Published:Updated:

ரெளத்திரம் பழகும் நேரம் இது!

ச.ஜோ நவீன் ராஜ்

பாலியல் கொடுமைக்கு பலியாகும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியேதான் இருக்கிறது. 'உச்சபட்சமாக தூக்குத் தண்டனைகூட விதிக்கலாம்' என்று சட்டம் இயற்றப்பட்டுவிட்ட பிறகும்... நிலைமை மேலும் மோசமாகிக்கொண்டுதான் வருகிறது.

ரெளத்திரம் பழகும் நேரம் இது!

'டெல்லியில் கால் டாக்ஸியில் பயணித்த பெண், டிரைவராலேயே பலாத்காரம் செய்யப்பட்டார்...', 'வேலூரில் கல்விக்கூடத்துக்கு சைக்கிளில் சென்ற மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்...' என்றெல்லாம் பதறவைக்கும் செய்திகள் வந்துகொண்டிருக்கும் இந்தக் கொடுஞ்சூழலுக்கு நடுவே... ''ஆண்களின் பாலியல் கொடுமைகளில் இருந்து தப்பிக்க, நீங்கள் பலசாலியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மூளையில் புத்தியும், மனதில் சக்தியும் இருந்தால் போதும்!'' என்று தைரியம் ஊட்டுகிறார் கர்நாடகாவைச்சேர்ந்த 18 வயதான வாமா பல்கோட்டா!

ரெளத்திரம் பழகும் நேரம் இது!

''தாம்சன் ராய்ட்டர்ஸ் எனும் சர்வதேச ஊடகம் நடத்திய சர்வே ஒன்றின்படி, பெண்கள் வாழ ஆபத்தான நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது. இந்நிலையை மாற்றும் என்னுடைய பெரிய அக்கறையின் சிறிய முயற்சியாக, இதுவரை 6,500 பெண்களுக்கு என்னுடைய 'டிஃபன்ஸ் அகைன்ஸ்ட் ரேப் அண்ட் ஈவ் டீஸிங்’ (DefenseAgainst Rape&Eveteasing - 'DARE') என்ற நிகழ்ச்சியின் மூலம் பயிற்சி வழங்கி தற்காப்பு கலைகளையும், பெண் உரிமைகளையும் கற்றுக்கொடுத்திருக்கிறேன்!'' என்கிறார் வாமா!

''அப்போது நான் பிரிட்டனில் 11 கிரேட் படித்துக் கொண்டிருந்தேன். விடுமுறைக்காக சொந்த ஊரான கர்நாடகாவில் உள்ள ஹோஸ்பட் வந்தேன். எங்கள் வீட்டில் வேலை செய்பவருடைய மகள், அவளுடைய சொந்த மாமாவால் பாலியல் கொடுமை செய்யப்பட்ட சம்பவம் என் மனதை மிகவும் பாதித்தது. 12 கிரேட் முடித்தவுடன் இந்தியா திரும்பிய நான், தற்காப்புக் கலை பற்றியும், பெண் உரிமைகளைப் பற்றியும் மக்கள் மத்தியில் விழிப்பு உணர்வு எற்படுத்த முடிவு செய்தேன். மும்பையில் இருக்கும் 'அன்ஆர்ம்டு கமாண்டோ காம்பாட் அகாடமி’யில் (Defense Against Rape & Eveteasing - ‘DARE’)  சேர்ந்தேன். பலசாலியை சமாளிக்க கொஞ்சம் வலிமையும், நிறைய சாமர்த்தியமும் போதும் என்பதை அங்குதான் கற்றுக்கொண்டேன். பின், பல வல்லுநர்களின் ஆலோசனை பெற்றபிறகு, கடந்த ஆகஸ்ட்டில் உருவானதுதான் என்னுடைய 'டிஃபன்ஸ்’ பயிற்சி வகுப்பு.

ரெளத்திரம் பழகும் நேரம் இது!

எனக்கு 6 மொழிகள் தெரியும் என்பதால், இந்தியாவின் பல நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் வகுப்புகள் எடுத்துள்ளேன். என்னுடன் ஐந்து தன்னார்வ உதவியாளர்கள் இருக்கிறார்கள். பெரும்பாலும் மாணவிகளுக்கும், சில சமயங்களில் கார்ப்பரேட்டில் பணிபுரியும் பெண்களுக்கும் பயிற்சி அளிக்கிறோம். எங்களுடைய செலவுகளுக்கு MSPL என்ற சுரங்க நிறுவனம், தங்களின் 'பெரு நிறுவன சமூக பொறுப்பு' (கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி) என்கிற வகையில் ஸ்பான்ஸர் செய்கிறார்கள்!'' எனும் வாமாவின் தந்தைதான், MSPL நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்.

ரெளத்திரம் பழகும் நேரம் இது!

''பயிற்சி வகுப்பு இரண்டு மணி நேரம் நடக்கும். ஒரு ஆண் தவறாகப் பார்த்தால் என்ன செய்ய வேண்டும், தொட முயன்றால் என்ன செய்ய வேண்டும், சமார்த்தியமாகத் தப்பிப்பது எப்படி மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்கள் குறித்தும் கற்றுக்கொடுப்போம். இந்தப் பயிற்சிக்கு குரு தட்சணையாக ஆர்வத்தையும், ஆளுமையையும் மட்டுமே எதிர்பார்க்கிறோம்!'' என்று சொல்லும் வாமா, தன்னுடைய கல்லூரிப் படிப்பை இன்னும் சில மாதங்களில் வெளிநாட்டில் தொடரவிருக்கிறார். இதையும் மனதில் வைத்து, இப்போது 500-க்கும் மேற்பட்ட தன்னார்வ உதவியாளர்களை இந்தப் பயிற்சிக்காகத் தயார்படுத்தியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு