Published:Updated:

பிறந்தது ‘பிரெய்ல் சுட்டி’...

இனி, விரல் நுனியில் உலகம்!கே.யுவராஜன், படங்கள்: எம்.உசேன், சொ.பாலசுப்ரமணியன்

பிறந்தது ‘பிரெய்ல் சுட்டி’...

இனி, விரல் நுனியில் உலகம்!கே.யுவராஜன், படங்கள்: எம்.உசேன், சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:

ழகான நந்தவனத்தில் சிரிக்கும் பூக்களாக அந்தக் குழந்தைகள் அமர்ந்திருக்க, அவர்கள் முன்னிலையில் விகடன் குழுமத்தின் பொன் னான தருணமாக அமைந்தது அந்நிகழ்வு!

விகடன் குழுமத்தில் இருந்து சிறுவர்களுக்காக வெளியாகும் சுட்டி விகடன், பார்வைக் குறையுடைய குழந்தைகளும் படித்து மகிழ்வதற்காக, பிரெய்ல் மொழி பதிப்பை, சென்னையில் உள்ள லிட்டில் ஃப்ளவர் கான்வென்ட் பார்வைக் குறையுடையோர் பள்ளியில், டிசம்பர் 4-ம் தேதி வெளியிட்டது. கதை சொல்லல், டிரம்ஸ் சித்தார்த்தின் இசை நிகழ்ச்சி என பல்சுவை கலவையாக அமைந்தது அந்த நிகழ்வு.

பிறந்தது ‘பிரெய்ல் சுட்டி’...

நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்த விகடன் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன், “ஒரு விமானப் பயணத்தின்போது, ‘விகடன் குழுமத் தில் இருந்து 10 வகையான புத்தகங்களை வெளியிடுவது மகிழ்ச்சியான விஷயம். அதேநேரம், பார்வைத்திறன் அற்றவர்களும் படித்து மகிழ புத்தகங்கள் வெளியிட வேண்டும்’ என்று கோரினார் சகபயணி ஒருவர். குழந்தைகளிடம் இருந்து அதைத் தொடங்குவது சிறப்பாக இருக்கும் என்பதால், சுட்டி விகடன் பிரெய்ல் பதிப்பை கொண்டுவந்துள்ளோம்!’’ என்றார்.

சுட்டி விகடன் பிரெய்ல் பதிப்பை, மத்திய அரசின், தேசிய பார்வையற்றோர் நிறுவனத்தின் மண்டல இயக்குநர் கிருபானந்தம் யாசாராபூடி வெளியிட, லிட்டில் ஃப்ளவர் பள்ளியின் ஐந்து மாணவ - மாணவியர் பெற்றுக்கொண்டார்கள்.

“புத்தகம் படிக்க வேண்டியதன் அவசியம் பற்றி நிறையப் பேசுகிறோம். ஆனால், பார்வைக் குறையுடையோர் படிப்பதற்கான புத்தகங்கள் மிகமிகக் குறைவாகவே உள்ளன. இந்நிலையில், சுட்டி விகடன் பிரெய்ல் பதிப்பு, ஒரு வரப்பிரசாதமே. குழந்தைப் பருவத்தில் கற்பனைத்திறன்,  அறிவுத் தேடல் அபாரமாக இருக்கும். தேடிச்சென்று அறிவை விரிவு செய்துகொள்வதில் பார்வையற்ற இந்தக் குழந்தைகளுக்கு சிரமம் உண்டு. இதைத் தீர்க்கும்விதமாக இந்தப் புத்தகம் அமையும்!’’ என்றார் கிருபானந்தம் யாசாராபூடி.

புத்தகத்தைப் பெற்றுக்கொண்ட  சுட்டிகள், மேடையிலேயே அதை இயல்பாகப் புரட்டி பிரெய்ல் மொழியை விரல்களால் ஸ்பரிசித்து வாசித்தது, அந்நிகழ்வின் ஆனந்தத் தருணம்!

இந்த பிரெய்ல் பதிப்பை சுட்டி விகடனு டன் இணைந்து வெளியிடும் அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு (A1CB) புதுடெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த அமைப்பின் தமிழக செயலாளரான முத்துச்செல்வி வங்கியில் பணியாற்றுகிறார். இவரும் பார்வைக் குறை பாடு உடையவரே.

பிறந்தது ‘பிரெய்ல் சுட்டி’...

“எங்கள் அமைப்பு பார்வையற்றோர் முன்னேற்றத்துக்காக இருபதுக்கும் மேற்பட்ட சமூகப் பணிகளை செய்துவருகிறது. அதில் ஒன்று, சிறந்த புத்தகங்களை பிரெய்லில் வெளியிடுவது. மற்ற புத்தகங்களை தன்னார்வ அமைப்புகளிடம் நிதியைப் பெற்று எங்களின் சொந்த முயற்சியில்தான் வெளியிட்டு இருக் கிறோம். விகடன் மட்டுமே அவர்களாக முன்வந்து, ஒவ்வொரு மாதமும் இந்தப் புத்தகம் வெளிவருவதற்கான முழுச் செலவையும் ஏற்றுக்கொள்வதாகச் சொன்னார்கள். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 35 பார்வையற்றோர் பள்ளிகளில் பயிலும் 5,500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து மகிழ்வார்கள்!” என்றார் முத்துச்செல்வி.

பிறந்தது ‘பிரெய்ல் சுட்டி’...

நிகழ்ச்சியில் எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர் மற்றும் பேச்சாளர் பாரதி கிருஷ்ண குமார், “வாய்ப்புகள் மிகமிகக் குறைவாக இருக்கும் சூழ்நிலையிலும் உங்களின் வாசிக்கும் அழகும் மொழித்திறனும் சிறப்பாக இருக்கிறது. வாய்ப்புகள் கிடைத்தால், அற்புதமான படைப்பாளிகளாக, கதைச் சொல்லிகளாக ஒளிர்வீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை. எத்தனையோ ஊர்களுக்குச் சென்று, குழந்தைகளைச் சந்தித்து எவ்வளவோ கதைகள் சொல்லியிருக்கிறேன். மிகவும் வறுமையில் தன்னம்பிக்கையுடன் போராடும் அறிவாளிக் குழந்தைகளைப் பார்த்துப் பேசும் நெகிழ்ச்சியான தருணங்களையும் சந்தித் திருக்கிறேன். அவற்றுக்கு எல்லாம் மேலான நெகிழ்ச்சியான நேரமாக இது அமைந்தது!” என்றவர், அந்தக் குழந்தைகள் சிரிக்க சிரிக்க ஓர் அழகான கதையும் சொன்னார்.

இனி, பிரெய்ல் சுட்டி விகடன் மாதந்தோறும் வெளியாகும். அறிவுத் தகவல்கள், அழகழகான கதைகள் என அந்தக் குழந்தைகள் தங்கள் விரல் நுனியில் இந்த உலகம் காண்பார்கள்! 

பிறந்தது ‘பிரெய்ல் சுட்டி’...

பிரெய்ல்... ஒரு அறிமுகம்!

லூயிஸ் பிரெய்ல், பிரான்ஸ் நாட்டில் ஜனவரி 4, 1809-ல் பிறந்தார். தனது மூன்றாவது வயதில் தையல் ஊசியை வைத்துக்கொண்டு விளையாடும்போது ஒரு கண்ணில் குத்திக்கொண்டார். முறையான சிகிச்சை எடுக்காத காரணத்தால், அடுத்தடுத்து இரண்டு கண்களிலும் பார்வை இழந்தார். பிரெஞ்சுப் படைகள், இரவு நேரத்தில் தங்களுக்குள் செய்தியைப் பரிமாறிக்கொள்ள புள்ளிகளால் சங்கேத வார்த்தையை உருவாக்குவார்கள் என்று கேள்விப்பட்டார். அதை அடிப்படையாக வைத்து  பார்வையற்றவர்கள் படிப்பதற்கான எழுத்துக்களை 1821-ல் உருவாக்கினார். அவர் கண்களைக் குத்திய ஊசியே புதிய எழுத்தை உருவாக்கும் ஆயுதம் ஆனது.

பிரெய்ல் முறையில் எழுதும்போது இடமிருந்து வலமாக எழுதுவார்கள். படிக்கும்போது, வலமிருந்து இடமாக ஸ்பரிசித்து வாசிப்பார்கள்.