செல்வம் கொழிக்கச் செய்யும் தொடர்வேளுக்குடி கிருஷ்ணன், ஓவியம்: சங்கர்லீ
பகவான் எந்த பிராட்டியாரின் கண் அசைவைப் பார்த்து இந்தப் பிரபஞ்சத்தையும் நம்மையும் சிருஷ்டிக்கிறாரோ... அந்த மஹாலக்ஷ்மி பிராட்டியாரின் கடாக்ஷமானது நமக்குக் கிடைத்துவிட்டால், எல்லாவிதமான செல்வங்களும் கிடைக்கப் பெறுவதுடன் பகவானின் திருவடிகளை அடைந்து நித்தியானந்தத்தில் திளைக்கும் பாக்கியமும் நமக்குக் கிடைக்குமாம்.

பிராட்டியார் இரண்டு வகைகளில் பகவானைப் பார்ப்பதாகச் சொன்னோம் அல்லவா? அதில் ஒன்று பகவானை அவருடைய சிருஷ்டிக்காக அங்கீகரிக்கும் பார்வை; மற்றது அன்பான பார்வை! இந்த அன்பான பார்வை எதற்குத் தெரியுமோ? பிராட்டியாருக்கு பகவானிடத்தில் உள்ள பிரியம் மட்டுமே காரணம் அல்ல. நாம் கடைத்தேறவேண்டும் என்பதும் ஒரு காரணம்தான்.
நம்மை அன்புடன் கடாக்ஷித்து, தன் பார்வையாலே சகல செளபாக்கியங்களையும் அருளும் பிராட்டியார், நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் பாவங்களைப் பகவான் கவனிக்காமல் விட்டுவிட வேண்டும் என்பதற்காகத்தான் பகவானையும் அப்படி அன்பாகப் பார்க்கிறாராம். ஆக, பிராட்டி யாரின் பார்வையின் காரணமாகத்தான் பகவான் நம்மை ஏற்றுக்கொள்கிறாராம்.
இது எப்படி இருக்கிறது தெரியுமோ?
திருமலையில் திருவேங்கடவனுடன் அருளும் நீளாதேவி நாச்சியார் பற்றி வேதாந்த தேசிகன் சாதிக்கும்போது இப்படிச் சொல்கிறார்:
'யாருடைய கண்பார்வையானது பகவானை மயங்கிக் கிறக்கமுறச் செய்கிறதோ, அந்த நீளாதேவியாரை நான் நமஸ்கரிக்கிறேன்.’
நீளாதேவி தன்னுடைய அன்பான பார்வையினால் திருவேங்கடப் பெருமானைப் பார்த்தாளாம். அந்தப் பார்வையில் பெருமாள் கிறங்கிப் போய்விட்டாராம். நாம் கள் அருந்தினால் கண்கள் கிறங்கிப்போய் 'மசமச’வென்று தெரியுமே அப்படி நீளாதேவி பெருமானைப் பார்க்கும்போது, பெருமாளின் கண்கள் இரண்டும் கிறங்கிப்போய்விடுமாம். அது நமக்கு நல்லதாகப் போய்விட்டது. காரணம், பகவானுக்குக் கண்கள் கிறங்கிப்போன அந்த நிலையில், பகவானுக்கு நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் பாவங்கள் எல்லாம் தெரியாமலேயே போய்விடுமாம்! இதில் இருந்து என்ன தெரிகிறது? மஹாலக்ஷ்மி பிராட்டியாரின் அன்பான அந்தப் பார்வைக்கு மயங்கிக் கிறங்கித்தான் நம்முடைய எல்லா பாவங்களையும் பகவான் மறந்துவிடுகிறாராம்! அப்படி நடக்கவில்லை என்றால், பகவான் நம்முடைய ஒவ்வொரு பாவத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டுவிடுவாரே!
நீளாதேவி பெருமானை எப்படிக் கிறங்கச் செய்கிறாள் தெரியுமோ? வில் போன்று வளைந்து தோன்றும் தன் புருவ அசைப்பினாலும், தன் புருவ நெரிப்பாலும், திருக்கண் பார்வையாலும், தோளால் அணைத்தலாலும் பிராட்டி பெருமாளைக் குளிரக் குளிர கடாக்ஷிக்கும்போது, பெருமான் அதற்கு மயங்கி இருக்கிறாரோ இல்லையோ, அந்த நேரம் பார்த்து பிராட்டி நமக்காக பகவானிடம் ஒன்றைப் பிரார்த்திக்கிறாள். நாமாக இருந்தால் என்ன பிரார்த்திப்போம்? நமக்கு அது வேண்டும்... இது வேண்டும் என்று பிரார்த்திப்போம். ஏதோ கொஞ்சம் நல்ல மனம் இருந்தால் நமக்கு வேண்டியவர்களுக்காக அதைக் கொடுங்கள்... இதைக் கொடுங்கள் என்று பிரார்த்திப்போம். ஆனால், தாயார் அப்படி இல்லை. நம்முடைய அனைத்துத் தேவைகளுக்கும் அவளே ஆதாரமாக இருக்கும்போது, அவளுக்குத் தேவை என்பது இருக்காதுதானே? அப்படி இருக்கும்போது பிராட்டி எதை வேண்டி பகவானிடம் பிரார்த்திப்பாள்? நம்முடைய நன்மையை வேண்டித்தான் பிரார்த்திப்பாள். இங்கே நம்முடைய நன்மை என்பது பகவானுடைய திருவடிகளில் நம்மை சேர்ப்பித்துவிடுவதுதான்!

பிராட்டி, தன்னுடைய அன்பான பார்வைக்குக் கிறங்கிப்போய் இருக்கும் பகவானைப் பார்த்து, ''ஸ்வாமி, இவனைக் கொஞ்சம் பாருங்கள். இவனைத் தாங்கள்தான் அனுக்கிரஹித்து தங்களுடைய திருவடிகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவன் மாயையில் சிக்கி எத்தனையோ பாவங்கள் பண்ணியிருக்கிறான் என்பது வாஸ்தவம்தான். நான் இல்லை என்று சொல்லவில்லை... ஆனால், இவனுடைய பாவங்களையே பார்த்துக் கொண்டிருந்தால், உம்முடைய தயைக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடுமே. எனவே, நீங்கள் தயைகூர்ந்து இவனுடைய பாவங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், இவனை அன்புடன் கடாக்ஷித்து இவனை உம்முடைய திருவடிகளில் சேர்ப்பித்துக்கொள்ள வேண்டும்'' என்றுதான் பகவானிடம் மன்றாடி வேண்டுகிறாள்.
திருமால் பார்த்தார். பிராட்டியாரின் புருவ நெரிப்பைப் பார்த்துதானே பகவான் சிருஷ்டிக்கவே தொடங்கினார்! அந்தப் பார்வைக்காக எது வேண்டுமானாலும் செய்யலாமே. 'வேறு யார் கேட்டுச் செய்கிறோமோ இல்லையோ, தேவியின் இந்த அன்புப் பார்வைக்காக எது வேண்டுமானாலும் செய்யலாமே’ என்று நினைத்தவராக, நம்முடைய பாவங்களை எல்லாம் மறந்தவராக, நம்மை அவருடைய திருவடிகளில் சேர்த்துக் கொள்கிறாராம்!
இப்படி பகவானின் கிறங்கிய நிலையைப் பார்த்த மாத்திரத்தில் இதுதான் சமயம் என்று நமக்காகப் பிரார்த்திக்கிறாள் என்பதால்தான் அவள் 'மனோக்ஞே’ மனநிலையை நன்கு அறிந்து வைத்திருப்பவள் என்று போற்றப்படு கிறாள். அவள் தன்னுடைய அன்பான பார்வை யினால் பகவான் நம்மிடம் கொண்டுள்ள கோபத்தை மட்டும் மாற்றவில்லை... நம்மையும் திருத்தி நல்லவர்களாக மாற்றுகிறாள்.
பிரளய காலத்தின்போது எல்லாமே நஷ்டப்பட்டுவிட்டன. மூன்று லோகங்களும் எதுவும் இல்லாமல் இருந்தன. ஆனால், அந்த மூன்று உலகங்களும் எப்போது பிராட்டியாரின் கண் பார்வையாகிற அமுதத்துளியில் நனைக்கப் பெற்றதோ... அப்போதே அந்த மூன்று உலகங்களுக்கும் ஜீவனும் ஐஸ்வர்யமும் ஏற்பட்டு வளர ஆரம்பித்துவிட்டன.
உதாரணமாக ஒன்றைப் பார்ப்போம். ஒரு பெண்மணி காலையில் புஷ்பம் விற்க ஆரம்பிப்பாள். இல்லையென்றால் மதியம் வந்திருக்கும் புஷ்பத்தை மாலையில் விற்கத் தொடங்குவாள். எட்டு மணி சுமாருக்கு விற்றது போக, கொஞ்சம் புஷ்பம் வாடிய நிலையில் மிச்சம் இருக்கும். அப்போது அவள் என்ன செய்வாள் தெரியுமா? கொஞ்சம் பன்னீரையோ அல்லது கொஞ்சம் தண்ணீரையோ அதன்மேல் லேசாகத் தெளித்துவிடுவாளாம். உடனே வாடிக்கிடந்த அந்த புஷ்பங்கள் பளிச்சென்று ஆகிவிடும். அதை எப்படியும் இரவு பத்து மணிக்குள் விற்றுவிடுவாள்.
அதைப் போல பிரளய காலத்தில் இந்த ஜகமெல்லாம் பிராட்டியினுடைய கடாக்ஷ பார்வை என்ற அமுதத் துளி படமால் ஜீவன் இல்லாமல் இருந்த நிலையில், மீண்டும் சிருஷ்டிக்கான நேரம் வந்தபோது, தேவியின் கடாக்ஷ பார்வை என்னும் அமுதத் துளியின் ஸ்பரிசம் பட்டுத்தான் இந்தப் பிரபஞ்சம் மீண்டும் உயிர்த் துடிப்புடன் இயங்கத் தொடங்குகிறது. அதன்பிறகே பகவான் பிராட்டியாரின் புருவ அசைப்பைப் பார்த்து நம்மையெல்லாம் சிருஷ்டிக்கிறார்.
அவளுடைய கடாக்ஷம் மட்டும் இல்லை என்றால், பிரபஞ்சமும் உயிர்த்திருக்காது; பகவான் நம்மையும் சிருஷ்டித்து இருக்கமாட்டார். நாமும் பிறந்திருக்கவே மாட்டோம்.
நாம் கேட்கலாம், 'பிறக்காமல் இருந்தால் நன்றாக இருந்திருக்குமே... பிறந்து படாதபாடு படுகிறோமே’ என்று. அப்படி நாம் பிறக்காமல் போய்விட்டால், நாம் பகவானிடம் எப்படி பக்தி செலுத்துவது? பகவானின் திருவடிகளில் சரணாகதி அடைவது எப்படி? மேலும் நாம் அதுவரை செய்திருக்கக்கூடிய கர்மாக்களைப் போக்கிக்கொள்ள வேண்டுமே, அதற்கு வழி இல்லாமல் போய்விடுமே. எனவே, நம்முடைய கர்மவினைகளைப் போக்கிக்கொள்ளுவதற்காக நாம் பிறக்கும்போது, நமக்கு மஹாலக்ஷ்மியின் கடாக்ஷம் இருந்தால்தானே நாம் சகல ஐஸ்வர்யங்களையும் பெற்றுச் சிறக்க வாழவும், பெருமாளிடம் சரணடைந்து நாம் பேரின்பநிலையை அடையவும் முடியும்..?
கடாக்ஷம் பெருகும்...
தொகுப்பு: க.புவனேஸ்வரி