திரைக் கலைஞர்களின் ஃபீலிங்ஸ்
திரையில் தெரியும் லட்சுமி மேனன், ஸ்ரீதிவ்யா போன்றவர்களை மட்டுமே அனைவரும் அறிவோம். இதைவிட்டால், இயக்குநர், இசையமைப்பாளர் என்று முக்கியமான தொழில்நுட்பக் கலைஞர்களையும் அறிவோம். ஆனால், வெளியில் தெரியாமல் உழைப்பவர்களின் எண்ணிக்கைதான் திரைத்துறையில் அதிகம். அதிலும் டேக் ஆர்ட்டிஸ்ட்டுகள், குரூப் டான்ஸர்கள், கோரஸ் பாடகர்கள், விசிலர்கள் என... அங்கீகார வெளிச்சத்திலிருந்து விலகி நிற்கும் பணியாளர்கள் பலர். அந்தக் கலைஞர்களின் தொகுப்பு இங்கே...
மீனா, டேக் ஆர்ட்டிஸ்ட்

''மதுரையில இருக்கு என் குடும்பம். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, 'அஞ்சல’, 'யாரது’, 'சூழியம் 7’னு நிறையப் படங்கள்ல நடிச்சிருக்கேன். இன்னொரு பக்கம் மேடை நிகழ்ச்சிகள், விளம்பரங்களும் செஞ்சிட்டிருக்கேன். இப்போ கல்லூரி இறுதியாண்டுங்கிறதால படிப்புல கூடுதல் கவனம் செலுத்துறேன். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்துல திருமணக் காட்சியில மணப்பெண்ணா நடிச்சது மாதிரி, எல்லா படங்கள்லயும் ஒன்றிரண்டு ஸீன்லதான் இருப்பேன். ஆனாலும் பெரிய நடிகர்கள், டெக்னீஷியன்கள் கூட சேர்ந்து வேலை பார்க்கிற வாய்ப்புல நிறைய விஷயங்கள் கத்துக்குவேன். திரைத்துறையில ஒரே ஒரு விஷயம் மாறணுங்கிறது என் ஆசை. வெளிமாநிலங்களில் இருந்து வந்தவங்களுக்கு இங்க கிடைக்கிற வரவேற்பு, தமிழ்நாட்டுப் பெண்களுக்குக் கிடைக்கிறதில்ல. எங்களுக்கும் நிறைய வாய்ப்புகள் கொடுங்க சார்!''
தேவி, டேக் ஆர்ட்டிஸ்ட்
''என்னை எங்கயோ பார்த்த மாதிரி இருக்குமே? 'இந்திரலோகத்தில் நா அழகப்பன்’, 'முனி’, 'சரித்திரன்’, 'வேலாயுதம்’, 'முப்பொழுதும் உன் கற்பனைகள்’, 'ராஜா ராணி’ இதுலயெல்லாம் என்னை ஒண்ணு, ரெண்டு ஸீன்ல பார்த்திருப்பீங்க. ரிலீஸாகப் போற 11 படங்களில் நடிச்சிட்டு இருக்கேன். 'களவாணி’ படத்துல கஞ்சா கருப்புக்கு மனைவியா நடிச்சது நல்ல ரீச் கிடைச்சது. நான் நிஜத்தில் நல்ல கலரா இருப்பேன். ஆனா, படங்கள்ல பிளாக் மேக்கப் போட்டுருவாங்க. திரைப்படங்களின் நீளத்தைக் குறைக்கும்போது காமெடி பார்ட்ஸ்தான் முதலில் கட் செய்வாங்க. என்னைப் போன்ற டேக் ஆர்டிஸ்ட்டுகள் பெரும்பாலும் காமெடி ஸீன்களில்தான் தலை காட்டியிருப்போம். அந்த ஏமாற்றங்களையும் ஏத்துக்கப் பழகிக்குவோம். ஆச்சி மனோரமா, கோவை சரளா மாதிரி நல்ல காமெடி நடிகை ஆகணும். கமல் சார் படத்துல ஒரு ஸீன்லயாவது நடிச்சிரணும்கிறதுதான் ஆசை. நான், என் சொந்த மாமாவையே கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எனக்கு ஒரு பையன் இருக்கான். வாழ்க்கை சந்தோஷமா இருக்கு!''

பூஜா, கோரஸ் பாடகி
''டி.வி நிகழ்ச்சிகளில் பாடுறதைப் பார்த்து இசையமைப்பாளர் இமான் சார் சான்ஸ் கொடுத்தார். நிறைய கோரஸ் பாடியிருக்கேன். கோரஸில் கோஆர்டினேஷன் ரொம்ப முக்கியம். 100 பேர் பாடினாலும் ஒரே குரலில் ஒரே மெட்டில் பாடணும். அதேபோல நாலு பேர் பாடி 100 பேர் பாடுவது போல கேட்க வைக்கவும் செய்யணும். அப்படிப் பாடினதுதான் 'கோச்சடையான்’ திரைப்படத்தின் 'எங்கோ போகுது வானம்...’ டைட்டில் சாங். 100 பேர் பாடுவது போல காட்சி. ஆனா, நாங்க நாலு பேர்தான் பாடினோம். நிறைய டேக்ஸில் பல லேயர்ஸ் இருக்கும். ஒவ்வொருத்தரும் எட்டு எட்டு வரிகள் பாடணும். தொடக்கத்தில் இருந்தது போலவே ஒவ்வொரு வரிக்கும் பன்ச் கொடுத்து பவரோட பாட நிறைய எனர்ஜி தேவைப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ், ஜேம்ஸ் வசந்தன், இளையராஜானு எல்லாரோட இசையிலும், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தினு பல மொழிகளிலும் பாடியிருக்கேன். கோரஸ் மட்டுமில்லாம தனிப்பாடல்களும் பாடியிருக்கேன். ஆனாலும், இப்போ இந்தப் பேட்டி மூலமாதான் முதல் முறையா, தனிப்பட்ட விதத்துல மக்களிடம் போய் சேருறேன்!''
நான்ஸி, டான்ஸர்

''சின்ன வயசுல இருந்தே நடனத்தில் ஆர்வம். என் அப்பா சினிமா துறையில் இருந்தார். அவர் இறந்ததுக்கு அப்புறம், தனியார் நிறுவனத்தில் சொற்ப வருமான வேலையில் குடும்பத்தை தாங்கினேன். வருமானம் பத்தல. சினிமா துறையில் இருந்த அத்தை உதவியோட சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. ஆனா, நடன வாய்ப்பையே தேடிட்டு இருந்தேன். ஹீரோயின்களின் தோழியா வாய்ப்பு கிடைச்சது. 'நாலு பொண்ணு நாலு பசங்க’ படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட வாய்ப்புக் கிடைச்சாலும், தொடர்ந்து 'கிளாமரா நடிப்பீங்களா?’னுதான் கேட்டாங்க. நான் மறுக்க, வாய்ப்புகள் எல்லாம் நழுவ ஆரம்பிச்சுடுச்சு. இடையில எனக்குத் திருமணமாகிடுச்சு. கணவர், என்னோட திரைநடன ஆசைக்கு ஆதரவா இருக்கார். நல்ல வாய்ப்புக்காக காத்துட்டே இருக்கேன். கூடவே நடனத்தை நான் கத்துக்கிட்டும், குழந்தைகளுக்கு நடன வகுப்புகள் எடுத்துட்டும் இருக்கேன்.''
சுவேதா, விசிலர்

''அடிப்படையில் நான் பாடகி. இசைக்குழுவில் பாட ஆரம்பிச்சு, புல்லாங்குழல் கத்துக்க ஆசைப்பட்டு, அது முடியாம போக... விசில் அடிக்கக் கத்துக்கிட்டேன். விசிலிலேயே பாடல்கள் பாடக் கத்துக்கிட்டு, இந்தியன் விசிலர்ஸ் அசோஸியேஷன்ல மெம்பரா சேர்ந்தேன். 'சாதகப் பறவை’ இசைக்குழுவில் இடம் பெற்று, ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ரெண்டு, மூணு பாடல்கள் விசிலிலேயே பாடினேன். அப்படி என் நிகழ்ச்சியைப் பார்த்த நண்பர் சந்தோஷ், இமான் சார்கிட்ட என்னைச் சேர்த்தார். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்துல 'ஏனடா ஏனடா...’ பாடல்ல விசில் போர்ஷன் வாய்ப்பு கிடைச்சது. அடுத்தடுத்து 'ஜில்லா’, 'கயல்’னு நிறையப் பாடல்களுக்குப் விசில் பண்ணியிருக்கேன். ஆனா, அது ஒரு சின்ன பிட் என்பதால அடிக்கடி கட் ஆகிடும். தொண்டு நிறுவனங்களுக்கு இலவசமா நிகழ்ச்சிகள் பண்றதில் தொடங்கி, வெளிநாடுகள் வரை விசில் ஷோக்களும் பண்ணிட்டிருக்கேன். சமீபத்தில் தொடர்ந்து 18 மணிநேரம் விசிலடிச்சு உலக சாதனை படைச்சிருக்கேன். தினமும் பிரணாயாமம், யோகா செய்றது உதவியா இருக்கு.''
ந.ஆஷிகா, படங்கள்: பா.காளிமுத்து, இரா.யோகேஷ்வரன்