Published:Updated:

ஏழு சிகரங்கள் தொட்ட இரட்டைச் சகோதரிகள்!

ஏழு சிகரங்கள் தொட்ட இரட்டைச் சகோதரிகள்!

ரணம் தப்பினால் மரணம் என்பது, மலை ஏறுபவர்களுக்கு மிகப்பொருந்தும். ஆனாலும் ஒன்றல்ல, இரண்டல்ல... உலகின் ஏழு உயரமான மலைகளில் ஏறி இந்திய தேசியக் கொடியைப் பறக்கவிட்டு சாதனை படைத்திருக்கிறார்கள், உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இரட்டைச் சகோதரிகள் தஷி  நுங்ஷி!

ஏழு சிகரங்கள் தொட்ட இரட்டைச் சகோதரிகள்!

டேராடூனில் உள்ள அவர்களின் இல்லத்தில் சகோதரிகளைச் சந்தித்தபோது, ''தெரியுமா... நாங்களும் சில வருடங்கள் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறோம்!'' என்று உற்சாக ஊற்றாகப் பேசினார்கள்!

''ராணுவ அதிகாரியாகப் பணிபுரிந்த எங்கள் அப்பாவின் பணி மாற்றங்களால், பல்வேறு நகர மக்களைச் சந்திக்கும் வாய்ப்பும், அனுபவமும் கிடைத்தது. அந்த வகையில், சென்னை, பரங்கிமலையிலும், ஊட்டியிலும்தான் எங்கள் பள்ளிப் படிப்பை ஆரம்பித்தோம்!'' என்றவர்கள், பி.ஏ., ஜர்னலிஸம் படிக்கும்போது, உத்தரகாசியில் உள்ள மலை ஏறும் பயிற்சி மையத்தில் சேர்ந்திருக்கிறார்கள்.

ஏழு சிகரங்கள் தொட்ட இரட்டைச் சகோதரிகள்!

''அங்கு தசரத் என்ற ஆசிரியர், எங்கள் திறமையை அறிந்து பயிற்சி தந்தார். அவர் தந்த ஊக்கத்தில்தான், உலகின் ஏழு கண்டங்களிலும், அந்தந்தக் கண்டங்களின் உயரமான சிகரங்களில் (SEVEN SUMMITS) ஏறி, இந்தியக் கொடி ஏற்றும் எங்களின் ‘#Mission2For7’ சாதனைக்கு உறுதி பூண்டோம். வெறும் சாகசமாக இல்லாமல், இந்தியப் பெண் குழந்தைகளின் நலனை வலியுறுத்துவதே, எங்கள் சாகசத்தின் நோக்கம்!'' என்றவர்கள்,

''ஆப்பிரிக்காவில் உள்ள கிளிமஞ்சாரோ சிகரத்தில் 2012-ல் இந்திய தேசியக் கொடியைப் பறக்கவிட்டதுதான் எங்களின் முதல் வெற்றி. தொடர்ந்து, ஒரே மூச்சில் மற்ற ஆறு மலை களிலும் ஏறி சாதனை படைக்கத் துடித்தோம். ஆனால், அதற்கான பொருளாதார சப்போர்ட் இல்லாததால, ஒரு வருடம் காத்திருந்தோம். நண்பர்கள், உறவினர்களிடம் கடன் வாங்கி, பெரிய வணிக நிறுவனங்களின் உதவி பெற்று என மற்ற மலைகளிலும் ஏறி, கடைசியாக கடந்த டிசம்பர் மாதம்தான் அன்டார்டிகாவில் உள்ள ஏழாவது மலையான வின்ஸன் மேஸீஃப் சிகரத்தில் ஏறி நமது தேசியக் கொடியைப் பறக்கவிட்டோம்!'' என்றபோது, நான்கு கண்களிலும் வெற்றியின் ருசி!

ஏழு சிகரங்கள் தொட்ட இரட்டைச் சகோதரிகள்!

''இப்போது கடனை எப்படி அடைப்பது என்ற கவலையில் இருக்கிறார் எங்கள் அப்பா. இறைவன் கைகொடுப்பார் என்ற நம்பிக்கையில், மலை ஏற்றத்தில் உலகத்தர பயிற்சி அளிக்கும் நியூசிலாந்து நாட்டிலிருக்கும் கல்லூரியில் சேர்ந்து படிக்க இருக்கிறோம்'' என்று தங்கள் தந்தையைப் பார்க்கும் சகோதரிகள், மலையேற்றத்துக்காக கின்னஸ் மற்றும் லிம்கா உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்திருக்கிறார்கள். இந்தியாவில் தரமான மலையேற்று பயிற்சி மையத்தை ஆரம்பிக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

''என் மகள்கள் உலக சாதனை படைக்கும் சந்தோஷத்தை என்னால் வார்த்தைகளில் சொல்ல முடியவில்லை. ஆனால், ஒவ்வொரு முறையும் என் மனைவியைச் சமாதானப்படுத்தி, அதற்குத் தேவைப்படும் லட்சங்களை கடனாக வாங்குவதற்கு மிகவும் சிரமப்படுகிறேன். என்னுடன் பணிபுரிந்த, சென்னையைச் சேர்ந்த டேவிட் தேவசகாயம் போன்ற நண்பர்கள் பலர் உதவுகிறார்கள். எப்படியோ பணம் கிடைக்கிறது; கடனும் சேர் கிறது. என் உடம்பில் தெம்பு இருக்கும் வரை என் மகள்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பேன்!'' என்கிறார், சாதனைச் சகோதரிகளின் தந்தை வி.எஸ்.மாலிக்!

- டேராடூனில் இருந்து இரா.ஸ்ரீதர்

அந்த ஏழு சிகரங்கள்!

எவரெஸ்ட்  இந்தியா, கிளிமஞ்சாரோ  ஆப்பிரிக்கா, இல்புரூஸ்  ஐரோப்பா, அகோன்காகுவா  தென் அமெரிக்கா, காஸ்டென்ஸ்  பாப்புவா நியு கினி, மெக்கின்லி  வட அமெரிக்கா, வின்ஸன் மேஸீஃப்  அன்டார்டிகா!

அடுத்த கட்டுரைக்கு