Published:Updated:

ஜனனி... திரை இசையில் புதுமின்னல்!

ந.ஆஷிகா,   படங்கள்: கு.பாலசந்தர்

ஜனனி... திரை இசையில் புதுமின்னல்!

ந.ஆஷிகா,   படங்கள்: கு.பாலசந்தர்

Published:Updated:
ஜனனி... திரை இசையில் புதுமின்னல்!

மிழ்த்திரை இசைக்குப் புத்துணர்வுப் புதுவரவு... இசையமைப்பாளர் ஜனனி. இயக்குநர் நந்தன் இயக்கும் ‘பிரபா’ திரைப்படத்துக்கான இசைக்கோப்பு வேலைகளில் மும்முரமாக இருந்தவரை, குளிர்தென்றல் இதமாக வீசிக்கொண்டிருந்த ஒரு நாளில் சந்தித்தோம்!

‘‘எப்பவும் இசையோடயே பயணிச்சுட்டு இருந்தாலும், இந்தப் பயணம் புதுசா இருக்கு!’’

- கண்கள் மலர்த்தி பேச்சை ஆரம்பித்த ஜனனி, தொடர்ந்தார்.

‘‘என்னோட ஒன்பது வயதில் ‘நாத ஒலி’ இசை ஆல்பத்தை வெளியிட்டேன். அதை ஊக்குவிக்கும்விதமா ‘சாதனை நாயகி’னு என்னைப் பற்றிய செய்தி, ஆனந்த விகடனில் வந்தது. தொடர்ந்து, ஹிந்துஸ்தானி, கிளாஸிக்கல், வெஸ்டர்ன், கீ-போர்டு, பியானோ, வீணைனு இசையை அறிவதையே என் பணியா செய்துட்டு வர்றேன்.

2012-ம் வருஷம், ‘வந்தே மாதரம்’ என்ற என் இசை ஆல்பத்தை வெளியிட்டேன். அதைக் கேட்ட நந்தன் சார், ‘என்னோட முதல் திரைப்படத்துக்கு நீதான் இசையமைக்கணும்!’னு சொல்லி, வாய்ப்பைக் கொடுத்திருக்கார். முழுமையா பயன்படுத்திக்கணும்னு நிறையவே உழைச்சுருக்கேன். ஸ்யுஸடோ, லியூட், உக்லின், 8 ஸ்டிரிங் கிட்டார், ஷாஹி பாஜா, பஹ்ரைனினு புதிய இசைக் கருவிகளை, என் இசையில அறிமுகப்படுத்தியிருக்கேன். வித்தியாசமான இசையைக் கொடுத்தாலும், பாடல்கள்ல நேட்டிவ் டோன் இருக்கும்.

ஜனனி... திரை இசையில் புதுமின்னல்!

‘பிரபா’ படம், ஹீரோயின் சப்ஜெக்ட். ஆக்‌ஷன்  திரில்லரான இந்தப் படத்தில் மலையாள நடிகை சுவாஸிகா நடிக்கிறாங்க. படத்தில் தீம் சாங் தவிர்த்து, ஐந்து பாடல்கள். ஹரிஹரன் சார், விஜய் பிரகாஷ் சார், ஸ்வேதா மோகன், பாலக்காடு ஸ்ரீராம் சார் மற்றும் என் கல்லூரித் தோழி சௌமியா பாடியிருக்காங்க. என் இசையின் சிறப்பா நான் கொண்டாடுறது, என் குரு பாலமுரளி கிருஷ்ணா. அவரும் நானும் சேர்ந்து ஒரு பாடலைப் பாடியிருக்கோம். `பாடலில் சந்தோஷமும் இருக்கணும், அதேநேரத்தில் அந்தப் பாட்டு பிரிவின் வலியையும் உணர்த்தணும்'னு டைரக்டர் சொன்னார். குருஜியோட இணைஞ்சு, ‘பூவே பேசும் பூவே’ என்று தொடங்கும் பாடலை பாடியிருக்கேன். குருஜி, ‘இது ஓகே-வாம்மா... உனக்கு திருப்தியா?’னு கேட்டுக் கேட்டு பாடினப்போ, பிரமிச்சுப் போயிட்டேன். இசையில் பல உச்சங் களைத் தொட்ட அந்த 84 வயது கோபுரத்துகிட்ட, இசையைத் தாண்டி பல பண்புகளையும் கத்துக்கிட்டேன்!

முதல் படம் மட்டுமல்ல... இனிவரும் வாய்ப்புகளிலும் இசையில் பல நுணுக்கங்களைக் கத்துட்டு, புதிய பரிமாணங்களில் அதை வழங்கணும்!’’ எனும் ஜனனி ‘பிரபா’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்.