Published:Updated:

ராகிங் தப்புதான்... ஆனா, லவ்வு கரெக்ட்டு!

ஐ.ஏ.எஸ்களை உருவாக்கும் காதல் தம்பதிபொன்.விமலா,  படங்கள்: ப.சரவணகுமார்

ராகிங் தப்புதான்... ஆனா, லவ்வு கரெக்ட்டு!

ஐ.ஏ.எஸ்களை உருவாக்கும் காதல் தம்பதிபொன்.விமலா,  படங்கள்: ப.சரவணகுமார்

Published:Updated:

'சூரியவம்சம்’ திரைப்படத்தில், தன் காதல் மனைவியை கலெக்டர் ஆக்குவார் ஹீரோ. இங்கே நாம் பார்க்கப்போவது... ஒரு காதல் தம்பதி, பல பேரை கலெக்டர் ஆக்கிக்கொண்டிருக்கும் நிஜக்கதையை!

சிவில் சர்வீஸ் தேர்வெழுதும் மாணவர்களுக்கான பயிற்சிப் பட்டறைகளில் ஒன்று சென்னை, சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி. எப்படியாவது கலெக்டர் ஆக வேண்டும் என தொடர்ந்து போராடிய சங்கர், கடைசிவரை வெற்றி பெறவில்லை. ஆனால், அந்தத் தோல்வியையும் வெற்றியாக்கியிருக்கிறார், காதல் மனைவி வைஷ்ணவியுடன் கைகோத்து! 'ஐ.ஏ.எஸ். ஆக முடியாட்டி என்ன... பல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்களை உருவாக்குவோமே!’ என்றபடி இந்தக் காதல் தம்பதி ஆரம்பித்த, 'சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி’, 11 ஆண்டுகளாக வெற்றிநடை போடுகிறது!

ராகிங் தப்புதான்... ஆனா, லவ்வு கரெக்ட்டு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு திரைப்படம் போல, மோதலில் ஆரம்பித்து காதலில் முடிந்த இவர்களின் காதல் கதை, சுவாரஸ்யம்!

''நான் கிள்ளிகுளம், தமிழ்நாடு வேளாண்மைக் கல்லூரியில பி.எஸ்ஸி படிச்சுட்டு இருந்தேன். அன்னிக்கு புது வருட மாணவர்களுக்கான வெல்கம் பார்ட்டி. ராகிங் தலைவிரிச்சு ஆடின காலம் அது. விழா முடிஞ்சதும், ஒரு ஜூனியர் பொண்ணை என் ஃப்ரெண்ட் ஒருத்தன் பேர் சொல்லிக் கூப்பிட்டான். சீனியர்னு மரியாதை இல்லாம திரும்பிக் கூடப் பார்க்காம போனா. எனக்கு கோபம் வந்துருச்சு. அவன் கையில இருந்த நோட்டை பிடிங்கி, 'படார்’னு அந்தப் பொண்ணை ஓங்கி அடிச்சேன். அவ்ளோதான், ராகிங் கமிட்டி முன்ன கொண்டு போய் நிறுத்திட்டா. 'ஒரு வருஷத்துக்கு சஸ்பெண்ட்!’னு துரத்திட்டாங்க.

ஒரு வருஷம் கழிச்சு திரும்பி வந்தா, என்மேல புகார் கொடுத்த இந்த வைஷ்ணவி கூடவே படிக்க வேண்டிய சூழ்நிலை! ஆறு மாசமா ரெண்டு பேரும் பேசிக்கல. என் நண்பர்கள் என்னைப் பத்தி அவகிட்ட நல்லவிதமா சொல்றது, அவளோட தோழிகள் எங்கிட்ட அவளைப் பத்தி பெருமையா சொல்றதுனு... ஏதோ ஒரு புள்ளியில எங்க ரெண்டு பேருக்குமே ஒருத்தர் மேல ஒருத்தருக்கு காதல் வந்துருச்சு!''

சங்கரின் கண்களில் வழிந்தது வெட்கம்!

''திடீர்னு ஒருநாள், திருநெல்வேலியில இருக்குற ஒரு கோயிலுக்கு வர முடியுமானு கேட்டார்...''

புரபோசல் அத்தியாயம் கேட்கத் தயாரானோம் வைஷ்ணவியிடம்.

''அங்க வந்தவர், 'என்னைப் பிடிச்சிருக்கா?’னு கேட்டார். தலையை ஆட்டினேன். 'ஏற்கெனவே என் மேல ஒரு பிளாக் மார்க் இருக்கு. அதனால படிப்பு முடியுற வரை எங்கயும் பார்த்துக்கவோ, பேசிக்கவோ வேணாம்’னு சொன்னப்போ, 'இவரைப் போய் சஸ்பெண்ட் பண்ண வெச்சுட்டோமே’னு வருத்தமா இருந்துச்சு. அடுத்து வந்த கல்லூரிப் போட்டிகள்ல எல்லாம், நான் பாட்டு, டான்ஸ்னு கலக்க... அவரு மிமிக்ரி, வெண்ட்ரிலோகுயிசம் (பொம்மையை வைத்துக்கொண்டு பேசுவது), தனிநபர் நடிப்புனு ஜெயிப்பார். எங்க காதல் எங்க ரெண்டு பேருக்கும் தவிர வேற யாருக்கும் தெரியாதுனு இருந்த நிலையில... நண்பர்கள் சிலருக்குத் தெரிஞ்சுபோச்சு'' என வைஷ்ணவி சொல்ல...

"அது எப்படினு நான் சொல்றேன்'' என்று இடைமறித்த சங்கர், "காதல் கடிதங்கள்தான் எங்களோட ஒரே தொடர்பு சாதனம். கெமிஸ்ட்ரி லேப்ல, புக் உள்ள லெட்டரை வெச்சு, குறிப்பிட்ட இடத்துல வெச்சிடுவாங்க. அந்த இடத்துல, நான் எழுதின லெட்டரோட புக்கை வெச்சுட்டு, அவங்க புக்கை எடுத்துக்குவேன். இப்படித்தான் காதல் வளர்த்தோம். கூடவே நான் கிராமரும் கத்துக்கிட்டேன். அதாவது, நான் தமிழ் வழியிலும், அவங்க ஆங்கில வழியிலும் படிச்சிட்டு இருந்தோம். அதனால, ஆங்கிலம் கத்துக்க வேண்டி, நான் ஆங்கிலத்தில்தான் காதல் கடிதம் எழுதுவேன். ஸ்பெல்லிங் மிஸ்டேக், கிராமர் மிஸ்டேக் எல்லாம் ரெட் இங்க்ல திருத்திக் கொடுப்பாங்க. அந்த வகையில், மேடத்தோட முதல் ஸ்டூடென்ட் நான்தான். அப்படி எழுதின கடிதங்கள்ல ஒண்ணு எப்படியோ நண்பர்கள் கையில சிக்க, கல்லூரி படிப்பு முடியுற சமயத்துலதான் எங்க காதல் எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு. ஒருவழியா ரெண்டு பேருமே நல்ல பெர்சன்டேஜ் எடுத்து டிகிரி பாஸ் செஞ்சோம்!''  ரசிக்க வைத்தன அவர்களின் காதல் அத்தியாயங்கள்!

கல்லூரி முடித்ததும், நடிப்பின் மீது கொண்ட ஈர்ப்பால், சினிமா வாய்ப்புத் தேடி அலைந்திருக்கிறார், சங்கர்.

''எந்த வாய்ப்பும் கிடைக்கல. மேற்படிப்பு படிக்க முடிவு பண்ணினேன். வைஷ்ணவியும் நானும் வெவ்வேறு ஊர்களில் எம்.எஸ்ஸி படிச்சோம். படிப்பு முடிஞ்சதும் நான் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்குத் தயாரானேன். வைஷ்ணவிக்கு டெல்லியில வேளாண் பொருளாதார ஆராய்ச்சியாளரா வேலை கிடைச்சுது. தன்னோட சம்பளத்துல இருந்து ஒரு தொகையை என்னோட பயிற்சிப் படிப்புக்காக அனுப்பி வைப்பாங்க அவங்க. தொடர்ந்து நான்கு முறை ஐ.ஏ.எஸ். தேர்வெழுதியும், என்னால ஜெயிக்க முடியல. இதுக்கு இடையில் வைஷ்ணவிக்கு சென்னையில வேலை கிடைக்க, குடும்பத்தோட இங்க வந்துட்டாங்க.

ராகிங் தப்புதான்... ஆனா, லவ்வு கரெக்ட்டு!

95-ல ஆரம்பிச்சு 2006 வரைக்கும், 11 வருஷமா எங்க காதல் வளர்ந்துட்டு இருந்துச்சு. நடுவுல எங்கப்பா தவறிப் போக... அம்மா, தங்கையை பார்த்துக்குற பொறுப்பு எனக்கு. அஞ்சாயிரம் சம்பளத்துல ஒரு வேலை கிடைச்சது. அதுக்குப் போகப் பிடிக்காம, ரெண்டு சாய்ஸ்களோட நின்னேன். ஒண்ணு, சினிமா. இன்னொண்ணு,  ஐ.ஏ.எஸ். அகாடமி. 'ரெண்டாவது ஆப்ஷன்தான் சரி!’னு சொல்லி, 'சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி’ ஆரம்பிக்க பக்கபலமா இருந்ததோட, தான் பார்த்திட்டிருந்த வேலையையும் விட்டுட்டு, என்னோட சேர்ந்து ஒரு பயிற்சியாளரா, நிர்வாகியா பல மாணவர்களை மெருகேற்றிட்டு இருக்காங்க வைஷ்ணவி.

எங்க மாணவர்கள் பலர் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்னு பெரிய பதவிகளில் அமர்ந்து எங்களுக்குப் பெருமை தேடித் தந்திருக்காங்க. அண்ணாநகர், அடையார்னு சென்னையில் ரெண்டு கிளைகள் ஆரம்பிச்சாச்சு. தமிழ்நாடு முழுக்கவும் சிவில் சர்வீஸுக்குப் படிக்குறவங்களுக்கு உதவுறோம். இதுக்கெல்லாம் அடித்தளம், எங்க காதலும் கல்யாணமும்தான். ஆமாம்... இதுக்கு நடுவுல எங்க கல்யாணம் எப்படி நடந்துச்சுனு சொல்லாம விட்டுட்டேனே!''

சங்கரின் கண்கள் வைஷ்ணவியின் முகம் பார்த்து சிரித்தன.

''வீட்டுக்கு நான் ஒரே பொண்ணு. ரெண்டு பேருமே வேற வேற சமூகத்தைச் சேர்ந்தவங்க. இவர் வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்டதும், 'இப்போவே போய் பீச்ல குதிச்சிடுவேன்!’னு அப்பா கோபப்பட்டார். போலீஸ்ல கம்ப்ளெயின்ட் பண்ணிடுவேன்னு பயமுறுத்தினார். ஆனாலும் நாங்க உறுதியா நிக்கவே, 2006-ம் வருஷம் கல்யாணம் நடந்தது. சஹானா, சாதனானு ரெண்டு பெண் குழந்தைகள் காதல் பரிசா கிடைச்சிருக்காங்க. இதுக்கு நடுவுல அவரோட தங்கையும் எங்க அகாடமியிலயே படிச்சு ஐ.ஏ.எஸ். ஆகிட்டாங்க. நல்ல மாப்பிள்ளையைத் தேடி கல்யாணமும் பண்ணிக் கொடுத்துட்டோம்.

இப்படி பல கட்டங்களையும், கலகலப்புகளையும், கஷ்டங்களையும் தாண்டி வந்ததுதான் எங்க காதல். இவரும் நானும் மோதல்ல சந்திச்சு, இதோட 20 வருஷம் ஆச்சு. ஆனா, ஏதோ நேத்துதான் இவரைப் பார்த்த மாதிரி இருக்கு!''

வைஷ்ணவியின் கண்களில் வெளிச்சம் பரவ, ரசிக்கிறார் சங்கர்!

லவ் இஸ் வெல்!

'மாம்னார்  மாப்ளே!’

சங்கர் வீட்டில் இருந்த சங்கரின் மாமனார் அவரை 'மாப்ளே!’ என்று அழைப்பதும், பதிலுக்கு சங்கர் அவரை 'மாம்னார்!’ என்று கலாய்ப்பதுமாக, அதுவும் ஒரு ஜாலி எபிசோட்! அந்த 'மாம்னாரை’ எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே என யோசித்தால், தீனதயாளன்! 'நான் கடவுள்’ படத்தில் நீதிபதி, 'நண்பன்’ படத்தில் பேராசிரியர் என 30-க்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார், நடித்துக்கொண்டிருக்கிறார், இந்த 75 வயது 'மாம்னார்’.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism