Published:Updated:

வெற்றுக் காகிதத்தை வெற்றிக் காகிதமாக மாற்றும் ஷ்ரேயா!

க.தனலட்சுமி

வெற்றுக் காகிதத்தை வெற்றிக் காகிதமாக மாற்றும் ஷ்ரேயா!

க.தனலட்சுமி

Published:Updated:

‘‘உங்களுக்குத் தேவையில்லைனு தூக்கிப்போடற ஒரு பொருளை, அது தேவைப்படுற ஒருத்தருக்குக் கொடுத்துப் பாருங்களேன்... அவங்களுக்கு மட்டுமில்ல, உங்களுக்கும் அவ்வளவு சந்தோஷமா இருக்கும்!’’

- கண்கள் விரியப் பேசுகிறார், ஷ்ரேயா பிரகாஷ்!

வெற்றுக் காகிதத்தை வெற்றிக் காகிதமாக மாற்றும் ஷ்ரேயா!

ஒவ்வொரு கல்வியாண்டின் இறுதியிலும், பள்ளிகள்தோறும் சென்று, மாணவர்கள் பயன் படுத்தி முடித்த நோட்டில் உள்ள எழுதப்படாத தாள் களை சேகரித்து, நோட்டாக தயாரித்து, இதுவரை கிட்டத் தட்ட பத்தாயிரம் ஏழைக் குழந்தைகளுக்கும் மேல் கொடுத்து உதவியிருக்கும் ‘கோரா காகஸ்’ என்ற அமைப்புக்குப் பிள்ளையார்சுழி போட்டிருப்பவர்தான் இந்த 19 வயது ஷ்ரேயா!

‘‘ப்ளஸ் டூ வரைக்கும் சென்னை, கீழ்ப்பாக்கம் - சின்மயா வித்யாலயால படிச்சேன். பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது, சென்னைப் பள்ளிகளுக்கு ‘சமூக சேவை’ என்ற தலைப்பில் ஒரு புராஜெக்ட் செய்ற போட்டியை அறிவிச்சாங்க. அதுக்கான ஐடியாஸை பக்கம் பக்கமா எழுதி கிழிச்சிப் போட்டுட்டு இருந்தேன். அப்போ ஒரு சின்னப் பொண்ணு, நோட்டு இல்லாம எழுதின பக்கத்துலயே ரப்பர் வெச்சு அழிச்சிட்டு திரும்பத் திரும்ப எழுதுறதைப் பார்த்தப்போ, மனசுக்கு அவ்வளவு கஷ்டமாவும், குற்ற உணர்ச்சியாவும் இருந்துச்சு. எங்கிட்ட அளவுக்கு அதிகமா இருந்த நோட், அந்தப் பொண்ணுகிட்ட அவசியமான அளவுக்குக்கூட இல்லை. ஒரு புது நோட்டை அந்தப் பொண்ணுகிட்ட கொடுத்தப்போ, அவ என்னை சந்தோஷமா பார்த்த அந்த நிமிஷமே, இதுதான் நம்ம புராஜெக்ட்னு முடிவு பண்ணிட்டேன்!’’

- மனசு மட்டுமல்ல, பேச்சும் அழகு ஷ்ரேயாவுக்கு.

‘‘என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட, ‘நாம பயன்படுத்தின நோட்ல மீதமிருக்கிற பக்கங்களைக் கிழிச்சு, 50 பக்க நோட்டுகள் தயாரிச்சு, கவர்ன்மென்ட் ஸ்கூல் பசங்களுக்கும், வசதி இல்லாத கிராமத்துப் பள்ளிக்கூடப் பசங்களுக்கும் தரலாம். இதுதான் நம்ம புராஜெக்ட். இதுக்குப் பேர், கோரா காகஸ்’னு சொன்னேன். என் ஃப்ரெண்ட்ஸ் கௌரவ், பிரத்திக், கியாதி, சுமீத், யாஷ், தர்ஷன், ஷ்ரவன் எல்லாருமே கைகோக்க, எங்க ஐடியாதான் அந்த வருஷத்தோட ‘பெஸ்ட் ஐடியா’வா தேர்ந்தெடுக்கப்பட்டது. இதுக்காக எங்களுக்குக் கிடைச்ச பரிசுத்தொகை 5,000 ரூபாய்தான், இந்த சேவைக்காக நாங்க போட்ட முதல் முதலீடு!’’ என அசத்தலாகப் பேசும் ஷ்ரேயா, இப்போது பெங்களூரு, கிறிஸ்ட் யுனிவர்சிட்டியில் பி.ஏ., சைக்காலஜி - சோஷியோ எக்கனாமிக்ஸ் மூன்றா மாண்டு படித்து வருகிறார்.

‘‘ஒவ்வொரு வருஷமும் எக்ஸாம் முடியுற நேரத்துல எல்லா பள்ளிகளுக்கும் போய், பசங்க பயன்படுத்தின நோட்டுகளை எல்லாம் கலெக்ட் பண்ணுவோம். அதுல இருக்கிற எழுதாத பேப்பர்களை எல்லாம் அளவின் அடிப்படையில பிரிச்சு வெச்சுட்டு, மிச்சமிருக்கிற பயன்படுத்தின பேப்பர்களை எடைக்குப் போட்டுருவோம். அந்தக் காசு, பைண்டிங் செலவுக்குப் பயன்படும். ஒரு நோட்டுக்கு குறைஞ்சது ஆறு ரூபாய் ஆகும் பைண்ட் பண்ண. அப்படி நாங்க தயாரிச்ச 600 நோட்களை, எங்களோட முதல் முயற்சியா, பெசன்ட் நகரிலுள்ள ஒரு பள்ளி மாணவர்களுக்குக் கொடுத்தோம். அந்தப் பசங்க சொன்ன ‘தேங்க்ஸ் அக்கா!’-வுக்கு இணையான ஒரு திருப்தி, வேறெதிலும் நாங்க உணர்ந்ததில்லை!’’ என்று பூரிக்கிறார் ஷ்ரேயா.

வெற்றுக் காகிதத்தை வெற்றிக் காகிதமாக மாற்றும் ஷ்ரேயா!

இப்படி சென்னை பள்ளியில் ஆரம்பித்த ‘கோரா காகஸ்’-ன் பயணம், பல கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கும் சென்றடைந்து, தற்போது பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் கரங்களுக்கும் சென்றுகொண்டிருக்கிறது. நோட்டுடன், இப்போது மாணவர்களுக்குத் தேவை யான பேனா, பென்சில் போன்ற ஸ்டேஷனரி பொருட்களுடன், கிராமப்புற மாணவர்களுக்கு காலணிகளையும் வாங்கிக்கொடுக்க ஆரம்பித்திருக்கிறது ‘கோரா காகஸ்’. பைண்ட் செய்யும் பணிக்கு, மாற்றுத்திறனாளிகளை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து ‘அட!’ போட வைக்கிறார்கள்!

‘‘ஒரு வேண்டுகோளும் எங்கிட்ட இருக்கு. பெரிய நிறுவனங்கள் எங்க ளுக்குப் பணம் கொடுத்து உதவணும்னு கேட்கலை. நீங்க எடைக்குப் போட நினைக்கிற பயன்படுத்தின நோட்டுகளை எங்களுக்குத் தந்தா போதும். பேப்பர், பைண்டிங் சார்ஜ்னு எங்களுக்கு அது ரொம்ப உதவியா இருக்கும்!’’ என்ற ஷ்ரேயாவிடம்,

‘‘எல்லாம் சூப்பர். அதென்ன ‘கோரா காகஸ்’?’ என்றோம்.

‘‘புராஜெக்ட்டுக்கு பிளான் எல் லாம் `ஓகே’ ஆன பிறகு, என்ன பெயர் வைக்கிறதுனு யோசிச்சிட்டு இருந்தப்போ, ‘மேரா ஜீவன் கோரா காகஸ்’னு ஆரம்பிக்கிற பிரபல ஹிந்தி பாட்டு சட்டுனு மனசில் வந்தது. ‘கோரா காகஸ்’னா, ‘பிளாங்க் பேப்பர்’னு அர்த்தம். எங்க புராஜெக்டோட கதாநாயகனே இந்த வெள்ளை பேப்பர்தானே? ’’

- புன்னகைக்கிறார் ஷ்ரேயா!