‘‘அம்பது வயசாகுது எனக்கு. சமீபத்துல, வீட்டுக்கு வந்திருந்த நண்பர்கள்கிட்ட என் கணவர் பேசிட்டிருந்ததை கிச்சனில் இருந்து கேட்டுட்டிருந்தேன். ‘என் பொண்டாட்டி நான் உட்காருன்னா உட்காருவா, நில்லுன்னா நிப்பா. சமைப்பா, வீட்டைப் பார்த்துக்குவா; வெளியுலகம் எல்லாம் எதுவும் தெரியாது... அந்த மக்குக்கு’ என்கிற ரீதியில் பேசியது கேட்டு அதிர்ந்தேன். வந்திருந்தவர்களிடம் என் சுயமரியாதையைக் காலில் போட்டு மிதித்துக்கொண்டிருந்தார் கணவர். அவர்களுக்கு காபி எடுத்துச் சென்றபோது, ‘இவங்களுக்கு நாம ஒரு அடிமையா, மக்காதானே தெரிவோம்’ என்று நினைத்தபோது, உள்ளுக்குள் உடைந்தேன்’’ தன் மன பாரத்தை, இப்படி மெயிலில் இறக்கி நமக்கு அனுப்பியிருந்தார், மதுரையைச் சேர்ந்த அந்த சீனியர் வாசகி.

சுயமரியாதையை சுவீகரீப்போம்!

சுயமரியாதை... ஆறறிவு உள்ள மனிதனுக்கு இருக்க வேண்டிய அடிப்படை குணம்! ஆனால், அது ஏதோ ஆணுக்குரிய இயல்பு போலவும், பெண்கள் சுயமரியாதையுடன் தொடர்பற்றவர்கள் என்பது போலவும் ஒரு விஷநம்பிக்கை உருவாக்கப்பட்டிருக்கிறது, இந்த ஆணாதிக்கச் சமுதாயத்தில்! பெண்களில் 99 சதவிகிதம் பேர் சுயமரியாதை அற்றவர்களாகவோ, அதுபற்றியே அறியாதவர்களாகவோதான் இருக்கிறார்கள் என்கிறது ஆய்வு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெரியார், ஒரு பள்ளியில் குழந்தைகள் மத்தியில் பேச சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அப்போது முதல் வரிசையில் அமர்ந்திருந்த மாணவர்கள் கால் மேல் கால் போட்டபடி அமர்ந்திருப்பதைப் பார்த்த ஆசிரியர், அவர்களைக் கடிந்தார். அதைக் கவனித்த பெரியார், ‘அவர்கள் காலை அவர்கள் கால் மேல் போடுவது சுயமரியாதை; அதை என் கால் மீது போட்டிருந்தால்தான் அவமரியாதை. இதிலென்ன தவறு? எல்லோரும் போட்டுக்கொள்ளுங்கள்!’ என்றாராம்!

‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று மானுடரான நக்கீரர், கடவுளான சிவ
பெருமானிடமே அச்சமின்றிச் சொல்லக் காரணம், அவரின் சுயமரியாதை.

ஒரு நாயிடம் பிஸ்கட் போடுவது போல ஏமாற்றிப் பாருங்கள். நான்கு முறை உங்கள் கையை நோக்கி காத்துக் கிடக்கும். ஐந்தாவது முறை, ‘சரிதான் போடா’ என்று கண்டுகொள்ளாமல் போய்விடும். ஐந்தறிவுள்ள ஜீவன் என்று நாம் மதிப்பீடு செய்து வைத்திருக்கும் நாய்க்கே அவ்வளவு சுயமரியாதை இருக்கும்போது, நமக்கு வேண்டாமா தோழிகளே?!

பெண்கள், சுயமரியாதையின்றி இருக்கக் காரணம்... வளர்ப்பு! ‘பொட்டப் புள்ளைக்கு எதுக்கு ரோஷம்?’, ‘பொம்பளப் புள்ளைக்கு இவ்வளவு கோபம் ஆகாது’, ‘ஆம்பளைனுகூட பாக்காம எதுத்துப் பேசுற?’, ‘பொம்பளையா பொறந்தவ எல்லாத்தையும் பொறுத்துதான் ஆகணும்’ - இப்படியான ‘அறிவுரை’
களுடன்தான் பெண் குழந்தைகள் நம் குடும்பங்களில் வளர்க்கப்படுகிறார்கள். இதன் அர்த்தம்... பெண்கள் எங்கும், எப்போதும், ஆண்களுக்கு அடங்கிய பாலினம் என்பதை அவர்களின் மூளை அடுக்குகளில் பலவந்தமாக செருகுவது. அந்த அடிமைத்தன வாழ்க்கைக்கு சுயமரியாதை தேவையில்லை, சுயமரியாதை கூடாது என்பது, கூடவே சேர்த்து வலியுறுத்தப்படுகிறது. வெளிநாடுகளில் குழந்தைகளுக்கு உணவோடு சேர்த்து சுயமரியாதையையும் ஊட்டுகிறார்கள். இங்கே, ஒரு பெண்ணை, பெண்ணாகப் பிறந்ததாலேயே தன் சுயத்தையே தானே தாழ்த்தி நினைக்கச் சொல்லும் மாபாதக உளவியலை குற்ற உணர்ச்சியே இல்லாமல் கையாண்டு கொண்டிருக்கிறோம். விளைவு... வீட்டில், அலுவலகத்தில் என எல்லா இடங்களிலும் பெண்கள் நிலை தாழ்த்தப்படுவதுடன், அதைக் கேள்விகளின்றியும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

உங்கள் திறமை, உங்கள் நல்ல எண்ணங்கள், உங்கள் குணத்தின் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கையும், மரியாதையுமே... சுயமரியாதை. அதை முதலில் ‘நீங்கள்’ உணருங்கள். நீங்கள் எவ்வளவு திறமையுடன் உங்கள் வீட்டின் பொருளாதாரத்தை நிர்வகிக்கிறீர்கள்!

 அஞ்சல் சேமிப்பு, மாதச் சீட்டு என்று உங்கள் கணவர் சம்பாதிக்கும் பணத்தை சிதறிவிடாமல் சிறப்பாக அணைபோட்டு சேமிக்கிறீர்கள்! சத்து, ருசி என்று இரண்டு அம்சங்களையும் ஒன்றிணைத்து வீட்டினருக்கு எந்தளவுக்குப் பக்குவமாகச் சமைத்துப் போடுகிறீர்கள்! குறைகள், குற்றங்கள் மறந்து, உறவினர்களை எவ்வளவு பிரியத்துடன் அரவணைத்துச் செல்கிறீர்கள்! அலுவலகத்தில், உங்களின் பணி நேர்த்தி எவ்வளவு தரமானது! அலுவலகம், வீடு என்று சுழன்றாலும், உழைப்பின் களைப்பை உங்களுக்குள்ளேயே புதைத்து தினங்களை நகர்த்திச் செல்லும் உங்கள் திட்டமிடல் எவ்வளவு லாகவமானது! சுயதொழில் முனைவோராக சந்திக்கும் தடைகளையெல்லாம், தளராமல் தகர்த்தெறிந்து முன்னேறிச் செல்லும் உங்கள் வெற்றி எவ்வளவு மகத்தானது!

இவ்வளவு திறமையான, வலிமையான, பொறுமையான, அன்பான, அக்கறையான உங்கள் மேல், நீங்கள் எவ்வளவு மரியாதை வைக்க வேண்டும்?! அதுதான் சுயமரியாதை! முதலில் உங்களை நீங்கள் மதித்தால்தான், மற்றவர்களும் உங்களை மதிப்பார்கள். உங்கள் சுயமரியாதையை நீங்கள் உணர்வது முதல் படி என்றால், அதை மற்றவர்களை அங்கீகரிக்கச் செய்வது இரண்டாவது படி.

இங்கு நம் ஆண்களுக்கு ஒரு எண்ணம் உண்டு... கடிதம் எழுதியிருந்த சீனியர் வாசகியின் கணவரைப் போல, மனைவியை தனக்கு அடங்கியவளாக வைத்திருப்பவன்தான் ஆண்மகன் என்று! அதற்காக, வீட்டுப் பெண்களின் சுயமரியாதையைக் காலில் போட்டு இவர்கள் நசுக்குவார்கள். இனியும் அதற்கு இடம் தராதீர்கள். உங்களை குறைவாக மதிப்பிட்டுப் பேசினால், சகித்துக்கொள்ளும் சூழலை உருவாக்கிக் கொள்ளாதீர்கள். ‘அவளை ஒரு வார்த்தை சொல்லிட முடியாது’ என்ற மற்றவர்கள் நினைக்கும் வகையில், உங்கள் சுயமரியாதையைப் போற்றி வளருங்கள்!

பேருந்து, ரயில் நிலையங்களில் பேனா, கர்ச்சீஃப் என விற்கும் மாற்றுத்திறனாளிகளிடம் பொருட்கள் வாங்குகையில், பரிதாபப்பட்டு, ‘சில்லறையை நீயே வெச்சுக்கோ!’ என்று சொல்லும்போது, ‘வேணாம் மேடம்!’ என்று மறுத்து திருப்பிக் கொடுப்பார்களே... அந்த சுயமரியாதை அகிலத்தின் அழகு! அதை சுவீகரிப்போம்!

- ரிலாக்ஸ்...

தொகுப்பு: சா.வடிவரசு

சுயமரியாதையை அழுத்தும் காரணிகள்!

• குடும்பம் / சுற்றம் / சமூகம் ஒதுக்கிவைப்பது... அவர்கள் கொடுக்கும் தண்டனை, அவமரியாதை.

• பெற்றோரின் கவனிப்பின்மை.

• நண்பர்கள் இல்லாதது.

• அடுத்தவர்கள் தன்னைக் குறை சொல்லும்போது அதை ஆட்சேபிக்காமல் கேட்டுக்கொண்டே இருப்பது.

• கறுப்பு, குண்டு, ஒல்லி என்று ஏதேனும் ஒரு வகையில் கூட்டத்தில் தனியாகத் தெரிவது.

சுயமரியாதையை அதிகரிக்கும் வழிகள்!

• சுய ஊக்கம் அளிப்பது.

• மனசாட்சிக்கு நியாயமாக நடந்துகொள்வது.

• புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது.

• யாருடனும் தன்னை ஒப்பிடாமல் இருப்பது.

• தினம் மாலையில், அன்று செய்த நல்ல விஷயங்கள் மூன்றை நினைவுபடுத்தி ‘சபாஷ்’ சொல்லிக்கொள்வது!

உங்களது பர்சனல் பிரச்னைகளுக்கு தீர்வு காண...

‘ஆல் இஸ் வெல், அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2’ என்ற முகவரிக்கு கடிதம் எழுதலாம்.
e-mail: alliswell-aval@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism