'கல்யாணம் பண்ணிப்பார்... வீட்டைக் கட்டிப்பார்' என்பார்கள். சாதாரணமாக இருப்பவர்களின் திருமணங்களுக்கே இப்படி என்றால், வெண்புள்ளிகளுடன் இருப்பவர்களுக்கு? இவர்களுக்குக் கைகொடுப்பதற்காகவே சுயம்வரங்களை நடத்தி வருகிறது 'வெண்புள்ளிகள் விழிப்பு உணர்வு இயக்கம் இந்தியா' என்கிற அமைப்பு.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்கவிருக்கும், நான்காவது சுயம்வர நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டில் பரபரப்பாக இருந்த அதன் செயலாளர், டாக்டர் உமாபதியைச் சந்தித்தோம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
''வெண்புள்ளிகள் என்பது நோயல்ல; அது ஒரு நிறமி இழப்பே. இது பரம்பரைக் கோளாறோ, பிறருக்குத் தொற்றும் தன்மை கொண்ட பிரச்னையோ அல்ல. நிரூபிக்கப்பட்ட அறிவியல்பூர்வமான உண்மை இது என்றபோதும், இன்று எவ்வளவு படித்திருந்தாலும், கைநிறைய சம்பாதித்தாலும் அவர்களுக்குத் திருமணம் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. நெருங்கிய உறவினர்கள் உட்பட, அவர்களைத் திருமணம் செய்துகொள்ள யாரும் முன்வருவதில்லை. அதுமட்டுமல்ல... அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி என ஒரு குடும்பத்தில் யாருக்காவது வெண்புள்ளிகள் இருந்தால், அக்குடும்பத்தின் இளவயதினரின் திருமணம் அந்தக் காரணத்தாலேயே தடைப்படுகிறது, தாமதப்படுகிறது. இன்னொருபுறம், திருமணம் நடந்தாலும், அதற்குப் பின் கணவர்/மனைவி வீட்டின் உறுப்பினர்களால் தாங்கள் எதிர்கொள்ள நேரும் புறக்கணிப்பையும், கடக்க நேரும் சுடுசொற்களையும் யோசித்து, திருமணமே வேண்டாம் என்ற முடிவுக்குச் செல்கிறார்கள் வெண்புள்ளிகள் கொண்ட சிலர்.
இத்தகைய அச்சுறுத்தும் சூழலை அகற்றி, பாதுகாப்பான, நிம்மதியான சூழலில் வெண்புள்ளிகள் உடையோர் வாழ பேருதவி புரியும் பாதையே, இந்த சுயம்வர நிகழ்ச்சி. எங்கள் அமைப்பின் சார்பில் நடத்தப்படும் நான்காவது நிகழ்ச்சி, வரும் ஏப்ரல் மாதம் 5ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, பாண்டிச்சேரியில் நடைபெறவிருக்கிறது. தேர்ந்தெடுப்பவர், தேர்ந்தெடுக்கப்படுபவர் என இரண்டு தரப்பைச் சேர்ந்த, திருமண வயதில் உள்ள வெண்புள்ளிகள் கொண்டோர் இந்தச் சுயம்வரத்தில் கலந்துகொள்வார்கள். வெண்புள்ளி கொண்டவரை திருமணம் செய்ய முன் வரும் வெண்புள்ளி அற்றவர்களும், அன்புடன் வரவேற்கப்படுகிறார்கள். பங்கேற்க கட்டணம் எதுவும் இல்லை. விண்ணப்பங்கள் எங்களுக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் மார்ச் 25'' என்ற உமாபதி, தங்கள் இயக்கத்தின் மூலம் ஏற்கெனவே இந்த சுயம்வர நிகழ்வை திருச்சி, திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூரில் நடத்தியிருப்பதுடன், அதன் மூலமாக இதுவரை 373 திருமணங்களையும் முடித்து வைத்துள்ளார் என்பது நற்செய்தி!

''வெளிநாடுகளில் வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இணைந்து செயல்படுகின்றன. இந்தப் பிரச்னைக்கான சிகிச்சைகள், சமூகத்தை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை, வெண்புள்ளிகள் கொண்ட குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர், இளம் பருவத்தினர் எதிர்கொள்ளும் உணர்வு ரீதியான சவால்கள், அதற்கான கவுன்சலிங், வெண்புள்ளிகள் குறித்து அவ்வப்போது வரும் செய்திகள் என்று பல்வேறு விஷயங்களையும் தங்களுக்குள் பகிர்ந்துகொள்கிறார்கள். விடுமுறை நாட்களில் இவர்கள் அனைவரும் சேர்ந்து சுற்றுலா செல்கிறார்கள், ஒருவரோடு ஒருவர் அன்பு பாராட்டிக் கொள்கிறார்கள், தங்களுக்குள் திருமண பந்தங்களை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இதெல்லாம் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலையும், தேறுதலையும் தந்து, இயல்பான வாழ்க்கையை அவர்களுக்குப் பரிசளிக்கிறது.
அது போன்ற ஒரு ஆரோக்கியமான சூழலை நமது நாட்டிலும் உருவாக்குவதுதான் எங்கள் நோக்கம். வெண்புள்ளிகள் கொண்டவர்களின் விரக்தி மனப்பான்மையை அகற்றி, அவர்களின் வாழ்க்கையில் வசந்தத்தைச் சேர்க்கும் பயணத்தில், இந்த சுயம்வரம் ஒரு முக்கிய மைல் கல். வாருங்கள்... வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்!'' அக்கறையும், அழைப்பும் தந்தார் டாக்டர் உமாபதி.
விண்ணப்பிக்க..!
வெண்புள்ளிகள் விழிப்பு உணர்வு இயக்கம் இந்தியா, எண். 4/8, தெய்வ நகர் முதல் தெரு, பட்டேல் நகர், மேற்கு தாம்பரம், சென்னை - 600045 என்ற முகவரி அல்லது leucodermafree@yahoo.in என்ற இமெயில் முகவரியையும் தொடர்புகொள்ளலாம்.
சா.வடிவரசு