Published:Updated:

நீச்சல் தவம்... பதக்கம் வரம்!

நந்தினியின் வெற்றிப் பயணம்பா.குமரேசன்,  படங்கள்: அ.நவின்ராஜ்

நீச்சல் தவம்... பதக்கம் வரம்!

நந்தினியின் வெற்றிப் பயணம்பா.குமரேசன்,  படங்கள்: அ.நவின்ராஜ்

Published:Updated:

‘‘நீருக்குள்ள பொருட்களின் கனம் குறையும்ங்கிறது அறிவியல். ஆனா, தண்ணிக்குள்ள தாவிட்டா, என் மனதின் கனம் அதிகரிச்சிடும். இலக்கைத் தவிர வேறெதுவும் தெரியாது. என்னைப் பொறுத்தவரைக்கும் நீச்சல் என்பது தவம்!’’ என்று தலை சிலுப்பிச் சொல்கிறார், நீச்சல் வீராங்கனை நந்தினி பத்மநாபன்.

மாநில அளவில் கலந்துகொண்ட அத்தனை போட்டிகளிலும் அசத்தல் வெற்றிகள், மூன்று தேசியப் போட்டிகள், இ்ந்த ஆண்டு தொடக்கத்தில் தேசிய அளவில் நடைபெற்ற ‘கேரளா கடற்கரை திருவிழா’வில் மூன்று பிரிவுகளில் பதக்கங்கள், நாட்டு நலப்பணி திட்டத்தில் பெரியார் பல்கலைக்கழகத்தின் சிறந்த மாணவி, இ்ந்த ஆண்டு செங்கோட்டையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் அணிவகுத்தது, முதலமைச்சர் கோப்பை வெற்றி என நந்தினியின் சாதனைப் பட்டியல் நீள்கிறது.

நீச்சல் தவம்... பதக்கம் வரம்!

சேலம், வைசியா கல்லூரியில் இளங்கலை அறிவியல் படிக்கும் நந்தினி, ‘‘நான் ஒரு ஆல் ரவுண்டர்ஜி! எதை செஞ்சாலும் சரியா செய்யணும்னு நினைப்பேன். அதுக்குக் காரணம் எங்க அப்பாவாதான் இருக்கணும். ஏன்னா, அவர் ஒரு ராணுவ வீரர்! நீச்சல் கத்துக்கிறது முக்கியம்னு ஆறாம் வகுப்பு விடுமுறையில சம்மர் கோச்சிங் கிளாஸ்ல சேர்த்துவிட்டார். அங்க நாகராஜன் சார் எனக்கு நீச்சல் கற்றுத் தந்தார். ஒரு மாசத்திலேயே என் திறமையை கணிச்ச சார், என் பேரன்ட்ஸைக் கூப்பிட்டுப் பேசினார். அதுக்கு அப்புறம் நிறையப் போட்டிகள், பரிசுகள்னு நீச்சல் என் வாழ்க்கையின் அங்கமாயிடுச்சு. புனே, போபால்னு தேசிய அளவுப் போட்டிகளுக்கு போயிட்டிருந்தேன். மனதை ஒருமுகப்படுத்தவும் நீச்சல் உதவினதால, படிப்பிலும் கவனம் செலுத்த முடிஞ்சுது!

கல்லூரி வந்த பிறகு அதிகமா போட்டிகளில் கலந்துக்க வாய்ப்பு கிடைக்கலை. நீச்சலுக்கும் எனக்குமான தொடர்பே இல்லாம போயிடுமோனு நெனச்சுட்டு இருந்தப்போதான், கேரளா பீச் ஃபெஸ்டிவலுக்காக நீச்சல் போட்டிகள் நடக்கப் போகுதுனு, பயிற்சியாளர் ஞானசேகரன் சார்கிட்ட இருந்து போன். உடனே பயிற்சிக்குப் போக ஆரம்பிச்சேன். அந்த ஃபெஸ்டிவல்ல, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வந்திருந்தாங்க. பலமான போட்டி. ரெண்டு ஆண்டுகளா எந்தப் போட்டியிலும் கலந்துக்காததால, இந்த முறை என்னை நிரூபிக்கணுங்கிற வெறியோட கடலலைகளின் நடுவே எதிர் நீச்சல் போட்டேன். மூன்று பிரிவுகள்ல பதங்கங்களை வாங்கிட்டேன்!’’

- தண்ணீரிலிருந்து வெளியே வந்ததுபோல சந்தோஷப் பெருமூச்சு விடுகிறார், நந்தினி.

நீச்சல் தவம்... பதக்கம் வரம்!

‘‘குறிப்பா, உயிர் காக்கும் நீச்சல் பிரிவில் தங்கம் வாங்கினது மறக்க முடியாத அனுபவம். கடல்ல உயிருக்குப் போராடும் நிலையில் இருக்கும் ஒருவரை காப்பாற்றி வேகமா நீந்தணும். மிகவும் வித்தியாசமான அனுபவமா இருந்தது. நீச்சல் குளங்கள்ல நீந்துறதைவிட கடல்ல நீந்துறது ரொம்பக் கஷ்டம். அலைகள் நம்மை பின்னுக்குத் தள்ளிட்டே இருக்கும். அதையும் தாண்டி முன்னேறணும்’’ என்றவர், நாட்டு நலப்பணித் திட்டத்திலும் தேசிய இடம் பிடித்த மாணவி!

‘‘நாட்டு நலப்பணித் திட்டத்தில் பெரியார் பல்கலைக்கழகத்தின் சிறந்த மாணவியா தேர்ந்தெடுக்கப்பட்டேன். எங்க கல்லூரி என்.எஸ்.எஸ் பொறுப்பாளர் தர்மலிங்கம் சாரோட வழிகாட்டுதலோட, தென் இந்திய அளவில் நடந்த தேர்வில் பங்கேற்றேன். அதில் வெற்றி பெற்று, டெல்லியில நடந்த குடியரசு தின அணிவகுப்புக்குத் தேர்வானேன். அங்க ஒரு மாசம் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வந்திருந்த மாணவர்களுடன் சேர்ந்து முகாமில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைச்சுது. பிரதமர், ஜனாதிபதி, துணைஜனாதிபதியை எல்லாம் சந்திச்ச நிமிஷங்கள், பொக்கிஷம்! ராஷ்ட்ரபதிபவன், சாஸ்திரிபவனுக்கு எல்லாம் போனப்போ, ரொம்ப பெருமையா இருந்தது. அது ஒரு ‘சான்ஸே இல்ல’ மொமென்ட் ஜி!’’

- மீண்டும் தலை சிலுப்பி சந்தோஷமாகிறார், நந்தினி!