'பெற்றோர்களுக்கான பொறுப்பு என்னங்கிறதைத் தீர்மானமா வரையறுத்துக்குங்க!’னு போன இதழில் சொல்லியிருந்தேன். அப்பா, அம்மா ரெண்டு பேரும் இருந்துட்டா, அந்தப் பொறுப்பு பாதியாகப் பகிரப்படும். அதேவேளையில் தந்தையோ அல்லது தாயோ மட்டுமே இருக்கும் வீடுகளில், அந்தப் பொறுப்பு இருமடங்காகும்.

'கண்மணி அன்போடு... ’ கெளதமி! - 8

''நானும் உங்களைப் போல ஒரு 'சிங்கிள் பேரன்ட்’தான். விவாகரத்தானவள். என் 8 வயது மகளை தனி ஆளாக வளர்த்து வருகிறேன். குடும்ப வருமானத்துக்காக வேலைக்குச் செல்லும் கட்டாயம். அலுவலகத்திலும் வீட்டிலும் நான் சந்திக்கும் சவால்கள் கொஞ்சநஞ்சமல்ல. இரண்டையும் பேலன்ஸ் பண்ண நான் என்ன செய்ய வேண்டும்?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 இமெயில் மூலம் கேட்டிருந்தார் பெங்களூரில் இருந்து சகோதரி சியாமளா.

நீங்க சந்திக்கும் பிரச்னைகளையும் அனுபவிக்கும் வேதனைகளையும் உங்களைவிட பெட்டரா வேற யாரால யும் புரிஞ்சுக்க முடியாது. ஆனா, அதை டீல் பண்றதுக்கான சில யுக்திகளை, வழிமுறைகளை என்னால சொல்ல முடி யும். ஏன்னா, உங்க இடத்தில் நான் இருந்திருக்கேன், இது எல்லாத்தையுமே நானும் சந்திச்சிருக்கேன், அனுபவப்பட்டிருக்கேன். அதனால என் ஆலோசனை உங்களுக்கு உதவும்னு நினைக்கிறேன்.

முதல்ல, வீடா இருந்தாலும்... வேலை பார்க்கும் இடமா இருந்தாலும் முடிந்தவரை, உங்களைச் சுத்தியும் ஆதரவு இருக்குற மாதிரிப் பார்த்துக்கணும். அந்த சப்போர்ட் எப்படி இருக்கணும்னா, வீடா இருந்தால், பெற்றோர் மாதிரி அன்பான உறவுகள், கனிவான பக்கத்துவீட்டுக்காரங்க, வீட்டில் குழந்தையைப் பார்த்துக்கறதுக்கு, உதவிக்குனு நம்மைப் புரிஞ்சுக்கிட்ட ஒரு வேலையாள், பிள்ளைக்கொரு நல்ல டீச்சர்னு இருக்கலாம். அலுவலகம்னா நண்பர்கள், சக ஊழியர்கள், இப்படி நிறைய பேர் இருக்கலாம். இந்த மாதிரியான ஆதரவு இதுவரை இல்லேன்னாலும், தேடிப் பார்த்தா கண்டிப்பா கிடைக்கும்.

உங்க குழந்தைக்கு அன்பும் பாதுகாப்பும் தேவை. நீங்க கூட இருந்தாலும் இல்லைனாலும், எல்லா நேரத்திலும் உங்க குழந்தை பாதுகாப்பா இருக்கானு பார்க்க வேண்டியது முக்கியம். பள்ளியில் இருந்தாலும்... பாட்டு கிளாஸ், டியூஷன் போனாலும்... அங்க எல்லாம் என்ன மாதிரி சூழல்னு நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது அவசியம். பள்ளியில் நல்ல நண்பர்கள் இருக்காங்களானும் பார்த்துக்கணும். குழந்தை பாதுகாப்பா இருக்குனு நம்பிக்கை வந்தாலே, உங்க டென்ஷன் பாதி குறைஞ்சுடும். அதுக்காகத்தான் நம்மைச் சுத்தி உதவி செய்யுறவங்கள சேர்த்துக்கச் சொல்றேன்.

நீங்க சந்திக்கும் சவால்களில் ரெண்டாவது பெரிய சவால், டைம் மேனேஜ்மென்ட். இதுக்கு, உங்க நாட்களை முறையா திட்டமிடணும். 'இந்த நேரத்திலிருந்து இந்த நேரத்துக்குள் நான் இதை முடிக்கணும்... இத்தனை மணிக்குள் நான் ஆபீஸில் இருக்கணும், இங்கே போயிட்டு அப்புறம் அதை முடிக்கணும்'னு எல்லாத்தையுமே பக்காவா, அதுக்குரிய பொறுப்போட திட்டமிட்டுச் செய்யணும். அந்த நாளைப் பற்றிய ஒரு வடிவம் உங்களுக்குள்ள இருந்தா... எதிர்பாராத தடங்கல்களையும் சமாளிக்க முடியும். இதன்படி உங்க நேரத்தை மட்டுமில்லாம, உங்க மகளோட நேரத்தையும் வரையறுங்க. அவளோட ஹோம்வொர்க், ரெண்டு பேரும் சேர்ந்து வாக் போறது, சும்மா டைம் பாஸ் பண்ணறதுனு எதுவா வேணும்னாலும் இருக்கலாம். அந்தக் குறிப்பிட்ட நேரம், அது ஒரு பிராமிஸ் மாதிரி, உங்க குழந்தைக்கும் உங்களுக்குமானதா மட்டும்தான் இருக்கணும்! கண்டிப்பா வேற டைவர்ஷன் இருக்கக் கூடாது.

நான் இன்னிக்கும் என் மகளுக்கு இப்படித் தான் செய்றேன். 'என்ன நடந்தாலும் இது உனக்கும் எனக்கும் சொந்தமான நேரம்’னு ஒதுக்கிடுவேன். அவசரமான போன் வந்தா கூட, 'ஸாரி... திரும்பக் கூப்பிடுறேன்’னு வெச்சுடுவேன். முடியல, பேசித்தான் ஆகணும்னா, மகள்கிட்ட பர்மிஷன் கேட்டு பேசுவேன். 'சின்னப் பொண்ணுதானே!’னு கிரான்டட் ஆக எடுத்துக்கிட்டு, போன்ல பேசிட்டிருக்கக் கூடாது. இதையெல்லாம் கடைப்பிடிச்சா... நீங்க குழந்தைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்குறீங்கனு அதுக்குப் புரியும். நம்ம மேலான மரியாதையும் நம்பிக்கையும் கூடும். அப்போதான், ஒருவேளை நீங்க சொன்னதை செய்ய முடியலைனாக்கூட, 'அம்மா அப்படி பண்ண மாட்டாங்க. அப்போ அவங்களுக்கு ஏதாவது முக்கியமான வேலை வந்திருக்கும்!’னு குழந்தை நினைக்கும். முக்கியமான நேரங்கள்ல இந்த மாதிரி நம்பிக்கை வர்றது, உயிரைக் காப்பாத்தற அளவுக்கு ஈடானது. இதை வளர்க்கிறதுக்கு, நான் முதலில் சொன்ன 'நேரம் ஒதுக்குதல்’ உதவும்.

எல்லாமே கரெக்டா ஷெட்யூல் போட்டு, அதில் ஒரு விஷயம் சரியா நடக்கலைன்னா, வருத்தப்படாதீங்க. எல்லாப் பொறுப்புகளும் நம்மகிட்ட இருக்கும்போது, அளவுக்கதிகமான அழுத்தத்தை நம்ம மேல போடறோம். அப்படி இருக்கிறப்போ, ஒரு விஷயம் நடக்கலைனா, 'அய்யோ.. என்னால இதைப் பண்ண முடியலையே!’னு ஒரு தாழ்வு மனப்பான்மை வந்துடும். அந்த ட்ராக்கில் தயவு செய்து விழுந்துடாதீங்க. தவறு நடக்கத்தான் செய்யும். அதை ஒரு பாடமா எடுத்துக்கிட்டு, அடுத்த முறை அந்தத் தப்பு நடக்காம பார்த்துக்குங்க.

சிங்கிள் பேரன்ட்டா இருந்தாலும் நீங்க தனி மனுஷி இல்ல. நீங்க ரெண்டு பேர் இருக்கீங்க. உங்களுக்குத் துணை இருக்கு; நீங்களும் இன்னொரு குட்டி மனுஷிக்கு/மனுஷனுக்குத் துணையா இருக்கீங்க. எல்லாத்திலுமே நல்லது கெட்டது, தப்பு சரி, சந்தோஷம் துக்கம்னு ரெண்டு பக்கம் இருக்கும். அதில் பாஸிட்டிவ் பக்கங்களை மட்டும் எடுத்துக்கிட்டு, கம்பீரமா, நேர்மையா வாழ்ந்து பாருங்களேன்! வாழ்க்கை எவ்வளவு அற்புதம்னு புரியும்!

பேசுவோம்...

தொகுப்பு: பிரேமா நாராயணன்

உலகத்திலேயே முக்கியமான விஷயம்!

'கண்மணி அன்போடு... ’ கெளதமி! - 8

அலுவலக வேலைகளை ஆபீஸோட வெச்சுக்குங்க. ஒருவேளை வீட்டுக்கு வந்து பார்க்க வேண்டிய அளவு முக்கியமான வேலைனா, டேபிளில் இன்னொரு பக்கம் உங்க மகளையும் ஹோம்வொர்க் புக்கோடு உட்கார வெச்சுக்குங்க. நீங்க ஆபீஸ் வேலையைப் பாருங்க. ரெண்டுபேரும் சேர்ந்து நேரம் செலவழிச்ச மாதிரியும் இருக்கும், வேலையும் நடக்கும்.

உங்க குழந்தைக்கும் உங்களுக்குமான உறவை எந்த ஒரு விஷயத்துக்காகவும் எந்தக் காரணத்துக்காகவும் தியாகம் செய்யாதீங்க. ஐ மீன், விட்டுத் தராதீங்க! அதைவிட முக்கியமானது வேற எதுவுமே இல்ல, இந்த உலகத்தில்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism