பெண் குழந்தைகளுக்கு அதிக வட்டி...
'செல்வ மகள் சேமிப்புக் கணக்கு’... பெண் குழந்தைகளுக்கான மத்திய அரசின் பரிசு. பெற்றோர்கள் சரிவரத் திட்டமிட்டால், பெண் குழந்தைகளின் மேற்படிப்பு மற்றும் திருமணம் ஆகியவை பெற்றோருக்குச் சுமையாக இருக்காது என்பதை வலியுறுத்தும் வகையிலும், அதற்கான வாய்ப்புகளைக் காட்டும் வகையிலும் கடந்த ஜனவரி 22-ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது இந்த புதிய சேமிப்புக் கணக்கு.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தத் திட்டத்தில் சேர்வது தொடங்கி, இதன் பலன்கள் வரை மிகத்தெளிவாக இங்கே விவரிக்கிறார் சென்னை மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர்.
''இந்த செல்வ மகள் திட்டம், இந்தியில் 'சுகன்யா சம்ரிதி' என்று அழைக்கப்படுகிறது. இது, 10 வயதுக்குட்பட்ட, பெண் குழந்தைகளுக்கு மட்டுமேயான பிரத் யேகத் திட்டம். 'பெண் குழந்தைகளைப் பாது காப்போம், பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம்' என்ற மத்திய அரசுத் திட்டத்தின் ஒரு பகுதியான இந்தத் திட்டம் இந்தியாவில் எல்லா அஞ்சல் நிலையங்களிலும் இப்போது அமலில் இருக்கிறது.
10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு பெற்றோர்/காப்பாளர் மூலம் இந்தக் கணக்கைத் தொடங்கலாம். ஆரம்பச் சலுகையாக டிசம்பர் 2015-க்குள் இந்தக் கணக்கை தொடங்கினால், குழந்தையின் வயது 11 வரை இருக்கலாம். ஒரு பெற்றோர், 2 பெண் குழந்தைகளுக்கு மட்டுமே கணக்கை ஆரம்பிக்க முடியும்.
கணக்கைத் தொடங்க, குழந்தையின் வயதுச் சான்றிதழ் மற்றும் பெற்றோர்/காப்பாளரின் புகைப்படத்துடன் கூடிய ஏதாவது ஒரு அடையாள அட்டை தேவை. ஒரு நிதியாண்டில் குறைந்தபட்ச சேமிப்பாக 1,000 ரூபாயில் இருந்து, அதிகபட்சமாக 1,50,000 ரூபாய் வரை, நூறின் மடங்குகளில் சேமிக்கலாம். கணக்கு துவங்கியதிலிருந்து 14 வருடங்கள் வரை பணம் செலுத்த வேண்டும். ஆனால், இந்தக் கணக்கின் முதிர்வு என்பது, கணக்கு ஆரம்பித்ததில் இருந்து 21 வருடங்கள். 18 வயதுக்கு மேற்பட்டுத் திருமணம் செய்யும்போதுதான் தொகையைப் பெற முடியும். 18 வயதான பிறகு, வைப்புப் தொகையில் 50% பணத்தை உயர்கல்வி அல்லது திருமணம் போன்ற காரணங்களுக்காக பெற்றுக்கொள்ளலாம்.

ஒவ்வொரு நிதியாண்டிலும், அந்த ஆண்டு சேமிப்பில் செலுத்தப்பட்ட தொகை கணக்கிடப்பட்டு, 9.1% கூட்டு வட்டி, வருடாந்தர வட்டியாகக் கணக்கிடப்பட்டு, நம் கணக்கில் சேர்க்கப்படும். சிறுசேமிப்புத் திட்டங்களைப் பொறுத்தவரை மிக அதிகமாக முதியோருக்கான கணக்குகளுக்கு 9.2% வட்டி தரப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக 9.1% தரப்படுவது இந்த செல்வமகள் திட்டத்துக்காகத்தான். செலுத்தும் பணத்துக்கும், வரும் வட்டிக்கும், முதிர்வுத் தொகைக்கும் வருமான வரிவிலக்கு உண்டு.
தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை சுமார் 35,000 செல்வ மகள் சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. சென்னையில் மட்டும் சுமார் 11,000 கணக்குகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. பெண் குழந்தைகளின் பெற்றோர்களை வரவேற்கிறோம்!''
நிறைவாக இருந்தது மெர்வின் அலெக்ஸாண்டர் தந்த விளக்கத் தகவல்கள்!
உங்கள் செல்ல மகள், இனி செல்வ மகள்!
கே.அபிநயா, படங்கள்: ஜெ.வேங்கடராஜ்