ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
Published:Updated:

'அதனாலதான் நீ சந்தோஷமா இருக்கே!’

பொன்.விமலா

'அதனாலதான் நீ சந்தோஷமா இருக்கே!’

பெண்ணியத்தைப் பற்றி  பேசும்    தமிழ்த் திரைப் படங்கள் அவ்வப்போது வந்துகொண்டிருந்தாலும், யதார்த்தமான பெண்ணியப் பார்வையை ‘அவள் அப்படித்தான்’ என்ற திரைப்படம் சமூகத்தின் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது!

சிறுவயதில் தன்னைச் சுற்றி நடக்கும் கசப்பான சம்பவங்களால், குடும்ப உறவு குறித்த பலமான நம்பிக்கை இல்லாத பெண்ணாக, அதே நேரத்தில் பெண்ணுக்கான முழுசுதந்திரமும் தைரியமும் கொண்ட மஞ்சுவாக நடித்திருப்பார் ஸ்ரீப்ரியா.

தியாகு (ரஜினிகாந்த்) நடத்தும் கம்பெனியில் பணிபுரிவாள் மஞ்சு. ஆவணப்படம் இயக்கும் அருணுடன் (கமல்ஹாசன்) நட்பாக பழக ஆரம்பிக்கும் மஞ்சு, கடந்த காலத்தைப் பற்றி அவனிடம் பகிர்வாள். மஞ்சுவின் வாழ்வில் வரும் ஆண்கள் ஒவ்வொருவரும், நம்ப வைத்து, கடைசியில் பிரிந்து போகிறார்கள். என்றாலும் தைரியத்தை இழந்துவிடாமல், தனக்கென ஒரு பாதையை வகுத்து நடைபோடுகிறாள்.

தன்னைப் பற்றி கமென்ட் அடித்த பெண்ணிடம் மஞ்சு கேட்கும் கேள்வி சமூகத்தின் மீதான துணிச்சலான சாட்டையடி. ``முதுகுக்கு பின்னாடி பேசுறதுதான் எரிச்சலா இருக்கு. `ஸ்டைலா புடவையை கட்டிட்டு மினுக்குறா... கண்டகண்ட ஆம்பிள்ளைங்களோட சுத்துறா..... ஃப்ரீயா செக்ஸ் பத்தி பேசுறா'னு இதெல் லாம் என்ன பேச்சு? ஃப்ரீயா செக்ஸ் பத்தி பேசுறேன். ஆனா, ஃப்ரீ செக்ஸ் வேணும்னா பேசுறேன்?’’ எனக் கேட்டு திணற வைப்பாள் மஞ்சு.

'அதனாலதான் நீ சந்தோஷமா இருக்கே!’

அருணுக்கும் ஒரு கட்டத்தில் மஞ்சு மீது காதல் வர, அதை வெளிப்படுத்தாமல் பிரிந்து செல்வான். கொஞ்ச நாட்களில் மஞ்சுவுக்கு அருண் மீது காதல் வந்து தேடிச் செல்லும்போது, அவனுக்குத் திரு மணம் நடந்திருக்கும். அவனுடைய மனைவியாக வரும் சரிதாவிடம், `பெண் சுதந்திரம்னா என்னனு தெரியுமா?’ என்று மஞ்சு கேட்க, `எனக்குத் தெரியாதே...' என்று சரிதா சொல்ல, `அதனாலதான் நீ சந்தோஷமா இருக்கே' என்று சொல்லி, அங்கிருந்து செல்வாள் மஞ்சு!

பெண் சுதந்திரம் பற்றி விவாதிக்கும் இப்படம் எடுக்கப்பட்டது 1978-ல்! ஆண்டு கள் 37 கடந்துவிட்டாலும், இன்றைக்கும் அச்சு அசலாக பொருந்திப் போகிறது.

காலத்தால் அழியாத இப்படியொரு படைப்பைத் தந்தவர் இயக்குநர் ருத்ரய்யா. இவர், நவம்பர் 18 அன்று, மறைந்துவிட்டார்.