Published:Updated:

பெருகும் சைபர் குற்றங்கள்... என்னதான் தீர்வு!

சா.வடிவரசு

பெருகும் சைபர் குற்றங்கள்... என்னதான் தீர்வு!

சா.வடிவரசு

Published:Updated:

எஸ்.எம்.எஸ்... எம்.எம்.எஸ்... ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் என்று வளர்ந்து வந்து, தற்போது 'வாட்ஸ்ஆப்...’ என்கிற பெயரில் நொடிகளில் புகைப்படங்களுடன் தகவல்கள் தாண்டவமாடிக்கொண்டிருக்கின்றன. இந்த மின்னல் வேக தொழில்நுட்ப வளர்ச்சியும் பெண்களுக்கு எதிரான ஆயுதமாக கையில் எடுக்கப்படுவதுதான் கொடுமை! உலகின் ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு, ஒரே ஒரு 'வாட்ஸ்ஆப்’ செய்தி மூலமாக, ஒரு பெண்ணின் எதிர்காலத்தையே குலைத்துப்போடும் செயல்களைச் செய்யும் கொடூரர்கள் அதிகரித்துவிட்டனர்.

பெருகும் சைபர் குற்றங்கள்... என்னதான் தீர்வு!

 இதைவிட கொடுமை, அந்தச் செய்திஉண்மையா... இல்லையா என்று தெரிந்து கொள்ளாமலேயே, தங்களுடைய மொபைலுக்குள் வந்து விழுந்துவிட்டது என்கிற ஒரே காரணத்துக்காகவே பலரும் அதை ஃபார்வேட் செய்து, தாங்களும் குற்றவாளிகளாக மாறிக் கொண்டிருப்பது! இதற்கு உதாரணமாக... 'திருடி’ என்ற தலைப்பில் சிலவாரங்களுக்கு முன்பு அவமானப்படுத்தப்பட்ட மும்பை பெண்ணைச் சொல்லலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தச் சூழலில், இத்தகைய சைபர் க்ரைம்களுக்கு என்னதான் தீர்வு என்பது குறித்து சிலர் இங்கே பேசுகிறார்கள்...

ராமமூர்த்தி  நிறுவனர் (சைபர் செக்யூரிட்டி அமைப்பு, சென்னை): ''பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையம் சென்றால், 'இந்தப் புகாரையெல்லாம் இங்க வாங்க மாட்டோம். கமிஷனர் ஆபீஸ்ல இருக்கிற சைபர் க்ரைம் செல்லுக்கு போய் புகார் கொடுங்க’ என்று அனுப்பிவிடுகிறார்கள். எல்லோராலும் கமிஷனர் அலுவலகத்துக்குச் சென்று புகார் கொடுக்க முடிவதில்லை என்பதுதானே உண்மை! நிலைமை இப்படி இருக்க, '99 சதவிகிதம் பேர் சைபர் க்ரைம் குற்றங்கள் குறித்து எங்களுக்குப் புகார் தருவதில்லை’ என்று சைபர் க்ரைம் போலீஸ் தரப்பிலிருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

முதலில் அரசாங்கம் இந்த விஷயத்தை முக்கியமான பிரச்னையாக கையில் எடுக்க வேண்டும். இதற்கென புகார் கொடுக்க, எல்லா காவல் நிலையங்களிலும் வழிவகை செய்வதோடு, கொடுக்கப்படும் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுத்து, கடுமையான தண்டனை கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போதுதான் இத்தகைய குற்றவாளிகளை எல்லாம் ஒடுக்க முடியும்.''

பெருகும் சைபர் குற்றங்கள்... என்னதான் தீர்வு!

பூமா, சமூக சேவகி: ''பள்ளி மாணவிகள், இல்லத்தரசிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள், வயதானவர்கள் என எல்லா தரப்பினரும் செல்போன் மற்றும் இன்டர்நெட் மூலமாக சதிகாரர்களின் வலையில்சிக்கிவருகிறார்கள். இளம்பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. வெளியில் தெரிந்தவை சில மட்டுமே. வெளியில் தெரியாத குற்றங்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும். இதுபோன்ற குற்றவாளிகளிடம் சிக்கிக்கொண்டு, விஷயம் வெளியில் தெரிந்தால் குடும்பத்துக்கே அவமானம் என்று எத்தனையோ பேர் உயிரைக்கூட விட்டிருக்கிறார்கள். நாகரிகம் வளர்ந்துவிட்டது என்று ஒரு பக்கம் பெருமையாக பேசிக்கொண்டே, மறுபக்கம், இப்படி அநாகரிக செயல்கள் காரணமாக பல உயிரிழப்புகளுக்கு இந்த சமூகமே காரணமாக இருக்கிறது. இதைத் தடுக்க, அரசாங்கம் அதிரடி நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.''

ஷீலா, (தனியார் நிறுவன ஊழியர்): ''படித்தவர்களாலேயே சைபர் க்ரைம் குற்றவாளிகளிடம் இருந்து எளிதில் தப்பிக்க முடிவதில்லை. இப்படி இருக்கும்போது படிக்காதவர்களும், செல்போன், இன்டர்நெட் குறித்து அதிகம் தெரியாதவர்களும் என்ன செய்வார்கள். போலியோ சொட்டு மருந்து குறித்த விழிப்பு உணர்வு இன்றைக்கு எப்படி  எல்லா பெற்றோர்களுக்கும் இருக்கிறதோ, இதேபோலவே சைபர் க்ரைம் குறித்த விழிப்பு உணர்வையும் அவர்களுக்கு அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். இதற்காக கிராமம், நகரம் என்று எல்லா இடங்களிலும் சைபர் க்ரைம் என்றால் என்ன, இதிலிருந்து தப்பிப்பது எப்படி, பாதிக்கப்பட்டால் அந்த விஷயத்தை அணுகுவது எப்படி என்று மக்களுக்கு விழிப்பு உணர்வு கூட்டங்களை அரசாங்கம் நடத்த வேண்டும். அப்போதுதான், குற்றவாளிகளும் பயப்பட ஆரம்பிப்பார்கள்.''

திலகவதி, (முன்னாள் காவல்துறை இயக்குநர்): ''சைபர் க்ரைம் விஷயங்களைக் கையாளும் தொழில்நுட்பத் திறமை வாய்ந்தவர்களாக தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு காவல் நிலையத்திலும், சைபர் க்ரைம் தடுப்பு மையம் அமைத்து அங்கே  பணியில் அமர்த்த வேண்டும். செல்போன் தொலைந்தால் கண்டுபிடித்து தரக்கூடிய புகார் தொடங்கி, உச்சகட்ட சைபர் குற்றங்கள் வரை எப்படி கையாள வேண்டும் என்று இவர்களுக்குச் சொல்லித்தர வேண்டும். இவர்களில் இருந்து திறமைவாய்ந்தவர்களை அடையாளம் கண்டு, 'சைபர் க்ரைம் தனிப்படை’ அமைக்க வேண்டும். இந்தப் படையினர், தீவிரமாக பணியாற்றும் வகையில் அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்துதர வேண்டும். இதையெல்லாம் செய்யும் போதுதான், சைபர் க்ரைம் குற்றங்கள் குறையத் தொடங்கும்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism