Published:Updated:

நிமிர்ந்து நில்!

நிமிர்ந்து நில்!

களிர் தின கலந்தாய்வாக, ஐ.நா சபையில் நடைபெற்ற, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்த கருத்தரங்கில், ஆசிய நாடுகளிலிருந்து ஒரே ஒரு பிரதிநிதியாக பங்குபெற்று திரும்பியுள்ளார், சாத்தூர் அருகேயுள்ள அ.ராமலிங்காபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ஆசிரியர் ரமாதேவி. இது இவரின் இரண்டாவது ஐ.நா விசிட்!

'வாழ்த்துக்கள் டீச்சர்!’ என்ற மாணவர்களின் குரல்களுக்கு இடையே மகிழ்ந்திருந்த ரமாவைச் சந்தித்தோம்.  

''கணவர் குரு ஆனந்த், சாத்தூரில் போட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கிறார். மகன் அட்சய் ஆனந்த் பி.ஆர்க், மகள் பூஷிதா பத்தாம் வகுப்பு படிக்கிறார்கள். எம்.ஏ., எம்.எட் முடித்து, இப்போது கல்வி தொடர்பாக பிஹெச்.டி செய்து கொண்டிருக்கிறேன். இதுதான் என் புரொஃபைல்!''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நிமிர்ந்து நில்!

சுருக்கமாகச் சிரிக்கும் ரமா, சாத்தூர் டு ஐ.நா. சபை சென்ற ரூட் வியப்புக்குரியது.

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில மகளிர் அணித் தலைவி, இதே அமைப்புக்கு அகில இந்திய பெண் அமைப்புச் செயலாளர், 'சார்க்’ அமைப்பு மகளிர் அணி திட்டக்குழு உறுப்பினர் என்று படிப்படியாக வாய்ப்புகளைப் பெற்ற ரமா, உலகக் கல்வி அமைப்பு சார்பாக உலக மேடை வாய்ப்புகளையும் பெற்றுக்கொண்டிருக்கிறார்.

''மதுரையில் 2003-ல் உலகக் கல்வி அமைப்பு சார்பில் மகளிர் விழிப்பு உணர்வு முகாம் நடந்தது. இரண்டாவதும் பெண் குழந்தையாகப் பிறக்க, அதைப் பார்க்கக்கூட வராத ஆசிரியர் கணவர், பிறந்த வீட்டில் சொத்து வாங்கி வரச் சொல்லி புகுந்த வீட்டில் கொடுமைப்படுத்த, கொடுக்க முடியாது என பிறந்த வீட்டிலும் துரத்த... துயரத்தில் சிக்கிய ஆசிரியை, கணவர்களால் ஏ.டி.எம் கார்டு பறிக்கப்பட்ட ஆசிரியைகள் என அங்கு நான் பார்த்தவை அனைத்தும் பரிதாபக் காட்சிகள்.

மனைவிகளை வேலைக்கு அனுப்பும் கணவன்கள், சனி, ஞாயிறுகளில் பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கோ, எங்கள் சங்கம் சார்பாக நடக்கும் கூட்டங்களுக்கோ அனுப்ப மாட்டார்கள். ஆசிரியைகளுக்கான கருத்தரங்குக்கு, கூட கணவர்களும் உடன் வருவார்கள். அவர்களுக்கும் விடுதி ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும். வேலைக்குப் போகும் எல்லா பெண்களின் கணவர்களுக்கும் அவர்களின் சம்பளம் வேண்டும், ஆனாலும் அவர்களுக்கு அடிமையாகத்தான் இருக்க வேண்டும்.

நிமிர்ந்து நில்!

'கை நிறைய சம்பாதிக்கும் ஆசிரியைகளுக்கே இந்நிலை என்றால், படிக்காத பெண்கள் என்னென்ன கொடுமைகளை எதிர்கொள்வார்கள்...’ என்ற என் மனதின் தவிப்பை அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளராக இருந்த ஈஸ்வரனுக்கு விரிவாக கடிதம் எழுதினேன். 'உங்களை மாதிரி ஆட்கள்தான் இந்த சமுதாயத்துக்கு தேவை’ என்றவர், உலக கல்வி நிறுவனம் உள்பட பல தன்னார்வ நிறுவனங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு என்னைப் பரிந்துரை செய்தார்'' என்று சொன்ன ரமா, பெண் கொடுமை பற்றி தன்னை உலுக்கிய மற்ற அனுபவங்களையும் பகிர்ந்தார்.

''பீகாரின் குழந்தை திருமணங்களையும், ஒடிசா உட்பட பல வட மாநிலங்களில் 75 வயது கிழவனுக்கு 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொடுக்கும் கொடுமையையும், ஓர் ஆண் மூன்று சிறுமிகளை திருமணம் செய்து கொள்ளும் அவலத்தையும் கண்டிருக்கிறேன். தமிழகத்தின் கௌரவக்கொலைகள், என்னைத் திடுக்கிட வைப்பவை. இதையெல்லாம் பார்த்துதான் பெண் கொடுமைகளைத் தடுக்க முனைப்புடன் களப்பணியாற்றி வருகிறேன்'' என்று அக்கறை பொங்கச் சொல்லும் இவருக்கு களப்பணிகளில் பக்கபலமாக இருக்கிறது இவருடைய குடும்பம்.

''2003-ல் ஒரே நாளில் ஒன்றரை லட்சம் ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கான போராட்டத்தில் பலரும் கைதானபோது, இரண்டு வயது மகளுக்காக நான் வீடு திரும்பினேன். 'குழந்தையை நான் பார்த்துக்குறேன்’ என்று சொல்லி அழைத்துச் சென்று, என்னையும் கைதாக வைத்தார் என் கணவர். அந்தளவுக்கு துணையாக இருக்கிறது குடும்பம்!'' என்றபோது, சந்தோஷம் பரவியது ரமாதேவி முகத்தில்.

எம்.கார்த்தி, படம்: ஆர்.எம்.முத்துராஜ்