Published:Updated:

``வாழ்க்கைப் பாடம் படித்தோம்...''

ஆ.மேரி செல்வ இஸ்ரேலியா, படங்கள்: க.சதீஷ்குமார்

``வாழ்க்கைப் பாடம் படித்தோம்...''

ஆ.மேரி செல்வ இஸ்ரேலியா, படங்கள்: க.சதீஷ்குமார்

Published:Updated:

''2015-ல் ஆத்ம திருப்தியோட அடி எடுத்து வைக்கணும்னா, புத்தாண்டை ஒட்டி சமுதாய அக்கறையோட ஒரு முயற்சி எடுக்கணும்னு யோசிச்சோம். அதைத் திட்டமிட்டோம். செயல்படுத்தினோம். இந்தப் புத்தாண்டில், மனசெல்லாம் புதுசா பூத்த மாதிரி இருக்கு!''

 - உணர்ந்து, குளிர்ந்து பேசுகிறார்கள், தஞ்சாவூர், பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி மாணவிகள்!

``வாழ்க்கைப் பாடம் படித்தோம்...''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தஞ்சாவூர் - திருச்சி சாலையில் இருக்கும் செங்கிப்பட்டி அருகே உள்ள, மணியேரிப்பட்டியில் இருக்கும் தொழுநோயாளிகள் மறுவாழ்வு மையத்துக்குச் சென்றவர்கள், புறக்கணிக்கப்பட்ட அந்த மனிதர்களுக்குத் தந்த பேரன்பும், பரிசுகளும் நெகிழ்ச்சி. அது குறித்துப் பேசிய, மாணவியர் தலைவி அமலா, ''எங்க கான்வென்ட் சிஸ்டர்ஸ், உறவுகளால கைவிடப்பட்டவங்க, சிறைக் கைதிகள்னு விளிம்பு நிலை மனிதர்களை அடிக்கடி சந்தித்து ஆறுதலும் அன்பும் தந்துட்டு வருவாங்க. அந்த மாதிரி, நாங்களும் சக மனிதர்களோட நேசத்துக்காக ஏங்குறவங்களை சந்திக்க முடிவு பண்ணினோம். கிறிஸ்துமஸ், புத்தாண்டை ஒட்டி இந்த தொழுநோயாளிகள் இல்லத்துக்குப் போற திட்டத்தை கல்லூரி முதல்வர்கிட்ட சொன்னோம். 'நல்ல விஷயம்!’னு தட்டிக்கொடுத்தாங்க. மாணவிகள் ஒவ்வொருவரும் தங்களோட பங்களிப்பா சிறு தொகை கொடுக்க, 20 ஆயிரம் ரூபாய் சேர்ந்தது. ஆண்கள், பெண்கள்னு இந்த இல்லத்துல இருக்கிறவங்களுக்குப் புத்தாடைகள், உணவுகள், பரிசுகள்னு வாங்கிட்டு, வண்டி ஏறிட்டோம்!'' என்று நிறுத்த, தொடர்ந்தார் பொன்னி.

''இந்தச் சேவையில் எங்க ஒட்டுமொத்தக் கல்லூரியோட பங்களிப்பும் இருந்தாலும், அவங்களோட பிரதிநிதிகளா அதை செயல்படுத்துற புண்ணியம் எங்க 10 பேருக்குக் கிடைச்சது. இங்க வந்து இந்த மனுஷங்களைப் பார்த்தப்போ, ஏன் இவங்களுக்கு இவ்வளவு கஷ்டம்னு கடவுள் மேல கோபம் வருது. இவங்க எல்லோருமே சந்தோஷமா வாழ்ந்தவங்க. வசதியா வாழ்ந்தவங்க நிறைய பேர் இருக்காங்க. எதிர்பாராத இந்த நோயால, இவங்க வாழ்க்கை திடீர்னு வெறுமை ஆயிருச்சு. குடும்பத்தால கைவிடப்பட்டு இங்க தனிமையில இருக்காங்க. யாருக்கும் எப்பவும் என்ன வேணும்னாலும் நடக்கலாம் என்ற வாழ்க்கையோட உண்மையை இங்க உணர்ந்தோம்!'' என்றார் கனத்த உள்ளத்துடன்.

``வாழ்க்கைப் பாடம் படித்தோம்...''

தாரணி பேசும்போது, ''காலேஜ், படிப்பு, மாலை நேரத்துல டியூஷன் எடுக்கிறதுனு ஒரு ஸ்டூடென்ட்டா இத்தனை வருஷம் பொறுப்பா இருந்திருக்கேன். இன்னொரு பக்கம், ஃப்ரெண்ட்ஸோட 'காலேஜ் லைஃப்'பையும் நல்லா என்ஜாய் பண்ணியிருக்கேன். அதில் எல்லாம் கிடைக்காத ஏதோ ஒரு சந்தோஷத்தை, 'உங்களை எல்லாம் பார்க்க, உங்க கூட கதை பேச, விளையாடத்தான் வந்திருக்கோம்!’னு நாங்க சொன்னப்போ, இவங்க முகத்துல பூத்த சிரிப்புல உணர்றேன். எய்ட்ஸ் நோயாளிகள் இன்னிக்கு எல்லோரோடயும் இணைந்து வாழும் சூழல் வாய்ச்சிருக்கு. ஆனா, தொழுநோயாளிகளுக்கு இன்னும் எத்தனை நாள்தான் புறக்கணிப்பை மட்டுமே கொடுக்கப் போறோம் தெரியல. அவங்களை நேர்ல பார்க்க விரும்பலைனா கூட பரவாயில்ல, நம்மால முடிஞ்ச உதவிகளைச் செய்யலாம்!'' என்கிறார் கோரிக்கையாக.

``வாழ்க்கைப் பாடம் படித்தோம்...''

தொழுநோயாளிகளும் மனிதர்கள்தான், அவர்களுக்கும் அன்பு அத்தியாவசியத் தேவைதான் என்பதை வலியுறுத்திய 'மைம்’ நிகழ்ச்சி நடத்திய மாணவிகள், ''தெரிஞ்சோ தெரியாமலோ எங்க வசனம் கூட அவங்களைக் காயப்படுத்திடக் கூடாதுனுதான், இந்த மௌன மொழி நாடகத்துக்கு ஏற்பாடு செஞ்சோம்!'' என்றனர் அக்கறையுடன்.

''மனித வாசனையே கொஞ்சம் கொஞ்சமா மறந்து போயிருந்தோம். இந்த இல்லத்தோட சுவர்கள்தான் எங்க உலகத்தோட எல்லையா இருந்தது. இன்னிக்கு இந்தப் பொண்ணுங்க வந்து எங்க பக்கத்துல உட்கார்ந்து பேசினதும், சிரிச்சதும், எங்களை சிரிக்க வெச்சதும், பரிசுகள் வழங்கினதும், நிகழ்ச்சிகள் நடத்துனதும்... நாங்க அனுபவிச்ச இத்தனை நாள் புறக்கணிப்புக்கான மருந்தா இருக்கு. இவங்க எல்லோரும் நல்லா இருக்கணும்!'' என்றார்கள், மறுவாழ்வு மையவாசிகள் நெகிழ்ந்த நெஞ்சத்துடன்!

இந்தப் பெண்களின் முயற்சிக்கு லைக், ஷேர் மட்டும் போதாது. சந்தோஷமாக வைக்கலாம் ஒரு சல்யூட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism