Published:Updated:

அத்துவானக் காட்டில் ஓர் அருங்காட்சியகம்!

ஏலகிரியில் 74 வயது பெண்மணியின் சாதனைபிரேமா நாராயணன், படங்கள்: ச.வெங்கடேசன்

அத்துவானக் காட்டில் ஓர் அருங்காட்சியகம்!

ஏலகிரியில் 74 வயது பெண்மணியின் சாதனைபிரேமா நாராயணன், படங்கள்: ச.வெங்கடேசன்

Published:Updated:

டல்மட்டத்திலிருந்து சுமார் 1,400 மீட்டர் உயரத்தில் இருக்கும் ஏலகிரி மலை... 14 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து சென்றபிறகு வருகிறது நிலாவூர் கிராமம். பனி கவிழ்ந்து ஊரையே போர்த்தியிருக்க... ஸ்வெட்டர், குல்லாய், கம்பளி சகிதம் மக்கள் நடமாட்டம். புத்தாண்டு, பொங்கல் சமயம் என்பதால் சுற்றுலா பயணிகள் சுறுசுறுப்பாக வலம் வந்துகொண்டிருக்க, 'சாவித்ரி நேரு மியூசியம்’ எங்கே இருக்கிறது என்று ஆட்டோ டிரைவரை விசாரித்து, இடத்தைக் கண்டுபிடித்தோம்.

அத்துவானக் காட்டில் ஓர் அருங்காட்சியகம்!

வழிநெடுகிலும் ரிசார்ட்களும் ஹோட்டல்களுமாய் கடந்து செல்ல... நீண்ட மலைப்பாதையின் முடிவில் தெரிகிறது அந்த ஒற்றை வீடும், அதன் இரும்புக் கதவுகளும். கேட் மூடியிருக்க, மேலே இருக்கும் 'சாவித்திரி நேரு யுனிக் மியூசியம்’ என்ற இரும்பு ஆர்ச் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. ரோஜா, முல்லை, சாமந்தி, வெற்றிலை, அவரை, கத்திரி, நெல்லி என்று செடிகளும் கொடிகளும் மரங்களும் சூழ்ந்த பெரிய தோட்டத்தின் நடுவே அழகிய இல்லம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிவா என்ற பணியாளர் வந்து கதவைத் திறக்க, பழுப்பும் கறுப்புமாக மூன்று நாய்கள் அணிவகுத்து நிற்க, லேசான பயத்துடனேயே நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டோம். வெகுநாள் பழகியவர் போல் நம் கைகளைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்ற அந்த 74 வயது பெண்மணிதான் சாவித்திரி நேரு. பல ஆண்டுகளாக, அரிதான ஓர் அருங்காட்சி யகத்தை ஒற்றைப் பெண்மணியாகக் கட்டிக் காத்துவரும் கம்பீரம், அவருடைய தோற்றத்தில் மிளிர்கிறது!

அத்துவானக் காட்டில் ஓர் அருங்காட்சியகம்!

குளிருக்கு இதமாக சூடான காபியுடன் நம்மை உபசரித்த சாவித்திரி அம்மா, ''நிம்மி, ரோஸி, பிளாக்கிங்கிற இந்த மூணு நாய்கள், எனக்கு உதவிக்கு இருக்கிற இந்த சிவா, அப்புறம் நான் இந்த அஞ்சு பேர்தான் இங்கே!

பூர்விகம் தமிழ்நாடுன்னாலும், பர்மாவில் பிறந்து வளர்ந்தவங்க. கூடப் பிறந்த சகோதரிகள் எல்லாம் சென்னையில் இருக்காங்க. அவர் என்னை விட்டுப் போய் ஆறு வருஷமாச்சு!'' என்று, சுவரில் தொங்கும் கணவர் நேருவின் புகைப்படத்தைக் காட்டுகிறார்.

வீட்டை ஒட்டிய அடுத்த கட்டடம்... மியூசியம். 1,800 சதுர மீட்டர் பரப்பளவில் மூன்று தளங்களில், கண்ணாடி ஷெல்ஃபுகளுக்குள் விரிந்து கிடக்கின்றன அவர்களின் காலப் பொக்கிஷங்கள். இதை நிறுவியவர், கணவர் ஆர்.கே.நேரு. வடக்கு ரயில் வேயில் பணியாற்றியவர். தன்னுடைய 84 வயது வரை இந்த மியூசியத்துக்காகவே, உழைத்தவர்.

பழங்காலத்து நாணயங்கள், பலநாட்டு நாணயங்கள், கரன்சிகள், அனைத்து நாடுகளும் அந்தக் காலத்திலிருந்து வெளியிட்ட தபால்தலைகள் (3டி ஸ்டாம்புகளும் அடக்கம்) என்று தொடங்கி, களிமண் பொம்மைகள், மரப்பொம்மைகள், விசிறி வகைகள், நகைகள், உடைகள், தீப்பெட்டி லேபிள்கள், கார் மாடல்கள், பிளேன் மாடல்கள், கிரிக்கெட் பந்து (ஆகச் சிறிய சைஸில் இருந்து ஆகப் பெரிய சைஸ் வரை), கபில்தேவ் கையெழுத்திட்ட கிரிக்கெட் பந்து, மிகப் பழமையான இத்தாலியன் சீட்டுக்கட்டு, வாத்தியக் கருவிகள் (உலகத்திலேயே மிக மிகச் சிறிய மவுத் ஆர்கன்), 1,000 ஆண்டுகள் பழமையான சீன இசைக்கருவி, மனித, மிருக முகமூடிகள்... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்! காலச்சக்கரத்தில் நம்மை உட்காரவைத்து, அப்படியே 100 ஆண்டுகளுக்குப் பின்னே அழைத்துச் செல்லும் களஞ்சியம்!

அத்துவானக் காட்டில் ஓர் அருங்காட்சியகம்!

அப்பப்பா... எவ்வளவு சேகரிப்புகள்! உலகிலேயே மலையின் மீது இருக்கும் மியூசியம் என்பதுடன், தனி ஒரு மனிதர் நடத்தும் மியூசியம் என்பதால் சாதனைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது இந்தக் காட்சியகம்.

"ரெண்டு பேருமே பர்மாலதான் படிச்சோம். படிக்கிற காலத்தில் எல்லாப் பசங்களையும் போல... சோடா பாட்டில் மூடிகள், கோலிகுண்டுகள், தீப்பெட்டி லேபிள்கள், ஸ்டாம்ப் எல்லாம் சேகரிச்சிருக்கார். அந்த ஆர்வம்தான் இன்னிக்கு இந்த மியூசியமாக நிக்குது.

அவர் ரயில்வே எலெக்ட்ரிகல் இன்ஜினீயர். நான் எம்.ஏ. எம்.எட் முடிச்ச ஸ்கூல் டீச்சர். பல இடங்களுக்குப் பயணம் செய்திருக்கோம். அங்கே கிடைக்கறதை எல்லாம் சேகரிச்சு, முதலில் சென்னையில் நாங்க இருந்த வீட்டிலேயே, அலமாரிகளில் அடுக்கி வைக்க ஆரம்பிச்சோம். அவர் ரிட்டையர் ஆனபிறகு, 2001-லதான் ஏலகிரிக்கு வந்தோம். எப்போதோ வாங்கிப்போட்ட ஒரு ஏக்கர் மனை இருந்தது. அதில் வீடும் மியூசியமும் தனித்தனியா பிளான் பண்ணி கட்டினவரும் அவர்தான். அப்பப்போ மாணவர்கள், வெளிநாட்டுக்காரங்க, சுற்றுலாப் பயணிகள் வர்றாங்க. யார்கிட்டேயும் எந்தக் கட்டணமும் வசூலிக்கிறதில்லை. எங்க ரெண்டு பேரோட பென்ஷன் மூலமாதான் பராமரிக்கிறேன். வயசாயிட்டதால முன்னே மாதிரி முடியலம்மா!'' என்றபடி, மெதுமெதுவாக ஏறி மூன்றாவது மாடிக்கும் வருகிறார்.

அத்துவானக் காட்டில் ஓர் அருங்காட்சியகம்!

ஆக முதலில் வந்த தொலைக்காட்சிப் பெட்டி, இஸ்திரிப்பெட்டி, ரேடியோ, கிராமபோன், டைப்ரைட்டர் என்று பழங்காலத்தைக் கண்முன் நிறுத்தும் பொருட்கள்... பேனாவில் ஒரு 100 வகை, ரப்பர், ஷார்ப்னர், சீப்பு, துப்பாக்கி... என்ற வரிசையில் பேன்சீப்பைக் கூட விட்டுவைக்கவில்லை இவர்கள். இடம் இல்லாமல் கீழே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொருட்களும் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.

மியூசியத்தைச் சுற்றிக் காட்டி முடித்து இறங்கும் போது, கண்கலங்கி நெகிழ்கிறார் சாவித்திரி.

''இப்போகூட, 'இந்தாங்கம்மா, நம்ம வீட்டுல சும்மாதான் கிடந்தது... உங்ககிட்ட கொடுத்தா நாலு பேரு பார்ப்பாங்க... மத்தவங்களுக்கு உதவியா இருக்கும்’னு சொல்லிகிட்டு எத்தனையோ பேர் தங்களிடம் இருக்கிற பழங்காலத்துப் பொருட்களைக் கொண்டு வந்து கொடுக்கிறாங்க. என்னால முடிஞ்சவரை அவர் செய்த மாதிரியே எந்த லாபத்தையும் எதிர்பார்க்காம, எந்த விளம்பரமும் இல்லாம, இந்த கலெக்‌ஷனை சமூகத்துக்குப் பயன்படுற விதத்துல பராமரிச்சுட்டு இருக்கேன். ஆனா, எனக்கு அப்புறம் யார்ங்கிற கேள்விதான் பெரும் பாரமா அழுத்திட்டு இருக்கு!

கணவரும் நானும் உயிர் போல கட்டிக் காத்த இந்தப் பொக்கிஷத்தை, எந்தவித லாபநோக்கமும் இல்லாம பொறுப்பா பார்த்துக்கக் கூடிய, சமூக சேவை செய்ற மனப்பாங்கோடு, எடுத்து நடத்தக்கூடிய நல்ல உள்ளங்களை தேடிக்கிட்டிருக்கேன்!''

தகுதியான நபருக்காக... ஒற்றை வீட்டில் காத்திருக்கிறார் அந்த லட்சியப் பெண்மணி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism