Published:Updated:

டாக்டரை டீச்சராக்கிய தாய்ப்பாசம்!

டாக்டரை டீச்சராக்கிய தாய்ப்பாசம்!

டாக்டரை டீச்சராக்கிய தாய்ப்பாசம்!

டாக்டரை டீச்சராக்கிய தாய்ப்பாசம்!

Published:Updated:

‘‘டாக்டரான நான் டீச்சரானது, என் மகனுக்காக!’’

- தாய்மையின் ஈரம் விஜயலட்சுமியின் ஒவ்வொரு வார்த்தையிலும்!

சென்னை, அடையாறைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவரான விஜயலட்சுமி, தன் குழந்தைக்கு செவித்திறன் இல்லை என்பது தெரிய வந்த நாளில் இருந்து இன்று வரை, கிட்டத்தட்ட 25 வருடங்களாக பிள்ளைக்காகவே வாழும் அம்மா. தன் குழந்தைக்காகவே சிறப்புக் குழந்தை ஆசிரியைப் பயிற்சி முடித்து, இன்று தன் மகன் மனீஷை பி.எஸ்ஸி, பயோடெக், எம்.எஸ்ஸி, பயோடெக் என ஏணியில் ஏற்றியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘திருமணமாகி மூணு வருஷம் கழிச்சு மனீஷ் பிறந்தான். வளர வளர இவனுக்கு செவித்திறனில் குறைபாடு இருப்பதைக் கண்டுபிடிச்சோம். அதனால, பேச்சும் வரல. அப்போ நாங்க கேரளாவுல இருந்தோம். எல்லோரும், ‘சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளியில சேர்த்தா, பிரத்யேகப் பயிற்சி கொடுப்பாங்க’னு சொன்னாங்க. பள்ளியில அவன்கூட நானும் இருந்தா, அவனால இன்னும் சிறப்பா செயல்பட முடியும்னு நினைச்சேன். ஒரு குழந்தைகள் நல மருத்துவரா பரபரப்பா வேலை பார்த்திட்டிருந்த நான், என்னோட வாழ்க்கையை மகனுக்காக மட்டும் வாழ முடிவெடுத்தேன். வங்கி ஊழியரான கணவர் கணேஷ், இனி மனீஷ்தான் எங்க வாழ்க்கைனு முடிவெடுக்க, சென்னைக்கு வந்தோம்.

டாக்டரை டீச்சராக்கிய தாய்ப்பாசம்!

மயிலாப்பூரில் இருக்கும் ‘கிளார்க்’ பள்ளியில் (கிளார்க் ஸ்கூல் ஃபார் டெஃப்) அவனைச் சேர்த்தோம். நான் அந்தப் பள்ளியிலேயே குழந்தைகளுக்கான மருத்துவர் மற்றும் அவங்க கற்றலை மேம்படுத்தும் ஆசிரியையா பணிபுரிய ஆரம்பிச்சேன். சிறப்புக் குழந்தைகள் ஆசிரியையா நான் எடுத்துக்கிட்ட பயிற்சிகளுக்குப் பின்னால, ஒரு அம்மாவோட தவிப்பும் இருந்ததால, முழு அர்ப்பணிப்போட ஒவ்வொரு விஷயத்தையும் கத்துக்கிட்டேன். ‘கிளார்க்’ பள்ளி மூலமா 1997-ல நெதர்லாந்து, லண்டன் சென்று காது, கண் குறைபாடு, ஆட்டிஸம் போன்ற ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குக் கல்வி அளிப்பது, அவங்க வளர்ந்த பின், தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ள பயிற்சி கொடுப்பது மற்றும் ஸ்பெஷல் டீச்சர்களுக்குப் பயிற்சி கொடுப்பதுனு பல விஷயங்களைக் கத்துக்கிட்டேன். சில ஆராய்ச்சிகளையும் செய்தேன். பாண்டிச்சேரி, குஜராத், போபால்னு நாடெங்கிலும் இந்தப் பணி குறித்து செயல்பட்டிருக்கேன். எல்லாம் என் குழந்தை போன்ற குழந்தைகளுக்காகவும், என்னைப் போன்ற அம்மாக்களுக்காகவும்!’’

- 55 வயதிலும் விஜயலட்சுமியின் மனதும், உடலும் சோர்வறியாது இயங்குவதன் அடிப்படையும் இதுதான்!

‘‘கிளார்க் பள்ளியில் பேச, எழுத, படிக்க, கணக்குப் போடனு எல்லா விஷயங்களையும் மனீஷ் கத்துக்கிட்டான். மனீஷுக்கு எதையுமே விஷுவலா சொல்லிக் கொடுத்தாதான் புரியும். அதனால, முடிந்தவரை எல்லாத்தையும் அவனுக்கு நேரடியா காட்டிதான் கற்பிச்சோம். உதாரணமா, நாடாளுமன்றத் தேர்தலை அவனுக்குப் புரியவைக்க, அனுமதி வாங்கி, அவனை நாடாளுமன்றத்துக்கே அழைச்சுட்டு போய், அந்த அவையைப் பற்றி சொல்லிக் கொடுத்தோம். ஜெர்மனி, நெதர்லாந்து, லண்டன்னு பல இடங்களுக்கு அழைச்சுட்டுப் போயிருக்கோம். அவன் ஸ்கூல், காலேஜுக்காக இடம் மாறும்போதெல்லாம், அவனுக்காக இதுவரை நாங்க கிட்டத்தட்ட 12 வீடுகள் மாறியிருப்போம்’’ என்றவர்,

‘‘எந்த சூழலிலும் அவன் தனிமையாவோ, தாழ்வாவோ தன்னை நினைச்சுடக் கூடாதுனுதான், நாங்க இன்னொரு குழந்தைகூட பெத்துக்கல!’’ - ஈடில்லா இந்தப் பெற்றோரின் போராட்டம் ஜெயித்திருக்கிறது. இப்போது மனீஷ், எம்.எஸ்ஸி., பயோடெக் பட்டதாரி!

‘‘சென்னை படூர் ஹிந்துஸ்தான் காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்ல பி.எஸ்ஸி., பயோடெக்கும், மெட்ராஸ் யுனிவர்சிட்டியில எம்.எஸ்ஸி., பயோ டெக்கும் முடிச்சிட்டு இப்போ அங்கேயே ரிசர்ச் பண்ணிட்டு இருக்கான். மனீஷை இன்னிக்கு நார்மல் குழந்தைகளுக்கு இணையா வளர்த்ததுக்கு பின்னாடி, ஒரு பெற்றோரா நாங்க தந்திருக்கும் உழைப்பும், அன்பும், அர்ப்பணிப்பும் மிக அதிகம்.

படிப்பில் பிலோ ஆவரேஜா இருக்கும் பிள்ளைகளைப் பற்றி அவங்க பெற்றோர் கவலைப்படுறதைப் பார்த்திருக் கேன். ஒரு சிறப்புக் குழந்தையை, பெற்றோர் நினைச்சா முதுநிலை பட்டதாரி ஆக்கலாம்னா, சுமாரா படிக்கும் குழந்தையை யும் அம்மா சூப்பர் குழந்தையா ஆக்கலாம் தானே? அதற்குத் தேவை... அர்ப்பணிப்பு!’’

- நம்பிக்கை தருகிறார், இந்த 100% பாஸிட் டிவ் அம்மா!

வே.கிருஷ்ணவேணி  படம்: எம்.உசேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism