Published:Updated:

இது ஒரு ‘விளையாட்டு’ குடும்பம்!

இது ஒரு ‘விளையாட்டு’ குடும்பம்!

இது ஒரு ‘விளையாட்டு’ குடும்பம்!

இது ஒரு ‘விளையாட்டு’ குடும்பம்!

Published:Updated:

40+ என்றால், பெண்களைப் பொறுத்தவரை ஓய்வுக்கு சற்று முந்தைய வயது. 'உடம்பில் கால்சியம் குறையும், சோர்வு மேலோங்கும்’ என்று மருத்துவ உலகமும் அதைத்தான் சொல்கிறது. ஆனால், சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற 33-வது தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் வெண்கலம் வென்று வந்திருக்கும் பாண்டியம்மாளின் வயது... 43.

திருவாரூரில் வசிக்கும் பாண்டியம்மாள், அங்குள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் சிறப்பு உதவி ஆய்வாளர். இவர் மட்டுமல்லாமல் இவருடைய கணவர், மூன்று குழந்தைகள் என இந்தக் குடும்பத்தின் ஐந்து உறுப்பினர்களும் விளையாட்டில் மாநில, தேசிய, சர்வதேச அளவில் வெற்றியாளர்கள்.

''ஏழைக் குடும்பத்தில் பிறந்தேன். பள்ளிக்கூடம் படிக்கும் போதிலிருந்தே ஸ்போர்ட்ஸில் ஆர்வமா இருப்பேன். 1991-ல், உயரம் தாண்டுதல் விளையாட்டுப் போட்டியில, தேசிய அளவுல தங்கம் வென்றேன். ஆனா, அதோட என் பயிற்சியாளர் பிரான்க் பால் ஜெயசீலன் பணிமாறுதலாகிப் போயிட்டதால, என்னை வளர்த்துவிட ஆள் இல்லாமப் போனது. ஆனாலும், அந்த கோல்ட் மெடல், நான் ப்ளஸ் டூ முடிச்ச ரெண்டு மாசத்துல, எனக்கு காவல்துறையில வேலை வாங்கிக் கொடுத்துச்சு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது ஒரு ‘விளையாட்டு’ குடும்பம்!

அதுக்கு அப்புறம், காவல்துறைக்கு தேவையான ஒரு கலையைக் கத்துக்கலாம்னு நினைச்சேன். அப்போ நாகை மாவட்டத்துல 'டேக்வாண்டோ’ பயிற்சி கொடுத்திட்டிருந்த, மூன்று முறை உலகக் கோப்பை டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்ல கலந்துக்கிட்ட ராஜன் சார் பத்தி தெரியவந்துச்சு. அவர்கிட்ட பயிற்சிக்குச் சேர்ந்து, இந்த சிறப்பான தற்காப்புக் கலையான டேக்வாண்டோ பற்றி முழுமையா கத்துக்கிட்டேன். மாநில அளவுப் போட்டிகளில் தொடர்ந்து எட்டு முறை வெற்றி பெற்று, அப்புறம் தேசிய அளவுப் போட்டிகளிலும் வென்றேன்'' என்று பாண்டியம்மாள் பேசிக்கொண்டிருக்கும்போதே, உரையாடலில் தானும் இணைந்தார், கணவர் பாலசங்கர். இவரும் 'டேக்வாண்டோ’வில் தேசிய அளவில் சாதனைகள் புரிந்தவர். திருவாரூர் நகர காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிகிறார்.

''நானும் டேக்வாண்டோ வீரர். அதனால, கல்யாணத்துக்கு அப்புறம் நான் அவங்களையும், அவங்க என்னையும் டேக்வாண்டோவில் சாதிக்க ஊக்கப்படுத்திட்டே இருந்தோம். ரெண்டு பேருமே காவல்துறையில வேலை பார்க்கிறதால, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், நாகைனு பல மாவட்டங்களுக்கு டிரான்ஸ்ஃபர், பல ஊர் தண்ணி குடிக்க வேண்டிய சூழ்நிலை. அதனால, எங்க பிள்ளைங்க ஜானி தர்மா மற்றும் கார்த்தியை, சின்ன வயசுலேயே ஸ்போர்ட்ஸ் ஸ்கூலில் சேர்த்துட்டோம். அவங்களோட களமும் டேக்வாண்டோதான். மூத்தவன் ஜானி தர்மா, இன்டர்நேஷனல் கோல்ட் மெடலிஸ்ட். ரெண்டாவது பையன் கார்த்தி, நேஷனல் கோல்ட் மெடலிஸ்ட். மகள் ஸ்டெஃபி, நாமக்கல்ல ப்ளஸ் டூ படிக்குது. ஸ்டெஃபிக்கும் டேக்வாண்டோ பயிற்சி கொடுத்தோம். ஆனா, சின்னப்பிள்ளையா இருக்கும்போது ஏற்பட்ட ஒரு காயம் காரணமா, தொடர முடியல. ஆனாலும், ஸ்டெஃபி இப்போ கூடைப்பந்து விளையாட்டுல மாநில அளவிலான வீராங்கனை!''

வியக்க வைத்தது விளையாட்டுக் குடும்பம்!  

''இது எளிதில் கிடைச்ச வெற்றி இல்லைங்க. நிறைய தியாகங்கள் செஞ்சிருக்கோம். நாங்க அஞ்சு பேரும் ஒண்ணா சந்திக்கிறதே டோர்னமென்ட் சமயங்களிலும், பண்டிகை சமயங்களிலும்தான். எங்க குடும்பத்துல எல்லோருக்கும் என் வீட்டுக்காரர் பாலசங்கர்தான் கோச். வெளிய நிறைய பயிற்சிகள் எடுத்துக்கிட்டாலும், வீட்டுல இயல்பா இவர் தர்ற கோச்சிங்தான் எங்களுக்கு எனர்ஜி டானிக். இத்தனை வயசிலும் நான் போட்டிக்குப் போறதையும், பதக்கங்கள் வாங்குறதையும் பற்றி ஆச்சர்யமா கேட்பாங்க. உடம்போட சாவி, மனசுதான். அதனால, மனசை தன்னம்பிக்கையும் சுறுசுறுப்பும் நிரம்பினதா வெச்சுக்கிட்டோம்னா, அந்தச் சாவியாலேயே உடலை இயக்கிடலாம். அதுதான் என்னோட ஃபார்முலா!'' என்று சீக்ரெட் சொன்ன பாண்டியம்மாள்,  ''டேக்வாண்டோ அசோஸியேஷன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தரும் ஆதரவு, எங்களை மேலும் சிறப்பா தயார் செய்ய உதவுது. நானும் என் வீட்டுக்காரரும் சேர்ந்து காவலர் பயிற்சிப் பள்ளிகளுக்கு வகுப்புகள் எடுக்கச் செல்லும்போது, 'சூப்பர் ஜோடி’னு எல்லோரும் பாராட்டுவாங்க!''

- பெருமையுடன் சொன்னார்.

ஸ்போர்ட்ஸ் ஸ்டார்ஸ் குடும்பம்!

த.க.தமிழ் பாரதன், படங்கள்: ம.பார்த்திபன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism