Published:Updated:

18 வருஷமா காய்கறி வித்தேன்!

இமான் அண்ணாச்சியின் இளமைக் காலம்வே.கிருஷ்ணவேணி,  படங்கள்: ஆ.முத்துக்குமார், பொன்.காசிராஜன்

18 வருஷமா காய்கறி வித்தேன்!

இமான் அண்ணாச்சியின் இளமைக் காலம்வே.கிருஷ்ணவேணி,  படங்கள்: ஆ.முத்துக்குமார், பொன்.காசிராஜன்

Published:Updated:

மான் அண்ணாச்சியுடன் பேசினால், கலகலப்புக்கு கியாரன்ட்டி! சின்னத்திரை, சினிமா என்று கலக்கி வருபவருக்கு ‘ஹேப்பி கிறிஸ்துமஸ் அண்ணாச்சி!’ சொல்லி, கொஞ்சம் பேசியதில் இருந்து...

18 வருஷமா காய்கறி வித்தேன்!

மகாலிங்கம் தெரியுமா உங்களுக்கு?!

‘‘தூத்துக்குடி, ஏரல்தான் என் சொந்த ஊரு. அது எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்த அறிமுகப்படுத்துன சமயம். சாப்பாடு மட்டு மில்லாம செருப்பு, பல்பொடி எல்லாத்தையும் எலவசமா கொடுத்தாரு. அதுக்காகவே நாங்கள்லாம் பள்ளிக்கூடத்துக்குப் போவோம்ல. அப்போ என் சேக்காளி மகாலிங்கம். ஒருநா அவங்கப்பா, ‘எலே நீ எட்டு படிச்சது போதும்ல. கோயம்புத்தூருல மளிகைக்கடை வேலைக்கு ஆள் கேட்டாக, கௌம்பு’னு சொல்லிட்டாரு. அவன் வந்து எங்ககிட்ட எல்லாம், ‘எலே... நான் கோயம்புத்தூரு போறேன். மளிகைக் கடையில வேல. மாசம் பொறந்தா சம்பளம்’னு ரொம்பப் பெருமையா சொன்னாப்ல. கடைசி நேரத்துல அவங்கப்பா மனசு மாற, ‘எலே நீ கௌம்பு’னு, எட்டாவதோட என் படிப்பை நிறுத்திட்டு, ஒரு மஞ்சப் பையில ரெண்டு டவுசர், ரெண்டு சட்டையை வெச்சு, என்னைய அனுப்பி வெச்சுட்டாரு எங்கப்பா. கோயம்புத்தூரு சலிவன் வீதி, பாண்டியன் ஸ்டோர்ல வேலைக்குச் சேந்தேன். ‘அம்மாவ பாக்கணும்’னு அழுதுகிட்டே இருக்கவும், பத்தே நாள்ல, ‘ஓட்றா உங்க வீட்டுக்கு’னு தொரத்தி விட்டுட்டாக. அப்புறம் உள்ளூர்ல ஒரு கடையில வேலைக்குப் போக ஆரம்பிச்சேன்.

விளையாட்டு விபரீதமான கதை ஒண்ணு சொல்லுதேன் கேக்கீகளா?!

மகாலிங்கம் பத்தி சொல்ல இன்னும் ஒரு விசயம் இருக்குங்கம்மா. அவன் எப்பப் பாத்தாலும் தலையில மண்ணெண்ணய ஊத்திக்கிட்டு, அவுக அப்பாகிட்ட காசு கேட்டு மெரட்டுவான். வீட்டுக்கு ஒத்தப்பையங்கிறதால, ‘எலே எலே பத்தவெச்சுத் தொலச்சுடாதலே’னு அவங்க அப்பாவும் கேட்ட காசக் கொடுத்துரு வாரு. அதுக்கப்புறம் குளிச்சுட்டு வேற சட்டையை மாத்திக்கிட்டு கடைக்குப் போய் பீடி வாங்கிக் பொகைப்பான். அன்னிக்கும் அப்படித்தான் மண்ணெண்ணயை ஊத்திக் கிட்டு, ‘இருவது ரூவா வேணும்’னு அவங்க அப்பாவ மெரட்ட, ‘எடுத்துட்டு வர்றேன் இருலே’னு அவரு வீட்டுக்குள்ள போனாரு. அவன், தம்மேல மண்ணெண்ணெய ஊத்தி யிருக்கிறதையே மறந்துட்டு பீடி குடிக்க தீப்பெட்டியக் கொளுத்த, சட்டுனு தீப் பிடிச்சு, உடம்பெல்லாம் எரிஞ்சு, செத்தே போயிட்டான். விபரீதமா விளையாடாதீக கண்ணுகளா!

18 வருஷமா காய்கறி வித்தேன்!

நான் கௌதமி ரசிகர் மன்றத் தலைவர்!

எனக்கு கௌதமினா ரொம்பப் பிடிக்கும். அவுக நடிச்ச ஒரு படம் விடாம ஓடி ஓடிப் போயிப் பாப்பேன். எங்க ஊரு கொட்டகைக்கு கௌதமி படம் வந்துச்சுனாலே, ‘எலே ஒங்காளு படம்லே’னு சொல்லி கலாய்ப்பாய்ங்க எல்லோரும். அப்போ எங்க ஊரு கௌதமி ரசிகர் மன்றத்துக்கு நாந்தேன் தலைவரு.

என் நடிப்புக்குக் கெடச்ச மொதப்பரிசு!

மளிகைக் கடையில வேல பாத்தேன்னு சொன்னேன்ல... நைட்டு பத்து மணிக்கு மேல நாடகம் பாக்கக் கௌம்பிடுவேன். 16, 17 வயசுல எல்லாம் நாடகத்துல நடிக்கவும் ஆரம்பிச்சு, என் கலைச்சேவையைத் தொடங்கியாச்சு. எங்களோட ‘காமராஜர் கலைக்குழு’வுல மொத்தம் 11 பேரு. ஊரு ஊரா போயி நாடகம் போடுவோம். அப்போ எல்லாம் ராஜா, ராணி காலத்து பேச்சு வழக்குலதான் நாடகத்துல பேசுவாக. நாடகத் துறையில ஒரு புரட்சி பண்ண ணும்னு நான் யோசிச்சப்போ, எனக்கு 18 வயசு. ‘உன்னை நாங்கள் எப்படி கடத்தினோம் பார்த்தாயா..? இந்நேரம் இந்தச் செய்தி உன் தகப்பனாரிடம் சென்று சேர்ந்திருக்கும். இப்பொழுது அவர் தம் படைகளுடன் வரட்டும், அவரிடம் பேசிக்கொள்கிறோம் பேரத்தை!’னு அன்னிக்கு நடக்கவிருந்த ‘புதையலைத் தேடி’ நாடகத்துல ஒரு வசனம். ‘என்னலே டயலாக்கு இது? நான் பேசிக்காட்டுறேன் பாரு!’னு மேடையில அந்தப் புரட்சியை செஞ்சேன்.

18 வருஷமா காய்கறி வித்தேன்!

‘எலே ஒண்ணக் கடத்தியாச்சு. ஒங்கப்பனுக்கு இந்நேரம் நியூஸ் போயிருக்கும். அவன் வரும்போது பேரத்தை பேசிக்கிறேன்’னு சொல்லிட்டு சிகரெட் புகையை பொம்பள வேசம் போட்டி ருந்த என் சேக்காளி மூஞ்சியில ஊதி சிரிச்சேன். முன் வரிசையில ஒக்காந்திருந்த ஒரு பாட்டி, ‘எலே யாரும்ல இவென்.... பொம்பளப்புள்ள (!) மூஞ்சியில சிகரெட்டை ஊதுறது?’னு கையில கெடச்ச அர செங்கல தூக்கி வீசிருச்சி. ஆனா, எங்க டைரக்டரு, ‘எலே நீ மேடையில நம்ம வழக்குல பேசினது நல்லாயிருந்துச்சுலே!’னு சிறந்த நடிகருக்கான பரிசைக் கொடுத்தாரு. அப்படியே எல்லா நாடகத்துலயும், ‘நம்ம வழக்குலயே பேசுவோம்’னு ஆரம்பிச்சேன். அந்த வட்டார வழக்குதான் இன்னிக்கு சன் டி.வி ‘குட்டீஸ் சுட்டீஸ்’ மேடை வரைக்கும் இந்த அண்ணாச்சியைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கு!

18 வருஷம் காய்கறி வித்தேன்!

கிட்டத்தட்ட பத்து வருஷமா கோயம் பேட்டுல கூவிக் கூவிக் காய்கறி வித்துட்டு இருந்தேன். டிரை சைக்கிள்தான், அப்போ என்னோட மிகப்பெரிய கனவு. அந்தச் சமயத்துல, எங்க பக்கத்து ஊருப் பொண்ணை எனக்கு பாத்தாக. நான் பொண்ணோட வீடு தேடிப்போயி, ‘நான் நல்லவனில்ல, எனக்குப் பொண்ணு தர வேண்டாம்னு’ சொல்லிட்டு வந்துட்டேன். ஆனா, அவங்களுக்கு என்னமோ இந்த இமான பிடிச்சுப் போச்சு. நகை, தொகைனு போட்டு பொண்ணைக் கட்டிக் கொடுத்தாக. அதையெல்லாம்விட அவங்ககிட்ட சீதனமா நான் விரும்பிக் கேட்டது ஒண்ணுதான். ‘ஒரு டிரை சைக்கிள் வாங்கித் தாங்களேன்’னு கேட்டேன். அந்த சைக்கிள்லதான் கல்யாணத்துக்குப் பிறகு எட்டு வருஷம் காய்கறி வித்தேன். கோயம்பேடுல இருந்து கோடம்பாக்கம் வர்றதுக்குள்ள நான் பட்ட கஷ்டத்துல, தானும் பங்கெடுத்து எனக்குப் பலமா இருந்தாங்க என் மனைவி ஆக்னஸ் பிரியா. அஞ்சாவது படிக்கிற எம்மக ஜெஃபி ஷைனிதான் எங்க ஒலகம்.

எம்பொண்ணு எங்ககிட்ட, ‘ஒங்க வீட்டுல எத்தனை டேபிள் மேட் இருக்குனு எல்லோரும் கேட்குறாங்கப்பா’னு வந்து சொல்லுவா. எல்லாரும் கேட்டுக்கோங்க... எங்க வீட்டுல ஒரே ஒரு டேபிள் மேட்தான் இருக்கு. மத்த டேபிள் மேட் எல்லாம் கீழ் வீட்டுல இருக்கு, பக்கத்து வீட்டுல இருக்கு, எதிர் வீட்டுல இருக்குல்ல!’’

- கலகலவெனச் சிரித்து,

‘‘ஹேப்பி கிறிஸ்துமஸ்!’’ என்று கைகள் விரித்து வாழ்த்துச் சொல்கிறார் இமான் அண்ணாச்சி!