Published:Updated:

நள்ளிரவு வானவில்!

புவனேந்திரன் செல்போனை அணைத்த அடுத்த விநாடி அவருடைய தோளில் கைவிழுந்தது. அதிர்ந்துபோய் திரும்பினார்...

நள்ளிரவு வானவில்!

புவனேந்திரன் செல்போனை அணைத்த அடுத்த விநாடி அவருடைய தோளில் கைவிழுந்தது. அதிர்ந்துபோய் திரும்பினார்...

Published:Updated:

புவனேந்திரன் ஸ்தம்பித்து போனவராய் நிற்க, கமிஷனர் ராஜகணேஷ் குரல் கொடுத்தார்.

``என்ன புவனேந்திரன்... ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணிட்டீங்களா?''

``பண்ணிட்டேன் ஸார்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``இப்போதைக்கு கிறிஸ்டோபரோட உயிருக்கு ஆபத்து ஏதும் இருக்கிற மாதிரி தெரியலை... முகத்துல தண்ணி தெளிச்சேன். கண்ணிமைகளில் லேசா அசைவு தெரிந்தது. கொஞ்சமா தண்ணி குடிக்க வெச்சேன். தட்டுத் தடுமாறி எந்திரிச்சு உட்கார்ந்துட்டார். பட்... அவரால பேச முடியலை. ஏதோ சொல்ல முயற்சி பண்றார். நீங்க அவர்கிட்டே பேசிப் பாருங்க!''

நள்ளிரவு வானவில்!

புவனேந்திரன் லேசாக வியர்த்த முகத்தோடு பயந்த நடை போட்டு கிறிஸ்டோபரை நெருங்கினார். தோளின் மேல் கையை வைத்து மெலிதான குரலில் கூப்பிட்டார்.

``கிறிஸ்டோபர்..!''

கிறிஸ்டோபரின் கண்ணின் பாவைகள் ஒரு சின்ன அசைவுக்கு உட்பட்டன. உதடுகள் ஏதோ சொல்ல முயற்சித்து வாய் ஒரு பக்கமாய் கோணியது. கடைவாயோரம் உமிழ்நீர் கோடாய் வழிய, வலதுகை ஓர் அங்குலம் உயர்ந்து உடனே தாழ்ந்தது. கமிஷனர் அவனுடைய கன்னங்களைத் தட்டியபடி கேட்டார்.

``கிறிஸ்டோபர்! உங்களை இப்படித் தாக்கினது யாரு?''

பதிலுக்கு உடம்பு  மட்டும் அசைந்தது.

கமிஷனர் நிமிர்ந்தார்.

``புவனேந்திரன்!''

``ஸார்...''

``கிறிஸ்டோபருக்கு சுய உணர்வு இருக்கு. பட்... அவரால ஒரு வார்த்தைகூட பேச முடியலை... யாரோ அவரை வித்தியாசமான முறையில் தாக்கியிருக்காங்க. நீங்க போன் பண்ணிப் பேசும்போது மறுமுனையில் அவருடைய ரியாக்‌ஷன் எப்படியிருந்தது?''

``வெரி நார்மல் ஸார்.''

``பேசினது அவர்தானா?''

``அவர்தான் ஸார்...''

``உங்க ரெண்டுபேருக்கும் இடையில் நடந்த டெலிபோனிக் கான்வர்சேஷன் எது மாதிரியிருந்ததுனு உங்களால் ரீ-கலெக்ட் பண்ணிச் சொல்ல முடியுமா?''

``தாராளமா சொல்ல முடியும் ஸார்... நான் இன்டர்காம் டெலிபோன் மூலமா கிறிஸ்டோபரை கான்டாக்ட் பண்ணி ‘நேத்து சாயந்தரம் ஆறு மணியிலிருந்து ராத்திரி பத்து மணி வரைக்கும் சி.சி.டி.வி-யில் பதிவான பதிவுகளை டி.வி.டி-க்கு ஃபார்மட் பண்ணியாச்சா'ன்னு கேட்டேன். அவர் பண்ணியாச்சுன்னு சொன்னார். உடனே அந்த டி.வி.டி-யை எடுத்துட்டு என்னோட ரூமுக்கு வாங்கன்னு சொன்னேன். அவரும் ‘இதோ... ரெண்டு நிமிஷத்துல வர்றேன் ஸார்'னு சொன்னார்.''

``பேசினது கிறிஸ்டோபர்தானா..?''

``அவர்தான் ஸார்... நோ டவுட்!''

``உங்ககூட போன்ல பேசின பிறகுதான் கிறிஸ்டோபரை யாரோ தாக்கியிருக்காங்க.''

``மே பி... ஸார்!''

``ஸோ... நான் ஞானேஷ் விஷயமா இந்த ஹோட்டலுக்கு வந்து விசாரணை பண்ணினது, யாரோ ஒரு எக்ஸுக்குப் பிடிக்கலை. என்னோட கெஸ் வொர்க் சரிதானா?''

``என்னோட கெஸ் வொர்க்கும் அதுதான் ஸார்.''

``யார் அந்த எக்ஸ்? உங்க ஹோட்டலில் இருக்கிற நபரா... இல்லை, வெளியிலிருந்து வந்த நபரா?

``இந்த ஹோட்டலில் இருக்கிற நபரா அந்த ‘எக்ஸ்' இருக்க வாய்ப்பில்லை ஸார்.''

``எப்படி சொல்றீங்க?''

``ஞானேஷ் இந்த ஹோட்டலோடு சம்பந்தப்பட்ட நபர் கிடையாது, அதேபோல் ரெகுலர் கஸ்டமரும் கிடையாது. ஞானேஷ் சம்பந்தமான ஒரு இன்வெஸ்டிகேஷனோட நீங்க இந்த ஹோட்டலுக்கு வந்ததை யாரோ ஸ்மெல் பண்ணி பின் தொடர்ந்து வந்திருக்காங்க... அவங்கதான் கிறிஸ்டோபரைத் தாக்கியிருக்கணும்!''

``கிறிஸ்டோபர் தாக்கப்பட்ட இந்தச் சம்பவத்திலிருந்து ஒரு விஷயம் மட்டும் க்ரிஸ்டல் க்ளியரா புரியுது!''

``என்ன ஸார்?''

``ஞானேஷ் இந்த ஹோட்டலுக்கு வந்திருக்கணும். அவர் பதிவுகள் போலீஸ் கைக்கு போய்விடக்கூடாதே என்கிற எண்ணத்துல கிறிஸ்டோபரைத் தாக்கி டி.வி.டி-க்களைப் பறிச்சுட்டு ஓடியிருக்கணும்.''

நள்ளிரவு வானவில்!

``என்னோட கணிப்பும் இதுதான் ஸார்'' - புவனேந்திரன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவருடைய செல்போன் முணுமுணுத் தது. எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தார்.

ஹோட்டல் ரிசப்சனிஸ்ட்.

``என்ன தாரிணி?''

``ஸார்... ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணியிருந்தீங்களா?''

``ஆமா!''

``வேன் வந்தாச்சு... யாருக்கு என்ன பிரச்னை ஸார்?''

``வந்து சொல்றேன்..!'' - செல்போனை அணைத்த புவனேந்திரன் கமிஷனரிடம் நிமிர்ந்தார்.

``ஸார்... ஆம்புலன்ஸ் வந்து வெயிட்டிங்கில் இருக்கு. கிறிஸ்டோபரை வேனுக்குக் கொண்டு போயிடலாமா?''

``கொண்டு போயிடலாம். இப்போதைக்கு இந்த விஷயம் வெளியே யாருக்கும் தெரிய வேண்டாம். நீங்க வேனுக்குப் போய் மெடிக்கல் அட்டெண்ட்டர்ஸை ஸ்ட்ரெச்சரோடு வரச் சொல்லுங்க!''

``யெஸ் ஸார்!'' - தலையசைத்துவிட்டு செல்லர் அறையிலிருந்து வெளியேறிய புவனேந்திரன் காரிடாரில் நடக்கும்போது வேறொரு செல் போனை எடுத்து கான்டாக்ட்ஸில் இருந்த ஒரு எண்ணை ஆட்காட்டி விரலால் தேய்த்துவிட்டு காதுக்கு ஒற்றினார். சுற்றும்முற்றும் பார்வையை அலையவிட்டவர் குரலைத் தாழ்த்தி குறைவான டெசிபலில் பேச ஆரம்பித்தார்.

``இங்கேயிருக்கிற நிலைமை சந்தோஷப் படும்படியாக இல்லை! கிறிஸ்டோபர் உயிர் பிழைக்க வாய்ப்பு அதிகம்.''

மறுமுனையில் குரல் கவலைப்பட்டது...

``கிறிஸ்டோபர் ஏதாவது பேசினானா?''

``அவனுக்கு சுய உணர்வு இருக்கு. ஆனா, இப்போதைக்கு அவனால பேச முடியாதுங்கிற விஷயம்தான் நமக்கு கிடைச்சிருக்கக்கூடிய ஒரே சந்தோஷம். இந்த சந்தோஷமும் அதிக நேரம் நிலைக்கப் போறது இல்லை. ஏன்னா, அவனை ஹாஸ்பிடலுக்குக் கொண்டு போகும் பட்சத்தில் டாக்டர்கள் அவனை பேச வைக்க வாய்ப்பு இருக்கு!''


``அது நடக்கப்போறது இல்லை. கிறிஸ்டோபர் எந்த ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டாலும் சரி, அவன் வாயைத் திறந்து முழுசா ஒரு வார்த்தை பேசறதுக்குள்ளே அவன் உடம்புல உயிர் இருக்காது!''

``இது வெறும் வார்த்தையா இருக்கக் கூடாது. நடக்கக்கூடிய காரியமா இருக்கணும்.''

``இருக்கும்!'' - மறுமுனை தீர்க்கமாக சொல்லிவிட்டு செல்போனை அணைத்துவிட, புவனேந்திரனும் செல்போனை அணைத்தார்.

அதே விநாடி - அவருடைய தோளில் கை விழுந்தது. சற்றே அதிர்ந்து போனவராய் திரும்பினார் புவனேந்திரன்.

போலீஸ் கமிஷனர் ராஜகணேஷ் தன் இதழோரம் கசியவிட்ட ஒரு புன்னகையோடு நின்றிருந்தார்.

பெங்களூர் தோல் சீவிய கேரட் நிறத்தில் விடிந்துகொண்டிருக்க, ரிதன்யா குளித்து முடித்து பூஜையறைக்குள் போய் விளக்கேற்றிவிட்டு சமையலறையை நோக்கி நடந்தாள். முதுகில் குரல் கேட்டது.

``ரிதன்யா!''

அவள் நின்று திரும்பிப் பார்க்க... படுக்கை அறையிலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்த பூங்கொடி பார்வைக்கு கிடைத்தாள். `என்ன?' என்று கேட்பது போல் தன் இரு புருவங்களையும் உயர்த்தினாள் ரிதன்யா.

``என்ன... இவ்வளவு சீக்கிரத்துல குளிச்சுட்டே?''

``இது என்னோட வழக்கம்.''

``சரி... இன்னிக்குக் காலையில் ஃப்ரேக்பாஸ்ட் என்ன?''

``இனிமேதான் யோசிக்கணும்.''

``வீட்ல ரவை இருக்கா?''

``இருக்கு.''

``உப்புமா பண்ணிடு! அப்புறம் மத்தியான சமையலை பத்து மணிக்குள்ளே முடிச்சுடு!''

``ஏன் அவ்வளவு சீக்கிரத்துல..?''

``நீயும் நானும் வெளியே கிளம்பிப் போறோம்.''

``எங்கே?''

``அதையெல்லாம் இப்பவே உன்கிட்டே சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உன்னோட புருஷன் இன்னும் ரெண்டு நாள்ல இங்கே வந்துடுவான். அதுக்குள்ளே நாங்க சில வேலைகளை மின்னல் வேகத்துல பண்ண வேண்டியிருக்கு. அதனால நாங்க எப்ப கூப்பிட்டாலும் நீ புறப்படறதுக்குத் தயாரா இருக்கணும். ஏன், எதுக்குங்கிற கேள்விகள் உன்னோட வாயிலிருந்து வரவே கூடாது.''

ரிதன்யா தன்னுடைய பெரிய கண்களால் பூங்கொடியை முறைத்த விநாடி, வாசலில் இருந்த அழைப்பு மணியின் பட்டன் அழுத்தப்பட்டதற்கு அடையாளமாக ‘டிடிங்' என்ற சத்தம் கேட்டது.

``இந்நேரத்துக்கு யாரு..?''

``போய்ப் பார்த்தாத்தானே தெரியும்?''

``போய்ப் பாரு...! யாரா இருந்தாலும் பேச்சு சுருக்கமா இருக்கணும். அவங்களை வீட்டுக்குள்ளே கூப்பிடக்கூடாது.'' - பூங்கொடி சொல்லிவிட்டு ஒதுங்கி நின்று கொள்ள, ரிதன்யா வாசல் கதவை நோக்கி வேகவேகமாய்ப் போனாள். இதயம் ஒரு சிறிய படபடப்புக்கு உட்பட்டிருக்க, கதவின் தாழ்ப்பாளை விலக்கினாள்.

வெளியே எதிர்வீட்டு ஸ்வர்ணலதா, ராத்திரி அணிந்து இருந்த நைட்டியோடும் லேசாக கலைந்து போயிருந்த தலைமுடியோடும் தெரிந்தாள்.

``ஸாரி ரிதன்யா! இவ்வளவு காலை நேரத்துல உங்களை டிஸ்டர்ப் பண்றேன்.''

``நோ பிராப்ளம்.. என்ன விஷயம்ன்னு சொல்லுங்க.''

``உங்களுக்கு பால் பாக்கெட் வந்துடுச்சா?''

``வந்துடுச்சே!''

``எனக்கு வரலை. ராஜப்பன் போட மறந்துட்டான் போலிருக்கு. உங்ககிட்டே எக்ஸ்ட்ரா பால் பாக்கெட் ஏதாவது இருக்குமா?''

``ஸாரி... இல்லையே!''

``என்னோட மாமனாருக்கும் மாமியாருக்கும் காபி சாப்பிடாட்டி பொழுது விடியாது. ஒரு டம்ளர் பால் இருந்தா குடுங்களேன்.''

``ஒரு நிமிஷம்..!'' என்று சொன்ன ரிதன்யா அந்த ஹாலின் மூலையில் இருந்த ஃப்ரிட்ஜ்ஜை நோக்கிப் போக, ஸ்வர்ணலதா உரிமையோடு சோபாவில் வந்து உட்கார்ந்தாள். டீபாயின் மேல் கொஞ்சமும் கசங்காமல் இருந்த அன்றைய நாளிதழை எடுத்து இரண்டு பக்கங்களைப் புரட்டி தலைப்புச் செய்திகளை மேய்ந்துகொண்டிருக்கும்போதே ரிதன்யா ஒரு டம்ளர் பாலோடு வந்தாள்.

``இது போதுமா பாருங்க ஸ்வர்ணலதா!''

பேப்பரை மடித்து வைத்துவிட்டு எழுந்த ஸ்வர்ணலதா பால் டம்ளரை வாங்கிக் கொண்டாள்.

``இது போதும்... அந்த ரெண்டுக்கும் காபி என்கிற பேர்ல எதையாவது கொடுத்தாத்தான் என் புருஷனோட வாய்ல விழாம இருப்பேன்'' - சொல்லிக்கொண்டே நகர முயன்ற ஸ்வர்ணலதா சட்டென்று நின்று உள்ளே பார்த்தபடி கேட்டாள்.

``வீட்டுக்கு கெஸ்ட் வந்திருக்காங்க போலிருக்கு..?''

``ஆ... ஆமா''

``யாரு?''

``அது வந்து... என் சித்தியோட பொண்ணும் அவளோட ஹஸ்பண்ட்டும். நியூலி மேரீட். ரெண்டு நாள் ‘ஸ்டே' பண்ணிட்டு மைசூர் போயிடுவாங்க'' - ரிதன்யா சொல்லிக்கொண்டிருக்கும்போதே பக்கத்து அறையிலிருந்து பூங்கொடி ஒரு சின்ன சிரிப்போடு வெளிப்பட்டாள். ஸ்வர்ணலதாவை நோக்கி கையை நீட்டினாள்.

``ஐயாம் பூங்கொடி! போன்ல பேசும்போது அக்கா உங்களைப் பத்தி சொல்லுவாங்க... நீங்க நல்ல நெய்பராம். ரொம்பவும் அனுசரணையா இருப்பீங்களாம்.''

ஸ்வர்ணலதா சிரித்தாள். ``உங்க அக்கா அநியாயத்துக்கு பொய் சொல்லியிருக்காங்க... அவங்கதான் எனக்கு நல்ல நெய்பர். ஒரு போலீஸ் ஆபீஸர் என்கிற பந்தா இல்லாமே அந்நியோன்யமா இருப்பாங்க... எப்போ எதைக் கேட்டாலும் இல்லேன்னு சொல்லாம குடுப்பாங்க. உதாரணம், இப்போ என் கையில் இருக்கிற ஒரு டம்ளர் பால்.''

``ரிதன்யா அக்கா சின்ன வயசிலிருந்தே அப்படித்தான்.''

``பூங்கொடி! நீங்க ஏதாவது வேலைக்குப் போயிட்டிருக்கீங்களா... இல்லை ஹவுஸ் வொய்ஃப்பா?''

``நான் சென்னையில் இருக்கிற ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கிறேன். அவரும் ஒரு ஐ.டி. எம்ப்ளாயீதான்! ஆறு மாசத்துக்கு முன்னாடிதான் கல்யாணம் நடந்தது.''

``விஷ் யூ எ ஹேப்பி மேரீட் லைஃப்!''

``தேங்க்யூ!''

``இங்கே எத்தனை நாள் ஸ்டே?''

``ரெண்டு நாள்தான்... நாளன்னிக்குக் காலையில் மைசூர் கிளம்பிடுவோம்!''

``சாயந்தரம் லீஷராய் இருக்கும்போது நீங்களும் உங்க ஹஸ்பண்ட்டும் என் வீட்டுக்கு வாங்களேன்..!''

``கண்டிப்பா வர்றோம்!'' - பூங்கொடி சொல்ல, ஸ்வர்ணலதா ஒரு டம்ளர் பாலுக்காக ரிதன்யாவுக்கு மறுபடியும் ஒரு நன்றியைச் சொல்லிவிட்டு தன்னுடைய வீட்டை நோக்கிப் போனாள்.

ரோட்டை கிராஸ் செய்து வீட்டுக்குள் நுழைந்து, கண்ணாடி முன் நின்று முகத்தை ரேஸரால் உழுதுகொண்டிருந்த தன்னுடைய கணவன் லீலாகிருஷ்ணனை நெருங்கினாள். சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு குரலைத் தாழ்த்தினாள்.

``என்னங்க..!''

``சொல்லு...''

``நான் சந்தேகப்பட்டது சரிதான்!''

- தொடரும்...

ராஜேஷ்குமார்  ஓவியங்கள்: அரஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism