Published:Updated:

ஆல் இஸ் வெல்! -9

குழப்பத்துக்கு குட்பை!டாக்டர் அபிலாஷா

ஆல் இஸ் வெல்! -9

குழப்பத்துக்கு குட்பை!டாக்டர் அபிலாஷா

Published:Updated:

ம்மில் பலருக்கும் குழப்பம் ஏற்படுவது இயல்பே. ஆனால், சிலருக்கு குழப்பம் மட்டுமே ஏற்படும்... தெளிவு நிலை என்பதே இல்லாமல் போகும். இத்தகையோர்... கவனிக்கப்பட வேண்டியவர்கள் என்கிறது, மனநல மருத்துவம்!

ஆல் இஸ் வெல்! -9

 `So many information is called confusion’  என்பார்கள் ஆங்கிலத்தில். அதாவது, அதிகத் தகவல்களால் / கவலைகளால் மூளை சிறைப்படும் நிலையை, குழப்பம் எனலாம். குழப்பத்தில் நான்கு வகைகள் உண்டு. ஒன்று, அழகு சார்ந்து வருவது. இரண்டாவது, பொருளாதாரம் சார்ந்து வருவது. மூன்றாவது, உறவு சார்ந்து வருவது. நான்கு, சமூகம் சார்ந்து வருவது. குழப்பம் மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் வரக்கூடியதே. ஆனால், அதிலிருந்து மீள்வது, அதை அவரவர் கையாளும் விதத்தில் இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குழப்பம் வரும்போது, அதை மூன்று விதங்களில் கையாளலாம். ஒன்று... ஏன் இந்தக் குழப்பம் என்று தனக்குத் தானே சிந்தித்து ஒரு முடிவு கட்டலாம். இரண்டு... குழப்பம் எனும்போதே, அது தேவையில்லாததுதான் என்பதை உணர்ந்து, தூக்கி எறிந்துவிடலாம். மூன்று... நம்பிக்கைக்குரிய நபர்களிடம் அதைப் பகிர்ந்து, அவர்களின் உதவியோடு தீர்வு காணலாம். அப்படி ஒரு நபராக என்னை நினைத்துதான், தன் குழப்பத்தை எழுதியிருந்தார் அந்த இளம் வாசகி.

''எனக்கு 20 வயது. நான் கடந்த நான்கு வருடங்களாக ஒருவரைக் காதலிக்கிறேன். ஆனால், திருமணம் என்று யோசிக்கும்போது, அவரின் ஏழ்மையான குடும்பம், குடும்பத் தின் கடன் பிரச்னை எல்லாம் என்னைக் குழப்பத்தில் தள்ளின.’வயதின் வேகத்துக்கு, வாழ்க்கையை பலியாக்கிட வேண்டாம்' என்று தோன்றியதால், திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை என்று அவரிடம் சொன்னேன். அவர் தற்கொலை முடிவு எடுக்கும் அளவுக்கு சென்றுவிட்டார். நான் எந்தப் பணக்காரனைத் திருமணம் செய்தாலும், இப்படி ஓர் அன்பான கணவர் கிடைக்க மாட்டார் என்பதை உணர்கிறேன். அதேநேரத்தில், என் காதலனின் குடும்ப வறுமையை பங்கிட்டு வாழும் வாழ்க்கையை ஏற்று, அழகாக இல்லறம் நடத்தும் நம்பிக்கை, என் மேல் எனக்கே இல்லை. இதனால் மிகுந்த குழப்பத்தில் இருக்கிறேன். விளைவாக, காதலரிடம் எதற்கெடுத்தாலும் சண்டை போட்டு, பாடாய்ப்படுத்துகிறேன்...''

- அந்தக் கடிதத்தின் சாரம் இது.

இந்தத் தோழிக்கு வந்துள்ள குழப்பம், வாழ்க்கையில் மிகமுக்கியமான குழப்பம். இதில் அவர் சரியான ஒரு முடிவை எடுக்க வேண்டும். அதற்கு முதலில் அவருக்குத் தேவை, பொறுமையும் கால அவகாசமும். நான்கு ஆண்டுகளாகக் காதலிக்கிறார் என்றால், அவருக்கு 16 வயதில் வந்த காதல் இது. சரியான வயதில், பக்குவமான மனநிலையில் வந்த காதல் அல்ல இது. ஆனால், அன்பு மட்டும் போதும் என்று அவரை நம்பிச் சென்றால், அந்த அன்பு ஒருபோதும் சாப்பாடு போடாது எனும் அளவுக்கு யோசித்திருக்கும் தோழி, இப்போது பக்குவப்பட்டவராகவே இருக்கிறார். தற்கொலை முயற்சி எடுத்த அவர் காதலர், தன் அன்பின் உறுதியை வெளிப்படுத்தினாலும், வாழ்க்கையை அணுகத் தெரியாத தன் பக்குவமின்மையைக் காட்டுகிறார்.

இப்போது இந்தத் தோழி சில கேள்விகளுக்கு விடை காண வேண்டும். காதல் திருமணம் இனிமையாக அமைய, காதலர் உண்மையில் கடின உழைப்பாளியா, அவரால் குடும்பக் கடனை கட்டிவிட்டு, தன்னை மணம் முடிக்க இயலுமா? அவருக்கு பக்கபலமாக இருந்து, அவர் பொறுப்புகளை நிறைவேற்ற வைத்து, ஒரு வெற்றியாளராக அவர் பயணிக்க ஒரு மனைவியாக தான் பங்களிக்க முடியுமா? இல்லை, காதலைத் துறக்கும் அளவுக்கு, தான் ஒரு சுகவாசியா? இந்தக் கேள்விகளுக்கு தன் மனதில் இருந்து நேர்மையான விடைகளைப் பெற வேண்டும். இந்த விடைகள்தான் தெளிவான முடிவை எடுக்கவைக்கும். அதேபோல, காதலருக்கும் தன் நிலையைப் பற்றிச் சிந்திக்க, கொஞ்சம் அவகாசம் கொடுக்கவேண்டியது அவசியம். குழப்பத்தைப் பொறுத்த வரையில், அவசர முடிவு கூடவே கூடாது.

ஆல் இஸ் வெல்! -9

இங்கே குழப்பத்தில் இருக்கும் பலரும், ஆற அமர்ந்து சிந்திப்பதற்கான நேரம் இல்லாமல் ஓடுகிறார்கள். தங்கள் வாழ்க்கையின் வேலைகளோடு குழப்பத்தையும் இழுத்துக்கொண்டே செல்வதால், அது மேலும் மேலும் வளர்ந்து, இடியாப்பச் சிக்கலாக இறுகுகிறது. இதனால் அதிக மனஅழுத்தம், எரிச்சல், கவனமின்மை என பல பிரச்னைகளையும் சேர்த்துக் கொள்கிறார்கள்.

சரி, குழப்பத்தில் செய்யக் கூடாதவை என்ன? தன் குழப்பத்தை, பார்ப்பவர்களிடமெல்லாம் பகிரக் கூடாது. அவர்களிடம் இருந்து தீர்வு எதுவும் கிடைக்கப் போவதில்லை என்பதுடன், உங்களின் குழப்பத்தை கிசுகிசுவாக அவர்கள் பலரிடமும் பேசும் சங்கடமும் உள்ளது. அதேபோல, குழப்பத்தில் உள்ளபோது எக்காரணம் கொண்டும் ஓவர் ரியாக்ட் செய்யக்கூடாது. ஒரு விஷயம் தெரியவரும்போது, அது தலை சுற்றுமளவுக்குக் குழம்ப வைத்தால், அந்த இடத்திலேயே அதை வெளிப்படுத்தாமல், அதற்கு ரியாக்ட் செய்யாமல், அமைதி காக்கவும். பின் தனிமையில், அதைப் பற்றிச் சிந்திக்கவும்.

மொத்தத்தில், 'எனக்கு குழப்பமா இருக்கு’, 'என்ன முடிவெடுக்கிறதுனு தெரியல’, 'இதை நான் எப்படி சமாளிக்கப் போறேன்’ என்று தனக்கு ஏற்பட்ட குழப்பத்தை ஆறாமல் வைத்துக்கொள்பவர்கள், அதற்கு தீர்வு காண்பது கடினம். அதுவே, 'எனக்கு இப்படி ஒரு குழப்பம் வந்திருக்கு. அதை நான் பல கோணங்களில் யோசிப்பேன். ஒரு நல்ல தீர்வை எடுப்பேன். நான் எடுத்த முடிவில், 'இது சரியா தவறா?’ என்று மீண்டும் குழம்ப மாட்டேன்’ என்று பக்குவத்தோடு அணுகினால், குட் பை சொல்லிவிடலாம் குழப்பத்துக்கு!

ரிலாக்ஸ்...

தொகுப்பு: சா.வடிவரசு

கேள்விக்கு என்ன பதில்..!

’ஆண்களைவிட பெண்கள் அதிக குழப்ப வாதிகள்' என்கின்றன ஆய்வுகள். தோழிகளே... அப்படிக் குழப்பம் வரும் சமயங்களில் 'என்ன... ஏன்... எப்படி... எதற்கு... எங்கே... எப்போது?’ ஆகிய ஆறு கேள்விகளுக்குமான நேர்மையான பதிலை, ஒரு பேப்பரில் எழுதுங்கள். அதை எழுதும்போதே, 90% பேர் தங்கள் குழப்பத்தில் இருந்து தெளிவுபெற்று விடுவார்கள். மீதமுள்ள 10% பேரில் 8% சதவிகிதம் பேருக்கு எழுதியதை ஓரிரு முறை படிக்கும்போது தீர்வு கிடைக்கும். மீதமுள்ள 2 சதவிகிதம் பேர், தங்களின் நம்பிக்கைக்குரியவர்கள் மூலமாகவோ அல்லது மனநல மருத்துவரிடமோ தீர்வு காண வேண்டும்.

குழந்தைகளையும் குழப்பவாதி ஆக்காதீர்கள்!

ஆல் இஸ் வெல்! -9

பெற்றோர்கள் உங்கள் குழப்பத்தை குழந்தைகள் முன்பு வெளிப்படுத்திக்கொண்டே இருந்தால், அது அவர்களையும் குழப்பவாதி ஆக்கிவிடும். மேலும், குழப்பவாதிகளைப் பற்றியும் அவர்கள் முன்னிலையில் பேசாதீர்கள். வளரும் குழந்தைகளை, அவரவர் வயதுக்கு ஏற்ற முடிவுகளை அவர்களாகவே எடுக்கப் பழக்குங்கள். உதாரணமாக, 'இதில் எந்த டிரெஸ் வேணும்..?’, 'டாய் வேணுமா, டால் வேணுமா..?’, 'உங்க ஸ்கூல் சார்கிட்ட டியூஷன் போறியா..? வேற ஸ்கூல் சார்கிட்ட டியூஷனுக்குக் கேட்போமா..?’ என்று அவர்களிடம் கேட்கும்போது, தங்கள் முன் உள்ள சாய்ஸில் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் மனப் பயிற்சி அவர்களுக்குக் கிடைக்கும். ஒருவேளை அவர்கள் முடியாமல் உங்களிடம் சரணடைந்தால், நீங்கள் அவர்களுக்கு ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்து, அந்தக் தேர்வுக்கான காரணத்தையும் அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். பின்னாளில் அவர்களுக்குள் எழும் குழப்பத்தை உடனுக்குடன் தீர்த்துக்கொள்ள இந்தப் பழக்கம் வழி வகுக்கும்.

இது உங்களுக்காக!

வாசகிகளே! உங்களது பர்சனல் பிரச்னைகளுக்கு தீர்வு காண 'ஆல் இஸ் வெல், அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2’ என்ற முகவரியில் கடிதம் மூலமாகவும்... ‘alliswell-aval@vikatan.com’என்ற ஐ.டியில் மின்னஞ்சல் மூலமாகவும் என்னைத் தொடர்பு கொள்ளலாம். பெயர், அடையாளம் தேவையில்லை. இமெயில் முகவரி ரகசியம் காக்கப்படும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism