Published:Updated:

ஆல் இஸ் வெல்! - 10

நீங்க சரியாத்தான் பேசுறீங்களா?!டாக்டர் அபிலாஷா

"என்னங்க... அடுத்த வாரம் உங்க அண்ணன் மகன் கல்யாணம் வருதே... அதுக்கு ஒரு நல்ல பட்டுப்புடவையா வாங்கிக் கொடுங்க...’'

ஆல் இஸ் வெல்! - 10

"ந்தா.... உன் அண்ணன் மகன் கல்யாணத்துக்கு எனக்கு ஒரு பட்டுப்புடவை எடுக்கணும்... நாளைக்கே வாங்கிட்டு வா...’'

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த இரண்டு வாக்கியங்களும் ஒரே விஷயத்தைத்தான் சொல்கின்றன. ஆனால், சொல்லும் வகையில் வித்தியாசப்படுகின்றன. முதலில் உள்ளது, 'குட் கம்யூனிகேஷன்' (Good Communication) என்கிற சரியான தகவல்தொடர்பு. இரண்டாவது, 'பேட் கம்யூனிகேஷன்'  (Bad Communication)  என்கிற தவறான தகவல்தொடர்பு!

இந்தத் தகவல்தொடர்புத் திறன் (Communication Skill) பற்றி அனைவரும் அறிய வேண்டியது அவசியம்! 'கம்யூனிகேஷன் ஸ்கில்னா இங்கிலீஷ் நல்லா பேசுறதுதானே?’ என்று நினைக்க வேண்டாம். இது, ஒருவரிடம் சொல்ல நினைக்கும் விஷயத்தை வார்த்தை மூலமாகவோ, உடல்மொழி மூலமாகவோ, அல்லது இரண்டின் மூலமாகவோ 100% சரியாகச் சொல்வது. ஆனால், இன்று 100-ல் 95 பேர் சரியான தகவல்தொடர்புத் திறன் இல்லாமல், அதனாலேயே பல சிக்கல்களை வரவழைத்துக் கொள்கிறார்கள்; மற்றவர்களுக்கும் சிக்கல்கள் கொடுக்கிறார்கள்.

ஒருவர் மற்றவரிடம் தான் சொல்ல நினைக்கும் விஷயத்தைச் சொல்லும்போது, என்ன சொல்கிறோம் என்பதுடன், அதைச் சொல்லும் தொனி, பேச்சின் சத்தம், உடல்மொழி, மற்றவர் அதை புரிந்துகொள்ளும் விதம் என அனைத்தையும் யோசிக்க வேண்டும். இல்லையென்றால், நாம் சொல்ல நினைக்கும் விஷயம் மற்றவரிடம் தவறான புரிதலை ஏற்படுத்தி, அந்த உறவில் அசௌகரியத்தைக் கொடுக்கும். அது பெற்றோர்  குழந்தை, கணவன்  மனைவி, அலுவலகத்தில் சக ஊழியர்கள் என்று யாராகவும் இருக்கலாம்.

தகவல் தொடர்பில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று, 'இன்டர் பெர்சனல்' (Inter personal)  என்று சொல்லக்கூடிய இருவருக்கு இடைப்பட்ட தகவல்தொடர்பு. மற்றொன்று, 'இன்ட்ரா பெர்சனல்' (Intra personal) என்று சொல்லக்கூடிய, தனக்குத்தானே கொள்ளும் தகவல்தொடர்பு. இதில் இரண்டாவது வகை, கொஞ்சம் நுணுக்கமானது. இது சரியாக அமைந்துவிட்டாலே, முதல் வகையும் சரியாக அமைந்துவிடும்.

எப்படி?

ஒரு விஷயத்தை நீங்கள் பிறரிடம் கேட்கும் முன்னோ, சொல்லும் முன்னோ, அதுகுறித்து கோப வார்த்தைகளை உமிழும் முன்னோ, அந்த விஷயத்தைப் பற்றி உங்களிடம் நீங்களே பேசிக்கொள்ள வேண்டும். இது சரிதானா, இதை நான் அவரிடம் கேட்டால் சரியாகப் புரிந்து கொள்வாரா, அவருக்கு இதில் வேறு எந்த மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்கும் வராதபடி இந்த விஷயத்தை எப்படிப் பேசுவது, இந்த வார்த்தையை நான் பயன்படுத்தினால் அவர் காயப்படுவாரா... இப்படி உங்களுடன் நீங்களே பேசி ஒரு தெளிந்த முடிவுக்கு வந்த பின், சம்பந்தப்பட்டவருடன் பேசும்போது அந்த உரையாடல் சரியாக இருக்கும்.

'நான் ரொம்ப ஓபன் டைப். மனசுல எதையும் வெச்சுக்காம பேசிடுவேன்’ என்பவர்கள் பலர். இதுகூட சமயங்களில் பிரச்னைகளை உண்டாக்கும். எனவே, அவர்களுக்கும் தேவை, 'இன்ட்ரா பெர்சனல் கம்யூனிகேஷன்'.  

தகவல் தொடர்பில் இன்னும் இரண்டு முக்கிய விஷயங்கள் இருக்கின்றன. சொல்வது ஒன்று, சேர்வது ஒன்றான 'மிஸ்கம்யூனிகேஷன்'  (Miscommunication) மற்றும் சொல்ல நினைப்பதை சொல்ல முடியாமல்போகும் 'லாக் கம்யூனிகேஷன்' (Lack Communication) . இதற்கும் 'இன்ட்ரா பெர்சனல் கம்யூனிகேஷன்' கை கொடுக்கும்.

எனக்கு மெயில் மூலமாக  (alliswell-aval@vikatan.com) வாசகிகள் தெரிவித்திருந்த பிரச்னைகள், பெரும்பான்மையாக இந்த கம்யூனிகேஷன் பிரச்னையால் வந்தவையாகவே இருந்தன.

சமீபத்தில் என்னிடம் ஒரு கணவன், மனைவி வந்திருந்தார்கள். இருவருக்குமான உறவு இறுகிப் போயிருந்ததால், இயல்பான உரையாடல் என்பதே இல்லாமல் போயிருந்தது. இதனால், தாங்கள் நினைப்பதை பரஸ்பரம் சரியாகச் சொல்லாமல் போக, இருவருமே ஒருவரை ஒருவர் தவறாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டே வந்து, ஒரு கட்டத்தில் அது அவர்கள் பந்தத்தையே விழுங்கும் அளவுக்கு வளர்ந்திருந்தது.

'விவாகரத்துக்கு உங்ககிட்ட காரணங்களே இல்ல. உங்க பிரச்னை... லாக் கம்யூனிகேஷன். ஒருத்தருக்கு ஒருத்தர் சரியா பேசிக்காததுதான். நீங்க நினைக்கிறதை நீங்க சொன்னாதான் துணைக்குப் புரியும். உங்க மனசுக்குள்ள புகுந்து கண்டுபிடிக்க அவங்க என்ன மந்திரவாதியா? அதனால உங்களுக்கான பிரிஸ்கிரிப்ஷன், மனசுவிட்டு, வாய்விட்டு, சரியா பேசப் பழகுங்க!'' என்று இருவரிடமும் தனித்தனியாகச் சொல்லி அனுப்பினேன்!

சிலர், தான் மிகச் சரியாகப் பேசுவதாக தாங்களாகவே நினைத்துக் கொள்வார்கள். சிலர், தன்னை ரிசர்வ்டு டைப் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் முனைப்பில் அவசியமான பேச்சையும் சுருக்கிக் கொள்வார்கள். சிலர், எப்போதும் மற்றவர்கள் புண்படும்படியே பேசி, தன்னை ஸ்ட்ரைட் ஃபார்வேர்டு என்று சொல்லிக்கொள்வார்கள். சிலர், தன் தேவைகளைத் தெளிவாகக் கேட்கத் தெரியாதவர்களாக இருப்பார்கள். எனவே, ஒவ்வொருவரும் தகவல்தொடர்புத் திறனில் தான் எந்தளவுக்கு சரியாக, தவறாக இருக்கிறோம் என்பதை சுயமதிப்பீடு செய்து, சரிசெய்துகொள்ள வேண்டியது அவசியம்!

ரிலாக்ஸ்...

தொகுப்பு: சா.வடிவரசு

குழந்தைகளுக்குப் பேசக் கற்றுக்கொடுங்கள்..!

தகவல்தொடர்பு பற்றி சமீபத்தில் உலகளவில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், 7 - 14 வயது வரை உள்ள குழந்தைகளில் மூன்றில் இருவருக்கு எங்கே, எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதில் பிரச்னை இருப்பதாகவும்... அதே 7 - 14 வயது வரை உள்ள குழந்தைகளில் 40% பேர் சரியான தகவல்தொடர்புத் திறன் இல்லாத காரணத்தால் மருத்துவர்களிடம் அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்றும்... சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் உள்ள குழந்தைகளில் 65% பேர் சரியாகப் பேசத் தெரியாமலும், புரிந்துகொள்ளத் தெரியாமலும் இருக்கிறார்கள் என்றும்... 47% பேரை எதிர்பார்த்த தகுதிகள் இல்லாமல்தான் நிறுவனங்கள் வேலைக்கு எடுத்துவருகின்றன என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

பெற்றோர்கள், குழந்தைகளுக்குச் சரியான தகவல்தொடர்பைக் கற்றுக்கொடுங்கள். நேரம் ஒதுக்கி அவர்களுடன் நிறைய பேசுங்கள். வார்த்தைப் பிரயோகங்களைத் திருத்துங்கள். பேச்சின் இடையே சின்னச் சின்னக் கேள்விகள் கேளுங்கள். ஒருபோதும் குழந்தைகள் முன்பு தவறான தகவல்தொடர்பில் ஈடுபடாதீர்கள். நாளை ஒரு பெரிய நிறுவனத்திலோ, மேடையிலோ, களத்திலோ உங்கள் பிள்ளை நிற்க, குட் கம்யூனிகேஷனும் முக்கியம் என்பதை மறக்காதீர்கள்!

தேவையும்... தேவையற்றதும்!

யோசித்தல், கேட்டல், பேசுதல், உடல்மொழி... இந்த நான்கும் தகவல்தொடர்பில் மிக முக்கியமானவை. எதற்கெடுத்தாலும் சிடுசிடுப்பது, மிகையான உடல்மொழி, சொல்ல நினைத்ததை தவறாகச் சொல்வது, எங்கே தவறாகச் சொல்லிவிடுவோமோ என்ற பயத்தில் சொல்ல வேண்டியதைச் சொல்லாமலே விடுவது... இவை நான்கும் தேவையற்றவை.

இது உங்களுக்காக!

வாசகிகளே! உங்களது பர்சனல் பிரச்னைகளுக்கு தீர்வு காண 'ஆல் இஸ் வெல், அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை2’ என்ற முகவரியில் கடிதம் மூலமாகவும்... ‘alliswell-aval@vikatan.com’ என்ற ஐ.டியில் மின்னஞ்சல் மூலமாகவும் என்னைத் தொடர்பு கொள்ளலாம். பெயர், அடையாளம் தேவையில்லை. இமெயில் முகவரி ரகசியம் காக்கப்படும்.