Published:Updated:

உண(ர்)வுத் திருவிழா!

சா.வடிவரசு, பா.குமரேசன் படங்கள்:க.தனசேகரன், அ.நவின்ராஜ்

உண(ர்)வுத் திருவிழா!

சா.வடிவரசு, பா.குமரேசன் படங்கள்:க.தனசேகரன், அ.நவின்ராஜ்

Published:Updated:
உண(ர்)வுத் திருவிழா!
உண(ர்)வுத் திருவிழா!

ரோக்கியம், அழிவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கும் ஃபாஸ்ட்ஃபுட் யுகம் இது! இவ்வேளையில், பாரம்பர்ய உணவு குறித்த விழிப்பு உணர்வை கல்லூரி மாணவிகள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கோடு, களமிறங்கியது அவள் விகடன். இதற்காக, ஈரோடு மாவட்டம், அறச்சலூரில் உள்ள ‘நவரசம் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி’யுடன் இணைந்து, ‘உலக பாரம்பர்ய உணவுத் திருவிழா - 2014’ என்ற நிகழ்ச்சியை கல்லூரி வளாகத்திலேயே டிசம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் நடத்தியது!

முதல் நாள் நிகழ்வில் பாரம்பர்ய உணவு குறித்த பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, வினாடி-வினா, ஓவியப் போட்டி உள்பட பல போட்டிகள் நடத்தப்பட, மாணவிகள் ஆர்வத்தோடு பங்கேற்றனர். மறுநாள் நிகழ்வுக்கு, கல்லூரியின் அனைத்து மாணவிகளும் புடவை, தாவணி என்று நம் பாரம்பர்ய உடையில் வந்து ஆர்வத்துடன் சங்கமித்தது... ஆச்சர்ய நிகழ்வு!

மூவாயிரத்துக்கும் அதிகமான மாணவிகள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, தமிழ் நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அறச்சலூர் செல்வம் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். ‘‘டிசம்பர் 10 உலக பாரம்பரிய உணவு நாள். அதற்காகத்தான் இந்த நிகழ்வே! நாம் சாப்பிடும் உணவு என்பது வெறும் உணவு மட்டும் கிடையாது. அது ஒருவித மருந்து. ஆனால், இன்றைக்குச் சாப்பிடும் உணவுகள் அப்படியா இருக்கின்றன? அமெரிக்கர்கள் ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் என்று மோகம் கொண்டதால், இன்று அவர்களில் மூன்றில் ஒருவர் உடல் பருமன் என்னும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவிலும் கொஞ்சம் கொஞ்சமாக பாரம்பர்ய உணவு அழிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட அழிவின் எல்லையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம். `இதே நிலை தொடர்ந்தால், 2020-ல்
இந்தியாவில் 70 வயதுக்குட்பட்டவர்களில் 50% பேர் இதய நோயால் பாதிக்கப்பட்டு மடிவார்கள்' என்று உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. உணவை, உணவாக மட்டுமே நாம் அறிவோம். ஆனால், அதற்குப் பின்னால் ஒரு மாபெரும் சந்தை அரசியல் உள்ளது. இதையெல்லாம் இளம் தலைமுறையினரான நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்!’’ என்று அறிவுறுத்தியவர், தொடர்ந்து, நம் முன்னோர்கள் தொன்றுதொட்டுப் பயன்படுத்தி வந்த பாரம்பர்ய உணவு வகைகள், அதன் சிறப்பு, முக்கியத்துவம் குறித்தும், ஓர் இனம் தன் உணவுக் கலாசாரத்தை மறந்தால், விளைவு என்னவாக இருக்கும் என்பது பற்றியும் தகவல்களைக் கொட்டினார்.

உண(ர்)வுத் திருவிழா!

தொடர்ந்து, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மேடையில் அரங்கேறின. ஃபேஷன் ஷோ, பாட்டு, நடனம் என நூற்றுக்கும் அதிகமான மாணவிகள் திறமையை வெளிப்படுத்த, அரங்கமே கரவொலியால் நிரம்பியது. இன்னொரு பக்கம், ரங்கோலி, சிகை அலங்காரம், பாரம்பர்ய உணவு சமையல் போட்டி என்று திருவிழாக் கோலம் கொண்டது, கல்லூரி வளாகம்!

உண(ர்)வுத் திருவிழா!

நிறைவாக, வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கிய கல்லூரி முதல்வர் ரேணுகாதேவி, ‘‘அவள் விகடன் நம் கல்லூரிக்கு வந்து இந்நிகழ்ச்சியை நடத்தியது பெருமையாக உள்ளது. நாளைய குடும்பத் தலைவிகளான மாணவிகள் ஒவ்வொருவரும் பாரம்பர்ய உணவின் மகத்துவத்தை உணர்ந்து, தொலைந்து வரும் நம் உணவுக் கலாசாரத்தை  மீட்டெடுக்க உறுதிமொழி எடுக்க வேண்டும்!’’ என்று அழுத்தமாகக் குறிப்பிட்டார்.