''சுவருக்கும் காது உண்டு. அப்படி என்றால் கதவுக்கு? கதவுக்கும்தான்! கதவுக்கு கண், காது, முகம் இருந்து, அது வாயைத் திறந்து பேச ஆரம்பித்தால்... எத்தனை எத்தனையோ கதைகளைத் தனக்குள்ளே வைத்துத் தவித்துக்கொண்டிருக்கும் அந்தக் கதவுகளுக்கு பேச ஒரு சந்தர்ப்பம் கொடுத்தால்... எத்தனை ரகசியங்கள் வெளியே வரும்? நமக்குத் தெரியாத எத்தனை சங்கதிகளை அது சொல்லும்?! அதுதான் 'துவாரம்’!''
கண்களே பாதி பேசிவிடுகின்றன வாணி கணபதிக்கு. இந்தியாவின் முன்னணி நடனக் கலைஞர்களில் ஒருவர்!


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பிப்ரவரி 6-ம் தேதி சென்னையில் நடக்க விருக்கும் 'துவாரம்’ எனும் தன்னுடைய நடன நிகழ்ச்சிக்கான வேலைகளில் பரபரப்பாக இருந்தவரைச் சந்தித்தோம்!
''ஏழு வயதில் நான் அரங்கேற்றம் செய்ததில் இருந்து, சென்ற வருடம் வரை எனக்குப் பாடியது, என் அம்மாதான். ஹைதராபாத்தில் ஒரு நடன நிகழ்ச்சியை முடித்துவிட்டு, ஓட்டல் அறையில் தங்கியிருந்தபோது, காலையில் ஆறு மணிக்கு விழித்தவுடன் அம்மாவிடம் கேட்டேன்... 'கதவு கதை சொன்னால் எப்படி இருக்கும்?’! என் நடன நிகழ்ச்சிக்கு நல்ல கான்செப்ட் என்று அம்மாவுக்கும் அது பிடித்திருந்தது. 'துவாரம்’ என்று அதற்குப் பெயரும் வைத்தோம். பிறகு, அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் பிஸியானதில் இந்த ஐடியாவை மறந்து போனோம்.
ஒரு வருடத்துக்கு முன் உடல் நலக்குறைவால் அம்மா இறந்துவிட, அவரின் பிரிவால் அறைக்குள்ளேயே கிடந்தபோதுதான் 'துவாரம்’ கான்செப்ட் மீண்டும் நினைவுக்கு வந்தது. அதற்கான வேலைகளில் இறங்கினேன். சத்ய நாராயண ராஜுவை தொடர்புகொண்டு கொரியோகிராஃபி செய்துதரக் கேட்டேன். இருவரும் சேர்ந்து பணியாற்ற ஆரம்பித்தபோது, அவரின் ஆர்வமும் அர்ப்பணிப்பும் அவரையும் என்னுடன் நடனத்தில் இணைத்துக்கொள்ளத் தோன்றியது. ஒரு ஆண் நடனக் கலைஞரோடு இணைந்து ஆடுவது இது எனக்கு முதல் முறை!''
முதுகைச் சாய்த்து அமர்ந்து வசதி செய்து கொண்டு தொடர்ந்தார்.

''துவாரம் நிகழ்ச்சியில் கோயில் கதவு, வீட்டுக் கதவு, அரண்மனைக் கதவு, கோட்டைக் கதவு என பல வகை துவாரங்களை பார்வையாளர்களுக்கு நடனத்தில் காட்ட இருக்கிறோம். அவை சொல்லும் கதைகளே, நடன நிகழ்ச்சி. மஹாபாரதம், புராணங்கள், வரலாறு முதல் இன்றைய நிகழ்வுகள் வரை எல்லாம் பேசும் இந்த துவாரம், பரதம் தெரிந்தவர்களுக்கு மட்டுமான நிகழ்ச்சி அல்ல. அனைவரும் பார்த்துப் புரிந்து ரசிக்கும்படி வடிவமைத்திருக்கிறோம். தமிழ், தெலுங்கு, கன்னடம், சம்ஸ்கிருதம், ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழிகளின் கதம்பப் பாடல்கள் இதன் இன்னொரு சிறப்பு!'' எனும் வாணியின் பொழுதுபோக்கு, இன்டீரியர் டிசைனிங். ஆனால், 'துவாரம்’ ஆரம்பித்ததும் அதைக் கொஞ்சம் நிறுத்தி வைத்திருக்கிறாராம்.
''கடந்த ஜூன் மாதம் பெங்களூருவில் முதல் 'துவாரம்’ நிகழ்ச்சி நடைபெற்றபோது, பார்வையாளர்கள் பெரும்பான்மையாக பரதம் தெரியாதவர்கள், வட இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர். ஆனால், அனைவரும் புரிந்துகொண்டு, கைதட்டி, ரசித்துப் பாராட்டியதுதான் எங்களின் பெரும் வெற்றி'' என்ற வாணியின் இந்த நடன நிகழ்ச்சி, ஏற்கெனவே மும்பை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடந்திருக்கின்றன.
''மும்பையில் 'துவாரம்’ நடத்தி முடித்திருந்த வேளையில், ஹைதராபாத் தியேட்டர் ஃபெஸ்டிவலுக்காக அணுகினார்கள். பொதுவாக தியேட்டர் ஃபெஸ்டிவல்களில் நடனத்துக்கு வேலை இல்லை; நாடகங்கள்தான் நிகழ்த்துவார்கள். நாட்டியக்காரியான என்னை அழைக்க, நான் குழம்பினேன். என்னுடைய 'பஞ்சகன்யா’ நடனம், நாடகம் போல பார்க்க சுவாரஸ்யமாக இருப்பதாகவும், அதை நிகழ்த்தித் தரும்படியும் கேட்டார்கள். அவர்களிடம்,

துவாரம் ஆடுகிறேன். நிச்சயம் நாடக சுவாரஸ்யத்துக்கு குறைவிருக்காது!’ என்று சொல்லி, அந்த தியேட்டர் ஃபெஸ்டிவலின் வரலாற்றில் முதல் முறையாக பரதம் ஆடினேன். டெல்லி, சண்டிகர், புனே என இந்தியாவின் அத்தனை தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்களும் குழுமியிருந்த அந்த அரங்கில் எனக்கு அளவில்லாத பாராட்டு! தெலுங்கானா சுற்றுலாத்துறை சார்பாக வந்திருந்த கமிஷனரும், டைரக்டரும், காக்கத்தியா ஃபெஸ்டிவலுக்கு என்னை 'துவாரம்’ நடத்தித் தரக் கேட்டார்கள். அதோடு, காக்கத்தியா ஃபெஸ்டிவலின் லோகோவே

துவாரம்'தான் என்றானது.
இதோ... இப்போது சென்னை அரங்கில். நிச்சயம் இங்கும் வெற்றி தொடரும். அது நம் கதவுகளின் வெற்றி!''
- நளினமாகச் சிரிக்கிறார் வாணி கணபதி!