Published:Updated:

பெண்கள் ஜாக்கிரதை!

பெண்கள் ஜாக்கிரதை!

பெண்கள் ஜாக்கிரதை!

பெண்கள் ஜாக்கிரதை!

Published:Updated:

உள்ளத்தை உலுக்கும் நிதர்சன சினிமா!

தை என்றால், ரசிக்கலாம். உலுக்கும் உண்மையைக் கதையாகச் சொல்லும்போது..? விளைவை உணர்ந்து, அதிரத்தானே வேண்டியிருக்கும்! 'நா பங்காரு தல்லி’ எனும் தெலுங்கு படத்தைப் பார்த்தால்... இதுதான் நடக்கும்!

சமூக சேவகர் சுனிதா கிருஷ்ணன் மூலமாக அறியப்பட்ட உண்மைச் சம்பவங்களுக்கு, இயக்குநர் ராஜேஷ் டச்ரிவர் திரை வடிவம் கொடுத்திருக்கும் இந்தப் படம், ஒரு முக்கியப் பதிவு. அதனால்தான், மூன்று தேசிய விருதுகள், இரண்டு சர்வதேச விருதுகளை வென்று பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது... 'நா பங்காரு தல்லி’! (பொதுவாக, தெலுங்கில் மகள்களை இப்படித்தான் கொஞ்சுவார்கள் தமிழில் இதன் பொருள் 'என் தங்க அம்மா').  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெண்கள் ஜாக்கிரதை!

கடந்த நவம்பர் மாதம் தெலுங்கிலும், ஜனவரியில் மலையாளத்திலும் வெளியாகியுள்ள இப்படத்தின் கதைநாயகி 'துர்கா’வாக, அஞ்சலி பாட்டில் நடித்திருக்கிறார். நாயகியின் அப்பாவாக, சித்திக். மிகக்குறைந்த வசனங்களே பரிமாறப்படும் படத்தை அஞ்சலியின் நடிப்பும், அப்பா, மகளின் பாசமும் எடுத்துச் செல்கிறது மென்மையாக!

அப்பாவுக்கு மகள் மேல் அதீத பாசம். மகளுக்கு அப்பாவை நினைத்து அத்தனை பெருமை! 'கிராமத்தில் பெரிய மனிதரான தன் அப்பா, டவுனில் பெரிய பிசினஸ் செய்கிறார்; ஏழைகளுக்கு உதவுகிறார்’ என்று அப்பாதான் ஹீரோ. பள்ளியில் பெற்ற மதிப்பெண்ணுக்காக பரிசு கொடுக்கப்பட, 'எல்லாமுமாக இருந்து என்னை வழி நடத்தும் என் அப்பாவின் கையால் வாங்க ஆசைப்படுகிறேன்!'' என்று மகள் அழைக்க, மேடையில் மகளை அப்பா ஆரத்தழுவி உச்சிமுகரும் காட்சி... தந்தை மகள் உறவின் அழகு!

தன் கிராமத்தில், சிறுவன் ஒருவன், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட, அவனைக் கண்டிக்கிறார் துர்கா. "டி.வியில காட்டுறதைத்தானே செஞ்சேன்... இதுல என்ன தப்பு?'' என்று சிறுவன் கேட்கும்போது, சாட்டையடி மீடியாவுக்கு! கூட்டம் கூடிவிட, சிறுமியின் தாய், அவமானத்துக்கு ஒதுங்கி அவளை எதுவும் சொல்லவிடாமல் அழைத்துச் செல்கிறார். ஊரார், துர்காவைத் திட்ட நேர்ந்தாலும், சிறுமியைக் காப்பாற்றிய நிம்மதி அவருக்கு.

இன்னொரு சந்தர்ப்பத்தில், கோயிலில் வரிசையில் நிற்கும் ஒரு பெண்ணை ஒருவன் சீண்டுகிறான். துர்கா, அக்னி பார்வை வீச, தப்பித்தால் போதும் என்று அங்கிருந்து ஓடுகிறான் கயவன். "இந்தப் பொண்ணுக்கு ரொம்ப தைரியம்!'' என்று மெச்சுகிறது ஊர். "எல்லாம் என் அப்பா வளர்ப்பு!'' என்று பெருமிதப்படுகிறார் துர்கா.

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் மாநில ரேங்க் வாங்கிய துர்கா, ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற கல்லூரியில் சேர விருப்பப்படுகிறார். அவரை தன் கைக்குள் வைத்து வளர்க்கும் அப்பா, "டவுனுக்கு எல்லாம் போகக் கூடாது'' என்று மறுக்க...  மகளுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்கிறார் அம்மா. திருமணத்துக்குப் பின் துர்காவை படிக்க அனுமதிக்கும் ஒப்பந்தத்தோடு நிச்சயதார்த்தம் முடிகிறது.

பெண்கள் ஜாக்கிரதை!

கல்லூரி அட்மிஷனுக்கான நேர்காணலுக்கு ஹைதராபாத் செல்லும் அஞ்சலி, கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார். அவரைத் தேடித் தவிக்கிறார் அப்பா. பாலியல் கூடத்தில் இருப்பவர்களிடம், "அக்கா வலிக்குது...'' என்று கதறி அழுதும், கரிசனம் எதுவும் கிடைக்காமல் பலருக்கும் இரையாகிறார் துர்கா. "நான் கல்லூரியில் சேர வந்தேன், ஸ்டேட் லெவல்ல எட்டாவது ரேங்க், நிறைய படிக்கணும்னு ஆசை... என்னை விட்டுருங்க...'' என்று ஒரு பெண்ணிடம் இவர் கதற, "நான் ஸ்டேட் லெவல்ல ஆறாவது ரேங்க். மேல படிக்கணும்னு ஆசைப்பட்டு வந்த என்னை, இங்க தள்ளினது உங்கப்பாதான்!'' என்று அந்தப் பெண் சொல்ல, இடிந்து அதிர்கிறார் துர்கா.

சமூகத்தின் நன்மதிப்பு பெற்றவராக, தன் அம்மாவுக்கு அன்பான கணவராக, தான் கொண்டாடிய தன் அப்பா, பெண்களை வைத்து ஹைதராபாத்தில் பாலியல் தொழில் நடத்தி வருகிறார் என்று அறிந்தபோது, சிதைகிறது அந்த மகளின் மனம். வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி கிராமத்தில் இருந்து அழைத்து வரப்படும் சிறுமிகளை எல்லாம் சிறகுகள் வெட்டி, பாலியல் தொழிலுக்குப் பலி கொடுத்து சம்பாதித்த பணத்தில்தான் தன்னை வளர்த்திருக்கிறார் என்ற உண்மை, ரணமாக்குகிறது மகளை! அப்பாவின் தொழில் போட்டியால், அவரின் முதலாளியாலேயே தான் கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதை எண்ணி வெதும்புகிறார்.

ஒருவழியாக தப்பித்து, சொந்த ஊர் வருகிறார் துர்கா. சிறிது நேரத்தில் அப்பா வருகிறார். மகளின் அருகே அமர்ந்து காலைத் தொடுகிறார். "எடுடா கைய...'' என்று காறி உமிழ்ந்து வெடிக்கிறார் துர்கா. நேராக அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார் அப்பா. அதைக் காணும் அம்மா கதறி அழ, வாசலில் அமர்ந்திருக்கும் மகளின் லேசான புன்னகையுடன் முடிகிறது படம்.

எந்த ஆணும் இங்கு பெண்களின் நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்ல. அப்பா, கணவர், சகோதரர், நண்பர், வழிகாட்டி என்று ஒரேயடியாக நம்பினால், அது பொய்ப் பதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது என்பதை அழுத்தமாகப் பதித்திருக்கிறது இப்படம்.

சில உண்மைகள் தரும் அதிர்வலைகள் அடங்க நேரமாகும்... 'நா பங்காரு தல்லி’

போல!

ந.ஆஷிகா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism