Published:Updated:

ஸ்ரீமஹாலக்ஷ்மி கடாக்ஷம்

ஸ்ரீமஹாலக்ஷ்மி கடாக்ஷம்

நாம் மஹாலக்ஷ்மி பிராட்டியிடம் சரணாகதி அடையும்போது, அவள் நம்மை கடாக்ஷிப்பதுடன், அவளுடைய ஸ்தானத்துக்கு நம்மையும் உயர்த்திவிடுவாள். இதுதான் மஹாலக்ஷ்மியின் கருணை!

அவளைத் தேடித்தேடிச் சரணடைய, உரிய தலங்களை நாம் நாடியோட வேண்டும். இங்கே அத்தகைய சில தலங்கள் பற்றி, குறிப்பிட்டுச் சொல்லியே ஆகவேண்டும்.

கடிகாசலம் என்னும் சோளிங்கர் திருத்தலத்தில் தாயாருக்கு அமிர்தவள்ளி நாச்சியார் என்று திருநாமம். தன்னையே அமிர்தமாக அந்த யோக நரஸிம்மருக்குக் கொடுத்தவள். மஹாலக்ஷ்மியாகிய அமிர்தவள்ளி நாச்சியார் பெருமாளின் திருமார்பில் நீங்காமல் இருப்பதால், பக்தர்களை எல்லாம் கூப்பிட்டு அனுக்கிரஹம் பண்ணுவதுபோல் பெருமாள் திருக்காட்சி தருகிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதேபோல், கமலாதேவி என்னும் திருப்பெயர் கொண்டு மஹாலக்ஷ்மி எழுந்தருளி இருக்கும் திருத்தலம் உறையூர் அழகிய மணவாளர் திருக்கோயில். இங்கே பிராட்டிக்கு கமலவல்லி என்ற திருநாமம். இந்தத் தலத்தில்தான் திருப்பாணாழ்வார் அவதரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீமஹாலக்ஷ்மி கடாக்ஷம்

ராமாயண காலத்தில்  உறையூர் பகுதியை தர்மவர்மன் என்பவன் ஆண்டுவந்தான். அவனுடைய வம்சத்தில் வந்தவனான நந்த சோழனுக்கு நீண்ட காலமாகவே குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. பெருமாள் அவனுக்கு அனுக்கிரஹம் செய்ய நினைத்தார். நாச்சியாரைப் பார்த்து, ''நீ நம்முடைய பக்தனான நந்தசோழனுக்கு கமலா என்ற பெயரில் மகளாகப் பிறப்பாயாக! உரிய காலத்தில் யாம் உன்னை திருக்கல்யாணம் செய்துகொள்வோம்'' என்கிறார் பெருமாள். அதேபோல் நாச்சியாரும் நந்தசோழனுக்கு மகளாகப் பிறந்தாள். மகாலக்ஷ்மியின் கடாக்ஷத்தினால் அந்த மகாலக்ஷ்மியையே மகளாகப் பெற்ற நந்தசோழன், சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தான்.

உரிய காலம் வந்தபோது, வேட்டையாடும் ராஜனாக வேஷம் போட்டுக்கொண்டு, வேட்டைக்குச் செல்லும்போது கமலாவைப் பார்த்து காதல் கொண்டார் நம்பெருமான். விஷயம் நந்தசோழனின் காதுகளுக்கு எட்டியது. பெருமாளின் விருப்பம் எதுவோ அதன்படிதான் கமலாவின் திருமணம் நடக்கும் என்று பேசாமல் இருந்துவிட்டான். மன்னனின் உறுதியான நம்பிக்கையைக் கண்டு, அந்த நம்பெருமானே நேரில் வந்து கமலாவை தம்மோடு சேர்த்துக்கொண்டார். இந்த கமலாதேவி நாச்சியார்தான் உறையூரில் நமக்கெல்லாம் தன்னுடைய கடாக்ஷத்தை பரிபூரணமாக வழங்கிக்கொண்டு இருக்கிறாள்.

திருவிந்தளூரில் மகாலக்ஷ்மி பரிமள ரங்கநாயகி நாச்சியாராக அருள்புரிகிறாள். இந்தத் தலத்தில் உள்ள இந்து புஷ்கரணியில் நீராடி, பரிமள ரங்கநாதரையும் பரிமள ரங்கநாயகி நாச்சியாரையும் வழிபட்டு, தன்னுடைய க்ஷயரோகம் நீங்கப்பெற்றான் சந்திரன் என்பது தல வரலாறு. அதனால் இங்குள்ள தாயாருக்கு சந்திர சாப விமோசன வல்லி என்ற திருப்பெயரும் உண்டு.

இப்படி மகாலக்ஷ்மி பிராட்டி எத்தனையோ திவ்வியதேசங்களில் எழுந்தருளி நம்மையெல்லாம் கடாக்ஷிப்பதற்காகக் காத்துக்கொண்டு இருக்கிறாள். இந்த திவ்வியதேசங்களில் மகாலக்ஷ்மி பிராட்டி யாருடன் பிராட்டியின் அம்சமான பூமிதேவி, நீளாதேவியும் உடன் இருந்தாலும் மகாலக்ஷ்மியே பிரதானம். பகவான் எப்போதும் இந்த மூன்று தாயாருடனே திருக்காட்சி தருவார். இதனையே நம்மாழ்வார்,

'உடனமர் காதல்மகளிர் திருமகள் மண்மகள்

ஆயர்மடமகள் என்றிவர் மூவர்...' என்றும்,

'கூந்தல்மலர்மங்கைக்கும் மண்மடந்தைக்கும்

குலவாயர் குலக்கொழுந்துக்கும் கேள்வன்தன்னை...'

என்றும் பாடி இருக்கிறார்.

ஸ்ரீதேவி நாச்சியாருக்குப் பிரதானம் திருவெள்ளறை திருத்தலம். இந்தத் திருத்தலத்தில் பெருமாள் புண்டரீகாக்ஷப் பெருமாள் என்னும் திருப்பெயருடன் கோயில் கொண்டிருக்கிறார். தாயாரின் திருப்பெயர் செண்பகவல்லி நாச்சியார். பங்கயச்செல்வி என்னும் திருப்பெயரும் உண்டு. இங்குள்ள பூங்கிணறு என்னும் தீர்த்தத்தில் அமர்ந்து தவம் இயற்றி பெருமானுடைய திருமார்பை அலங்கரிக்கும் பேறு பெற்றாள்.

அடுத்து பூமிதேவி நாச்சியார். இவளுடைய பிரதானம் வில்லிபுத்தூர் திருத்தலம். இங்குதான் பூமிதேவியின் அம்சமாக ஆண்டாள் அவதரித்து நாமெல்லாம் உய்ய நல்லதொரு வழியை நமக்குக் காட்டி அருள் புரிந்தாள்.

மூன்றாவதாக நீளாதேவி நாச்சியார். இவளுடைய பிரதானம் திருநறையூர் திருத்தலம். இங்கே தாயாருக்கு வஞ்சுளவல்லி என்று திருப்பெயர். மகாலக்ஷ்மியின் மூன்று அம்சங்களான ஸ்ரீதேவி நாச்சியார், பூமிதேவி நாச்சியார், நீளாதேவி நாச்சியார் ஆகியோருக்கு முறையே திருவெள்ளறை, ஸ்ரீவில்லிபுத்தூர், திருநறையூர் ஆகிய க்ஷேத்திரங்களே பிரதானம்.

திருநறையூரில் என்ன விசேஷம் என்றால், மற்ற திவ்வியதேசங்களில் பெருமாளுடன் ஸ்ரீதேவி, பூமிதேவி, நீளாதேவி என்று மூன்று பிராட்டியார்கள் இருந்தாலும், இந்தத் திருநறையூரில் ஒரே ஒரு நாச்சியார்தான். அவள்தான் நீளாதேவியின் அம்சமான வஞ்சுளவல்லி நாச்சியார். இந்தத் திருநறையூரில்தான் திருமங்கை ஆழ்வாருக்கு பெருமாள் பஞ்ச சம்ஸ்காரம் செய்துவைத்தார்.

இப்படியாக மகாலக்ஷ்மி பிராட்டியாரின் கடாக்ஷம் நமக்கெல்லாம் கிடைக்கச் செய்யும் எத்தனையோ பல திவ்வியதேசங்கள் நம்முடைய புண்ணியபூமியில் அமைந்திருக்கின்றன. அப்படி இருக்க, மகாலக்ஷ்மி தேவியின் கடாக்ஷம் அனைவருக்கும் கிடைத்திருக்க வேண்டும் அல்லவா... ஆனால், கிடைக்கவில்லையே? என்ன காரணம் என்று நாம் சிந்திக்க வேண்டும். சிந்தித்தால், நாம் பரிபூரணமாக அவளிடம் சரணாகதி பண்ணவில்லை என்ற உண்மை நமக்குப் புரியும்.

ராமாயணத்தில் ராவணனுக்கு அறிவுரை சொல்லி வந்த விபீஷணன், இரண்ய வதத்தைப் பற்றி குறிப்பிடும்போது,  இரண்ய வதத்தினால் நரஸிம்ம மூர்த்திக்கு ஏற்பட்ட சினத்தின் உக்கிரத்தைத் தணிவிக்க, தேவர்கள் மகாலக்ஷ்மி பிராட்டியாரை நரஸிம்ம பெருமாளுக்கு அருகில் அனுப்பி வைத்து சினத்தின் உக்கிரத்தைத் தணிவித்ததாக கூறினான். இதைப் பற்றி விவரிக்க வந்த கம்பர்,

’பூவில் திருவை அழகின் கமலத்தை

யாவர்க்கும் செல்வத்தை வீடு என்னும் இன்பத்தை

ஆவித்துணையை அமுதின் பிறந்தாளை

தேவர்க்கும் தாயை...'

அதாவது, தாமரை மலரின்மேல் இருந்தபடி அருளும் அந்த தேவியானவள், அமுதத்தோடு பிறந்தவள்; அனைவருக்கும் செல்வத்தை அருள்பவள்; வீடு என்னும் பேரின்பத்தையும் நமக்கெல்லாம் அருள்பவள் என்று போற்றுகிறார்.

இந்திரனுக்கு அவன் இழந்த செல்வத்தைத் திரும்பவும் அருளியவள் கருணையே வடிவான மகாலக்ஷ்மி பிராட்டி. அவளுடைய திருக்கோயில்களை நாடிச் சென்று அவளுடைய திருவடிகளைச் சரண் அடைந்தால், அவளுடைய கடாக்ஷம் நமக்கெல்லாம் பரிபூரணமாகக் கிடைக்கும்.

மகாலக்ஷ்மியின் அனுக்கிரஹத்தாலும், ஆழ்வார் ஆச்சார்யர்கள் அனுக்கிரஹத்தாலும், இந்த மகாலக்ஷ்மி கடாக்ஷம் என்னும் இந்த பவித்ரமான தொடரைப் படித்து வந்த அனைவருக்கும் மகாலக்ஷ்மி கடாக்ஷம் பரிபூரணமாக ஏற்படவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

கடாக்ஷம் ஸம்பூர்ணம்

தொகுப்பு: க.புவனேஸ்வரி

வேளுக்குடி கிருஷ்ணன்  ஓவியம்: சங்கர்லீ