Published:Updated:

ஆல் இஸ் வெல்! - 11

பப்பி லவ் வேண்டாமே... ப்ளீஸ்!டாக்டர் அபிலாஷா

ஆல் இஸ் வெல்! - 11

பப்பி லவ் வேண்டாமே... ப்ளீஸ்!டாக்டர் அபிலாஷா

Published:Updated:

காதலை உலகமே கொண்டாடும் தருணம் இது! காதலின் அழகை, அற்புதத்தை அனைவரும் சீராட்டிக் கொண்டிருக்கும் போது, காதலில் நிகழும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதும் அவசியம் அல்லவா! சொல்லப்போனால், அதுதான் காலத்தின் கட்டாயமாக இருக்கிறது!

'கல்லூரியில் இரண்டாம் வருடம் படிக்கிறேன். ஆறு மாதங்களுக்கு முன் உறவினரின் திருமணத்தில், என் தூரத்து உறவு என்று சொல்லி எனக்கு ஒருவர் அறிமுகப்படுத்தப்பட்டார். பார்த்த நொடியில் இருந்து அவர் மீது காதலுற்றுக் கிடந்தேன். அவரைப் பற்றிய தகவல்களைத் திரட்டி, அவர் அலைபேசி எண் வாங்கி, அவரைத் தொடர்புகொண்டு, இயல்பாகப் பழக ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் என் காதலை அவரிடம் சொன்னபோது, காத்திருந்தது அதிர்ச்சி. தான் வேறு ஒரு பெண்ணைக் காதலிப்பதாகக் கூறினார் அவர்! வாழ்வில் எனக்கிருந்த பிடிப்பே போய்விட்டது. வெறுமையாக உணர்கிறேன். அவர் எனக்கில்லை என்ற உண்மையை உணரும் சில நொடிகளில், தற்கொலை எண்ணம்கூட வருகிறது!’

இது, இளம் வாசகி ஒருவர் எனக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சல் புலம்பல்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காதல் என்பது சந்தோஷம் தரவேண்டும். அந்த சந்தோஷத்துக்காகத்தானே அனைவரும் காதலிக்கிறார்கள்? ஆனால், வெறுமை, விரக்தி, தற்கொலை என்று நெகட்டிவ் எண்ணங்கள் தரும் காதலை, மின்னஞ்சல் அனுப்பிய வாசகி போல, எதற்கு வருந்திச் சுமக்க வேண்டும்? காலுக்குப் பொருந்தாத செருப்பைக் கழற்றி வைப்பதுபோலத்தான், காதலும். காதலை காலணிக்கு ஒப்பிடுவதாக கோபப்பட வேண்டாம். பழமொழியின் அர்த்தத்தையே ஒப்பிடுகிறேன். இதுபோன்ற காதலைக் கைகழுவு வதுதான் மனதுக்கு நல்லது.

ஒருதலைக் காதலில் தோல்வியுற்ற இந்த வாசகி, தற்கொலை எண்ணம் கொள்கிறார் என்றால், இவரைப் போல ஒருதலைக் காதலுற்ற ஆண்கள் பலர்தான், ஆசிட்டால் சிதைத்துள்ளனர், புதைத்துள்ளனர் பல பெண்களின் வாழ்க்கையை! ஒரு கைகூடா காதல் தரும் நெகட்டிவ் எண்ணம், தற்கொலைக்கு தூண்டுகின்றது, ஒருவனை கொலைகாரனாக ஆக்குகிறது, விரும்பிய பெண்ணையே பொசுக்கும் பகைமையாக வளர்கிறது என்றால், தேவையா அந்தக் காதல்?

ஆல் இஸ் வெல்! - 11

காதலியுங்கள். ஆனால், அந்தக் காதல் நீங்கள் விரும்புபவரால் மறுக்கப்பட்டால் மறுகணமே உங்கள் மனதிலிருந்தும் அதை தூக்கி எறியுங்கள். உங்களுக்காகப் பிறந்தவர் நிச்சயம் உங்களை வந்து அடைவார். பழைய காதலின் காயங்களோ, கோபங்களோ எதுவும் இன்றி, வரப்போகிறவருக்காக பத்திரப்படுத்தி வையுங்கள் உங்கள் மனதை!

பொறுமை வற்றக்கூடாது!

சரி, காதலுக்கு முக்கியத் தேவையான குணம் என்ன தெரியுமா? பொறுமை! பொறுமை இல்லாதவர்களின் காதல் வெற்றி பெறாது. அப்படிக் காதலிக்கும் வரை பொறுமையைக் கடைப்பிடிப்பவர்கள்கூட, கல்யாணத்துக்குப் பின் ஒரு புள்ளியில் அதை தேயவிட்டு, 'பொறுத்தது போதும் பொங்கி எழு’ என்கிற கொள்கைக்கு வந்துவிடுகிறார்கள். விரும்பி மணம் செய்துகொண்டாலும், திருமணத்துக்குப் பின் பல தம்பதிகளின் வாழ்க்கையில் காதல் காணாமல் போக, பொறுமை வற்றிப்போவதே காரணம். எனவே, காதலிக்கும்போதும், கல்யாணத்துக்குப் பிறகும் மனதில் எப்போதும் பொறுமையை சேமித்து வைத்திருந்தால், சந்தோஷத்துக்குக் குறைவில்லை.

யோசித்துப் பாருங்கள்... வெளியிடங்களில் பஸ் கண்டக்டர் முதல் அலுவலக பாஸ் வரை யார் யாரிடம் எல்லாமோ பொறுமையாகப் போகும் நாம், நம் நேசத்துக்குரியவரிடம் பொறுத்துப் போனால் என்ன? 'இதுக்கு மேல நான் எப்படிப் பொறுக்குறது? அவ/அவர் மட்டும் அப்படிச் செய்யலாமா?’ என்ற விவாதத்துக்கு முற்றுப்புள்ளியே இருக்காது. ஆனால், எல்லா பிரச்னைகளுக்கும் முற்றுப் புள்ளி வைக்கவல்லது, பொறுமை!

ஃபேஷன் இல்லை, பிழை!

தொடர்ந்து பேசப் போவதும் ஒரு முக்கியமான விஷயம் பற்றி. அதுதான் ஈகோ. இன்றைய காதலின் அடையாளம், ஈகோ என்றாகிவிட்டது. அதனால்தான், பல காதல்களும் பட்டென முறிந்துபோகின்றன. பல திரைப்படங்களுக்கும் கருவாகி இருக்கும் 'காதலர்களின் ஈகோ’ கான்செப்ட், திரைக்கு வேண்டுமானால் சுவாரஸ்யமூட்டலாம். உண்மையில் அந்த வீண் பிடிவாதத்தால் தங்களின் பொக்கிஷக் காதலை தொலைத்தவர்கள் பலர். வாழ்க்கையில் எதையும் சம்பாதித்துவிடலாம். ஆனால், ஆத்மார்த்தமான அன்பு என்பது, வரம். அந்த வரம் கிடைக்கப் பெற்றும், ஈகோவால் தவறவிட்டால், அவர் துரதிர்ஷ்டசாலி. ஈகோ என்பது காதலின் ஃபேஷன் இல்லை... பிழை!

’பப்பி லவ்' வேண்டாமே!

அடுத்தது, பல பெற்றோர்களை அச்சப்பட வைக்கும் டீன் ஏஜ் காதல்! பதின் பருவத்தில் வரும் இந்தப் பிரியத்துக்குப் பெயர் காதல் அல்ல... ஈர்ப்பு, இன்ஃபேச்சுவேஷன். டீன் வயதினரின் ஹார்மோன்கள் அதிகளவு தூண்டப்படுவதால் கிடைக்கும் ஒருவித பரவசம். அந்த குறுகுறு சந்தோஷத்துக்கு 'காதல்’ என்று பெயர் வைத்துக்கொள்ளும் பப்பி லவ்வர்ஸ்க்கு சில வார்த்தைகள். இந்த வயதில் உங்களுக்கு முக்கியம், படிப்பு; பெற்றோரின் அன்பு. வாழ்க்கைத் துணை என்ற பெரிய தேர்வைச் செய்யும் வயதோ, பக்குவமோ கண்டிப்பாக உங்களுக்கு இப்போது இருக்காது. உங்களின் இந்த வரம்புக்கு மீறிய செயலால், நல்ல உடை, நல்ல உணவு, நல்ல பள்ளி என்று அனைத்தையும் உங்களுக்காகப் பார்த்துப் பார்த்துச் செய்து கொடுப்பதையே தங்களின் சந்தோஷமாக எண்ணி வாழ்ந்து வரும் பெற்றோருக்கு நீங்கள் பதிலாகக் கொடுப்பது, அவமானம், துரோகம் மற்றும் கண்ணீர். மேலும், படிப்பிலும் கவனம் சிதைந்துபோகும். எனவே, குழந்தைகளே... குழந்தைகளாகவே இருங்கள். பி குட்!  

நேர்மையான நேசத்தைப் போற்றுங்கள்!

காதலர்களின் பிழைகளையே பேசிக்கொண்டிருந்தால் எப்படி? காதலில் சமூகம் இழைக்கும் பிழையையும் பேச வேண்டுமல்லவா? குறிப்பாக, வயதைக் கடந்தவர்களின், சிங்கிள் பேரன்ட்ஸ்களின் காதல். குடும்பம், பொருளாதாரம் என்று பல காரணங்களால் 45 வயது வரை திருமணம் தள்ளிப்போன ஒரு பெண்ணுக்கு, 46வது வயதில் காதல் வந்தால், 'இந்த வயசுல ஒருத்தன்கூட சுத்துறா...’ என்று பேசும் அருகதை சமுதாயத்துக்கு இல்லை. காரணம், இத்தனை வயது வரை திருமணம் தள்ளிப்போன அவரின் தனிமையைப் பற்றிக் கவலைப்படாத இந்த சமூகம், இப்போது மட்டும் கவலைப்பட என்ன இருக்கிறது? அவரின் பக்குவமான காதலை, அரவணைப்பு தேடும் உள்ளத்தை காயப்படுத்திப் பேசாதீர்கள். அதேபோல, இணை இழப்பு, விவாகரத்து போன்ற காரணங்களால் சிங்கிள் பேரன்ட் ஆக குழந்தையை வளர்ப்பவர்கள், மீதி வாழ்க்கைக்கு தங்களுக்கு ஒரு துணையைத் தேர்ந்தெடுத்தால், தூற்றாதீர்கள், வாழ்த்துங்கள். நேர்மையான நேசத்தை ஏற்கப் பழகுங்கள்!

காதல் பெருகட்டும்!

ரிலாக்ஸ்...

தொகுப்பு: சா.வடிவரசு

காதலிக்க நினைப்பவர்களுக்கும், காதலிப்பவர்களுக்கும்!

பார்க்காமல் காதல், சமூக வலைதளக் காதல் இவையெல்லாம் ஆபத்தானவை. இப்படி தவறான முடிவெடுத்து பாதிக்கப்பட்டவர்கள் பலர். எனவே, எச்சரிக்கையாக இருங்கள்!

காதலால் ஊக்கம் பெற வேண்டும்; இலக்கு தொந்தரவு செய்யப்படக்கூடாது... நினைவில் வையுங்கள்!

சரியான வயது, சரியான நபர், சரியான சந்தர்ப்பம் என அனைத்து வகையிலும் சரியானதாக இருக்கட்டும் உங்கள் காதல். அப்போதுதான், பெற்றோரிடம் அதற்கு அனுமதி கேட்கும் தைரியம் கிடைக்கும், அனுமதியும் கிடைக்கும், சுபத்தில் முடியும்!

இணையிடம் 'என்னைப் போல யாரும் இல்லை’ என்ற பிம்பம் உருவாக்க நடிக்காதீர்கள். உங்களின் நெகட்டிவ் குணங்களை அவரிடம் மறைக்காதீர்கள். நீங்கள் நீங்களாகவே இருங்கள்!

பொசஸிவ்னெஸ் என்பது காதலில் சுவை சேர்க்கும் சின்னச் சின்ன ஊடல்களோடு முடிந்துவிட வேண்டும். அந்த உறவையே காயப்படுத்தி ஆட்டுவிப்பதாக இருக்கக் கூடாது!

இது உங்களுக்காக!

வாசகிகளே! உங்களது பர்சனல் பிரச்னைகளுக்கு தீர்வு காண 'ஆல் இஸ் வெல், அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2’ என்ற முகவரியில் கடிதம் மூலமாகவும்... ‘alliswell-aval@vikatan.com’என்ற ஐ.டி-யில் மின்னஞ்சல் மூலமாகவும் என்னைத் தொடர்பு கொள்ளலாம். பெயர், அடையாளம் தேவையில்லை. இமெயில் முகவரி ரகசியம் காக்கப்படும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism