Published:Updated:

இதுக்கு மேல இந்தக் கிழவனால என்ன செய்ய முடியும்?

- மருந்தில்லா நோய்... விடையில்லா கேள்வி!கே.அபிநயா, படம்: தே.தீட்ஷித்

இதுக்கு மேல இந்தக் கிழவனால என்ன செய்ய முடியும்?

- மருந்தில்லா நோய்... விடையில்லா கேள்வி!கே.அபிநயா, படம்: தே.தீட்ஷித்

Published:Updated:

''எங்கள மாதிரி ஏழைங்க எல்லாம், 'நோய் வரக்கூடாதுனு வேண்டிக்கிறதுக்கு மொதக் காரணம்’, அதைத் தாங்கறதுக்கு  உடம்புல வலு இருந்தாலும், செலவழிக்கக் கையில காசு இருக்காதுங்குறதுதான்...''

மதுரையைச் சேர்ந்த ஜோசப்பின் ஒவ்வொரு வார்த்தையிலும் விரக்தி. இவ ருடைய மகள் வயிற்றுப் பேத்திகள், ரெபேகா ஜே சுஸ்மிதா மற்றும் மெர்லின் ஜே டயானா ஆகியோரைத் தாக்கியிருக்கும் வினோதமான கண் நோயை குணமாக்க வழியே இல்லை என்று டாக்டர்கள் கைவிரித்ததன் வெளிப்பாடுதான் இந்த விரக்தி.

இதுக்கு மேல இந்தக் கிழவனால என்ன செய்ய முடியும்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தப் பெண்களின் அப்பா ஜேம்ஸ் (பிளாட்ஃபாரத்தில் காய்கறி வியாபாரம் செய்பவர்), அம்மா ஜெனிதா. இருவரும் தங்கள் பெண்களின் நோய் பற்றி எடுத்துரைக்கக்கூட தெரியாத அறியாமையில் இருக்க, நம்மிடம் விரிவாகப் பேசினார், தாத்தா ஜோசப்.

''மூத்த பேத்தி சுஸ்மிதாவுக்கு பொறந்தப் போவே மாறு கண்ணா இருந்தது. அதை அதிர்ஷ்டம்னு சொன்னாங்க. ஆனா, ஆறு மாசத்துல பார்வை சரியில்லைனு மதுரையில இருக்கிற கண் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனோம். ஆறு மாசம் கழிச்சு வரச் சொன்னாங்க. அப்பவும் எந்த முடிவும் சொல்ல முடியல. மறுபடியும் ஆறு மாசம் கழிச்சு வரச் சொன்னாங்க. இப்படியே மூணு வருஷமா அலைஞ்சும் அவ பிரச்னை என்னனே அவங்களால சொல்ல முடியல.

ரெண்டாவது பேத்தி மெர்லின் பொறந்ததும், சுஸ்மிதாவுக்கு வைத்தியம் பார்த்த டாக்டர், அவளையும் கூட்டிட்டு வரச் சொன்னார். பரிசோதிச்சிட்டு, 'உங்க ரெண்டு பேத்திக்குமே 'ரெடினைடீஸ் பிக்மென்டோசா’ங்கிற(Retinitis Pigmentosa With Atrophic Maculopathy)  அரியவகை கண் நோய் இருக்கு. ரத்த சொந்தத்தில் கல்யாணம் பண்ணும்போது இந்த நோய் ஏற்படலாம். இதுக்கு அலோபதி வைத்தியத்தில் மருந்தில்லை’னு சொன்னாரு. மதுரை, அரசு மருத்துவமனைக்கு போனப்ப, 'இந்த நோய்க்கான மருத்துவம் ஆராய்ச்சி நிலையிலதான் இருக்கு’னு சொன்னாங்க. நிறைய கண் ஆஸ்பத்திரிகளுக்கு ஏறி இறங்கியும், சிகிச்சையே இல்லைனு கைவிரிச்சுட்டாங்க'' என்ற ஜோசப், ''மூத்தவளுக்கு இப்போ 13 வயசு, ரெண்டா வதுக்கு 10 வயசு. ரெண்டு பேராலயும் நேர்கோட்டுல 5, 6 அடி வரைக்கும்தான் பாக்க முடியும். பக்கவாட்டுப் பார்வை சுத்தமா கிடையாது. எழுதுறது, படிக்குறதுனு நுணுக்கமான பார்வையெல்லாம் ரொம்பக் கஷ்டப்படுத்தும். இப்போ இருக்குற பார்வையும் கொஞ்சம் கொஞ்சமா பறிபோயிடும்னு டாக்டருங்க சொல்லியிருக்காங்க. நோய் இல்லாதவங்க இல்லைதான். ஆனா, மருத்தில்லாத நோய் பெருஞ்சாபம்!''  துளிர்த்த கண்களைத் துடைத்துக்கொள்கிறார்.

இந்தச் சகோதரிகளை, 'இண்டிகேட் ஸ்கூலில்’ (நார்மல் பள்ளியும் இல்லாமல், முழுமையாக பார்வையற்றோருக்கான பள்ளியும் இல்லாமல், பார்வைக் குறைபாடுடையவர்களுக்கான பள்ளி) சேர்க்க வலியுறுத்தி இருக்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், தனியார் மட்டுமே அந்தப் பள்ளியை நடத்துவதால், அங்கே சேர்ப்பதற்கு வசதியில்லாமல், பார்வையற்றோர் பள்ளியில்தான் படிக்கிறார்கள்.

''கேரளா, எர்ணாகுளம் மாவட்டம், கூத்தாட்டும்குளம்ங்கிற ஊருல இருக்குற ஆயுர்வேத கண் ஆஸ்பத்திரியில, 'இப்போ இருக்குற பார்வை பறிபோகாம தற்காத்துக்க மட்டும் முடியும்’னு சொன்னதால அஞ்சு முறை ஆயுர்வேத சிகிச்சைக்குக் கூட்டிட்டுப் போனேன். ஒவ்வொரு முறையும் 50,000 ரூபாய் செலவாச்சு. அதுக்கு மேல காசில்ல. எவ்வளவுதான் கடன் வாங்குறது? அரசாங்க இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துல விண்ணப்பிச்சப்ப, 'ஆயுர்வேத சிகிச்சைக்கு கிடையாது’னு சொல்லிட்டாங்க. மதுரை உயர் நீதிமன்றத்துல வழக்குப் போட்டேன். 'இந்தக் குழந்தைகளுக்கு வைத்திய வசதி செய்து தரணும்’னு நீதிமன்றம் உத்தரவு போட்டும், அரசாங்கம் அசையல. எனக்கு 69 வயசாச்சு. 601 ரூபாய் ஓய்வு ஊதியம் வாங்குறேன். இதுக்கு மேல இந்தக் கெழவனால என்ன முடியும்?''

மருந்தில்லா நோய் போல, ஜோசப்பின் விடையில்லா கேள்வி இது!

இதுக்கு மேல இந்தக் கிழவனால என்ன செய்ய முடியும்?

"விட்டமின்ஏ மாத்திரைகள் உதவும்!''

இந்நோய் பற்றி, சென்னையைச் சேர்ந்த கண் சிகிச்சை மருத்துவர் நவீன் நரேந்திரநாத்திடம் கேட்டபோது, 'ரெடினைடீஸ் பிக்மென்டோசா, மரபு சம்பந்தப்பட்ட நோய். பிறவியிலேயே சிலருக்கு இந்நோய் தீவிரமாக இருக்கும், சிலருக்கு 50 வயதைத் தாண்டிய பிறகுதான் நோய் இருப்பது தெரியவரும். அது ஜீனின் தன்மையைப் பொறுத்தது. இந்நோய் முதலில் கண்ணில் இருக்கும் 'ராடை’ (rod) பாதிப்பதால், பக்கப் பார்வை பறிக்கப்படும். பின்பு, கொஞ்சம் கொஞ்சமாக கண்ணின் மையத்தையும் தாக்கி, முழுப் பார்வையையும் பறிக்கும். இந்நோய்க்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனாலும் விட்டமின்ஏ மாத்திரைகள் எடுத்துக்கொள்வது, இந்நோய் மேலும் தீவிரமடையாமல் இருக்க உதவும். லோ விஷன் கண்ணாடி, ஃபீல்டு எக்ஸ்பாண்டிங் லென்ஸ் (field expanding lens) பயன்படுத்தலாம்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism