Published:Updated:

ஒரு தாயின் சபதம்

ஒரு தாயின் சபதம்

''வாழ்க்கையில எல்லோருக்கும் ஒரு உந்து சக்தியை காலம் தீர்மானிக்கும். அந்த உந்து சக்தியை, விதி என் வயிற்றில் கொடுத்துச்சு... 60 நாள் சிசுவா! அந்த நாளில் இருந்து இந்த 42 வருஷங்களா நான் வாழும் இந்த வாழ்க்கை, என் பிள்ளைக்காகதான். ஒரு சிறந்த அட்மினிஸ்ட்ரேட்டரா நான் உருவாகக் காரணம், ஒரு நல்ல அம்மாவா நான் இருக்க நினைத்ததோட பலனே!''

தன் அலுவலக அறையெங்கும் ஆளுமை செய்கிறார், ஹேமா ஸ்ரீதரன். மாயவரத்தில் உள்ள 'அழகு ஜோதி அகாடமி’யின் முதல்வர். முன்னுதாரணமான 'சிங்கிள் பேரன்ட்’!

ஒரு தாயின் சபதம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''மயிலாப்பூரில், ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்தேன். அப்பா, போஸ்ட் மாஸ்டர். 21 வயசுல திருமணம். கணவருக்கு கும்பகோணம் பூர்வீகம். பாம்பேயில் வேலை. அதனால பாம்பேக்கு போயிட்டோம்.

ஒருநாள் தன் முதலாளிகிட்ட பணத்தை ஒப்படைக்கக் கிளம்பினார் கணவர். அது தெரிஞ்சு அவரை ஃபாலோ பண்ணின சிலர், அவர் ரயிலேறியதும் பணத்தைப் பிடுங்கிட்டு ரயில்ல இருந்து தள்ளிவிட்டுட்டாங்க. 22 வயசுல கணவனை இழந்து நின்னேன். மனதிலும் சுமை, வயிற்றிலும் சுமை. அழறதுக்குக்கூட முடியாம, என் வயிற்றில் ரெண்டு மாசக் குழந்தை. மீள முடியாத துயரம். ஈடு செய்ய முடியாத இழப்பு. இருந்தாலும், மகனோ, மகளோ... முகம் தெரியாத அந்த சிசுவுக்காக என் வாழ்க்கையை வாழணும்னு நினைச்சேன்.

கணவரோட இறுதிச் சடங்குகளை முடிச்சுட்டு, மயிலாப்பூருக்கு வந்தேன். பையன் அஷோக் ஸ்ரீதரன் பிறந்தான். பிறந்த 18 நாளில் என் அம்மாகிட்ட விட்டுட்டு, வாழ்க்கைக்கான வழியைத் தேடி, வீட்டை விட்டு வெளியே கிளம்பினேன். பி.காம் படிச்சிருந்த நான், பக்கத்துல இருந்த 'சில்ட்ரன் கார்டன்’ பள்ளியில், கிண்டர்கார்டன் பயிற்சி தரச் சொல்லி வேண்டினேன். அதன் முதல்வர் எலன் ஷர்மாவுக்கும், நிறுவனர் சகுந்தலா ஷர்மாவுக்கும் என் ஆயுள் முழுக்க நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கேன். என் நிலைமையைக் கேட்டறிந்ததும், பயிற்சி எடுக்க அனுமதி கொடுத்ததோட... அக்கறை, அன்பு, முன்னுரிமை, வாய்ப்புனு எல்லாம் கொடுத்தாங்க. ரெண்டு வருஷத்தில் பயிற்சி முடிஞ்சதும், அங்கேயே ஆசிரியையா சேர்த்துக்கிட்டாங்க.

ஒரு தாயின் சபதம்

கிட்டத்தட்ட 37 வருஷம், வேலை பார்த்தேன். அந்த அனுபவம், நர்சரிப் பள்ளி தளத்தில் என்னை நிபுணராக்க... கிண்டர்கார்டன் பள்ளி ஆரம்பிக்கிறதுக்கான ஆலோசனை சொல்ல ஆரம்பிச்சேன். மாயவரத்தைச் சேர்ந்த கண்ணன் ஏழு வருஷத்துக்கு முன்ன,  மயிலாடுதுறையில் முதல் சி.பி.எஸ்.இ சிலபஸ் பள்ளியா இந்த 'அழகு ஜோதி அகாடமி’யை நிறுவியதோட, முதல்வர் பொறுப்பை எனக்குத் தந்தார்!'' என்ற ஹேமா, ஓர் அம்மாவாக தான் கடந்த வருடங்களையும் பேசினார்.

''1970, 80 காலகட்டத்தில், பொதுவா கணவனை இழந்த பெண்ணுக்கு இந்த சமூகம் கொடுக்குற அழுத்தத்தை, அடக்குமுறையை எனக்கு என் குடும்பம் கொடுக்கல. ‘பூ வைக்கக் கூடாது, பொட்டு வைக்கக் கூடாது, கலர் புடவை உடுத்தக்கூடாது'னு கட்டுப்பாடுகள் மிகுந்திருந்த அந்தக் காலத்துல என் மாமியார் மங்கலம் ராஜகோபாலன், 'மத்தவங்களுக்காக உன் உரிமைகளை விட்டுக் கொடுக்காதே! உனக்காக, உன் குழந்தைக்காக வாழு!’னு ஊக்கப்படுத்தினாங்க. இப்படி பலர் தோள்கொடுத்து தூக்கிவிட்ட பயணம் இது!'' என்று சொல்லும் ஹேமா ஸ்ரீதரனுக்கு இப்போது வயது 64. மகன் அஷோக் ஸ்ரீதரன், பொறியியல் முடித்து, அமெரிக்காவில், ஒபாமா கேர் யூனிட்டில் புராஜெக்ட் இன்ஜினீயராக வேலை பார்க்கிறார்.

இறுதியாக, '' 'ஒற்றை பெண்ணா, பிள்ளை வளர்த்து’ங்கிற பயமும், சுயபச்சாதாபமும் தேவையில்ல. தாய்மையோட கடமை இணையும்போது அது துணிவைத் தரும். அந்தத் துணிவு வெற்றியைத் தரும்!''

தன் நிலையில் இருக்கும் பெண்களை மனதால் தோள் அணைத்துச் சொல்கிறார், ஹேமா ஸ்ரீதரன்!

வே.கிருஷ்ணவேணி,  படங்கள்: க.சதீஸ்குமார்