Published:Updated:

கதைக்கு கணவர்... கதாநாயகிக்கு மனைவி!

டப்பிங்கில் கலக்கும் காதல் தம்பதிபொன்.விமலா,  படம்: எம்.உசேன்

கதைக்கு கணவர்... கதாநாயகிக்கு மனைவி!

டப்பிங்கில் கலக்கும் காதல் தம்பதிபொன்.விமலா,  படம்: எம்.உசேன்

Published:Updated:

விஞர் மருதகாசியின் திரைவாரிசு, மருதபரணி. இவரை, காதலர்தின சிறப்பிதழுக்காகச் சந்திக்கக் காரணம்... தன் காதல் மனைவி உமா பரணியுடன், அலுவலகம், இல்லறம் இரண்டையும் கட்டமைத்திருக்கிறார், வெற்றிகரமாக!

'தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்’, 'மாசிலா உண்மைக் காதலே’, 'மணப்பாறை மாடு கட்டி’ என மருதகாசி  எழுதிய பாடல்கள், தமிழ்த் திரையுலகின் நான்காம் தலைமுறையினர் மனதிலும் கோலோச்சிக் கொண்டிருக்கின்றன. தந்தை கவிஞர் என்றால், மாற்றுமொழிப் படங்களுக்கு வசனம் எழுதி மொழிபெயர்ப்பதில் மகன் மருதபரணி கில்லாடி. உமா பரணி, சின்னத்திரையின் டப்பிங் சீரியல்களுக்கு வசனம் எழுதுவதோடு, குஷ்பு, மீனா, அனுஷ்கா என்று முன்னணி கதாநாயகிகள் பலருக்கும் பின்னணி குரலும் கொடுப்பவர். டப்பிங் துறையில் கைகோத்துக் கலக்கிக்கொண்டிருக்கும் இந்த காதல் ஜோடியிடம் ஒரு கப் காபி யுடன் பேச ஆரம்பித்தோம்.

கதைக்கு கணவர்... கதாநாயகிக்கு மனைவி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''கல்யாணமாகி 25 வருஷம் ஆகுது. ஆனா, இளம்ஜோடி மாதிரி சந்தோஷம் குறையாம நாங்க இருக்க காரணமே, எங்களுக்கிடையே காதல் குறையாம இருக்குறதுதான்!'' என்று நேசம் பொங்கச் சொன்ன மருதபரணி, ''6 பையன்கள் 3 பெண்கள்னு, அப்பாவுக்கு மொத்தம் 9 பிள்ளைங்க. அப்பாவை மாதிரியே பாடல் எழுத ஆசைப்பட்டேன். ஒரே ஒரு படத்துல அந்த ஆசை நிறைவேறிடுச்சு. அப்புறம் திரைப்பாடலைவிட, டப்பிங் துறைதான் செட் ஆகும்னு புரிஞ்சுகிட்டு, களமிறங்கிட்டேன். இத்தனை வருடங்களா இதில் வெற்றியைத் தக்க வெச்சுருக்கேன்னா, என் மனைவியோட பங்கு ரொம்ப முக்கியம். அதனால அவங்க மொதல்ல பேசட்டுமே'' என்று உமாவைப் பார்த்துப் புன்னகைக்கிறார்.

''எனக்கு சொந்த ஊரு ஸ்ரீரங்கம். படிச்சது சென்னையில. என் அம்மா நாடக மேடைக் கலைஞரா இருந்ததால கலை ஆர்வம் எனக்குள்ள இயற்கையா இருந்துச்சு. 'வா இந்தப் பக்கம்’ படத்துல கதாநாயகியா நடிச்சேன். பிறகு, 'தாவணிக் கனவுகள்’ படத்துல பாக்யராஜ் சாருக்கும், 'நான் மகான் அல்ல’ ரஜினி சாருக்கும் தங்கையா நடிச்சிருக்கேன். தொடர்ந்து கேரக்டர் ரோல்கள்லயும், சில மலையாளப் படங்கள்லயும் நடிச்சிருக்கேன். சினிமாவுல நல்ல ரோல்கள் கிடைக்காத சூழல்ல, ஏவி.எம் ஸ்டுடியோவுல டப்பிங் பேசுற வாய்ப்பு கிடைச்சது. 'அறுவடை நாள்’ படத்துல நடிகை பல்லவிக்கு முதல் முதலா வாய்ஸ் கொடுத்தேன். தொடர்ந்து, 'நாயகன்’ சரண்யா, 'கேளடி கண்மணி’ அஞ்சு, 'கரகாட்டக்காரன்’ கனகா, 'மைக்கேல் மதன காமராஜன்’ குஷ்பு, 'புதுப்புது அர்த்தங்கள்’ சித்தாரா, 'ஆடிவெள்ளி’ சீதா, 'அவ்வை சண்முகி’ மீனா 'அருந்ததி’ அனுஷ்கா... இப்படி என் குரல் உங்களுக்கு ரொம்பப் பரிச்சயமானதுதான்!'' என்று சிரித்தவர், இதுவரை 700 படங்களுக்கும் மேல், கிட்டத்தட்ட 100 கதாநாயகிகளுக்கு குரல் கொடுத்திருக்கிறார். மேலும் இவர் ஹாலிவுட் டப்பிங் படங்களில் முன்னணி கதாநாயகிகளுக்கும் குரல் கொடுத்திருக்கிறார்.

''ராஜ் டி.வியில ஒளிபரப்பாகுற மொழிமாற்று சீரியல்களுக்கு நானும் என் தம்பியும் சேர்ந்து வசனம் எழுதுறதோட, அந்த சீரியல்களில் கதாநாயகிகளுக்கு டப்பிங் குரல் கொடுக்குறேன். 'சிந்து பைரவி’ சீரியலுக்கு ஸ்கிரிப்ட், குரல் ரெண்டுமே நான்தான். 'சாய்பாபா’ சீரியலுக்கு வசனம் எழுதினதைப் பாராட்டி கோயில்ல விழா நடத்தி நினைவுப் பரிசும் கொடுத்தது மறக்க முடியாத அனுபவம். இப்ப என்னோட வயசு 40-ஐ தாண்டிருச்சு. இன்னமும் ஹீரோயின்களுக்கு என்னோட வாய்ஸ் பொருத்தமா இருக்குனா, அதுக்கு ரெண்டு காரணங்கள் இருக்கு. ஒண்ணு, சுடுதண்ணி; இன்னொண்ணு, ஜில் கணவர். இவர்தான் என்னோட சீக்ரெட் ஆஃப் எனர்ஜி!''

வெட்கத்தோடு, காதல் திருமணம் குறித்துத் தொடர்ந்தார் உமா.

''நான் வாய்ஸ் ஆர்ட்டிஸ்டா ஆனபோது, அஞ்சல் வழியில எம்.ஏ, பொருளாதாரம் படிச்சுட்டு இருந்தேன். அவர் எம்.ஏ தமிழ் படிச்சுட்டு இருந்தார். ஒரு நாள் டிரெயினிங் கிளாஸ்லதான் ரெண்டு பேரும் சந்திச்சுக்கிட்டோம். அதுக்கப்புறம் எங்களுக்குள்ள நல்ல நட்பு இருந்துச்சு. உலகப் பொதுவிதிப்படி, அது காதலா மாறிச்சு!'' என்று ஓரக்கண்ணால் கணவரைப் பார்க்க, தொடர்ந்தார் மருதபரணி...

கதைக்கு கணவர்... கதாநாயகிக்கு மனைவி!

''எங்க காதலை அங்கீகரிச்ச எங்கப்பா, கல்யாணத் துக்கு வாழ்த்த முடியாம உடல்நலக் குறைவால தவறிட்டார். 90-ல கல்யாணம் ஆச்சு. ஒரே பையன் சித்தார்த், இப்போ ஃப்ளோரிடாவுல எம்.பி.ஏ படிச் சுட்டு இருக்கார். உமாவைப் பத்தி நான் நெகிழ்ச்சியா பகிர்ந்துக்க நிறையவே இருக்கு. அதுல ஒரு சம்பவத்தைச் சொல்றேன். ஒருநாள் பார்வையற்ற இளைஞர்கள் 2 பேர் எங்க வீட்டுக்கு வந்திருந்தாங்க. அவங்ககிட்ட நான் ரொம்ப நேரமா பேசிட்டு இருந்தேன். அங்க வந்த உமா அவங்ககிட்ட 'வணக்கம்!’னு சொன்னாங்க. உடனே அந்த ரெண்டு பேரும் சந்தோஷமாகி, தங்களுக்குள்ளயே பேசிக்கிட்டாங்க. 'நீங்க மீனாவுக்கு வாய்ஸ் கொடுப்பீங்களா?’னு ஒருத்தர் கேட்டார். உமா ஆமோதிக்க, 'மேடம்... எங்களைப் பொறுத்த வரைக்கும் மீனா, குஷ்பு, அனுஷ்கா எல்லாமே நீங்கதான்!’னு சொல்ல, உமாவைவிட, நான் ரொம்ப நெகிழ்ந்துட்டேன். ஒரு கலைஞருக்கு ரொம்ப நெகிழ்ச்சியான நிமிஷங்கள் அது!'' என்றவர்,

''வீட்டுலயே டப்பிங் ஸ்டுடியோ நடத்திட்டு வர்றோம். உமாவோட சப்போர்ட் இல்லைனா இது கொஞ்சமும் சாத்தியம் இல்ல. ஒரே துறையில ஒருத்தருக் கொருத்தர் புரிஞ்சுட்டு வேலை பாக்க முடியுதுனா, அதுக்கு மனசு சந்தோஷமா இருக்கணும்!'' என்றவரை மேற்கொண்டு பேசவிடாமல் இடைமறித்த உமா, ''என்னைப் பத்தி மட்டும்தான் பேசிட்டு இருக்கோம். அவரைப் பத்தி சொல்ல நிறைய இருக்கு. மம்முட்டி சாரோட 'சத்ரிய வம்சம்’, நாகார்ஜுனாவோட 'சுட்டிக்குழந்தை’, மாதுரி தீட்சித்தோட ’அன்பாலயம்', ஷாரூக்கானோட 'தேசம்'னு நிறைய படங்களை அவர் மொழிமாற்றம் பண்ணியிருக்கார். நிறைய ஆங்கிலப் படங்களுக்கும் மொழிமாற்றம் பண்ணியிருக்கார். 'ஜுராஸிக் பார்க்’ படத்துல வர்ற 'ஓடுங்க அந்த நாலுகாலு பிராணி நம்மளை நோக்கிதான் வருது!’ என்ற ஃபேமஸ் டயலாக், இவர் எழுதுனதுதான். இந்தத் தொழில் எவ்ளோ நுட்பமானதுனு அவரே சொல்வாரு கேளுங்க!'' என மருதபரணியைப் பார்க்க, ''பிறமொழி வசனத்தோட பொருள் கொஞ்சமும் சிதையாம, தற்கால தமிழ் கலாசாரத்தோட பொருந்துற மாதிரி வசனத்தை எழுதி, உதட்டு அசைவுகளுக்கு தகுந்த மாதிரி பேச வைக்கணும். மொழிமாற்றம் செய்றது, வசனம் எழுதுறது, கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நபர்களைத் தேர்வு செஞ்சு குரல் கொடுக்க வைக்கிறதுனு, இதெல்லாம் என் வேலைதான். இது வரைக்கும் தெலுங்கு, கன்ன டம், பெங்காலி, ஹிந்தி, இங்கிலீஷ்னு கிட்டத்தட்ட 1,000 படங்களுக்கு மொழி மாற்றம் பண்ணியாச்சு. மொழிமாற்ற சீரியல்களுக்கு பாடல்களும் எழுதியிருக்கேன். இதெல்லாம் என் காதல் மனைவி இல்லாட்டி கொஞ்சமும் சாத்தியம் இல்லை!''

கடகடவென மருதபரணி சிரிக்க, அதை ரசித்து உமாவும் சிரிக்க, வீட்டின் மாடியில் இருக்கும் ரெக் கார்டிங் ஸ்டுடியோ சுவர்கள், அந்த சிரிப்பொலியை 'காதல்’ என்று மொழி மாற்றிச் சொல்கின்றன நமக்கு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism