Published:Updated:

"நாட்டு நாய்களே... நமக்கேற்ற நாய்கள்!"

டாக் டிரெயினர் ஷிரின்

ஷிரின் மெர்ச்சன்ட், நாய்களுக்குப் பிரியமானவர். நாய்களை நேசிப்பவர். இதுவரை 3000-க்கும் மேற்பட்ட நாய்களைக் கையாண்டு வெவ்வேறு வகைகளில் பயிற்சி கொடுத்தவர். இந்தியாவில் டாக் டிரெயினர் எனும் பணியில் பெண்கள் மிகக்குறைவு. அவர்களில் மும்பையைச் சேர்ந்த இவருக்கு முக்கிய இடமுண்டு.

"நாட்டு நாய்களே... நமக்கேற்ற நாய்கள்!"

நாய்களைப் பற்றியும் நாய்களுடனான தன்னுடைய புரிதலைப் பற்றியும் வியக்க வியக்க பல செய்திகளை நம்மிடம் பகிர்ந்தார் ஷிரின்.

‘‘எங்கள் வீட்டில் பெட் டாக் வளர்த்தோம். அதுதான் நாய்களுடனான என் பிரியத்துக்கு அடிப்படை. 95-ம் ஆண்டில் உலகப் புகழ்பெற்ற நாய்ப் பயிற்சியாளர் ஜான் ரோஜார்சனை சந்தித்தேன். நாய்கள் மீதான என் ஈடுபாட்டைக் கண்டு, நாய்களைப் பற்றி மேலும் படிக்க இங்கிலாந்து அழைத்தார். பயிற்சி முடித்து வந்தபோது, மிகவும் மனநிறைவாக இருந்தது. உரிமையாளர்களுக்கு, நாய் வளர்ப்பைக் கற்றுக்கொடுக்கும் டாக் டிரெயினராக பணியாற்றத் தொடங்கினேன்’’ என்ற ஷிரின், இந்தப் பணியின் இயல்புகளைச் சொன்னார்.

‘‘நாயின் பயிற்சியாளர், நாயின் குணநலன்களையும், பழக்கவழக்கங்களையும், சுற்றுப்புறத்தையும் ஆராய்ச்சி செய்த பின்னரே அதை முழுமையாகப் பயிற்றுவிக்க முடியும். ஆரம்பத்தில் நாயைப் பார்த்துக் கத்த வேண்டும், பேச வேண்டும். ஒரு பந்தம் உருவான பின், நம் சத்தம்தான் அதன் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் என்பதில்லை; நம் கண்கள், விரல் அசைவுகளைக்கூட அது புரிந்துகொள்ளும். வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணி நாய்கள், காவல் நாய்கள், துப்பறியும் நாய்கள் பற்றி அனைவரும் அறிவோம். ஆனால், சிறப்புக்குழந்தைகள் வளர்ப்பில்கூட, அவர்களின் சமூகத் தொடர்பை விரிவுபடுத்துவது, பொழுதை சுவாரஸ்யமாக்குவது, தனிமையில் இருந்து மீட்பது என்று நாய்கள் பங்களிக்கவல்லவை’’ என்ற ஷிரின், இந்தக் களத்தில் ஒரு பெண் முன்னோடி.

‘‘20 வருடங்களுக்கு முன் நாய் பயிற்சியாளராக நான் பணியைத் தொடங்கியபோது, ஆண்களால் மட்டுமே இதைச் செய்ய முடியும் என்ற எண்ணத்தை மாற்றிக் காட்டினேன். முன்பிருந்ததைக் காட்டிலும் இப்போது பல பெண் பயிற்சியாளர்கள் இத்துறையில் வெற்றி நடைபோட்டு வருவதைக் காணும்போது, பெருமையாக இருக்கிறது. பெண்களுக்கு உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் அதிகம் உள்ளதால், இந்த வேலை எங்களுக்கு ஆண்களைவிட எளிமையானது’’ என்று சொல்லும் ஷிரின், ‘திங்க் டாக்’ என்ற நிகழ்ச்சியை பெருநகரங்களில் நடத்திவருகிறார். நாய் உரிமையாளராக இருந்தும் தங்கள் நாயைப் பற்றி சரிவரத் தெரியாதவர்களுக்கு அந்த நாயின் குணங்களையும் பழக்கவழக்கங்களையும் இன்னும் தெளிவாகக் கற்பிப்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.

"நாட்டு நாய்களே... நமக்கேற்ற நாய்கள்!"

‘‘ஒரு நாய், தன் உரிமையாளரின் தலையணையில் அவர் வீட்டில் இல்லாத நேரங்களில் சிறுநீர் கழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தது. அந்த உரிமையாளர் அந்த நாயைத் தனியாக விட்டுச் சென்றதன் காரணமாக கோபத்தில் இப்படி செய்திருக் கலாம் என நினைத்தார். ஆனால், நாங்கள் ஆராய்ச்சி செய்து பார்த்ததில், அந்த நாய்க்கு உரிமையாளரின் மேலுள்ள பிரியம் காரணமாக அவரை விட்டுப் பிரிந்திருக்க முடியாது தவித்ததும், பின் அவர் வாசனை அதிகமுள்ள தலையணையின் மீது சிறுநீர் கழித்ததும் தெரிய வந்தது. அந்த உரிமையாளருக்கு அவர் அந்த நாயை விட்டுப் பிரியும் சமயங்களில், அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை அந்த நாய்க்குப் பழக்குமாறு ஆலோசனை கொடுத்து சில யுத்திகளையும் கையாளச் சொன்னோம். அதன் பிறகு, அந்த நாய் அவர் தலையணையில் சிறுநீர் கழிக்கவில்லை!’’ என்ற ஷிரின்,

‘‘இன்று பலரும் ‘ஸ்டேட்டஸ்’ வேண்டி வெளிநாட்டு நாய் ரகங்களையே வளர்க்க விரும்புகின்றனர். நம் நாட்டின் சீதோஷ்ண நிலைக்கு வளர்க்க ஏற்ற நாய் ரகம், நம் நாட்டு நாய்களே! உண்மையில், அவை மிக நல்ல ரகங்கள். அவற்றைப் பழக்கப்படுத்துவதும், புரிந்துகொள்வதும் எளிது என்பதுடன், குறைந்த உடல்நிலைக் குறைபாடுகள் கொண்டவையாகவும் இருக்கும்’’ என்ற பரிந்துரையும் தந்தார்!

லோ.இந்து  படங்கள்: தி.குமரகுருபரன்

அடுத்த கட்டுரைக்கு