Published:Updated:

வாழ்க்கையில தோற்கல... ஆனா?

கே.அபிநயா, படங்கள்: எஸ்.சாய்தர்மராஜ், ப.சரவணகுமார்

வாழ்க்கையில தோற்கல... ஆனா?

கே.அபிநயா, படங்கள்: எஸ்.சாய்தர்மராஜ், ப.சரவணகுமார்

Published:Updated:

காதலர்கள், கணவன்-மனைவியாகும்போது, வாழ்க்கை சொர்க்கமாகும். அவர்களே பெற்றோர் ஆகும் போது, பிள்ளைகளின் திருமணப் பேச்சில், வெவ்வேறு மதத்தைத் சார்ந்த தங்களின் பின்புலம் அலசப்படும் போது, நோவார்களா? தங்களைப் போலவே, தங்கள் பிள்ளைகளும் வேறு மதத்தைச் சேர்ந்த இணையைத் தேர்ந்தெடுக்கும்போது மகிழ்வார்களா, மறுப்பார்களா? மதம் மாறி திருமணம் செய்துகொண்ட இரண்டு காதல் தம்பதிகளைச் சந்தித்தோம்!

வாழ்க்கையில தோற்கல... ஆனா?

புதுக்கோட்டையைச் சேர்ந்த தம்பதி, நூர்ஜகான்  நாகூர்கனி. நூர்ஜகான், திலகமாக ஓர் இந்துக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பெண். தான் நேசித்த நாகூர்கனிக்காக, நூர்ஜகானாக மாறியவர். ''ப்ளஸ் டூ முடிச்சுட்டு, டைப்ரைட்டிங் கிளாஸுக்குப் பஸ்ல போயிட்டு வந்தப்போ, அந்த பஸ்ல கண்டக்டரா வேலை பார்த்தவருதான், இவரு. ரெண்டு பேரும் காதலிச்சோம். ரெண்டு பேர் வீட்டிலும் பயங்கர எதிர்ப்பு. வீட்டை விட்டு சென்னை போய், இந்து முறைப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அவர் வீட்டுல கொஞ்ச நாள்ல ஏத்துக்கிட்டு, அவங்க முறைப்படி கல்யாணம் பண்ணி வெச்சாங்க. 24 வருஷமாச்சு. இன்னிவரைக்கும் எங்க வீட்டுல என்னை ஏத்துக்கல. இவருக்காக நான் நூர்ஜகானா மாறினேன். அழகா, ஆசையா, அன்பா வாழ்ந்தோம். இப்போ எங்களுக்கு ஒரு மகள், ஒரு மகன். அவங்களை நல்லபடியா வளர்த்திருக்கோம். நாங்க வாழ்க்கையில தோற்கல. ஆனா...'' என்று நிறுத்திய நூர்ஜகான், ''என்னதான் இருந்தாலும், பிறந்த வீட்டு நினைப்பு வந்துட்டா ரொம்பத் துயரமா இருக்கும். எல்லாம் இருந்தும், எதுவுமே இல்லாத மாதிரி அப்பப்போ விரக்தி வரும். அதனால என் பிள்ளைங்ககிட்ட, 'காதல் திருமணம் உங்களுக்கு வேண்டாம்’னு சொல்லியிருக்கேன். நாங்க ஏத்துக்கிட்டாலும், சம்பந்தி வீட்டுல அவங்களை ஏத்துக்கலைனா, கஷ்டம்தான். இதோ இப்ப வரைக்கும் என் வீட்டுக்காரர் எப்படி இருப்பார்னுகூட என் பிறந்த வீட்டுக்குத் தெரியாது. தெரியவும் வேண்டாம்னு இருக்காங்க. அப்படி உறவுகளோட அரவணைப்பில்லாம என் பிள்ளைங்க கஷ்டப்பட்டா, அதை எங்களால தாங்கிக்க முடியாது. நாங்க இன்னிக்கு நல்லா இருந்தாலும், இதுக்குப் பின்ன நிறைய புறக்கணிப்புகளைக் கடந்து வந்திருக்கோம். அதெல்லாம் என் பிள்ளைகளுக்கு வேண்டவே வேண்டாம்!'' என்ற நூர்ஜகான் கண்ணீரில் நனைய, ஆமோதிக்கிறார் நாகூர்கனி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாழ்க்கையில தோற்கல... ஆனா?

சென்னையைச் சேர்ந்த காதல் தம்பதி, முகமது அபுபக்கர்  ஜான்சி ராணி. ''இந்து மதத்தைச் சேர்ந்தவரான ஜான்சி ராணி, என் பக்கத்து வீட்டுல குடியிருந்தாங்க. அப்பத்தான் காதலிச்சு, கல்யாணம் பண்ணிக்கிட்டேன். மனைவியோட வீட்டில் 3 வருஷம் கழிச்சு எங்கள ஏத்துக்கிட்டாங்க. எங்க வீட்டுல ஏத்துக்க 18 வருஷமாச்சு. திருமணமான இந்த 28 வருஷத்துல யார் எங்க கூட இருந்தாலும், இல்லைனாலும், நாங்க அதே காதலோடதான் வாழறோம். வாழ்க்கையில ஜெயிச்சுக் காட்டியிருக்கோம்!'' என்றவருக்கு, ஒரு மகன் இருக்கிறார்.

''இத்தனை வருஷமா இந்த சமூகம் எங்களுக்கு எவ்வளவு தண்டனைகள் கொடுத்திருக்கு தெரியுமா? என்ன தப்பு பண்ணிட்டோம்? மதம் மாறி காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டதுனால, யாருக்கு என்ன கெடுதல் நேர்ந்துச்சு? எங்க சொந்தக்காரங்க, 'இவன் மதத்துக்கு துரோகம் செய்றான்’னு, 'காபிர்’ என்ற வார்த்தையால என்னைச் சாடுவாங்க. இந்த சமூகத்துக்குப் பழி சொல்ல வரும். ஆனா, வழி சொல்லத் தெரியாது.

வாழ்க்கையில தோற்கல... ஆனா?

ஒருமுறை என் நண்பன் ஒருத்தன்கிட்ட சும்மா விளையாட்டுக்கு, 'உன் பொண்ணை என் பையனுக்கு திருமணம் செய்து வைக்கிறியா?’னு கேட்டேன். அதுல இருந்து அவன் எங்கிட்ட இருந்து ஒதுங்கிப்போயிட்டான். ஒரு ஹோட்டல்ல ரூம் புக் பண்ணப் போனாலும், பெயர் வெவ்வேறு மதத்தைச் சார்ந்து இருக்குறதைப் பார்த்து சந்தேகிக்கிறது நடக்கும். கூடவே, அரசு கலப்பு மத திருமணம் செய்துக்குறவங்களுக்கு சலுகைகள் அறிவிச்சாலும், அதற்கான விண்ணப்பத்தின் மீதான விசாரணைனு சொல்லி உறவையே சந்தேகப்பட்டு கேள்விகள் கேட்பாங்க'' என்ற அபுபக்கர், அடுத்து சொன்னது... காதலின் மீதான அவருடைய காதலை அழுந்தச் சொல்வதாக இருந்தது.

"மதம் மாறி திருமணம் செய்துகிட்டா, இதையெல்லாம் எதிர்கொண்டுதான் ஆகணும். சொல்லப்போனா, அந்த சங்கடங்களே நம்மை வலிமையா மாத்தும். எங்க கதை எல்லாமே என் பையன் விட்மன் குமரேசனுக்குத் தெரியும். 'நீ காதலிச்சா... நாங்க சந்தோஷமா சப்போர்ட் பண்றோம். நீயும் எங்களை மாதிரி தைரியமா, பொறுமையா, வெற்றிகரமா வாழ்ந்து காட்டணும்!’னு சொல்லியிருக்கோம்! சரிதானே!''

உறுதியான புன்னகை தருகிறார், முகமது அபுபக்கர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism