‘அவள் விகடன்’ சகோதரிகள் திவ்யா, அனுபமா... இவங்க ரெண்டு பேரின் கேள்விகளுக்கும் நான் சொல்லியிருந்த விளக்கத்தைப் படிச்சுட்டு நிறைய அம்மாக்கள், ‘இதை நாங்களும் பிராக்டிகலா செய்து பார்க்கிறோம்’னு சொன்னது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ‘நீங்க சொன்னது நூத்துக்கு நூறு உண்மை’னு ஆமோதிச்சாங்க, ‘ஜீவன் ஃபவுண்டேஷன்’ உளவியல் நிபுணர் வசந்தி பாபு. எல்லோருக்கும் நன்றி!

ஆனா, இவை எல்லாம் ஞான உபதேசம் இல்லை. நான் பல பேரிடமிருந்து கத்துக்கிட்டது; என் குழந்தைகிட்டே இத்தனை வருஷமா செய்துகிட்டு வர்றது; அதைத்தான் உங்ககிட்ட பகிர்ந்துக்கிட்டேன். 100 சதவிகிதம் எல்லோரும் இதை அப்ளை பண்ண முடியலைனாலும், யார் யாருக்கு எது முடியுதோ, அதை அப்ளை பண்ணிப் பார்க்கலாம். நிச்சயம் ஒரு புதிய மாற்றம் இருக்கும். அதுக்கு நான் கியாரன்டி!

‘கண்மணி அன்போடு...’ கௌதமி! - 7

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘நாங்க என்னதான் செய்தாலும், எங்க புள்ளை எங்ககிட்ட ஒட்டுதலாவே இருக்கமாட்டேங்குது. இத்தனைக்கும் நான் என் மகளுக்கு ஒரு தோழியா, ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருக்கேன். இதுக்கு மேல என்ன பண்றது?’னு குறைபட்டிருக்காங்க, புதுச்சேரியைச் சேர்ந்த சகோதரி கவிதா சுப்ரமணியன்.

உங்க கேள்வியிலேயே விடை இருக்கே, கவிதா! புரியலையா? விளக்கமாகவே சொல்றேன்!

பெற்றோர் - குழந்தை பிணைப்பு (parent - child bonding) என்பது, குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமான ஏரியா. அடிப்படையில் அந்தப் பிணைப்பு இருந்தால்தான், குழந்தைக்காக நீங்க செய்யும் எந்த முயற்சியும் சுலபமா சாத்தியமாகும். பெற்றோர்களில் ரெண்டு வகை இருக்காங்க. பிள்ளைகளிடம் ஓவர் டாமினேட் பண்ணி, ‘நான் சொல்றதைத்தான் கேக்கணும்... கிழிச்ச கோட்டைத் தாண்டக் கூடாது’னு அடக்கி ஆள்றவங்க ஒரு வகை. பிள்ளைகளை ஃப்ரெண்டாக நடத்தும் கவிதா மாதிரியான பெற்றோர் இன்னொரு வகை.

நம்மோடு நட்பு பாராட்டும் நண்பர்கள், தோழிகள் எல்லாம் நம்மோட இன்டலக்சுவல் லெவலுக்கு இருக்கிறவங்க. குழந்தைகளை நாம் அந்த லெவலுக்கு நடத்த முடியாது. குழந்தைகளுக்குச் சின்னச் சின்ன விஷயங்களைச் சொல்லித்தர்றது முதல், பெரிய விஷயங்களில் ‘இது நல்லது, இது கெட்டது’னு கோடு போடுறது வரை எல்லாமே அம்மா, அப்பாதான். நீங்க ஒரு பெற்றோரா இருந்தா மட்டும்தான் அவங்களை ‘பேலன்ஸ்டான’ வழியில் வளர்த்தெடுக்க முடியும். ஃப்ரெண்டாக இருந்தால் முடியாது.

எங்கப்பா சொல்வாங்க, ‘‘உன்னையும் உங்க அம்மாவையும் போல ஒரு ‘அம்மா - பொண்ணு பாண்டிங்’ எங்கேயுமே பார்க்க முடியாது’’னு! நானும் எங்க அம்மாவும் நல்லா சண்டை போட்டுக்குவோம். ஆனாலும், எங்க அம்மாவுக்கும் எனக்குமான பிணைப்பு அப்படி இறுக்கமா இருந்தது. இது ஒவ்வொரு வீட்டுலயும் இருக்கிறதுதான். ‘பெற்றோர்’ என்னும் அந்த உறவோட ஆழத்தையும் அந்த உறவின் மேலான நம்பிக்கையையும் குழந்தை புரிஞ்சுக்குற அளவுக்கு செய்ய வேண்டியது அம்மாவான நம்மோட வேலைதான்!

ஆபீஸ்ல ஒவ்வொரு வேலைக்கும், ஒரு ‘ஜாப் டிஸ்கிரிப்ஷன்’ இருக்கும். அதை வெச்சு, நம்மோட பங்களிப்பு என்ன என்பதைப் புரிஞ்சுக்கலாம். அதுபோல, ஒவ்வோர் உறவுக்கும் ‘ஜாப் டிஸ்கிரிப்ஷன்’ இருக்கு. பெற்றோர் என்னும் பொறுப்பின் டிஸ்கிரிப்ஷனைத் தெரிஞ்சுக்கிட்டீங்கனா போதும்!

‘கண்மணி அன்போடு...’ கௌதமி! - 7

வளரும் ஒரு குழந்தை, இனிமேல்தான் எல்லாமே தெரிஞ்சுக்கணும். தன்னைப் பற்றியும், தன் குடும்பம், சுற்றி இருக்கும் உறவுகள், தன் விருப்பங்கள், இந்த உலகத்தில் எப்படி வாழணும், தன்னோட பலம், பலவீனம், எப்படி ஒரு உறவை எடுத்துக்கணும், எந்த மாதிரி உறவு தேவை, எது தேவையில்லை... இப்படி எவ்வளவோ விஷயங்களை அந்தக் குழந்தை வளர வளரத்தான் தெரிஞ்சுக்கணும். அந்தக் குழந்தைக்கு ஆரோக்கியமான உணவு, பாதுகாப்பு, உடல் சுத்தம், அன்பு, நம்பிக்கைனு அது எதிர்பார்க்கும் எல்லாத்தையுமே கொடுக்கும் பொறுப்பு பெற்றோருடையதுதானே!
 
அந்தக் குழந்தை கொஞ்சம் வளர்ந்து வெளியில் போற வயசு வர்றப்போ, அதுக்கேற்றபடி பொறுப்பெடுக்கும் விஷயங்கள் மாறினாலும் அடிப்படையான பொறுப்பு மாறாது. அதுக்கு அடுத்த கட்டத்தில், அவங்க தானாக சில முடிவுகளை எடுக்க ஆரம்பிப்பாங்க. ‘ஓகே டியர்’ என்று தலையாட்டிட முடியாது. ஏன்னா, அந்த விஷயத்தில் அதுக்கான எல்லையோ, அதைத் தாண்டிய அனுபவங்களோ அந்த வயதில் அவங்களுக்குத் தெரியாது. அந்த ஸ்டேஜில் அம்மா - அப்பாதான் பிள்ளைகளுக்கான வரையறைகளை வகுத்துக் கொடுக்கணும்.

இந்தப் பொறுப்பை, ஒரு நண்பனா, தோழியா இருந்து செய்ய முடியாது. உதாரணத்துக்கு, உங்க டீன் ஏஜ் பையன் ‘நான் தம்மடிச்சு பார்க்கலாம்னு இருக்கேன்’னு சொன்னா, ‘சும்மா அடிச்சுப் பாருடா மச்சான்’னு அவனோட நண்பர்கள் சொல்வாங்க. காரணம், அந்த வயசு... அதன் குறுகுறுப்பு! ஆனா, ‘நான் என் பையனுக்கு ரொம்ப ஃப்ரெண்ட்லி’னு சொல்லிக்க நினைக்கிற உங்களால, ‘ஓகே... ட்ரை பண்ணிப் பாருடா!’னு சொல்ல முடியுமா? அங்கேதான் பேரன்ட்டுக்கும் ஃப்ரெண்டுக்கும் இருக்கிற நூலிழை வித்தியாசம் வருது!

என் பொண்ணு சுப்புலக்ஷ்மி சில விஷயங்களில் கேக்கும்... ‘‘நீங்க மட்டும் பண்ணலாம்... நான் பண்ணக் கூடாதா?’’னு. ‘‘நான் அடல்ட். வளர்ந்து, வாழ்ந்து எல்லா அனுபவங்களையும் பெற்றவள். நான் ஒரு விஷயம் பண்றேன்னா, அதன் விளைவுகள் எதுவா இருந்தாலும் அதை எதிர்கொள்ள முடியும். அதுக்கான அறிவு முதிர்ச்சியும் அனுபவ முதிர்ச்சியும் எனக்கு இருக்கும். உன்னால முடியாதும்மா!’’னு எடுத்துச் சொல்வேன். ஒரு பார்ட்டிக்கு போகணும்னு கேட்டா, ‘‘அது பாதுகாப்பு இல்லை’’னு சொல்வேன்.

‘எங்க அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட், எங்க அம்மா போர்’னு குழந்தைகள் சொன்னாலும் பரவாயில்லை. அவங்களுக்கான எல்லைகளை வரையறுக்க, நீங்கதான் தேவை! ஒரு வீட்டில் அம்மா, அப்பா என்பவங்க ஆபீஸ் பாஸ் மாதிரியோ, மிலிட்டரி கர்னல் மாதிரியோ, அல்லது ஃப்ரெண்ட் மாதிரியோ இருக்கத் தேவை இல்லீங்க! அம்மா, அப்பாவாக மட்டும்தான் இருக்கணும்! குழந்தைகளுக்குப் பள்ளிப் பருவத்திலிருந்து கல்லூரி, அலுவலகம் வரை வெளியில் நண்பர்கள் கிடைப்பாங்க. வேலைக்குப் போனா பாஸ் கிடைப்பாங்க. ஆனா, வீட்டில் இருக்கும் ‘பெற்றோர்’ எங்கேயும் கிடைக்க மாட்டாங்க! நீங்க ஃப்ரெண்டா இருந்தாதான் பசங்க உங்ககிட்ட வருவாங்க, எல்லாம் சொல்வாங்கனு இல்ல! நீங்க உங்க உறவில் நேர்மையா இருந்தாலே போதும்... கண்டிப்பா வருவாங்க! ஒரு ஃப்ரெண்டைப் போல உங்ககிட்ட சில விஷயங்களைப் பகிர்ந்துக்கலைனாலும் கூடப் பரவாயில்லை. ஆனா, அவங்க பாதுகாப்பில்லாதது போல (insecured) உணரக்கூடாது.

‘உனக்கு எதுன்னாலும் நான் இருக்கேன்!’னு அம்மா, அப்பா மட்டும்தானே சொல்ல முடியும்? வாழ்க்கைப் பயணத்தில் யார் வேணும்னாலும் நமக்கு நண்பர்களாக இருக்கலாம்! ஆனா யாருமே ‘பெற்றோர்’ ஆகிட முடியாது!

நீங்க உங்க பிள்ளைக்கு ஃப்ரெண்டா இருங்க... அது தப்பில்லை. எப்போ தெரியுமா? உங்க பிள்ளை வளர்ந்து, டீன் ஏஜ் தாண்டி, தானே தனக்குரிய வழிகளைத் தேர்ந்தெடுத்து அதில் பயணிக்கும் அளவுக்கு ‘இண்டிபென்டன்ட்’ ஆகி, மன முதிர்ச்சி அடையும் சமயத்தில், கண்டிப்பா அவங்களுக்கு நீங்க ஒரு தோழியா மட்டும்தான் இருக்க முடியும்! அப்போதுதான் நீங்க உங்க குழந்தைக்கு ஃப்ரெண்டாகவும் இருக்கணும்! இப்போதைக்கு ஒரு நல்ல அம்மாவா மட்டுமே இருங்க கவிதா!

- பேசுவோம்...

தொகுப்பு: பிரேமா நாராயணன்