Published:Updated:

ஆல் இஸ் வெல்! - 13: இணை ஏன் அவசியம்?

ஆல் இஸ் வெல்! - 13: இணை ஏன் அவசியம்?

மீபத்தில் கிடைக்கப்பெற்ற வாசகி ஒருவரின் மெயில் இது... '30 வயதாகும் எனக்குத் திருமணத்தில் விருப்பம் இல்லை. ஆனால், என் வீட்டில் உள்ளவர்கள் என்னைக் கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள். வீட்டில்தான் இப்படி என்றால், எங்கு சென்றாலும், 'எப்போ கல்யாணம்?’ என்ற கேள்வியே துரத்துகிறது. ஒரு பெண் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழக் கூடாதா... வாழ முடியாதா?’

வாசகியின் ஆதங்கக் கேள்வி இது. ஆனால், ஒரு பெண் திருமணம் வேண்டாம் என்று சொன்னால், 'என்ன பிரச்னை... யாரையாவது காதலிக்கிறாளா... ஹோமோசெக்ஸுவலா?’ என எல்லா கோணங்களிலும் கேள்விகள் கேட்கும் இந்தச் சமூகம். என்றாலும்கூட, இன்று பெண்கள் சுயமாகச் சம்பாதிக்கும் சூழலில், அதையெல்லாம் புறந்தள்ளி அவர்களால் 'சிங்கிள்’ ஆக வாழ முடியும். ஆனால், அந்த வாழ்க்கை இறுதிவரை அவர்களுக்குச் சந்தோஷமானதாக இருக்காது என்பதுதான் உண்மை!

ஆல் இஸ் வெல்! - 13: இணை ஏன் அவசியம்?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எல்லா உயிரினங்களுக்கும் இணை என்பது அவசியம். அதுதான் இயற்கை நியதி. இணை என்றால் கணவன், மனைவி மட்டும் கிடையாது. அப்பா, அம்மா, நண்பன், தோழி என எவரும் இணை ஆகலாம். இணை என்பவர், எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்புடனும், எல்லை இல்லாத அக்கறையுடனும், கஷ்டநஷ்டத்தில் பிரியாத பந்தத்துடனும் சேர்ந்து வாழ்பவர். அம்மாவும் அப்பாவும் இப்படியான ஓர் இணையாக இருக்கலாம். ஆனால், அவர்களின் காலத்துக்குப் பின்? அதற்காக ஏற்படுத்தப்பட்டதுதான் திருமண பந்தம். மற்ற உறவுகளும், நட்புகளும் பிணக்குக்கொள்ளவோ, பிரியவோ எத்தனையோ சந்தர்ப்பங்களைத் தரும் வாழ்க்கை இது. கணவன், மனைவி பிரியவும் அப்படியான சந்தர்ப்பங்கள் உண்டு. என்றாலும், குழந்தை என்ற நங்கூரம் அந்தச் சூழ்நிலைகளைச் சமாதானப்படுத்தி அவர்களை ஆயுள் வரை இணைந்து வாழ்தலுக்குச் செலுத்துகிறது. அதனால்தான் அந்த உறவை 'இணை’ என்கிறோம்.

'ஆயுளுக்கும் இணைத்து வைக்கும் அந்தத் திருமணம்தான் தேவையில்லை என்கிறோம். பிடித்தால் சேர்வதும், பிடிக்காத புள்ளியில் எளிமையாகப் பிரிவதும் எங்கள் 'லிவிங் டுகெதர்’ வாழ்வில் சாத்தியமாகிறது. நாங்கள் சந்தோஷமாக இல்லையா?’ என்று ஒரு தரப்பு சொல்லக் கூடும். அது, குறுகியகால சந்தோஷம் என்பதுதான் உண்மை. பிடிக்காத புள்ளியில் எளிமையாகப் பிரிந்த பின்..? இன்னொரு தேர்வுடன் 'லிவிங் டுகெதர்’ அல்லது சிங்கிளாகவே இருப்பது என வைத்துக்கொள்வோம். நண்பர்கள், தோழிகள், வேலை, சம்பாத்தியம், கேலி, கொண்டாட்டம் எனக் கழியும் இளமையில், சந்தோஷத்துக்காக இத்தனை காரணிகள் இருக்கும்போது, இணை என ஒன்று தேவையில்லை எனத் தோன்றலாம். ஆனால், நரை முளைக்கும் நாற்பதிலும், உடல் சோரும் ஐம்பதிலும், இந்தக் காரணிகளில் பல காணாமல் போயிருக்கும். அப்போது சந்தோஷத்தை, அதைவிட அந்த வயதின் அதிகத் தேவையாக இருக்கும் நிம்மதியை, எந்தக் கடையில் போய் வாங்க முடியும்?

இன்னும் சிலர், வாழ்க்கை முதுகில் ஏற்றிய பொறுப்புகளால், மண வயதில் மாலை கண்டிருக்க மாட்டார்கள். அதையே காரணமாகச் சொல்லி, '35 வயசுல எந்த மாப்பிள்ளை கட்டிக்குவார்?’, '45 வயசுல யாரு பொண்ணு கொடுப்பா?’, 'கடைசி வரைக்கும் இப்படியே இருந்துடறேன்’ என்று முடிவெடுப்பார்கள். அது தவறு. ஒருவர் தனக்கான இணையை எந்த வயதிலும் தேர்ந்தெடுக்கலாம். திருமணம் தாமதமானது வருத்தம்தான். ஆனால், திருமணமே வேண்டாம் என்ற முடிவு பின்நாளில் தரக்கூடிய வருத்தம், அதைவிடப் பல மடங்கானதாக இருக்கும்.

சில வருடங்களுக்கு முன் 40 வயதான பெண் ஒருவரை அழைத்து வந்தனர் அவரின் சகோதர, சகோதரிகள். 'எவ்ளோ சொல்லியும் கல்யாணம் செய்துக்க மாட்டேங்கிறாங்க. நீங்கதான் சொல்லிப் புரிய வைக்கணும்...’ என்று என்னிடம் ஒப்படைத்தார்கள். அந்தப் பெண்ணிடம் தனிமையில் பேசினேன். தாய், தந்தை சிறு வயதிலேயே தவறிப் போக, தன் சகோதர, சகோதரிகளுக்காக குடும்பப் பொறுப்பை ஏற்று, தன் உழைப்பில் அனைவரையும் படிக்க வைத்து, திருமணமும் முடித்து வைத்துள்ளார் அவர். ''அப்பப்போ, 'நீ ஒரு கல்யாணம் பண்ணிக்கோ’னு எங்கிட்ட அவங்க எல்லாம் சொன்னாலும், அதை பொறுப்பெடுத்து யாரும் நடத்தல. இப்போ எல்லோரும் குடும்பமா செட்டில் ஆனதுக்கு அப்புறம், ஒத்தையா நிக்கிற நான் யாருக்கும் பாரமாயிடக் கூடாதுனு, என்னைக் கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்க. ஆனா, இந்த வயசுல எப்படி? என் இளமையை எல்லாம் அவங்களுக்காக தொலைச்சேன். அவங்கதான் உலகம்னு நினைச்சேன். இன்னிக்கு எனக்குனு ஒரு துணை இல்லையேனு நினைக்கும்போது, வெறுமையா இருக்கு. ஆனா, இதுதான் என் விதி!'' என்று சொல்லி அழுதார்.

''இந்த வயதுக்குப் பின் திருமணம் செய்துகொள்வதால், வாழ்வில் சேரப்போவது நிச்சயம் இன்பமே; துன்பம் அல்ல. உங்களுக்கே உங்களுக்கென ஒருவர் வேண்டுமல்லவா? 'பெட்டர் லேட் தன் நெவர்’ என்பது உங்களுக்கு மிகப் பொருந்தும். ஊர், உலகம் என்ன சொல்லும் என்றெல்லாம் எந்தத் தயக்கமும் வேண்டாம். அவர்களில் யாரும் உங்கள் தனிமைக்குப் பதில் சொல்லப் போவதில்லை; முதுமைக்குத் துணையாகப் போவதில்லை. எனவே, வயதிலும் மனதிலும் உங்களுக்குப் பொருத்தமான துணையைத் தேர்ந்தெடுத்து, சந்தோஷமாகத் திருமணம் செய்துகொள்ளுங்கள்!'' என்று அந்தப் பெண்ணிடம் கூறி அனுப்பினேன். ஒரு வருடத்தில் அவரை மீண்டும் சந்திக்க நேர்ந்தபோது, ''இதுவரை எல்லாருக்காகவும் நான் இருந்தேன். ஆனா, நீங்க சொன்ன மாதிரி எனக்காக ஒருத்தர் இருக்கிற சந்தோஷமும் நிம்மதியும் இப்போதான் புரியுது!'' என்றார் மகிழ்ச்சியுடன்.

துணையின்றி செயல்படும் நபர்களுக்கு மூளை சம்பந்தமான பிரச்னைகள் வர அதிக வாய்ப்புள்ளதாகக் கண்டறிந்துள்ளார்கள். அதோடு தனிமையில் இருப்பவர்களுக்கு பயம், தைரியமின்மை துணையாகச் சேர்ந்துகொள்ளும். வாழ்க்கையில் ஜெயித்த வர்கள் அனைவரும், தங்கள் வெற்றிக்குப் பின் இருப்பதாகக் குறிப்பிடுவது தங்களின் இணையாகத்தான் இருக்கும். அந்த இணையை, பணம், அழகு போன்ற புறக் காரணிகள் தவிர்த்து... அன்பு, புரிதல், நம்பிக்கை போன்ற அம்சங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கும்போது, அந்த உறவு வெற்றிப் பாதையில் பயணிக்கும். ஒவ்வொரு செயலிலும் இணையின் ஒப்புதல், இன்னும் ஊக்கத்தோடும் வேகத்தோடும் இயங்க வைக்கும் மாபெரும் சக்தி. ஒருவரின் முயற்சியைப் பாராட்டும், தோல்வியில் தூக்கிவிடும், வெற்றியைக் கொண்டாடும் இணை, அவரை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வார்.

எனவே, 'திருமணம் செய்துகொள்ளாமல் வாழ முடியாதா?’ என்ற கேள்வி, பலவீனமானது!

ரிலாக்ஸ்...

தொகுப்பு: சா.வடிவரசு

சிக்கல்கள் பலவிதம்!

இணை இல்லாதவர்களுக்கு அல்லது சரியான இணை கிடைக்கப் பெறாதவர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் இவை...

தனிப்பட்ட அல்லது தொழில் சார்ந்த வளர்ச்சி அவ்வளவாக இருக்காது.

வாழ்க்கையில் எதையோ இழந்துவிட்ட எண்ணம் நிச்சயம் அடிக்கடி மனதில் எழும்.

கேலி, கிண்டலுக்கு ஆளாகி சுயவெறுப்பு, தாழ்வு மனப்பான்மை வரும்.

தான் கஷ்டப்படுவது மட்டுமல்லாமல், தன்னைச் சார்ந்தவர்களையும் கஷ்டப்படுத்தக்கூடும்.

தனிமை உணர்வால் தூக்கமின்மை தொடங்கி, நிம்மதியின்மை வரை உண்டாகும்.

மனநலப் பிரச்னைகளுக்கு இலக்காகக் கூடும்.

- டாக்டர் அபிலாஷா

உங்களது பர்சனல் பிரச்னைகளுக்கு தீர்வு காண...

‘ஆல் இஸ் வெல், அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2, என்ற முகவரிக்கு கடிதம் எழுதலாம்.e-mail: ‘alliswell-aval@vikatan.com