Published:Updated:

கிளாஸிக்கல், ஃபோக், வெஸ்டர்ன்... எல்லாமே உண்டு பறையில்!

கிளாஸிக்கல், ஃபோக், வெஸ்டர்ன்... எல்லாமே உண்டு பறையில்!

மிழரின் தொன்மை இசைக்கருவி, பறை. இன்று நாம் மறந்துபோன இசையாக இருக்கும் அந்தப் பறையை மீட்டெடுக்கும் முயற்சியாக, கடந்த நான்கு ஆண்டுகளாக கோவையில் இயங்கி வருகிறது 'நிமிர்வு கலையகம்’ அமைப்பு! கல்லூரி மாணவர்களால் நடத்தப்படும் இந்த அமைப்பில், பல கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பறை கற்று வருகிறார்கள்!

 'நிமிர்வு கலையக’த்தின் ஒருங்கிணைப்பாளர் சக்தி, அமைப்பின் நோக்கத்தை விளக்கினார்.

கிளாஸிக்கல், ஃபோக், வெஸ்டர்ன்... எல்லாமே உண்டு பறையில்!

''கற்காலத்தின் முதல் தகவல் தொடர்பு சாதனம், பறைதான். பிறகு போரில், பணியிடத்தில், ஊர் சபைகளில், தெய்வ வழிபாட்டில், கூத்துகளில், விழாக்களில், இறப்பில் என பறை பயன்படுத்தாத இடங்களே இல்லை. ஆனால், காலப்போக்கில் பறை குறிப்பிட்ட சாதியினருக்கானது என்று ஒதுக்கப்பட்டது வேதனை! அழிவின் விளிம்பில் இருக்கிற பறையை, அனைவருக்கும் பொதுவான ஒரு கருவி யாக மாற்றி, எல்லா தரப்பு மக்களுக்கும் பறையிசையைக் கொண்டுபோய்ச் சேர்க்கும் முயற்சியே, 'நிமிர்வு கலையகம்’!'' என்று சொல்லும் சக்தி, கோவை வி.எல்.பி. ஜானகியம்மாள் கலைக் கல்லூரியில் எம்.சி.ஏ இறுதியாண்டு படிக்கிறார்.

''கல்லூரி மாணவர்கள், சாதிக்கு அப்பாற்பட்டவர்கள். நான்கு வருடங்களுக்கு முன், அப்படி நானும் என் கல்லூரி நண்பர்களுமாக 10 பேர் மதுரைக்குச் சென்று, முறையாக பறை கற்றுக்கொண்டோம். அதை பலருக்கும் இலவசமாகக் கொண்டு சேர்க்கும் நோக்கில் 'நிமிர்வு கலையகம்’ தொடங்கினோம்.  இந்த அமைப்பின் மூலமாக எங்கள் 10 பேரின் நட்பு வட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி நண்பர்கள் பலரையும் ஒருங்கிணைத்து அவர்களுக்குப் பறை பயிற்சி வழங்கி வருகிறோம். இப்போது இங்கு பயிலும் 40 கல்லூரி மாணவர்களில், 10 பேர் பெண்கள்!''

- சந்தோஷம் அவர் குரலில்.

கிளாஸிக்கல், ஃபோக், வெஸ்டர்ன்... எல்லாமே உண்டு பறையில்!

இரண்டு வருடங்களாக இங்கு பறை கற்றுவரும் மாணவி சங்கவி, ''பறையில் நவீனம் சேர்த்துக் கொடுப்பதை எங்களின் சிறப்பாக எண்ணுகிறோம். பறை இசைக்கும்போது, பிளாக் டிஷர்ட், ப்ளூ ஜீன்ஸ், ரெட் ஷு, காலில் சலங்கை என சீருடையில்தான் இசைப்போம். ஒரு பிரத்யேகத்துக்காகவும், கவன ஈர்ப்புக்காகவும்தான் இந்த ஏற்பாடு. பறையிலேயே கிளாஸிக்கல், ஃபோக், வெஸ்டர்ன், கேரள ஜெண்டை மேளம் என்று வகைவகையாக வாசிப்போம். குறிப்பாக, மைக்கேல் ஜாக்சனின் 'டேஞ்சர்ஸ்’ ஆல்பத்தின் 'பீட்’டை பறை இசையில் நான் கொண்டு வந்தேன். சிங்காரி மேளம், தவில், பம்பை, உடுக்கை போன்ற கருவிகளின் இசையையும், பறையின் இசையில் புதுமையாக கொண்டு வந்தேன். இவற்றுக்கு மேலாக பறை இசைக்கு பரதம் ஆடியும் புதுமை படைக்கிறோம்!'' என்கிறார் பெருமையுடன்.

சக்தியுடன் இணைந்து பறை பயிற்றுவிப்பவர்களில் ஒருவரான, வினோத். ''சாதி, சாவு, சாமி என மூன்று செயல்பாட்டுக்கும் பறையை இசைக்க மாட்டோம் என மாணவர்களிடம் உறுதிமொழி பெற்றுக்கொள்வோம். இந்தச் செயல்பாடுகளில்தான், சாதி ரீதியிலான செயல் பாடுகள் இருக்கின்றன. தமிழர்கள் அனைவருக்கும் சொந்தமான பறையை சாதி பூசல்கள் இல்லாத பொது நிகழ்ச்சிகள் அனைத்திலும் இசைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். மேலும், குடித்துவிட்டும், புகை பிடித்துவிட்டும் பறையைத் தொட அனுமதிக்க மாட்டோம்'' என்கிறார்.

''பல்வேறு எம்.என்.சி நிறுவன நிகழ்ச்சிகளில் எங்கள் அமைப்பு சார்பாக பறை இசைக்கிறோம். தவிர, ஏராளமான பொது நிகழ்ச்சிகளிலும், கலை நிகழ்ச்சிகளிலும் இசைக்க வருமாறு எங்களை அழைக்கிறார்கள். அப்படி நிகழ்ச்சி செய்யும்போது அதோடு நின்றுவிடாமல், பறையின் பாரம்பர்ய வரலாற்றைச் சொல்லி, எல்லோரும் பறையை கற்றுக்கொள்ள வலியுறுத்துவோம்!'' என்ற ஜெயப்பிரகாஷ் இடைவெளி விட, ''கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் ஆர்வமுடன் பறை கற்க முன்வர வேண்டும். அவர்கள் நினைத்தால் தமிழகம் முழுக்க, ஏன்... உலகம் முழுக்க நம் முப்பாட்டனின் இசை ஒலிக்கச் செய்யலாம்!''

- 'ர்ர்ர்ங் ர்ர்ர்ங் ர்ர்ங்’ என்று அதிர அதிர பறையடிக்கிறார், தமிழ்!

கு.ஆனந்தராஜ், படங்கள்: த.ஸ்ரீநிவாசன் 

அடுத்த கட்டுரைக்கு