Published:Updated:

விளையாட்டா கத்துக்கலாம்... வாழ்க்கையை!

பொன்.விமலா, படம்: குரூஸ் தனம்

விளையாட்டா கத்துக்கலாம்... வாழ்க்கையை!

பொன்.விமலா, படம்: குரூஸ் தனம்

Published:Updated:

''இங்க பெரும்பாலானோர் தங்களோட படிப்புக்கு ஏத்த வேலை செய்றதில்ல. அதேபோல, வேலையில் இருக்கிறவங்க பலரும் அந்த வேலைக்குத் தகுதியானவங்களா இருக்கிறதில்ல. இதுக்கெல்லாம் அடிப்படை காரணம், நம் கல்விமுறைதான்னு பல்வேறு ஆய்வறிக்கைகள் சொல்லுது!''

- தைரியமான முன்னுரை கொடுக்கிறார் கல்பனா மூர்த்தி!

'எட்சிக்ஸ் பிரெய்ன் லேப் பிரைவேட் லிமிட்டெட் (Edsix brain lab private Ltd)  என்னும் தனியார் நிறுவனத்தின் இணை நிறுவனரான கல்பனா, விளையாட்டு மூலமாக அறிவாற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் 500-க்கும் அதிகமான கேம்ஸ்களை உருவாக்கி, அவற்றை ஆய்வு செய்து, அதன் மூலம் தன் நிறுவனம் பல்வேறு விருதுகளைப் பெறுவதற்கு தானும் காரணமாக இருந்திருக்கிறார். கடலூரில் வசிக்கும் அவரிடம் பேசினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விளையாட்டா கத்துக்கலாம்... வாழ்க்கையை!

''இன்னிக்கு பல பட்டதாரிகளுக்கு திறமையைவிட, மதிப்பெண் அல்லது சிபாரிசு அடிப்படையிலதான் வேலை கிடைக்குது. மதிப்பெண் அடிப்படையில் வேலை வழங்குவதில் என்ன தப்புனு தோணலாம். இந்த மார்க் அடிப்படையிலான கல்வி முறை, மாணவர்களை இயந்திரத்தனமா மாத் திட்டு இருக்கு. இதனால விழுந்து விழுந்து மனப்பாடம் பண்ணினதை, வேலையில் எப்படி அப்ளை செய்றதுனு தெரியாம திணறுறாங்க. குறிப்பிட்ட ஒரு துறையைத் தேர்ந்தெடுத்துப் படிச்சிருந்தாலும், அதே துறையில வேலையில் சேர்ந்திருந்தாலும், அந்த நிறுவனம் அவங்களுக்கு தனிப் பட்ட வகையில பயிற்சி தர வேண்டியிருக்கே... அதுக்குக் காரணம் என்ன? அடிப்படை கல்வியும் அதைக் கற்றுத் தரும் விதமும் கோளாறுடன் இருக்குறதுதான். இதை எப்படி மாத்துறதுன்னு யோசிச்சப்பதான், 'கேம்ஸ்’ என்ற ஐடியா 'க்ளிக்' ஆச்சு. அதைக் குழந்தைகளிடம் இருந்து ஆரம்பிக்கிறதுதான் சரியா இருக்கும்னு முடிவு பண்ணின அதேநேரத்துல, அது அவங்களுக்கு எந்த வகையிலும் சுமை ஆகிடக் கூடாதுனு முடிவெடுத்தோம்!'' என்ற கல்பனா, அதை செயல்படுத்திய விதத்தைப் பகிர்ந்தார்.

''ஒரு விஷயத்தைப் பாடமா சொல்லிக் கொடுத்தா, கண்டிப்பா அதுல ஆர்வம் காட்டமாட்டாங்க. அதுவே, அவங்களுக்குப் பிடிச்ச விளையாட்டுக்குள்ள புகுத்தி சொன்னோம்னா, நல்லா கவனிப்பாங்க. இப்படி அறிவாற்றல் திறனை, விளையாட்டின் மூலமா மேம்படுத்தும் வகையிலான கேம்ஸ்களை உருவாக்கினோம். ஆரம்ப கட்டமா, அருகில் இருக்கும் சில பள்ளி கள்ல அறிமுகப்படுத்தினோம். கிடைச்ச வரவேற்பைத் தொடர்ந்து, அடுத்தகட்ட முயற்சியா மேலும் பல பள்ளிகளை அணுகினோம்.

பள்ளிகள் மட்டுமில்லாம, கல்லூரி மாணவர்கள், வேலைக்குப் போறவங்கனு பல தரப்பைச் சேர்ந்த 15 ஆயிரம் பேர்கிட்ட இந்த கேம்ஸ்களை பயன்படுத்தச் சொல்லி, அதன் முடிவை அவங்ககிட்ட கேட்டுப் பெற்றோம். கூடிய சீக்கிரம் இணையத்தில் சந்தா வசதியுடன் இந்த கேம்ஸ்கள் கிடைக்க வழி செய்யப்போறோம். இது, வேலைக்குத் தகுதிப்படுத்தும் முயற்சி மட்டுமில்ல. வங்கிப் படிவங்களை நிரப்பத் தெரியாதவங்க, ஏ.டி.எம்ல பணம் எடுக்கத் தெரியாதவங்கனு எல்லோருக்குமானதுதான் இந்த கேம்ஸ்!'' என்ற கல்பனா, தன் குழுவைப் பற்றிச் சொன்னார்.

''எங்க நிறுவனர் சரவணன் சுந்தரமூர்த்தி, சிறப்பான வழிகாட்டி. நாங்க மொத்தம் 11 பேர் கொண்ட குழுவா இந்த புராஜெக்ட்டை செயல்படுத்துறோம். இதில் கேம்ஸ்களை வடிவமைக்கிறது என்னோட வேலை. வின்னர்ஸ் ஆஃப் ஹாட் 100 டெக்னாலஜி, பெஸ்ட் ஸ்டார்ட் அப் அவார்ட், சிஐஐ ஸ்டார்டர்பிரனர்ஸ் வழங்கும் மக்கள் விருது, அசிஸ்ட் வேர்ல்டு ரெக்கார்ட், கணினி திறனறி விருது, டெக்4 இம்பாக்ட் அக்ஸிலரேட்டர் புரோகிராம் வெற்றியாளர்னு... பல விருதுகளை எங்க நிறுவனம் வாங்கியிருக்கு!''

அமைதியான குரலில் பட்டியலை முடித்தார் கல்பனா.

எம்.எஸ்ஸி., எம்.ஃபில்., கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரியான கல்பனா, இந்தத் துறைக்கு வருவதற்கு முன் ஒரு கல்லூரியில் ஆறு வருடங்கள் துறைத்தலைவராகப் பணியாற்றியவர். தன் புதிய முயற்சிக்காக அந்த வேலையை விட்டு வந்தவர், தற்போது தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார், சமூக அக்கறைகொண்ட இந்தக் களத்தில்!

''நாங்க பயிற்சி தந்த குழந்தைகள் கிட்ட எங்க உழைப்புக்கான பலனைப் பார்க்கும்போது ஏற்படுற சந்தோஷமும் பெருமையும்தான், எங்க முன் நீண்டு இருக்கும் இந்தப் பாதையில் உற்சாகம் குறையாமல் முன்னேற வைக்குது!''

விடை கொடுத்து, தன் கணினியில் கண்கள் பதிக்கிறார் கல்பனா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism