Published:Updated:

"32 பற்களைப் போலவே 32 மாவட்டங்களும் முக்கியம்!”

பல் மருத்துவர் to சப்-கலெக்டர்பொன்.விமலா, படங்கள்: ச.வெங்கடேசன்

"32 பற்களைப் போலவே 32 மாவட்டங்களும் முக்கியம்!”

பல் மருத்துவர் to சப்-கலெக்டர்பொன்.விமலா, படங்கள்: ச.வெங்கடேசன்

Published:Updated:

''மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்!''

- இதை வெறும் வார்த்தைகளில் மட்டும் நிறுத்திவிடாமல், தன் வீரதீர செயல்களால் நிரூபித்துக்கொண்டும் இருக்கிறார் பிரியதர்ஷினி. ஊரே உறங்கிக் கொண்டிருக்கும் நள்ளிரவு வேளையில் ரெய்டு நடத்தி, மணல் திருட்டைத் தடுத்து நிறுத்து கிறார்... 'செல்போன் ரீசார்ஜ் செய்வதினும் முக்கியம், மழைநீர் ரீசார்ஜ்' என்பதை மக்களின் மனங்களில் தூவுகிறார்... இந்த பிரியதர்ஷினி. இவர், வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையின் வருவாய் கோட்ட ஆட்சியர் (R.D.O).

எளிமையான தோற்றம். பரபரப்பில்லாத பாந்தமான பார்வை. உள்ளூர் மக்களால் 'ஒன் (உ)மேன் ஆர்மி’ என அழைக்கப்படும் டாக்டர் பிரியதர்ஷினியை இளங்காலைப் பொழுதொன்றில் சந்தித்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"32 பற்களைப் போலவே 32 மாவட்டங்களும் முக்கியம்!”

''எனக்கு சொந்த ஊர், மண்ணச்சநல்லூர். அப்பா, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர். அம்மா ஓய்வுபெற்ற கல்லூரிப் பேராசிரியை. அக்கா சித்த மருத்துவர், தம்பி அலோபதி மருத்துவர். இதுக்கு நடுவுல நான் எப்படி ஆர்.டி.ஓ. ஆனேங்கிறது சுவாரஸ்யமான கதை!''

- புன்னகையுடன் தொடர்ந்தார் பிரியதர்ஷினி...

''அரசாங்க உதவிபெறும் பள்ளியில், தமிழ் மீடியத்துலதான் என்னோட ஆரம்பக் கல்வி தொடங்கிச்சு. 10-ம் வகுப்புல 475 மார்க் எடுத்து, பள்ளியில் முதல் மாணவியா வந்தேன். ப்ளஸ் டூ தேர்வுல 1,127 மார்க் எடுத்தேன். சென்னைக்கு அருகில் பல் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து, படிப்புக் காலம் முடிஞ்சதும், ஒரு வருஷம் பயிற்சிக் காலம். இந்தப் பயிற்சிக் காலத்துல நான் சந்திச்ச வாய்ப்புற்று நோயாளிகளோட கஷ்ட கதைகள் என்னை கலங்க வெச்சுது. இதுக்கெல்லாம் காரணம், போதிய விழிப்பு உணர்வு இல்லாததுதான். மக்கள் மத்தியில விழிப்பு உணர்வு ஏற்படுத்த நினைச்சேன். ஆனா, ஒரு மருத்துவரா இருந்துகிட்டு விழிப்பு உணர்வு ஏற்படுத்துறத காட்டிலும், அரசு அதிகாரியா இருந்து இதைச் செய்தா கூடுதல் பலம் கிடைக்கும்னு தோணுச்சு. 32 பற்களுக்கு மருத்துவம் பாக்குறதைப் போல, 32 மாவட்ட மக்களுக்கும் நம்மால் முடிஞ்ச ஏதாவது உதவிகளை சட்டப்பூர்வமா செய்யணும்னு மனசு சொல்லிட்டே இருந்துச்சு. இதுதான், ஒரு மருத்துவரான என்னை ஆர்.டி.ஓவா மாத்தியிருக்கு.

பல் டாக்டர்ங்கிறது படிப்புக்கு ஏத்த வேலையா இருந்தாலும், மனசுக்கு ஏத்த வேலை இல்லைனு முடிவு பண்ணி... குரூப் 1 அரசுத் தேர்வு எழுதினேன். எடுத்ததும் வெற்றி கிடைக்கலை'' என்றவர், தேர்வு அனுபவத்தைப் பகிர்ந்தார்.

''சின்ன வயசுல இருந்தே பொது அறிவு சம்பந்தமான புத்தகங்களையே தேடித்தேடி படிப்பேன். அப்பா வீட்டுக்கு வரும்போதெல்லாம் ஸ்வீட் வாங்கிட்டு வரமாட்டார், நல்ல புத்தகங்களைத்தான் வாங்கிட்டு வருவார். தேர்வு நேரங்கள்ல பொதிகை சேனல் மட்டும்தான் பாப்பேன். 'வயலும் வாழ்வும்' நிகழ்ச்சியைப் பாக்கும்போது விவசாயம் மேல அத்தனை நம்பிக்கை கிடைச்சுது. மத்த சேனல்களை பாத்தாலும் பொது அறிவுக்கு உதவுற நிகழ்ச்சிகளா இருந்தா மட்டுமே பாப்பேன்.

இப்படிப் படிக்குற விஷயம், பாக்குற விஷயம், கேக்குற விஷயம் எல்லாமே பொது அறிவு சம்பந்தப்பட்டதாவே இருக்குற மாதிரி என்னை மாத்திக்கிட்டு, தீவிரமா படிச்சேன். அதோட விளைவாதான் குரூப் 1 தேர்வுல மாநில அளவுல ஏழாவது இடம் பிடிச்சு வெற்றி பெற்றேன்; துணை ஆட்சியர்/சப்கலெக்டர் பொறுப்பு கிடைச்சுது. ராணிப்பேட்டைக்கு வந்து 20 மாசங்கள் ஆகுது!'' என்றவர், தன் பணி குறித்துப் பேசினார்.

"32 பற்களைப் போலவே 32 மாவட்டங்களும் முக்கியம்!”

''மக்களுக்கு அரசாங்கத்தோட நலத்திட்டங்களை கொண்டு போய்ச் சேர்க்கணும். சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கணும்... இதுதான் ஒரு கோட்டாட்சியரோட முதன்மையான வேலை. இங்க, எந்த இடத்துல குற்றம் நடந்தாலும் தட்டிக் கேக்குற அதிகாரம் இருக்கு. இது, நாற்காலியில உட்கார்ந்துட்டு முடிக்கிற வேலை இல்ல. மக்களுக்காக களத்துல இறங்கி செயல்படணும். ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலைங்கிறதும் இல்ல. 24x7 விழிப்போடு இருக்கணும்.

நான் எப்ப வெளியில போவேன், எப்ப வீட்ல இருப்பேன்னு ஒரு கும்பல் தொடர்ந்து என்னை கண்காணிச்சுட்டே இருப்பாங்க. ஆனா, அவங்களுக்கே தெரியாம பிறர் செல்லத் தயங்கும் இடங்களுக்கும் ரெய்டு போவேன். அரசாங்க ஜீப்பை பார்த்தா, தப்பிச்சுடுவாங்கனு, தனியார் வாகனத்துல போய்க்கூட சட்ட விரோதமா மணல் அள்றவங்களைப் பிடிப்பேன். அப்பாவும் அம்மாவும் எனக்குத் தைரியம் கொடுத்து வளர்க்கலைனா, இந்த மாதிரி நான் துணிச்சலா இருக்க சாத்தியமே இல்ல! நேர்மையா இருக்குறது மட்டுமில்ல... அரசாங்க வேலையில் ஆண்களுக்கு நிகரா பெண்களும் சாதிச்சிக்காட்டணும். அந்த வகையில என்னோட பணியை முழு மன திருப்தியுடன் செய்துட்டிருக்கேன்'' எனும் பிரியதர்ஷினிக்கு, தற்போது வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்!

முதலில் வேலை, பிறகு கல்யாணம்!

பிரியதர்ஷினியிடம் பேசிக்கொண்டிருந்த போது, அவர் சொன்ன ஒரு விஷயம் வெகுவாக கவனத்தை ஈர்த்தது.

'இங்க நான் பாக்குற இன்னொரு முக்கியமான வேலையும் இருக்கு. திருமணம் ஆன சில வருடங்களுக்குள்ள ஒரு பெண் இறந்துட்டா... 'வரதட்சணை கொடுமையால இறப்பு நடத்திருக்குமா’னு விசாரிக்கிற வேலை. இதுமாதிரி புகார்களை தீர விசாரிச்சுப் பாக்கும்போது, சில சம்பவங்களைத் தவிர, பெரும்பாலான சம்பவங்கள், பெண்களுக்கு முதிர்ச்சி இல்லாத காரணத்தால நடந்ததாகவே இருக்கு. பேசித் தீர்க்கக் கூடிய சாதாரணப் பிரச்னைகளுக்குக் கூட தற்கொலை செய்துக்கிறதை விசாரணையில் தெரிஞ்சுக்குறப்ப உண்மையாகவே மனசு வலிக்குது. என்னைக் கேட்டால், திருமணத்துக்கான மெச்சூரிட்டி இல்லாம கண்டிப்பா திருமணம் செய்துகொள்ளவே கூடாது. பெண்கள் படிச்சு முடிச்சு, வேலைக்குப் போன பிறகே திருமணம் செஞ்சுக்கணும். அப்பதான் அவங்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் கிடைக்கும்'' என்று சொன்னார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism