Published:Updated:

ஒரு நாள் தொழிலதிபர் பராக்... பராக்...

சு.கற்பகம், படங்கள்: ச.ஹர்ஷினி அவள் 16

ஒரு நாள் தொழிலதிபர் பராக்... பராக்...

சு.கற்பகம், படங்கள்: ச.ஹர்ஷினி அவள் 16

Published:Updated:

‘ஒரு நாள் தொழிலதிபர் ஆகலாம் வர்றீங்களா?!’

- புதுச்சேரி கல்லூரிப் பெண்கள் சிலரை இன்வைட் பண்ணினோம்!

‘‘ஓ! இது மேனேஜ்மென்ட் புரோகிராம் மாதிரியா?’’ என்று யூகிக்க முயற்சி செய்தார் ஷெர்லி.

‘‘ஆக்சுவலி காமர்ஸ் ஸ்டூடன்ட்ஸுக்குதானே இதெல்லாம் ஆர்கனைஸ் பண்ணுவாங்க?’’ என்று சந்தேகம் கேட்டவர் ஐஸ்வர்யா.

‘‘சம்பந்தப்பட்ட கம்பெனிகள்கிட்ட பெர்மிஷன் வாங்கியாச்சா?’’

-  எதிர்பார்ப்பை ஆட்டோ மீட்டர் போல ஏற்றிக்கொண்டே போனார் ரசீனா.

‘‘விவரம் எல்லாம் ஆன் த ஸ்பாட்ல தெரிஞ்சுக்கோங்க. அதுவரைக்கும் சர்ப்ரைஸ்!’’ என்று மட்டும் சொல்லி, கேர்ள்ஸை வார்ம் அப் செய்தோம்.

முதலில் ஷெர்லியை அழைத்துக்கொண்டு போன இடம், காந்தி வீதி, மீன்  மார்க்கெட். ‘‘அங்ங்ங்...’’ என்று ஷெர்லியின் மூக்கு டான்ஸ் ஆட, நாம் அதற்கு மேல் சர்ப்ரைஸை நீட்டிக்காமல், ‘‘இதுதான் ஸ்பாட். நீங்க இன்னிக்கு ஒரு நாள் மீன்காரம்மா!’’ என்றதும், ‘‘ஹைய்யய்யோ!’’ என்று தலை மேல் கை வைத்த ஷெர்லி, ‘‘நான் அப்போவே சந்தேகப்பட்டிருக்கணும். ஓகே, பட் ஒன் கரெக்‌ஷன்... நான் மீன்கார அம்மா இல்ல, மீன்கார அக்கா!’’ என்றார் சிணுங்கலுடன்.

ஒரு நாள் தொழிலதிபர் பராக்... பராக்...

மீன்கார அம்மாவிடம், மீன் வகை, விலை, பேரம் என்று கேட்டு முடித்த ஷெர்லி, ‘‘வாங்க வாங்க... மீன் வாங்கலியோ மீனு...’’ என்று பிக்-அப் ஆக, கூடியது கூட்டம்.

‘‘நெத்திலி மீன் அரை கிலோ...’’ என்று ஒருவர் கேட்க, ஒரு பெரிய மீனை எடுத்து ஷெர்லி எடை போடப் போக, ‘‘அட, நெத்திலி கேட்டேன்மா...’’ என்று அவர் பதற, ‘ஐயோ சொதப்பிட்டோமா..!’ என்று ஜெர்க் ஆனாலும், ‘‘நெத்திலிதானே எப்பவும் வாங்குறீங்க. குழம்பு வெச்சா, அதைவிட இது ருசியா இருக்கும்’’ என்று மார்க்கெட்டிங் மாயங்கள் பேசி விற்றுவிட்டார். ‘‘அரை கிலோ இறால்’’ என்று ஒருவர் காசை நீட்ட, ‘‘இந்த மீனைக் கொஞ்சம் வெட்டிக் கொடும்மா’’ என்று ஒரு ஆன்ட்டி ஆப்ளிகேஷன் வைக்க, ‘‘எனக்கு இன்னும் மீதி சில்லற வரல’’ என்று ஒரு தாத்தா வெயிட்டிங்கில் நிற்க, மீன்காரக்கா ஷெர்லி படுபிஸியாகிப் போனார்.

அரை மணி நேரம் கழித்து, மீன் மணக்க வந்தவர், ‘‘திருப்தியா! இந்த ஐடியாவை எல்லாம் எந்த ரூம்ல உட்கார்ந்து யோசிப்பீங்க!’’ என்று செல்லமாகக் காண்டாக, ‘‘அதெல்லாம் கம்பெனி சீக்ரெட்!’’ என்று சொல்லிப் பறந்தோம், அடுத்த ஸ்பாட்டுக்கு!

ஒரு நாள் தொழிலதிபர் பராக்... பராக்...

‘‘டூ மினிட்ஸ்... `டச் அப்' பண்ணிட்டு வந்துடறேன்’’ என்று ரெடியாகி வந்த ஐஸ்வர்யாவை, கொசக்கடைத் தெருவுக்கு அழைத்துப் போய் பானை விற்கச் சொன்னோம். ‘‘வாட்!’’ என்று ஷாக் ஆனாலும், ‘‘ஓகே, டூ மினிட்ஸ் ப்ளீஸ்’’ என்று மீண்டும் `டச் அப்' செய்ய, இடைவெளியில் பானைக் கடை ரெடி. ‘‘பானை ஓகே. இதெல்லாம் என்ன பொம்மை?’’ என்று அகல் விளக்கு, உண்டியல், மண்சட்டியை எல்லாம் பார்த்து ஐஸ்வர்யா கேட்க, ‘இப்படியும் ஒரு புதுமைப் பெண்ணா!’ என்று கடைக்காரருக்கு வந்தது மைல்ட் அட்டாக். அவர் நிதானமாக அனைத்தையும் கற்றுக்கொடு்த்ததும், சேல்ஸ் ஆரம்பித்தது.

“ஏங்க... ஒரு பெரிய பானையும், ஒரு மண்சட்டியும், ஆறு அகல் விளக்கும் சீக்கிரம் கொடுங்க’’ என்று கேட்டவருக்கு, இங்கி பிங்கி பாங்கி போட்டு ஒருவழியாக சரியாக ஐஸ்வர்யா எடுத்துக் கொடுக்க, ‘‘எவ்ளோங்க..?’’ என்றார் கஸ்டமர். ‘‘ஜஸ்ட் எ மினிட்...’’ என்று தன் ஸ்மார்ட்போனை எடுத்தவர், மொபைல் கால்குலேட்டரில் 150 + 50 + என்று கூட்ட ஆரம்பிக்க, கஸ்டமர்,
‘அட ராமா!’ என்று `கஷ்டமர்' ஆனார். அடுத்த கஸ்டமருக்கு, ‘‘மொத்தம் 300 ரூபாய்யா...’’ என்று ஐஸ்வர்யா போன் இல்லாமலே பில் போட்டுவிட்டு, ‘‘டெவலப்மென்ட்ல!’’ என்று நம்மைப் பெருமையுடன் பார்க்க, ‘‘கொஞ்சம் சொல்லிக் கொடுங்க’’ என்று இழுத்தார் கஸ்டமர். ஹஸ்கி வாய்ஸில், ‘‘அட, ஏற்கனவே 20 ரூபாய் குறைச்சிருக்கேன்யா. அடுத்த கஸ்டமர்கிட்ட காட்டிக்காம
காசைக் கொடுத்துட்டு நகருங்க’’ என்று சொல்ல, அவரும் ஏதோ 50% ஃபிளாட் ரேட்டில் வாங்கியதுபோல சந்தோஷமாகக் கிளம்பினார். ‘‘ஒரு மணி நேரம் ஆயிடுச்சு பாஸ்... புரோகிராமை முடிச்சுக்கலாம்!’’ என்று எழுந்த ஐஸ்வர்யாவின் அன்றைய சேல்ஸ், 1,300 ரூபாய்!

ஒரு நாள் தொழிலதிபர் பராக்... பராக்...

புதுச்சேரி பீச்சுக்கு அழைத்துச் சென்றோம் ரசீனாவை. ‘‘இங்க என்ன டாஸ்க்..?’’ என்று அவர் புரியாமல் விழிக்க, ‘‘ஸோ சிம்பிள். சுண்டல் விக்கணும்!’’ என்றோம்.

‘‘அட, அது என்னோட ரொம்ப நாள் ஆசைப்பா!’’ என்று அவர் நமக்கு ஷாக் கொடுக்க, சூடு பிடித்தது வியாபாரம். ‘‘சுண்டல் சுண்டல், சூடான சுண்டல், தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்’’ என்று அவர் கூவியதுடன், ‘ஒரு கப் மசாலா சுண்டல்’ என்று கேட்ட கஸ்டமருக்கு, சுண்டலை ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு, காரம் எல்லாம் கலந்து கொடுத்ததுடன், ‘‘அண்ணே, காம்பினேஷன் சரியா இருக்கானு சொல்லுங்க’’ என்றார். அவர் சாப்பிட்டுவிட்டு, ‘சூப்பர்மா!’ என்று 15 ரூபாய் கொடுக்க, உற்சாகமாகிவிட்டார் ரசீனா. கிட்டத்தட்ட அரை மணி நேரத்தில் பரபரப்பாக அவர் 50% வியாபாரம் முடித்துவிட்டு ‘‘எப்டி?!’’ என்று நம்மைப் பார்க்க, சத்தம் போட்டு சொன்னோம்... ‘‘டிஸ்டிங்ஷன்!’’