Published:Updated:

‘‘வெற்றிக்கு அழகு தேவையில்லைனு நிரூபிச்சவ நான்!’’

கலக்கும் கலா மாஸ்டர்வே.கிருஷ்ணவேணி, படங்கள்: தி.ஹரிஹரன்

‘‘வெற்றிக்கு அழகு தேவையில்லைனு நிரூபிச்சவ நான்!’’

கலக்கும் கலா மாஸ்டர்வே.கிருஷ்ணவேணி, படங்கள்: தி.ஹரிஹரன்

Published:Updated:

ரோகினி, ரஞ்சிதா, ராம்கி, அஜித், சூர்யா, விஷால், 'ஜெயம்’ ரவி, சிம்பு, தனுஷ், ஆர்யா, த்ரிஷா... இன்னும் பல முன்னணி நடிகர், நடிகைகளும், டான்ஸ் மாஸ்டர் கலாவின் 'கலா கலாலயா’ நடனப்பள்ளி மாணவர்கள்!

குரூப் டான்ஸராக தன் பயணத்தைத் தொடங்கி, டான்ஸ் மாஸ்டர், தேசிய விருது என்று உச்சம்தொட்டு, இன்று கலைஞர் டி.வியில் 'மானாட மயிலாட’, 'ஓடி விளையாடு பாப்பா’, 'கானா குயில்’ என்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பரபரப்பாக இருக்கும் கலா மாஸ்டருடனான இந்தச் சந்திப்பில், தன் ஆரம்ப கால வாழ்க்கையின் மறக்க முடியாத வலிகளையும், வடுக்களையும் பகிர்ந்தார் கலாக்கா!

‘‘வெற்றிக்கு அழகு தேவையில்லைனு நிரூபிச்சவ நான்!’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''என்னோட பூர்விகம் கேரளா. வளர்ந்ததெல்லாம் ஈரோட்டுல. அங்க எங்கப்பா பிரபலமான சமையல்காரர். எனக்கு அஞ்சு அக்கா, ஒரு தங்கை. எங்கம்மாவுக்கு சின்ன வயசுல டான்ஸ் கத்துக்கணும்னு ஆசையாம். அது நிறைவேறலை. அதனால எங்களையாச்சும் டான்ஸ் கிளாஸ்ல சேர்த்துவிடணும்னு நினைச்சாங்க. ரெண்டாவது அக்கா கிரிஜா ரொம்ப அழகா இருப்பாங்க. அதனால அவங்களை எங்கம்மா 'லலிதா, பத்மினி ட்ரூப்’ல சேர்த்துவிட்டாங்க. அப்படித்தான் நாங்க சென்னைக்கு வந்தோம். அப்படியே சகோதரிகள் எல்லோருமே டான்ஸ் கத்துக்கிட்டோம். சொல்லப்போனா, எங்கம்மா ஆசையைத்தான் நாங்க எல்லாரும் இப்போ நிறைவேத்திட்டு இருக்கோம். என்னைப்போலவே என் சகோதரிகள் லதா, கிரிஜா, ஜெயந்தி, பிருந்தா எல்லோருமே டான்ஸ் மாஸ்டரா இருக்கோம்!

எங்க வீட்ல எல்லாரும் ரொம்ப அழகா இருப்பாங்க... என்னைத் தவிர. அக்கா ஜெயந்தி, 'உதிரிப்பூக்கள்’, 'பூட்டாத பூட்டுகள்’ படத்துல நடிச்சிருக்காங்க. நான் கறுப்பா, குண்டா, குள்ளமா இருப்பேன். குரூப் டான்ஸ்ல ஆடும்போது அதனாலேயே, 'இந்தப் பொண்ணை பின்னாடி அனுப்புங்க’னு சொல்லிடுவாங்க. நானும் எதுவும் சொல்லாம, பின்னாடி போய் நின்னுடுவேன். ஏன்னா, எனக்கு ஆடணும். அவ்ளோதான். எனக்கு டான்ஸ் அவ்வளவு பிடிக்கும். தவிர, அதுல வர்ற பேமன்ட் அந்த நேரத்துல என் குடும்பத்துக்கு அவ்வளவு முக்கியமானதா இருந்துச்சு.

எனக்கு குரு, வழிகாட்டி எல்லாமே ரகு மாஸ்டர்தான். அவர் எப்பவும் என் திறமையைப் பாராட்டி, ஊக்கம் கொடுத்துட்டே இருப்பார். ஒருமுறை ஒரு டான்ஸ் குரூப்ல ஆடினப்போ, அந்தப் படத்தோட டைரக்டர், 'கடைசியா ஆடுற அந்தப் பொண்ணு நல்லா ஆடுதே... முன்னாடி வந்து ஆடச்சொல்லுங்க!’னு சொன்னார். அப்படி முன்னுக்கு வந்தவதான் நான். பிறகு, இயக்குநர் பாலசந்தர் சார்தான் 'புதுப்புது அர்த்தங்கள்' படத்துல என்னை டான்ஸ் மாஸ்டரா அறிமுகப்படுத்தினார். அதுக்குப்பிறகுதான் நான் படிப்படியா முன்னேறி திரைப்படத்துறையில எனக்கான இடத்தைப் பிடிச்சேன்.

நடனத்துல எல்லா நுணுக்கங்களையும் கத்துக்கணும்னு நினைச்சேன். கத்துக்கிட்டேன். டான்ஸ்ல ஏதாவது புதுமையா பண்ணணும்னு வேகத்தில் இருந்தேன். அதுக்கான வாய்ப்பை நிறைய இயக்குநர்கள் வழங்கினாங்க. குறிப்பா, 'புதுப்புது அர்த்தங்கள்’, 'மனசுக்குள் மத்தாப்பு’, 'ரோஜா’ படங்களின் பாடல்கள் எனக்கு நிறைய பாராட்டுகளைக் கொண்டுவந்து சேர்த்துச்சு. எக்கச்சக்க படங்கள் பண்ணினேன். ஆண்கள் நிறைந்த துறையில் ஒரு பெண்ணுக்கு எவ்வளவு வலிகள் ஏற்படுமோ அத்தனையும் அனுபவிச்சேன்.

குறிப்பிட்ட ஒரு படத்துக்கு நான்தான் கொரியோகிராஃப் பண்ணினேன். அந்தப் பாடல் மாநில விருதுக்குத் தேர்வாச்சு. ஆனா, அந்த விருது எனக்குக் கிடைக்கல. வேற ஒருத்தருக்குக் கொடுத்தாங்க. எதிர்த்துக் கேட்கக்கூட விருப்பமில்லாத அளவுக்கு வெறுத்துப் போனேன். என் வாழ்க்கையிலேயே நாம் ரொம்ப மனசு ஒடிஞ்சு போன நாள், அதுதான்.  

‘‘வெற்றிக்கு அழகு தேவையில்லைனு நிரூபிச்சவ நான்!’’

உண்மையான திறமையோட, அர்ப்பணிப் போட உழைக்கிறவங்களுக்கு வாழ்க்கை வலியை மட்டுமே தராது இல்லையா! எனக்கு என் தொடர் ஓட்டம் தந்த முதல் பெரிய அங்கீகாரம், சந்தோஷம் அது... மலையாளப் படமான 'கொச்சுகொச்சு சந்தோஷங்கள்’ படத்துல கொரியோகிராஃப் பண்ணினதுக்காக தேசிய விருது கிடைச்சுது! இந்தப் படத்துக்காக வேலை பார்த்த அனுபவமும் எனக்கு ஸ்பெஷல். '25 நாட்களுக்குள்ள முடிச்சுக் கொடுக்கணும், உங்களால முடியுமா?’னு சந்தேகமா கேட்டாங்க. 'நிச்சயமா முடியும்!’னு சொல்லி அந்தப் பொறுப்பை ஏற்றேன். படத்துக்கான அவார்டு நியூஸ் வெளியான நாள் நான் வீட்டுக்குத் திரும்பினப்போ, எங்க ஹால் நிறைய பொக்கேக்கள். சாபு சார், பிரியதர்ஷன் சார், பி.சி.ஸ்ரீராம் சார், பாலசந்தர் சார், ரவிக்குமார் சார்னு பலரும் வாழ்த்து அனுப்பியிருந்தாங்க. என்னோட உழைப்புக்கான அங்கீகாரத்தை அந்தக் பூக்களோடும், சில துளிகள் கண்ணீரோடும் பருகினேன்!

அதுக்குப் பிறகான என் வெற்றிகள் பலரும் அறிந்ததே. ஸ்டார் நைட் நிகழ்ச்சிக்கான கான்செப்ட்டை முதலில் உருவாக்கினது நான்தான். தமிழ் உள்பட 8 மொழிகளில் 1,000 படங்களும், மாநில விருது மற்றும் தேசிய விருது வாங்கினதோட ஃபிலிம்பேர் விருது, நாட்டியதாரகை விருதுகள்னு மொத்தம் 15 விருதுகளும் இப்போ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்னு... இந்த ஊரறிந்த வெற்றிகளைவிட, நான் ஏறிவந்த பாறைகளை இங்க சொன்னதுக்குக் காரணம் இருக்கு. கடைசி வரிசைக்கு அனுப்பப்பட்ட கலாக்கா, முன் வரிசைக்கு வர்றதுக்குள்ள கடக்க நேர்ந்த போட்டிகள் பல. ஆனா, சோர்ந்து பின் வாங்கியிருந்தா, அந்தக் கடைசி வரிசையும் கிடைக்காமப் போயிருக்கும். வெற்றிக்கு அழகு தேவையில்லைனு என்னால நிரூபிக்க முடியாம போயிருக்கும். மேலும் என் வெற்றிக்கு என் கணவர் மகேஷ் மற்றும் மகன் வித்யூத்தும் உறுதுணையா இருக்காங்க'' என்று சிலிர்ப்புடன் சொன்ன கலாக்கா, நம் அனைவருக்கும் சொல்லும் அறிவுரை...

”பெண்கள் எந்தத் துறையில் இருந்தாலும், உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கிறவரைக்கும் விடாமல் போராடுங்க. திறமைசாலிகளோட வெற்றியை இந்த உலகத்தால தள்ளி வைக்க முடியலாம். ஆனா, ஒருபோதும் தடுக்க முடியாது!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism