத்தைப் பார்த்துக்கொண்டே பாடும் மாணவனின் பார்வையைப் போலவும் இருக்கிறதாம்!

ஸ்ரீமஹாலக்ஷ்மி கடாக்ஷம்! - 7

பிராட்டியின் பரிபூரண கடாக்ஷம் எவருக்குக் கிடைக்கிறதோ அவர் பிரம்மமாகவே ஆகி விடுவார் என்கிறார் பட்டர். இப்படி எல்லோருமே பிரம்மமாக ஆகிவிட முடியுமா என்ன? அது சாத்தியம் இல்லை என்பது பட்டருக்குத் தெரியாதா என்ன? இந்த விஷயம் அவருக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் மஹாலக்ஷ்மி பிராட்டியாரின் கடாக்ஷத்தினால் அந்த அளவுக்கு ஒருவர் உயர்வு அடையலாம் என்பதை நமக்குத் தெளிவுபடுத்துவதற்காகத்தான் பட்டர் இப்படி சொல்லி இருக்கிறார்.

பகவான் தாம் சிருஷ்டித்த பிறகு, அங்கீகாரத்துக்காக  பிராட்டியாரின் திரு முகத்தைப் பார்ப்பதுபோலவே, தம்முடைய சிருஷ்டியைத் தொடங்குவதற்கு முன்பாகவும் பிராட்டியாரின் திருமுகத்தைப் பார்ப்பாராம். இப்படி பார்ப்பது எதற்குத் தெரியுமா?

தாம் ஒன்றை சிருஷ்டிக்கும்போது, உயர்ந்ததாக இருக்க வேண்டுமா, சுமாராக இருக்க வேண்டுமா... இல்லை, மோசமாக இருக்க வேண்டுமா என்று தெளிவுபடுத்திக் கொள்வதற்காக அப்படி பார்ப்பாராம். ஆக, பகவான் சிருஷ்டிக்கு முன்பும் சரி, சிருஷ்டிக்குப் பின்பும் சரி... பிராட்டியாரின் திருமுகத்தைப் பார்ப்பாராம். பகவான் சிருஷ்டித்துக்கொண்டு இருக்கும்போதும், தேவியின் திருமுகத்தைப் பார்ப்பாராம். பிராட்டியாரின் புருவம் மேல்நோக்கி உயர்ந்தது என்றால், உயர்ந்தவர்களைப் படைத்துவிடுகிறாராம்; பிராட்டியாரின் புருவம் அசையாமல் இருந்தது என்றால், சுமாரானவர்களைப் படைத்துவிடுகிறாராம்; பிராட்டியாரின் புருவம் தாழ்ந்து காணப்பட்டாலோ தாழ்ந்தவராகவும் மோச மானவராகவும் படைத்துவிடுகிறாராம். இதில் இருந்து நாம் எப்படிப்பட்டவர்களாகப் பிறக்க வேண்டும் என்பதற்குக்கூட மஹாலக்ஷ்மியின் கடாக்ஷம் வேண்டியிருக்கிறது பாருங்கள்!

பிராட்டியாரின் கடாக்ஷத்தினால் இன்னும் பலவகைகளில் நமக்கு நன்மைகள் ஏற்படுகின்றன. அதேபோல், பிராட்டியார் பகவானைப் பார்க்கும்போதும் நமக்கு நன்மைகள் ஏற்படுகின்றனவாம். பிராட்டியார் பகவானைப் பார்க்கிறாள் என்றால், அதனால் நமக்கு எப்படி நன்மைகள் ஏற்படும்?

- கடாக்ஷம் பெருகும்...

தொகுப்பு: க.புவனேஸ்வரி