Published:Updated:

படத்துக்கு தடை... நிஜத்துக்கு?

படத்துக்கு தடை... நிஜத்துக்கு?

படத்துக்கு தடை... நிஜத்துக்கு?

படத்துக்கு தடை... நிஜத்துக்கு?

Published:Updated:

'இந்தியாவின் மகள்!’ என்கிற டைட்டிலுடன், லண்டன் பி.பி.சி தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஆவணப்படம், இந்தியாவில் பெரும் பரபரப்பைக் கிளப்பி வைத்திருக்கிறது. ஒரேயடியாக கொதித்தெழுந்த மத்திய அரசு, இந்தப் படத்துக்கு தடையே போட்டுவிட்டது.

தடைபோடுமளவுக்கு ஆபாச படமோ, சர்ச்சைகளைக் கிளப்பும் மதம் சார்ந்த படமோ அல்ல... 'இந்தியாவின் மகள்’. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் ஓடும் பேருந்தில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, உயிரிழந்த மாணவி நிர்பயா பற்றிய முழுமையான பதிவுதான் இந்த ஆவணப்படம்.

படத்துக்கு தடை... நிஜத்துக்கு?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நிர்பயா வழக்கில் பல்வேறு விதங்களில் தொடர்புடைய பலரும் இந்தப் படத்தில் பேசியிருக்கிறார்கள். நிர்பயாவின் அம்மா, அப்பாவும்கூட முழுக்க பேசியிருக்கிறார்கள். இந்த வகையில், தூக்குத் தண்டனைக் கைதியாக சிறையில் இருக்கும் முகேஷ் சிங்கும், பேசியிருக்கிறார். இதுதான் படத்தையே தடை செய்யும் அளவுக்குப் போய்விட்டது.

சம்பவம் பற்றி துளிகூட குற்ற உணர்வு இல்லாதவராக பேசும் முகேஷ், 'பலாத்கார சம்பவங்களுக்கு ஆண்களைவிட பெண்களே அதிகம் பொறுப்பேற்க வேண்டும். இரவு நேரங்களில் பெண்கள் வெளியே சுற்றிக்கொண்டிருக்கக் கூடாது. பலாத்காரத்தின்போது அந்த பெண் எதிர்த்து போராடி இருக்காவிட்டால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது. 20 சதவிகித பெண்கள் மட்டுமே நல்லவர்களாக உள்ளனர்' என்றெல்லாம் பேசியிருக்கிறார்.  

மகளிர் தினமான மார்ச் 8 அன்று வெளியிடுவதுதான் பி.பி.சி. தொலைக்காட்சி நிறுவனத்தின் திட்டம். ஆனால், படக்காட்சிகள் மற்றும் வசனங்கள் முன்கூட்டியே இணைய தளம் மூலமாக மீடியாக்களில் கசிய... நாடாளுமன்றமே அமளிதுமளி யானது. 'இந்தப் படத்தை வெளி யிடக்கூடாது’ என்று பெண் எம்.பிக்கள் சிலர் குரல் கொடுக்க, தடை போட்டுவிட்டது மத்திய அரசு. என்றாலும், இதை கண்டு கொள்ளாமல், மார்ச் 5-ம் தேதியே படத்தை வெளியிட்டது பி.பி.சி. இது இணையத்தின் வாயிலாக இந்தியாவிலும் ஒளிபரப்பாக... மத்திய அரசு கொதித்தெழ... ஒரு கட்டத்தில் இணையத்திலும் படிப் படியாக படம் முடக்கப்பட்டது. என்றாலும் ஒருசில இணைய தளங்களில் படம் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.

படத்துக்குத் தடைவிதித்திருப்பது சரி... சரியல்ல என்கிற விவாதம் நீண்டுகொண்டே இருக்கிறது பொதுமேடைகளில். இத்தகைய சூழலில், இந்தப் படம் பற்றியும், இந்தத் தடை சரிதானா என்பது பற்றியும்... பாலியல் வன்புணர்வு கொடுமைகளால் பாதிக்கப்பட்டு, பரிதாப ஜீவன்களாக நடைபோடும் பெண்கள் சிலரிடம் கேட்டோம். எதிர்கால நலன் கருதி, அவர்களின் பெயர்களை இங்கே மாற்றியிருக்கிறோம்.

பள்ளி வயதில் பாலியல் வன்புணர்வுக்கு பலியான பரிதாப ஜீவன் கல்பனா. பத்தாவது படிச்சுட்டு இருந்தப்ப காதல்னா என்னனு முழுசா தெரியாத அந்த வயசுல, ஆசை வார்த்தை சொல்லி, வலுக்கட்டாயமா என்னை ஒருத்தன் கெடுத்துட்டான். கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிச் சொல்லியே கடைசி வரை ஏமாத்திட்டான். விஷயம் எங்க வீட்டுக்குத் தெரிஞ்சதும்... அவன் மேல புகார் கொடுத்தோம். என்ன பிரயோஜனம்? இப்ப 7 மாசத்துல குழந்தை இருக்கு. இந்த உலகத்தைப் பத்தியும், ஆண்களைப் பத்தியும் தெரியாததால ஏமாந்து போனேன்'' என்ற கல்பனா, அந்தப் படத்தை நான் பார்க்கல. ஆனா, பேப்பர்ல படிச்சதையும், டி.வியில கேட்டதையும் வெச்சு பாக்கும்போது, நிச்சயமா அந்தப் படத்தை ஆண், பெண் அத்தனை பேரும் பாக்கணும்தான் நான் நினைக்கிறேன். இந்த உலகம் எப்படிப்பட்டது, ஆண்கள் எப்படி இருக்காங்க, நாம எந்த அளவுக்கு ஜாக்கிரதையா இருக்கணும்கிறதை பொண்ணுங்க எல்லாரும் தெரிஞ்சுக் கறதுக்காகவாவது இப்படிப்பட்ட படங்களை இந்த அரசாங்கம் தடை பண்ணாம இருக்கணும். உண்மைனு ஒண்ணு இருக்கறப்ப, இப்படியெல்லாம் தடைபோட்டு நம்மள நாமளே ஏமாத்திக்கிறோம்னுதான் தோணுது'' என்றார் விரக்தியின் விளிம்பில் நிற்பவராக.

சுகன்யா... இவரும் காதல் என்கிற வார்த்தையை நம்பி ஏமாந்தவர்தான். நான் பி.ஏ ஃபஸ்ட் இயர் படிச்சுட்டு இருந்தப்ப, காதலன்கிற பேர்ல தனியா கூட்டிட்டு போயி கெடுத்ததோட... நகை, பணம் எல்லாத்தையும் பறிச்சுக்கிட்டான். இடையில கருக்கலைப்பு வேற நடந்துச்சு. அம்மாவுக்கு விஷயம் தெரியவரவே, அவன் மேல வழக்கு போட்டிருக்கோம். இருந்தாலும், என்னோட வாழ்க்கை கேள்விக்குறியாவே இருக்கு'' என்றவர், அந்தப் படத்தை கொஞ்சம் கொஞ்சம் பார்த்தேன். எல்லாக் கொடுமைகளையும் செய்துட்டு, கொஞ்சம்கூட குற்ற உணர்ச்சி இல்லாம அவன் பேசுறதைப் பார்க்கும்போது, இதுமாதிரி படங்களையெல்லாம் அனுமதிக்கணுமானுதான் தோணும். ஆனா, மொத்தமா பார்க்கும்போது... இந்தியாவுல பெண்கள் எத்தனை கொடுஞ்சூழல்ல வாழறாங்க அப்படிங் கற உண்மை உலகத்துக்கு தெரியும். அதுல பேசுற ஒரு வக்கீலே... பெண்ங்கிறவ பூ மாதிரி. கோயில்ல இருந்தா வணங்கலாம்... சாக்கடைக்கு வந்தா... அவ்வளவுதான்’னு சொல்றார். 'ஒரு பொண்ணு ஏன் தனியா வெளியில வரணும்?’கிற கேள்விதான் அதிகமா இருக்கு. இந்தியாவோட உண்மையான நிலை இதுதான். இதை வெளிச்சம் போட்டிருக்கு இந்தப் படம். இதை எதுக் காக தடை செய்யணும்? இந்த உண்மைகள் தெரிஞ்சா தானே இன்னும் பொண் ணுங்க உஷாரா இருக்க முடியும்?'' என்று எதர்த்தமாகக் கேட்கிறார் சுகன்யா.

இப்படி ஒரு படத்தை இயக்கியிருக்கும் லெஸ்லி உத்வின், மேலே இருக்கும் பெண்களைப் போலவே பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட ஒருவர்தான். அந்த கொடுமையின் வலியை நன்றாக உணர்ந்திருப்பதால், பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறார் 'இந்தியாவின் மகள்’ படத்தை! ஆனால், இப்படியொரு படத்தை தடை செய்கிறது மத்திய அரசு.

நிர்பயாக்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாள்தோறும் பெருகிக்கொண்டே இருக்கிறது என்பதுதான் நெஞ்சைச் சுடும் நிஜம். இந்தியாவின் மானம் கப்பலேறிவிடக்கூடாது என்பதற்காக, நிஜப்பதிவாக வந்திருக்கும் படத்தையே தடை செய்ய நினைக்கும் அரசு... இதற்கு பிறகாவது பெண்களின் மானம், உயிர் பறிபோகாமல் இருக்க ஏதாவது உறுதியான திட்டத்தைக் கையில் வைத்திருக்கிறதா?

தடை... சரி!

படத்துக்கு தடை... நிஜத்துக்கு?

வானதி ஸ்ரீநிவாசன், மாநில துணைத் தலைவர், பா.ஜ.க: ”நிர்பயாவுக்கு நடந்த வன் கொடுமைக்கு பிறகு அரசின் நிலைப்பாடு முற்றிலுமாக மாறிக்கொண்டு வரும் நிலையில், ஒரு குற்றவாளி தன் செயலை நியாயப்படுத்துவதாக அமைந்துள்ளதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இது உலக அளவில் சில தொண்டு நிறுவனங்களால் வியாபார ரீதியாக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட முயற்சியாகவே தெரிகிறது. இந்திய அரசாங்கமும் டெல்லி உயர் நீதிமன்றமும் தடை விதிப்பதை நீங்கள் தவறு என்று சொன்னால், திரைப்படங்களுக்குக்கூட எதற்கு சென்சார் போர்டு இருக்க வேண்டும்? தாங்கள் வாழும் சமூகத்தில் பாதுகாப்பு இல்லை என்பதை பெண்கள் மனதில் திணிப்பதாகத்தானே காட்சிகள் இருக்கின்றன. ஓர் ஆவணப்படம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்திவிடப் போவதில்லை என்கிற கருத்தை பலரும் முன் வைக்கும்போது, அவர்கள் நினைக்கும் விழிப்பு உணர்வையும் அந்த படம் கொடுத்துவிடப் போவதில்லை என்பதுதான் என்னுடைய கருத்து. இந்த சமூகத்தின் மீது வக்கிர எண்ணத்தை பதிக்கும் இந்த ஆவணப்படத்தை தடை செய்ததில் எந்த தவறுமே இல்லை.''

தடை... தவறு!

படத்துக்கு தடை... நிஜத்துக்கு?

வழக்கறிஞர் அருள்மொழி: ”குற்றவாளி சொல்லும் இதே கருத்துக்களை ஒரு சாமியாரோ... அரசியல் பிரமுகரோ சொல்லி இருந்தால், சரி என்று ஏற்றுக் கொண்டிருப்பீர்கள்தானே என்கிற கேள்வியை இப்போது பலரும் முன்வைக்க துவங்கி விட்டனர். எங்கோ மறைவான இடத்தில் ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று வன்புணர்வு செய்தால் மட்டும்தான் அது ஆணின் குற்றம். மற்றபடி நவநாகரிக ஆடையில் வரும்போது, இரவு நேரத்தில் தனியாக வெளியே வரும்போது, சம்பந்தமில்லாத ஓர் ஆணுடன் வரும்போது... என பல காரணங்களின் அடிப்படையில் ஒரு பெண் சிக்கிக்கொண்டால், அவளை வன்புணர்வு செய்வது குற்றமாகாது என்கிற மனநிலையே பெரும்பாலும் இந்த சமூகத்தில் ஊறிக்கிடக்கிறது. ஆவணப்படத்தை தடை செய்வது என்பது, இப்படியான மனநிலையைக்கொண்ட ஒரு சமூகத்தில் இருக்கும் குற்றவாளியின் குற்ற மனப்பான்மையை முகமூடி கொண்டு மறைத்துக் கொள்ளவே உதவும். ’எங்கள் பண்பாட்டில் குற்றம் உண்டு. ஆனால், வெளியே சொல்லக் கூடாது' என்கிற மனநிலை மாறாதவரை, எந்தச் சூழலும் மாறப் போவதில்லை.

பொன்.விமலா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism