Published:Updated:

கண் முன்னே காவியம்...

‘அந்தரம்’ நிகழ்த்திய அற்புதம்! ந.ஆஷிகா,   படங்கள்: தி.குமரகுருபரன்

கண் முன்னே காவியம்...

‘அந்தரம்’ நிகழ்த்திய அற்புதம்! ந.ஆஷிகா,   படங்கள்: தி.குமரகுருபரன்

Published:Updated:

‘அந்தரம்’ நடன நிகழ்ச்சி... தெலங்கானாவின் வாசவி, தமிழகத்தின் ஆண்டாள், கேரளாவின் ஆற்றுக்கால் பகவதி மற்றும் இலங்கையில் பிறந்து கர்நாடகாவில் வளர்ந்த ரம்பா என நான்கு காவியப் பெண்களின் கதைகளை மேடையில் நாட்டியமாக்கியது!

நவம்பர் 28-ம் தேதி சென்னை மியூசிக் அகாடமியில் நடந்த இந்நிகழ்ச்சியை, கிருத்திகா சுப்பிரமணியனின் ‘நமார்கம்’ எனும் நடன அமைப்பும், சுஹாசினி மணிரத்னத்தின் ‘டேலன்ட் சவுத்’ என்ற அமைப்பும் இணைந்து நடத்தின.  

கண் முன்னே காவியம்...

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய சுஹாசினி, ஒவ்வொரு கதையையும் ஆரம்பிக்கும் முன், ஒவ்வொரு காஸ்ட்யூமில் வந்து, ஒரு குட்டிக் கதை சொல்லி நிகழ்ச்சியைக் கலகலப்பாக்கினார். அந்த வகையில், ‘வாசவி’ மேடைக்கு வரும் முன்னர், ஏர்ஹோஸ்டஸ் காஸ்ட்யூமில் தோன்றிய சுஹாசினி, ஒருமுறை விமானத்தில் தனக்கு நேர்ந்த அனுபவத்தைக் கூறினார்.

‘‘ஒரு தாத்தாவும் பேத்தியும் விமானத்தில் வந்தாங்க. அந்தப் பேத்திகிட்ட பேச்சுக் கொடுத்தேன். அவங்க மும்பை செல்லவிருப்பதாவும், அங்க 55 வயசுக்காரர் ஒருத்தருக்கும் தனக்கும் திருமணம் நடக்கவுள்ளதாவும் சொன்னா அந்த 12 வயதுச் சிறுமி. எனக்கு தூக்கிவாரிப் போட, உடனடியா போலீஸுக்கு தகவல் சொல்லி, அந்தச் சிறுமி மீட்கப்பட்டா. இப்போ நீங்க பார்க்கப் போற வாசவியோட கதையும், கிட்டத்தட்ட இந்த ரகம்தான்!’’ என்ற சுஹாசினியின் அறிமுகத்தைத் தொடர்ந்து, ‘வாசவி’யாக மேடைக்கு வந்தார் யாமினி ரெட்டி. குச்சிப்புடி நடனத்தின் மூலம் ‘வாசவி’ வாழ்க்கையைச் சொன்னது, பரவச அனுபவம்!

நந்தியின் சாபத்தால் வாசவியாக பூமியில் தோன்றும் பார்வதிதேவி, இறுதிவரை கன்னியாகவே இருந்து இறக்க வேண்டும் என்றிருக்கிறது. ஆனால், பக்கத்து நாட்டு மன்னன் வாசவியின் மேல் மையல் கொண்டு வாசவியின் தந்தையிடம் பெண் கேட்கிறான். நிலைமையை எடுத்துக்கூறுகிறார் அவர். கோபமடைந்த மன்னன் வன்முறையைக் கையாள, பயந்த வாசவியின் தந்தை, தன் குலத்தாருடன் கலந்தாலோசிக்க எண்ணி, 18 நகரங்களிலிருந்து 714 கோத்திரங்களைச் சேர்ந்தவர்களை வரவழைக்கிறார். அதில் 612 பேர், பெண் கொடுக்கலாம் என்று சொல்ல, 102 பேர் வேண்டாம் என்கிறார்கள். இதில் கோபமடைந்த 612 பேரும் நாட்டைவிட்டு வெளியேறிவிட, பலரும் தம் சொந்த நாட்டை விட்டு வெளியேற நாம் காரணமாகிவிட்டோமே என்று அக்னி
குண்டத்தில் வாசவி விழ, அவர் பராசக்தியாக உருவெடுப்பதோடு கதை முடிகிறது. தனக்கு விருப்பமில்லை என்றபோதும், மணக்க வற்புறுத்திய மன்னன் மீதான ரௌத்திரத்துடன் அக்னிக்குண்டத்தில் விழுந்து, பின் சாந்த சொரூபியாக வாசவி (யாமினி) மீண்டெழுந்து வந்தபோது, பலர் கைதட்ட, சிலர் கைகூப்பி வணங்கவும் செய்தார்கள்!

கண் முன்னே காவியம்...

அடுத்து மடிசார் மாமியாக மேடையில் தோன்றிய சுஹாசினி, தன் பேத்திக்கு ஆண்டாள் கதை சொல்ல ஆரம்பிக்கிறார். ஆண்டாளாக மேடையில் வந்து நின்றார், கிருத்திகா சுப்பிரமணியன். பெரியாழ்வார் துளசிச் செடிக்கு அருகில் ஒரு குழந்தையைக் கண்டெடுத்து ஆண்டாளாக வளர்க்கிறார். தந்தையைப் போலவே தானும் திருமாலின் தீவிர பக்தையாக வளரும் ஆண்டாள், திருமாலுக்கு மாலை கோத்துக்கொடுக்கும்போது, அவர் மேல் கொண்ட காதலால், அதை தான் ஒருமுறை அணிந்து பார்த்துக் கொடுப்பது வாடிக்கையாகிறது. இதனையறிந்த பெரியாழ்வார் பதற, அவர் கனவில் வரும் திருமால் ஆண்டாளின் காதலை ஏற்பதாகக் கூற, ஆண்டாள் திருமாலுடன் இரண்டறக் கலந்து விடுவதாய் கதை முடிகிறது. பரதநாட்டியத்தில் ஆண்டாளாக நம்மை ஆண்டார், கிருத்திகா!

இந்த முறை கறுப்புப் புடவையில் தலைவிரி கோலமாய், மதுரையை எரித்த கண்ணகியாக மேடையில் தோன்றினார் சுஹாசினி. தன் கணவன் கள்வன் என்று மதுரையில் கொல்லப்பட, ‘என் நெஞ்சு எரிவது போல், தீர விசாரிக்காமல் அநீதியாக தீர்ப்பளித்த மன்னன் இருக்கும் ஊரான மதுரையும் எரியட்டும்’ என்று அவர் ஆவேசமாய் பேச, அரங்கமே அமைதியாகிப் போனது. மதுரையிலிருந்து கேரளாவுக்குச் சென்று ஆற்றுக்கால் பகவதியாக வீற்றிருக்கும் கண்ணகியின் கதையை, மோகினி ஆட்டத்தில் வெளிப்படுத்தினார் கோபிகா வர்மா.

கண் முன்னே காவியம்...

இறுதியாக, ரம்பையாக மேடைக்கு வந்தார் சுஹாசினி. இலங்கையில் பிறந்து கர்நாடகாவில் வளர்ந்த ரம்பை, அப்போதைய முகலாய அரசரான அதிர்ஷாவிடம் தன் காதலை நிரூபிக்க, ஏழாவது மாடியிலிருந்து விழுந்து இறக்கிறாள். கயிறு மூலம் சுஹாசினியை மேலே தூக்கி கீழே விழச் செய்து என்று, நடன நிகழ்ச்சி ‘லைவ்’ ஆக, பார்வையாளர்கள் பதற்றமாகி நடனத்துடன் ஒன்றினார்கள்.

நிகழ்ச்சி முடிவுற்ற நேரம் மேகம் மென் தூறல் போட, ‘நெஜமாவே வாசவி, ஆண்டாள், பகவதி, ரம்பையெல்லாம் பார்த்துட்டு வந்த மாதிரி இருக்கு!’ என்று, சிலிர்த்த மனதுடன் விடைபெற்றனர் அனைவரும்!