Published:Updated:

"ரிட்டையர்மென்ட் வயசுக்குதான்...வாழ்க்கைக்கு இல்ல!”

பொன்.விமலா   படங்கள்: தி.குமரகுருபரன்

"ரிட்டையர்மென்ட் வயசுக்குதான்...வாழ்க்கைக்கு இல்ல!”

பொன்.விமலா   படங்கள்: தி.குமரகுருபரன்

Published:Updated:

சென்னை, வடபழனி சாலை. மழைச் சகதியில் சிக்கி, நகர்வதற்கு முரண்டு பிடிக்கும் சைக்கிளை மாங்கு மாங்கு என மிதித்தவாறே, 'கிளிங்... கிளிங்...’ பெல் ஒலியுடன் ஒருவர் நம் எதிரே வர, 'இவரை எங்கேயோ பாத்த மாதிரி இருக்கே!’ என நம் மனதுக்குள்ளும் ஒரு 'கிளிங்’. சடார் என பிரேக் போட்டுப் பார்த்தால், அட... நம் வெங்கல்ராவ்!

 வெங்கல்ராவைத் தெரிகிறதுதானே?

'தலைநகரம்’ படத்தில் வடிவேலுவை ஜெயிலுக்குள் தள்ளிவிட, ''யாருடா இவன் ஷேவிங் பண்ண கொரங்கு மாதிரியே இருக்கான்...'' என வடிவேலு கேட்க, தான் அணிந்திருந்த ஆடைகள் ஒவ்வொன்றையும் கழற்றி எறிந்து 'உர்ர்ர்ர்’ என முறைத்தவாறே வடிவேலுவை ஒரு மிரட்டு மிரட்டு வாரே... அந்த மொட்டைத்தலை நகைச்சுவை நடிகரேதான். 'ஏபிசிடி’ படத்தில் வடிவேலு கண்டக்டராக நடிக்க, காதிலும் மூக்கிலும் பஞ்சை அடைத்துக்கொண்டு பேருந்தில் ஹாயாக சாய்ந்துகொண்டு பிணமாக நடித்து வடிவேலு வுக்கு பல்பு கொடுப்பாரே... இதோ அவர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழ்த் திரையுலகில் 35 ஆண்டுகள் உழைத்த பின்னும் வெங்கல்ராவை சைக்கிளில் பார்க்க நமக்கு ஆச்சர்யமாக இருந்தது.

''என்னங்க... வாக்கிங் மாதிரி சைக்கிளிங்கா..?!'' என்றோம்.

''அட... நம்ம வாகனமே இதாங்க!' என சைக்கிளை நிறுத்தியவரிடம், தொடர்ந்து பேச்சுக் கொடுத்தோம்.

''இந்த வெங்கல்ராவ் 35 வருஷமா சினிமாவுல சம்பாதிச்சு சொந்தமா வெச்சிருக்குறது, இந்த சைக்கிள் ஒண்ணுதான். சொந்த வீடு, நிலம்னு எதுவும் இல்ல. குடும்பத்துக்கு கஷ்டம் இல்லாம சாப்பாடு போடுறேன். என்னால அவங்களுக்கு செய்ய முடிஞ்சது அது ஒண்ணு மட்டும்தான். சினிமாவுல பெரிய ஆளாகணும்னு கனவோட சென்னைக்கு ரயிலேறி வந்தேன். ஆனா...''

மெதுவாக சைக்கிளை தள்ளிக்கொண்டே வந்தவர், நம்மை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

போதுமான இடவசதி இல்லாத வாடகை வீடு. மற்ற குடித்தனக்காரர்கள் துணி காயப்போட்டது போக எஞ்சியிருந்த ஒரு சின்ன இடத்துக்கு நம்மை அழைத்துச் சென்று பேச ஆரம்பித்தார்.

''ஆந்திர மாநிலம், விஜயவாடா பக்கத்துல ஒரு சின்ன கிராமம்தான் எனக்கு சொந்த ஊர். நான் சின்ன வயசா இருக்கும்போதே எங்கப்பா இறந்துட்டார். என்கூட பிறந்தவங்க மொத்தம் நாலு பேரு. அம்மா கூலி வேலைக்குப் போய்தான் எல்லாரையும் காப்பாத்துனாங்க. அம்மாவோட கூலி, எங்க பசிக்கு பத்தலை. பசிக்குது பசிக்குதுனு வயித்தைப் பிடிச்சுட்டு அழ ஆரம்பிச்சோம். மொதல்ல அக்கா கூலி வேலைக்குப் போச்சு. அப்புறம் நானும் 10 வயசுல எங்கக்காவோட சேர்ந்து கூலி வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டேன். கூலி வேலைனா சும்மா இல்ல... தலையில செங்கல் தூக்கணும். செங்கல் சூளை, கட்டுமான இடங்கள்ல கூலி வேலைனு ஒரு நாளைக்கு 1 ரூபாய், 2 ரூபாய் கூலி கெடைக்கும். சின்ன வயசுல நான் செஞ்ச அந்தக் கஷ்டமான வேலைங்கதான் என்னோட வலிகள எல்லாம் மரத்துப் போக வெச்சது!''

 "ரிட்டையர்மென்ட் வயசுக்குதான்...வாழ்க்கைக்கு இல்ல!”

பெருமூச்சுடனே பேசுகிறார்.  

''அப்பப்ப எங்க ஊர்ல சினிமா ஷூட்டிங் நடக்கும். அதை பார்த்துப் பார்த்து, 'நாமளும் சண்டை கத்துக்கிட்டு பெரியாளா ஆகிடலாம்!’னு கம்பு சுத்துறது, குதிரை ஏறுறதுன்னு ஒவ்வொண்ணா கத்துக்கிட்டேன். எப்படியாவது சினிமா ஸ்டன்ட் குரூப்ல

சேர்ந்துடலாம்னு சென்னைக்கு அலைஞ்சுட்டு இருந்தேன். இதுக்கு நடுவுல எனக்கு கல்யாணமும் ஆகிடுச்சு. 8 வருஷம் அலைஞ்ச பிறகுதான், ஸ்டன்ட் நடிகரா வாய்ப்புக் கெடச்சது. 'தமிழ் தெரியாம எதுக்குடா தமிழ் சினிமாவுக்கு வந்தே?’ன்னு ஆரம்பத்துல நிறைய திட்டு வாங்கியிருக்கேன். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா தமிழ் கத்துக்கிட்டு, ஹீரோக்களோட சண்டை போட ஆரம்பிச்சேன். ரஜினி, கமல், சத்யராஜ், ராமாராவ், மம்முட்டி, மோகன்லால்... ஏன்... அமிதாப்பச்சன் வரைக்கும் எல்லாரோடயும் ஃபைட் பண்ணியாச்சு. பல ஹீரோக்களுக்கு டூப்பும் போட்டாச்சு. ஸ்டன்ட் நடிகனா 25 வருஷத்துக்கு மேல நடிச்சுட்டேன். அப்புறம்  வயசாயிருச்சு. சண்டை எல்லாம் போட முடியல. என்னோட ஒரே மகளையும் கல்யாணம் பண்ணிக் கொடுத்தாச்சு. பேத்திக்கும் கல்யாணம் ஆகி நான் கொள்ளு தாத்தா ஆயிட்டேன்!'' என்றபோது, முகத்தில் புன்னகை முதல் முறையாக.

''ரிட்டையர்மென்ட் வயசுக்குதான்... வாழ்க்கைக்கு இல்லையே..? 60 வயசை தாண்டியாச்சு. ஆனாலும் குடும்பத்துக்கு சோறு போட, தொடர்ந்து உழைச்சுத்தான் ஆகணும். முதல்ல வடிவேலு அய்யாதான் சின்னச் சின்ன காமெடி ரோல் கொடுத்தார். அவருக்கு அடுத்து கஞ்சா கருப்பு சார். இவங்க ரெண்டு பேரும் இல்லைனா, என் சாப்பாட்டுக்கே வழி கிடைச்சிருக்காது. இப்போ காமெடி வாய்ப்புகள்லதான் ஓரளவுக்கு குடும்பம் ஓடுது. என்னைப் போல, சினிமாதான் வாழ்க்கைனு இன்னிக்கும் சென்னைக்கு ஓடி வர்றவங்களைப் பார்க்கும்போது... ஆசையைக் காட்டியே இவங்க ஆயுளைக் குடிச்சுட்டு, 60 வயசுல இவங்களையும் என்னைப்போல விட்டுருமோ சினிமானு மனசுக்குக் கலக்கமா இருக்கும்!'' என்றவருக்குக் கண்கள் கலங்குகின்றன.

 "ரிட்டையர்மென்ட் வயசுக்குதான்...வாழ்க்கைக்கு இல்ல!”

''தயவுசெஞ்சு யாரும் சினிமாவை மட்டும் நம்பி சென்னைக்கு வராதீங்க. சினிமா சிலரை மட்டும்தான் தூக்கிவிடும். ஊர்ல அப்பா, அம்மா, மனைவி, குடும்பம்னு எல்லாத்தையும் விட்டுட்டு இங்க வந்து கஷ்டப்படுற நிறைய பேர் என் கண்ணு முன்னாடி இருக்காங்க. நீங்க உங்க குடும்பத்துக்கு நல்லது பண்ணணும்னா, இருக்குற இடத்துலயே வேலையைப் பாத்து, அவங்களையும் பாத்துக்கோங்கப்பா..!''

  உணர்ச்சிவசப்பட்ட வெங்கல்ராவ் கண்களைத் துடைத்துக்கொண்டு, ''ஷூட்டிங் போக நேரம் ஆயிருச்சுங்க..!'' என்று விடை பெற்றார்.

மாடியில் இருந்து இறங்கி, ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்ட சைக்கிளின் ஸ்டாண்டை தள்ளி மெதுவாக பயணிக்கிறார்... அமிதாப்பச்சன் வரை 'ஃபைட்’ செய்த அந்த 'டூப்’ ஹீரோ!  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism